உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் - அணிகலன்கள் - 193

இந்த வரிக்கூத்தல்லாமலும், கண்கூடுவரி, காண்வரி, உள்வரி, புறவரி, கிளர்வரி, தேர்ச்சிவரி, காட்சிவரி, எடுத்துக்கோள்வரி என எட்டு வரிக்கூத்துக்களைக் கூறி அவற்றிற்குரிய சூத்திரங்களையும் அடியார்க்குநல்லார் மேற்கோள் காட்டுகிறார். (சிலம்பு. வேனிற்காதை, அடி 104- 108. உரை மேற்கோள்.)

இவ்வாறு வரிக்கூத்துக்களையும் நாடகத்தில் உரிய இடங்களில் அமைப்பது நாடகத்துக்குப் பொலிவைத்தரும்.

சொல்

சொல் என்பது நாடக பாத்திரங்கள் பேசும் பேச்சு. அது மூன்று வகைப்படும். உட்சொல், புறச்சொல், ஆகாயச்சொல் என்று. உட்சொல் என்பது நடிகன் தானே நெஞ்சோடு கூறும் சொல். (நாடகம் காண்போருக்குக் கேட்கும்படி தானே கூறிக்கொள்ளுதல்). புறச்சொல் என்பது கேட்போருக்கு உரைத்தல். அதாவது நடிகர் தமக்குள் சம்பாஷித்தல். ஆகாயச்சொல் என்பது நடிகன் தனக்குத் தானே கூறிக்கொள்ளுதல்.

"நெஞ்சொடு கூறல் கேட்போர்க் குரைத்தல் தஞ்சம் வரவறிவு தானே கூறலென் றம்மூன்றென்ப செம்மைச் சொல்லே

(சிலம்பு. அரங்கேற்று காதை 12-ஆம் அடியுரை மேற்கோள், அடியார்க்குநல்லார்).

எழினி

நாடகக் கலையை வளர்த்த தமிழர், நாடக அரங்கத்தில் ஆதிகாலத்திலிருந்தே திரைகளைப் பயன்படுத்தினார்கள். திரைக்குப் பழைய பெயர் எழினி என்பது. சித்திரங்கள் எழுதப்பட்ட எழினிக்கு ஓவிய எழினி என்று பெயர். நாடக அரங்கத்திலே மூன்று வகையான எழினிகளைப் பயன்படுத்தினார்கள். அவை ஒருமுக எழினி, பொருமுக எழினி, கரந்துவரல் எழினி என்று பெயர் பெற்றன. இந்த எழினிகளைப் பற்றிச் சிலப்பதிகாரத்திலும் அதன் உரையிலும் வேறு தமிழ் நூல்களிலும் அறிகிறோம்.

66

‘ஒருமுக எழினியும் பொருமுக எழினியும் கரந்துவரல் எழினியும் புரிந்துடன் வகுத்து

என்று சிலப்பதிகாரம் (அரங்கேற்றுகாதை) கூறுகிறது.