உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

273

ஏன் கடவுள் வாழ்த்து இவர் பாடவில்லை. தொகை நூல்கள் பதினெட்டில் பதினேழு நூல்களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடாமல் ஒரு நூலுக்கு மட்டும் ஏன் பாடினார்? இல்லை. கீழ்க்கணக்குத் தொகை நூல்கள் பதினெட்டுக்கும் சேர்த்து இக்கடவுள் வாழ்த்தைப் பாடினார் என்றால், ஏனைய கீழ்க்கணக்கு ஏட்டுச் சுவடிகள் ஒவ்வொன்றிலும் இந்தக் கடவுள் வாழ்த்துச் செய்யுள் இருக்க வேண்டும் அல்லவா? அவைகளில் பாரதம் பாடிய பெருந்தேவனாரின் கடவுள் வாழ்த்துக் காணப்படாமல், இந்த இன்னிலை ஏட்டுச் சுவடியில் மட்டும், (இது கீழ்க் கணக்கு நூலைச் சேர்ந்ததும் அன்று.) கடவுள் வாழ்த்துப் பாடினார் என்றால், இதனைப் பகுத்தறிவுள்ளார் எப்படி ஒப்புக்கொள்ளமுடியும்? எனவே, இன்னிலைப் பதிப்பாசிரியர், அந்நூல் முன்னுரையிலும், ஆசிரியரைப் பற்றிக் கூறிய இடத்திலும், இன்னிலை கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்றென்று கூறியது ஏற்கத்தக்கதன்று.

மேலும் இன்னிலைப் பதிப்பாசிரியர் வ.உ. சிதம்பரம் பிள்ளையவர்கள், இன்னிலை நூல் செய்யுட்களை உரையாசிரியராகிய இளம்பூராண அடிகள் தொல்காப்பிய உரையில் மேற்கோள் காட்டியுள்ளார் என்றும் ஆகவே இன்னிலை பழைய நூல் என்றும் மேற்படி நூலின் முன்னுரையில் எழுதியுள்ளார்கள். இளம்பூரணர் தமது தொல்காப்பியக் களவியல் 23-ஆம் சூத்திர உரையிலும், கற்பியல் 5- ஆம் சூத்திர உரையிலும் 12-ஆம் சூத்திரஉரையிலும், இன்னிலை நூற் செய்யுட்களை மேற்கோள் காட்டியிருப்பதாக எழுதியிருக்கிறார்கள். இவர் கூறுகிறபடி இச்செய்யுட்களை இளம்பூரண அடிகள் மேற்கோள் காட்டுகிறாரா என்பதைப் பலமுறை தேடித் தேடிப் பார்த்தேன். ஒரிடத்திலாவது மேற்கோள் காட்டப்பட்ட வில்லை.

திரு. எஸ். வையாபுரிப் பிள்ளையவர்களும் இது பற்றி இதையே கூறுகிறார்:

"இந்நூற் (இன்னிலை நூற்) செய்யுட்களை இளம் பூரணம் எடுத்தாண்டதாக ஐந்து இடங்கள் காட்டப்பட்டுள்ளன. இவை யனைத்தும் இளம்பூரணருரை ஏட்டுப்பிரதியிலும். அச்சுப் பிரதியிலும் காணப்படவில்லை, பொருளதிகாரத்தில் செய்யுளியல் தவிர ஏனைய இயல்களுக்குத் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள ஏட்டுப் பிரதி ஒன்றேயாம். இரண்டாவது ஒரு பிரதியில்லை என்பது இங்கே மனங்கொள்ளத் தக்கது.

993