உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

முப்பால் என்பது திருவள்ளுவ நாயனார் அருளிச் செய்த திருக்குறள்தான் என்பதில் ஐயமில்லை. திருக்குறள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று என்பதிலும் ஐயமில்லை. ஆனால், சி. வை. தாமோதரம் பிள்ளையவர்கள் முப்பால் என்பது “மூன்று சிறுத் தரும நூல்கள்” என்று 1887-ஆம் ஆண்டிலும், “முப்பால், நாயனார் தமிழ்வேதமாகாது நமது கைக்கு இன்னும் அகப்படாத பின்னொரு சிறு நூலேயாதல் வேண்டும்” என்று 1889-ஆம் ஆண்டிலும் எழுதினார். கீழ்க்கணக்கு நூல்களைக் கூறுகிற “நாலடி நான்மணி” எனத் தொடங்கும் பழைய வெண்பாவின் பின் இரண்டடிகள்.

66

'இன்னிலை சொல் காஞ்சியுடன் ஏலாதி என்பவே கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு’

என்பன. இதில் காஞ்சிக்கு (முது மொழிக் காஞ்சிக்கு) அடை மொழியாகிய “இன்னிலை சொல்” என்றதற்கு இன்னிலை, இன்சொல் என்னும் பெயருள்ள இரண்டு நூல்களின் பெயராக இருக்கக்கூடும் என்று தாமோதரம் பிள்ளையவர்கள் கருதினார்கள். கைந்நிலை என்று ஒரு நூல் இருப்பதாக அவர் கருதவில்லை. பின்னர், கைந்நிலை என்று பெயருள்ள ஒரு நூல் உண்டென்றும் அது கீழ்க்கணக்கைச் சேர்ந்த நூலென்றும் அறிந்த பிறகு “இன்னிலை சொல் என்பதற்கு இன்னிலை இன்சொல் என இரண்டு நூல்களாகாது. காஞ்சிக்கு விசேஷணமாகவும், கைந்நிலை யென்றது வேறொரு தனி நூலாகவும் கொள்ளத்தகும் என்று எழுதினார்கள். ஆனால், கைந்நிலை என்னும் நூல் அக் காலத்தில் கிடைக்கவில்லை.

18, 19-ஆம் நூற்றாண்டுகளிலே சங்க நூல்களையும் வேறு சில நூல்களையும் பயிலக்கூடாது என்னும் குறுகிய தவறான எண்ணம் இருந்த காரணத்தினாலே அந்நூல்கள் பயிலப்படாமலும் அது காரணமாக அவை இன்னவை என்று அறியப் படாமலும் போயின. அவற்றில் பதினெண் கீழ்க்கணக்கும் ஒன்று. நற்காலமாக வேம்பத்தூர் முத்துவேங்கடசுப்ப பாரதியார் என்னும் புலவர் பதினெண்கீழ்க் கணக்கு நூல்களின் பெயரை ஒரு செய்யுளில் கூறிவைத்தார். சென்ற 19-ஆம் நூற்றாண்டிலே இருந்த அவர், 1849-ஆம் ஆண்டில் பிரபந்த தீபிகை என்னும் ஒரு நூல் இயற்றினார். அந்நூலில், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இன்னவை என்பதை ஒரு செய்யுளில் அமைத்துப் பாடினார். அந்நூல் அக்காலத்தில் அச்சிற் பதிப்பிக்கப்