உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

மனோபாவத்தினாலும்

மனிதன் தன்னுடைய தன்னுடைய அறிவினாலும் கற்பனையினாலும் கவின் கலைகளைப் படைத்து, அக்கலைகளின் மூலமாக உணர்ச்சியைப் பெற்று அழகையும் இன்பத்தையும் காண்கிறான். அழகுக் கலைகள் மனிதனின் மன எழுச்சியைத் தூண்டி, அழகுக் காட்சியையும் இன்ப உணர்ச்சியையும் தந்து, மகிழ்விப்பதனாலே உலகத்திலே நாகரிகமடைந்துள்ள மக்கள் நுண்கலைகளைப் போற்றுகிறார்கள்; போற்றி வளர்க்கிறார்கள்; வளர்த்துத் துய்த்து இன்புற்று மகிழ்கிறார்கள்.

அழகுக் கலைகளை விரும்பாத மனிதனை நாகரிகம் பெற்றவன் என்று கூற முடியாது; அவனை அறிவு நிரம்பாத விலங்கு என்றே கூறலாம்.

அழகுக்கலை நற்கலை, இன்கலை, கவின்கலை என்றும்

கூறப்படும்.

அழகுக் கலைகளை ஐந்து பிரிவாகக் கூறுவர். அவை கட்டக் கலை, சிற்பக்கலை, ஒவியக்கலை, இசைக்கலை, காவியக்கலை என்பவை. நம்முடைய நாட்டில் பழங்காலத்தில் கட்டடக் கலையையும் சிற்பக் கலையையும் ஒன்றாக இணைத்து இரண்டையும் சிற்பக்கலை என்று கூறினார்கள். நம்முடைய சிற்பக்கலை நூல்களிலே கட்டடமும், சிற்பமும் சிற்பக்கலை என்று கூறப்படுகின்றன. கட்டடக் கலையும், சிற்பக் கலையும் வெவ்வேறு தனிக் கலைகளாகும்.

அழகுக் கலைகள் மனித நாகரிகத்தின் பண்பாடாக விளங்கு கின்றன. உலகமெங்கும், நாகரிகம் பெற்ற மனிதர் எங்கெங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கங்கெல்லாம், அழகுக் கலைகள் வளர்க்கப்பட்டு ள்ளன. அழகுக் கலைகளின் அடிப்படையான தன்மை எல்லா மக்களுக்கும் பொதுவாக இருந்தபோதிலும் இந்தக் கலைகள் ஒரே விதமாக இல்லாமல், வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமாக வளர்ந்துள்ளன. கவின் கலைகளின் அடிப்படையான நோக்கம் கற்பனையையும் அழகையும் இன்பத்தையும் தருவதாயிருந்தும் அவை வெவ்வேறு விதமாக வளர்ந்திருப்பதன் காரணம் என்ன வென்றால் அந்தந்த நாடுகளின் தட்பவெப்பநிலை, இயற்கை யமைப்பு, சுற்றுச் சார்பு, பழக்கவழக்கங்கள், மொழியின் இயல்பு, சமயக் கொள்கை முதலியவைகளாம். இக் காரணங் களினால்தான் நுண்கலைகள்