உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

175

இதனால், இவன் இசைக்கலையை நன்கறிந்தவன் என்பதும், இசைக் கலையில் வல்லவரான பாணர்களின் இசையிலும் இவன் பிழை கண்டவன் என்பதும், இசை நூல் ஒன்றை இவன் வகுத்தான் (இயற்றினான்) என்பதும், இவன் வகுத்த இசைநூல் முறைப்படி இசை பாடி, இவனிடம் பாணர்கள் பரிசு பெற்றார்கள் என்பதும் அறியப்படுகின்றன.

இவ்வரசன் இயற்றிய இசைநூலின் பெயர் தெரிய வில்லை. அந்நூலைப்பற்றிய வேறு செய்திகளும் தெரியவில்லை.

5. சிற்றிசை, 5 A பேரிசை

இப்பெயருள்ள இரண்டு நூல்களின் பெயரை இறையனார் அகப்பொருள் உரையாசிரியர் குறிப்பிடுகிறார்: “அவர்களால் (கடைச் சங்கத்தாரால்) பாடப்பட்டன நெடுந்தொகை நானூறும் குறுந்தொகை நானூறும் நற்றிணை நானூறும் புறநானூறும் ஐங்குறு நூறும் பதிற்றுப்பத்தும் நூற்றைம்பது கலியும் எழுபது பரிபாடலும் கூத்தும் வரியும் சிற்றிசையும் பேரிசையும் என்று இத் தொடக்கத்தன” என்பது இறையனார் அகப்பொருள் உரைப்பாயிரம்.

இதில் கூறப்பட்ட நெடுந்தொகை (அகநானூறு), குறுந்தொகை, நற்றிணை, ஐங்குறுநூறு, கலித்தொகை என்னும் நூல்கள் இப்போதும் உள்ளன. புறநானூற்றில் சில பாடல்கள் தவிர மற்றப் பாடல்கள் கிடைத்துள்ளன. பதிற்றுப்பத்தில் முதல்பத்தும் கடைசிப்பத்தும் தவிர, ஏனைய எட்டுப் பத்து களும் கிடைத்துள்ளன. பரிபாடலில் சில பாடல்கள் மட்டும் கிடைத் துள்ளன. சிற்றிசை, பேரிசை என்னும் நூல்கள் கிடைக்கவில்லை.

சிற்றிசை பேரிசை என்பன இசைத்தமிழ் நூல்கள் என்பது இவற்றின் பெயரினால் தெரிகிறது.

தொல், பொருள், செய்யுளியல், 158 ஆம் சூத்திர உரையில், பேராசிரியர், “கந்தருவ மார்க்கத்து (இசைத் தமிழ்) வரியும் சிற்றிசையும் பேரிசையும் முதலாயின போலச் செந்துறைப் பகுதிக்கே உரியவாகி வருவனவும் கூத்தநூலுள் வெண்டுறையும் அராகத்திற்கேயுரியவாகி வருவனவும் ஈண்டுக் கூறிய செய்யுள் போல வேறு பாடப்பெறும் வழக்கின என்பது கருத்து” என்று எழுதுகிறார்.

தொல். பொருள். செய்யுளியல், 172ஆம் சூத்திர உரையில், இளம் பூரணர், “பண்ணைத் தோற்றுவித்தலாற் பண்ணத்தி என்றார். அவை