உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

பால்வண்ண முதலியார் (1866-1908)

209

திருநெல்வேலியைச் சேர்ந்த பேட்டையில் பிறந்தவர். வைகுண்டபதிக் கவிராயரிடத்தில் தமிழ்க் கல்விபயின்றார். சைவ சித்தாந்த நூல்களைக் கற்றவர். சொற்பொழிவு செய்யுந் திறம் உடையவர். இவர் இயற்றிய நூல்களாவன. சித்தாந்தஞான ரத்தினாவளி, தருக்க சூத்திரம், பண்டார மும்மணிக் கோவை, பசுபதிபாசத் தொகையுரை, பிரசங்க தீபிகை, மெய்ஞ்ஞான சாரம்.

முத்துத்தாண்டவராய பிள்ளை (1868-?)

இவருடைய ஊர் பரங்கிப்பேட்டை 1893-இல் தரங்கம்பாடி லூதரன் மிஷன் கல்லூரியில் தமிழாசிரியராக அமர்ந்தார். பிறகு 1916– இல் சீர்காழி லூதரன் மிஷன் உயர்தரப்பள்ளியில் தமிழாசிரியரானார். இவர், இயற்றிய நூல்கள். சிந்தாமணி விநாயகர் மாலை, சாதாக்கியத் திருமுறை, ஒருபா ஒருபஃது, பொய்யா வினாயகர் இருபா இருபஃது, தில்லையாடிப் புராணம் வெள்ளை வாரணப் பிள்ளையார் திருவிரட்டை மணிமாலை, முருகன் வருவகைப் பத்து, ஐயனாரிதனார் மாலை, திருமகள் மாலை.

பரிதிமாற் கலைஞர் (1870-1903)

மதுரைக்கு அடுத்த விளாச்சேரியில் பிறந்தவர். இவருடைய இயற்பெயர் சூரியநாராயண சாஸ்திரி என்பது. இப்பெயரை இவர் பரிதிமாற் கலைஞன் என்று தமிழாக்கிக்கொண்டார். மதுரை சபாபதி முதலியார் என்னும் ஆசிரியரிடம் தமிழ் பயின்றார். இராவ்பகதூர் சி. வை. தாமோதரம் பிள்ளை அவர்களால் திராவிட சாஸ்திரி என்னும் பட்டம் வழங்கப்பட்டார். சென்னைக் கிறிஸ்துவக் கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியராக இருந்தார்.

“ஞானபோதினி” இதழின் ஆசிரியராக 1897-98 ஆண்டுகளில் இருந்தார். நாடகவியல் என்னும் நூலை 1897-இல் இயற்றினார். கலாவதி என்னும் நாடக நூலை 1898-இல் இயற்றினார். மாலா பஞ்சகம், ரூபாவதி, மான விஜயம், பாவலர் விருந்து, தனிப்பாசுரத்தொகை, மதிவாணன், தமிழ் வியாசங்கள், தமிழ்ப்புலவர் சரித்திரம், முத்திரா ராட்சம், தமிழ்மொழி வரலாறு முதலிய நூல்களையும் எழுதினார்.