உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

ம்

29

வீரமாமுனிவர் இயற்றிய சதுரகராதி என்னும் நூலை 1835-ஆம் ஆண்டுக்கு முன்பு, ஒலைச்சுவடிப் பிரதியை 10 பவுன் (ஏறக்குறைய 150 ரூபா) கொடுத்து வாங்கியதாகப் பெர்சிவல் ஐயர் தம்மிடம் கூறியதாகவும், அதே சதுரகராதி அச்சுப் புத்தகமாக வெளிவந்தபோது பிரதிஒன்று 2/2 ஷில்லிங்கு (ஏறக்குயை 2 ரூபா)க்குக் கிடைத்ததாகவும் 1865-ஆம் ஆண்டில் மர்தாக்கு2 என்பவர் எழுதியிருக்கிறார். இதனாலே, ஏட்டுச் சுவடிகள் அதிக விலையுள்ளவை என்பதையும் அச்சுப்புத்தகங்கள் மலிவான விலையுள்ளவை என்பதையும் நன்கு அறியலாம். அச்சுப் புத்தகங்கள் கிடைக்கிற இந்தக் காலத்திலே அச்சுப் புத்தகத்தின் அருமை பெருமையை நாம் நன்கு உணர வில்லை. அதிகப் பொருள் கொடுத்து, பிரிப்பதற்கும் படிப்பதற்கும் துன்பமாக உள்ள ஏட்டுச் சுவடியை வாங்கியவர்களுக்கு அல்லவா அச்சுப்புத்தகத்தின் அருமை பெருமைகள் தெரியும்? நிழலின் அருமை வெயிலிலே சென்றவர்களுக்குத்தானே தெரியுமே?.

அச்சியந்திரம் ஏற்பட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டிலேதான் நமது நாட்டில் செய்தித் தாள்களும், வார இதழ், திங்கள் இதழ் முதலிய வெளியீடுகளும் தோன்றி மக்களிடம் அறிவு வளர்ச்சியைப் பரப்பின.

சென்ற நூற்றாண்டிலே அச்சியந்திரம் வராமல், இன்னும் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு வந்திருக்குமானால் இப்பொழுது நமக்குக் கிடைத்துள்ள பல பழைய இலக்கிய நூல்கள் நமக்குக் கிடைக்காமலே அழிந்து போயிருக்கும். பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முந்தியே, ஒன்றிரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு அச்சியந்திரம் நம்மவரிடம் வந்திருக்குமானால், இப்போது, மறைந்து போய்விட்ட பல பழைய இலக்கிய நூல்கள் நமக்குக் கிடைத்திருக்கும்! பத்தொன்பதாம் நூற்றாண்டிலே அச்சியந்திரம் கல்வி வளர்ச்சிக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் பேருதவியாக இருந்தது என்பதில் சிறிதும் ஐயமில்லை.

19-ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு மேற்கூறிய சூழ்நிலைகள் எல்லாம் பெருந்துணையாக இருந்தன. இந்தச் சூழ்நிலைகள் அல்லாமல் வேறு சில சூழ் நிலைகளும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் துணையாக இருந்தன. அவற்றையும் தொடர்ந்து கூறுவோம்.

1. Rev. P. Percival.

அடிக்குறிப்புகள்

2. John Murdoch. Classified catalogue of Tamil Printed Books with introductory notices. Madras 1865.