உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு

கிறித்துவமும் தமிழும்

105

சுவடிகளை எழுதுவது அதைவிட இன்னும் கடினமான காரியம். வருத்தப்பட்டு எழுதினாலும், ஒரு புத்தகத்தை எழுதி முடிக்க அதிகக் காலஞ்செல்லும்; எழுத்துச் செலவும் அதிகம். ஏட்டுச்சுவடிகளைக் கையாளுவதிலும் துன்பம் உண்டு. ஸீகன்பால்கு ஐயர் இந்த வருத்தங்களை உணர்ந்து, எப்படியாவது, முயன்று அச்சுப்பொறி நிறுவித் தமிழில் அச்சுப் புத்தகம் உண்டாக்க எண்ணினார். இவர் சிறுவர்களுக்குப் பாடசாலை ஏற்படுத்தினபோது, பாடப் புத்தகங்களின் தேவை ஏற்பட்டபடியால், இந்த எண்ணம் இன்னும் அதிகமாக அவர் மனத்தில் ஊன்றியது. அன்றியும், தமிழர்களுக்குக் கிறித்துமத உண்மைகளைத் தெரியப்படுத்த வேண்டுமானால் ஏட்டுச் சுவடிகள் பயன்படா வென்றும், குறைந்த நேரத்திற் குறைந்த செலவில் ஏராளமான அச்சுப் புத்தகங்களைப் பதிப்பித்து மக்களுக்குக் குறைந்த விலைக்குக் கொடுத்தால், அல்லது விலையின்றி வழங்கினால், அவர்கள் மிக எளிதில் மத உண்மைகளைத் தெரிந்து கொள்ளக்கூடும் என்றும் இவர் நன்குணர்ந்திருந்தார். ஆகையால், இவர் இங்கிலாந்தி லுள்ள “கிறித்துவ அறிவு விளக்கச் சங்கத் துக்கும் செர்மனி தேசத்தில் உள்ள தம் நண்பர்களுக்கும் கடிதம் எழுதி, தமிழ்நாட்டில் அச்சுப் புத்தகம் இல்லாத குறையையும், அச்சுப்புத்தகத்தினால் உண்டாகக் கூடிய நன்மைகளையும் எடுத்துக்காட்டி, அச்சுப்பொறி அச்செழுத்துக்கள், காகிதம் முதலியவற்றை அனுப்பி உதவிபுரியுமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டார். அவ்வாறே அவர்களும் அச்சுப்பொறி முதலியவற்றை அனுப்பி உதவி புரிந்தனர்.

995

செர்மனி தேசத்திலிருந்து ஓர் அச்சுப்பொறியும் தமிழ் அச்செழுத்துக்களும், அச்சு வேலையில் தேர்ச்சி பெற்ற ஆல்டர் என்னும் பெயருள்ள இரண்டு உடன்பிறந்தார்களும் அனுப்பப் பட்டனர். ஸீகன் பால்கு ஐயர் கடித மூலமாக எழுதி யனுப்பிய தமிழ் எழுத்துக்களைப் பார்த்து, முன்பின் தமிழறியாத செர்மனி தேசத்தார் தமிழ் அச்செழுத்துக்களை உண்டாக்கியது வியப்புத் தான். இந்த அச்செழுத்துக்கள் செர்மனி தேசத்தில் ஹாலி நகரத்தில் உண்டாக்கப் பட்டன. அங்கிருந்து அனுப்பப்பட்ட அச்சுப்பொறி முதலியவை 1713-ம் ஆண்டு சூன் திங்களில் தரங்கம்பாடி வந்துசேர்ந்தன.