உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 17

கிடைத்தது. "இந்தியா தேசம் ஏராளமான செல்வத்தை யவன தேசத்திலிருந்து ஆண்டுதோறும் கவர்ந்து கொள்கிறது.” என்று பிளினி என்னும் ஆசிரியர் எழுதியிருக்கிறார். இந்தத் தமிழர் யவனர் வணிகத் தொடர்பைப்பற்றிப் புறநானூறு, மணிமேகலை, சிலப்பதிகாரம் முதலிய சங்கநூல்களிலும் குறிப்புக்கள் காணப்படுகின்றன. தமிழருக்கும் யவனருக்கும் இருந்த இந்தத் தொடர்பு வாணிகத் தோடுமட்டும் நின்றிருந்ததே தவிர சமயம், கலை, மொழி முதலியவைகளிற் சிறிதும் இடம்பெறவில்லை. யவனர் நம்முடன் நேர்முகமாகக் கொண்டிருந்த இந்த வணிகத்தொடர்பு கி.பி. 7-ஆம் நூற்றாண்டுவரையில் நிலைபெற்றிருந்தது. 7-ஆம் நூற்றாண்டில், அரபி தேசத்து முகமதியர்கள் எகிப்து, பாரசீகம் முதலிய நாடுகளை வென்று கைப்பற்றிய பிறகு, யவனர் நமது தேசத்துடன் வைத்திருந்த நேர்முகமான வணிகத்தொடர்பு தடைப்பட்டு விட்டது. 7-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு முகமதியர் கடல்வழியையும் தரைவழியையும் கைப்பற்றி ஆதிக்கம் பெற்றதோடு, இந்திய வாணிகத்தையும் கைப்பற்றிக் கொண்டார்கள். இந்தியப் பொருள்களை வாங்கிக் கொண்டுபோய் ஐரோப்பிய தேசங்களில் விற்பனை செய்வதாற் பெரும்பொருள் ஊதியங் கிடைப்பதைக் கண்டு, முகமதியர் ஐரோப்பியரை இந்தியாவுடன் நேர்முகமாக வாணிகம் செய்ய வொட்டாதபடி தடுத்துவிட்டார்கள். இவ்விதமாகப் பண்டைக்காலத்தில் ஐரோப்பியர் நமது தேசத்துடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பு அற்றுப் போயிற்று. முகம்மதியர் மலையாளக் கரையிற் பண்டகசாலைகளை அமைத்து, மிளகு முதலிய பொருள்களைச் சொற்ப விலைக்கு ஏராளமாய் வாங்கிச் சேமித்துவைத்து, அவற்றைக் கப்பல்களில் ஏற்றிக்கொண்டு அரபிக்கடல் வழியாகச் செங்கடலிற் சென்று, அங்கிருந்து தரை வழியாக சூயஸ், கெய்ரோ, அலக்ஸாந்திரியா முதலான நகரங்களின் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குக் கொண்டுபோய், ஒன்றுக்குப் பன்மடங்கு அதிகமாக விலைவைத்துச் சரக்குகளை விற்று, பெரும்பொருள் திரட்டினார்கள். வணிகத்தொழில் செய்யும் குலத்தார் எப்பொழுதும் செல்வந்தரா யிருப்பது எல்லோரும் அறிந்த உண்மை. இதன்படி, வியாபாரத் தொழிலில் ஈடுபட்ட முகம்மதியர் மேன்மேலும் செல்வம் பெற்றுச் சிறப்படைந்து விளங்கினார்கள். ஐரோப்பியர் இப்போது கைத்தொழில், நாகரிகம் முதலியவற்றில் சிறப்படைந்திருப்பது போல அக்காலத்திற்