உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

167

யாதவராயரின் 36-வது ஆண்டில் எழுதப்பட்ட சாசனம், அரிகண்ட புரத்து ஊரார் இந்தக் கோவிலுக்குத் தங்கள் ஊரில் நிலம் தானம் செய்ததைக் கூறுகிறது. இந்த நிலத்தின் வருவாயிலிருந்து இக்கோவிலில் திருநாள் (உற்சவத்துக்கு)ச் செலவு செய்ய வேண்டு மென்று இந்த சாசனம் கூறுகிறது. (No. 705. S. I. I. Vol. XVII)

இரண்டாம் ஹரிஹரராயர் காலத்து...? வேலூர்க் கிராமத்தார், தங்கள் மனைகளையும் தோட்ட துரவுகளையும் இக்கோவிலுக்குத் தானஞ் செய்ததைக் கூறுகிறது. (இந்த ஊரில் இதற்கு முன்பே கோவிலுக்குத் தானஞ் செய்யப் பட்ட நிலம் இருந்தது. (No. 700. S. I. I. Vol. XVII)

இரண்டாம் புக்கராயர் காலத்துச் சாசனம் (கி.பி. 1382) திருக்காரிக்கரையில், 'திருவானன்மடம்' என்னும் பெயருள்ள ஒரு மடம் இருந்ததையும், அந்த மடத்துத்தலைவர் சத்தியதரிசினி என்பவர் இருந்ததையும், அந்த மடத்துக்கு நின்றையூர் நாட்டு வெண் குளத்தூரார் நிலம் தானம் செய்ததையுங் கூறுகிறது. காவந்த கண்டலூர் நத்தமும் ஏரியும் நன்செய் புன்செய் நிலங்களும் இந்த மடத்துக்குத் தானம் செய்யப்பட்டன. (No. 699. S. I. I. Vol. XVII)

சாலிவாகன சக ஆண்டு 1358-இல் (கி.பி. 1436-இல்) ஸ்ரீசக்கரகர் என்னும் சிற்றரசன் இக்கோவிலில், திருக்கதவுகளை அமைத்து, திருப்பள்ளியறை நாச்சியாரையும் எழுந்தருளுவித்தார் என்று ஒரு சாசனங் கூறுகிறது. (No. 693. S. I. I. Vol. XVII)

வீர நரசிங்க யாதவராயரின் 36-வது ஆண்டில் எழுதப்பட்ட சாசனம் இந்தக் கோவிலில் பூசைசெய்து கொண்டிருந்த சிவப் பிராமணர், தங்களுடைய 42-வது வட்டத்தில் பத்துவட்டத்தை (பத்துநாள் பூசையை) அகவலன் சூரிய பட்டனுக்கு விற்றுவிட்ட செய்தியைக் கூறுகிறது. (No. 711. S. I. I. Vol. XVII)

திருக்காரிக்கரைக் கோவில் குளக்கரையில் ஒரு கருங்கல் நந்தி இருக்கிறது. அதன் வாயிலிருந்து நீர் விழுந்துக் கொண்டிருக்கிறது இந்த நந்தியின் பின்புறத்தில் எழுதப்பட்டுள்ள எழுத்து கி.பி. 10- ஆம் நூற்றாண்டு எழுத்தாகத் தெரிகிறது. இதன் வாசகம் :- ஸ்ரீ பரமேஸ்வரன் தரிசனத்திலேறிடு என்று பிரசாதஞ் செய்யச் சாமுண்டி' மகன் கூவத்துப் பெருந்தாசன் விட்ட ஏறு” என்பது. (No. 717. S. I. I. Vol. XVII)