உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

"அவைதாம்

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

ஒருமுக வெழினியும் பொருமுக வெழினியும்

கரந்துவர லெழினியு மெனமூவகையே

என்னும் சூத்திரத்தை மேற்கோள் காட்டுகிறார் நச்சினார்க் கினியர் என்னும் உரையாசிரியர் (சீவகசிந்தாமணி 675, உரை மேற்கோள்.)

சமஸ்கிருத மொழியிலே திரைச்சீலைக்கு யவனிகா என்று பெயர் கூறுகின்றனர். யவனிகா என்னுஞ் சொல்யவன என்னுஞ் சொல்லிலிருந்து தோன்றியது என்றும் யவன (கிரேக்க) நாட்டிலிருந்து இறக்குமதியானபடியால் திரைச்சீலைக்கு யவனிகா என்ற பெயர் உண்டாயிற்று என்றும் அவர்கள் கூறுவர். இவர் கூற்று மெய்போலத் தோன்றுகின்ற பொய்க் கூற்றாகும். யவனம் என்னுஞ் சொல்லும் யவனிகா என்னுஞ் சொல்லும் ஓசையினால் ஒற்றுமையுள்ளதுபோலத் தோன்றினாலும் உண்மையில் இரண்டு சொற்களும் வெவ்வேறு சொற்களே. யவன என்னும் சொல்லிலிருந்து யவனிகா என்னும் சொல் தோன்றியிருக்க முடியாது. ஏனென்றால் பழங்காலத்தில் யவனர் (கிரேக்கர்) தம்முடைய நாடக மேடைகளில் திரைச்சீலைகளை அமைக்கவில்லை. திரைச்சீலைகள் இல்லாமலே யவனர் நாடகம் நடத்தினார்கள். திரைச்சீலைகள் இல்லாத யவனரிடமிருந்து சமஸ்கிருதக் காலம் எப்படித் திரைச்சீலையை (யவனிகாவை)ப் பெற முடியும்? மேலும் யவன நாட்டிலிருந்து துணிகள் இந்தியாவில் இறக்குமதி யாகவில்லை. மாறாக, இந்தியத் துணிகளை ஏற்றுமதி செய்தார்கள். எனவே, யவன நாட்டிலிருந்து திரைச்சீலைகள் வந்தன என்றும், அந்தத் திரைச்சீலைகள் யவனிகா என்று பெயர் பெற்றதென்றும் அவர்கள் கூறுவது வரலாற்று உண்மைக்குச் சிறிதும் பொருந்தாது. ஆனால், இதன் உண்மை என்ன?

எழினி என்னும் தமிழ்ச் சொல்லே சமஸ்கிருதத்தில் யவனிகா என்றாயிற்று. ழகர ஒலி இல்லாத வடமொழியில் எழினி என்னும் தமிழ்ச் சொல் சென்றபோது அச்சொல்லை அவர்கள் எவனி என்று கூறினார்கள். பிறகு எவனி யவனியாயிற்று. பின்னர் யவனி, யவனிகா ஆயிற்று. யவன என்னும் சொல்லும் யவனிகா என்னும் சொல்லும், ஒரே ஓசையுடையதுபோலக் காணப்படுகிற படியால் பிற்காலத்து வடமொழியாளர், யவன என்னும் சொல்லிலிருந்து யவனிகா என்னும்