உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

65

நிகழ்ச்சி பற்றிய நூலாயினும், அந்நிகழ்ச்சி நடைபெற்ற காலத்துத்தானே இயற்றப்பெற்றதன்று. மிகப் பிற்பட்ட காலத்திலே இது தோன்றியதெனக் கொள்ளல் வேண்டும். ஏனென்றால், இதனைப் பழையவாகிய கதை பொருளாகச் செய்யப்படுகின்ற தொன்மை என்பதற்கு இலக்கியமாகப் பேராசிரியர் காட்டுகின்றனர்” என்று ராவ்சாகிப் - திரு. எஸ் வையாபுரிப் பிள்ளை அவர்கள் புறத்திரட்டு நூன்முகத்தில் (பக்கம் XIV) கூறுகிறார்.

தகடூர் யாத்திரை என்னும் நூலில், நமக்கு இப்போது தெரிகிற வரையில், அரிசில் கிழாரும் பொன்முடியாரும் பாடிய பாடல்கள் காணப்படுகின்றன. இவ்விரண்டு புலவர்களும் தகடூர்ப் போர் நடந்த காலத்தில், பெருஞ்சேரல் இரும்பொறைக் காலத்தில் இருந்தவர்கள் என்பது இவர்கள் பாடிய பாடல்களினால் தெரிகிறது. (தகடூர் யாத்திரை, செய்யுள் 9, 29, 47, 48 காண்க.) தகடூரை வென்றபிறகு, தகடூர் எறிந்த பெருஞ்சேர லிரும்பொறையைப் பாடிப் (பதிற்றுப்பத்து, 8ஆம் பத்து) பெரும் பொருள் பரிசு பெற்றதோடு, அவனுடைய அமைச்சராகவும் இருந்தவர் அரிசில்கிழார் என்னும் புலவர். இவர்களுடைய செய்யுள்கள் தகடூர் யாத்திரையில் காணப்படுகின்றன. இங்ஙனமாக, இந்நூல் மிகப் பிற்பட்ட காலத்து நூல் என்று எவ்வாறு கூறமுடியும்? நூலினுள்ளே அகச்சான்று இருக்கும்போது, அதனைப் புறக்கணித்து, மிகப் பிற்காலத்தில் இருந்தவர் எழுதியதைச் சான்றாகக் கொண்டு, மனம் போனபடி கூறுதல் உண்மைச் செய்தியைப் புறக்கணிப்பதாகும். உரையாசிரியர் கூறுவதில் தவறும் இருக்கக்கூடும். நூலினுள்ளே அகச்சான்று கிடைக்கிறபோது அதனையே ஆதாரமாகக் கொள்ளவேண்டும். அன்றியும், வீரச்செய்திகளைக் கூறும் நூல்கள், அவ்வீர நிகழ்ச்சிகள் நடைபெற்ற அதே காலத்தில், அல்லது அது நிகழ்ந்த அண்மைக் காலத்திலேயே தோன்றுவது வழக்கமாக உள்ளது. நமது நாட்டில் வழங்கும் நாட்டுப் பாடல்களே இதற்குச் சான்றாகும்.

கட்டபொம்மன் கதை, தேசிங்கு ராஜன் கதை, முத்துப் பட்டன் கதை, கான்சாயபு சண்டை, பூதத்தம்பி நாடகம், மதுரைவீரன் கதை முதலிய வீரர்களைப் பற்றிய நூல்கள் எல்லாம் அவை அவை நிகழ்ந்த அக்காலத்திலேயே, அல்லது அவை நிகழ்ந்த அண்மைகாலத்துக் குள்ளே எழுதப்பட்டவை. அவை நிகழ்ந்த மிகப் பிற்பட்ட காலத்தில் தோன்றியவை அல்ல. (பாரதம், இராமாயணம் போன்ற மிகப் பழைய நிகழ்ச்சிகளை ஆதாரமாகக் கொண்டு நூல் இயற்றுவது விதிவிலக்கு.) மக்களின் மனத்திற்கு உணர்ச்சியூட்டுகிற நிகழ்ச்சிகள், முக்கியமாக வீரச்செயல்கள், அவை நிகழ்ந்த அக்காலத்திலேயே பாட்டாகவும் கதையாகவும் இயற்றப்படுவது தொன்றுதொட்டு இன்றுவரை நடைபெற்று வருகிற உலக வழக்கம்.