உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

வெண்பாப்புலி வேலுசாமிப் பிள்ளை (1854-1926)

சிதம்பரத்துக்கு வடகிழக்கில் உள்ள தில்லைவிடங்கன் இவரது ஊர். சென்னை மில்லர் (கிறிஸ்துவக்) கல்லூரியில் ஆங்கிலம் பயின்றார். மேற்படி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த வித்துவான் சின்னசாமிப் பிள்ளையிடம் தமிழ் பயின்றார். பின்னர், புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியாரிடத்திலும், மகா வித்துவான் மீனாட்சி சந்தரம் பிள்ளையவர்களிடத்திலும் தமிழ் பயின்றார் செய்யுள் இயற்றுவதில் வல்லவர். வெண்பாவை விரைவில் பாடும் வல்லமை யுள்ளவர், ஆனது பற்றி மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை யவர்கள் இவருக்கு 'வெண்பாப் புலி' என்னும் சிறப்புப் பெயரை வழங்கினார்கள். திருவாவடுதுறை ஆதீனத்துச் சுப்பிரமணிய தேசிகர் இடத்திலும் இவர் கல்வி பயின்றார். காஞ்சிபுரம் பச்சையப்பன் உயர்தரப்பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராக இருந்தார்.

இவர் இயற்றிய நூல்கள்: கந்தபுராண வெண்பா (5665 செய்யுளுடையது.) தேவார சிவதல வெண்பா, திருக்கச்சூர் ஆலக்கோயிற் புராணம், தில்லைவிடங்கன் புராணம், திருவேட்ட குடிப் புராணம், தேவார வைப்புத்தலக் கட்டளைக் கலித்துறை, தில்லைவிடங்கன் நிரோட்டயமகவந்தாதி முதலியன.

சுந்தரம் பிள்ளை (1855-1897)

இராய்பகதூர் பெ. சுந்தரம் பிள்ளை என்பது இவர் பெயர். திருவிதாங்கூரைச் சேர்ந்த ஆலப்புழை என்னும் ஊரில் பிறந்தவர். திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் கல்வி பயின்றார். திருநெல்வேலி ஆங்கிலத் தமிழ்க் கல்விச் சாலையின் தலைமை ஆசிரியராக இருந்தார். கோடக நல்லூர் சுந்தர சுவாமிகளின் தொண்டாராக இருந்தார். அவரிடம் சமய நூல்களைக் கற்றார். 1879-இல் திருவனந்தபுரத்து அரசர் கல்லூரியில் அறிவு நூல் ஆசிரியராக அமர்ந்தார். சைவப்பிரகாச சபை என்னும் சபையைத் திருவனந்தபுரத்தில் நிறுவினார். தமிழ் இலக்கிய வரலாற்று ஆராய்ச்சி, சமயநூல் ஆராய்ச்சி, கல்வெட்டெழுத்து ஆராய்ச்சிகளைச் செய்துவந்தார்.

இவர் இயற்றிய நூல்கள்: நூற்றொகை விளக்கம், மனோன் மணீயம் என்னும் நாடக நூல், பத்துப்பாட்டுக்காலம், ஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி முதலிய கட்டுரைகளைச் சென்னைக் கிறிஸ்துவக் கல்லூரித் திங்கள் இதழில் எழுதினார்.