உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

23

வழங்கப்பட்டது. அந்தப் பொன் நாணயத்திற்குப் பெயர் மாடை என்பது. மாடை என்னும் பொன் நாணயம் பெருமதிப்புள்ளதாக, அதிக விலையுள்ளதாக இருந்தது. மாடு என்னும் பெயரிலிருந்து மாடை என்னும் பெயர் அந்தப் பொன் நாணயத்திற்கு ஏற்பட்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. மதுராந்தகச் சோழன் பெயரினால் மதுராந்தகன் மாடை என்னும் பெயருள்ள பொன் நாணயம் வழங்கி வந்ததைச் சாசனங்களினால் அறிகிறோம்.

ஏகாம்பர நல்லூர் என்னும் கிராமம் நூற்று முப்பத்து மூன்று மாடைப்பொன் கொடுத்து விலைக்கு வாங்கப்பட்டது; காரையூர் என்னுங் கிராமம் நூற்றுநாற்பது மாடைப்பொன் கொடுத்து வாங்கப்பட்டது; திருவாய்ப்பாடி என்னுங் கிராமம் பத்து மாடைக்கு வாங்கப்பட்டது என்று ஒரு 2சாசனம் கூறுகிறது.

கி.பி. 11-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், பரகேசரிவர்மன் ஆன இராஜேந்திர சோழன் காலத்தில், மதுராந்தக தேவன் மாடை என்னும் பொன் நாணயம் வழங்கி வந்தது. இந்தப் பொற்காசு ஆண்டு ஒன்றுக்கு இரண்டு கலம் நெல்லை வட்டியாகப் பெற்றது.3

அதே அரசன் காலத்தில், திருவொற்றியூருக்கு அடுத்த மணலி என்னும் கிராமத்தில் இரண்டாயிரம் குழி நிலம் எட்டு மாடைக்கு விற்கப்பட்டது. அதாவது, இருநூற்று ஐம்பது குழி நிலம் ஒரு மாடைப் பொன் விலை பெற்றது.4 இதனால், மாடை என்பது அதிக மதிப்புள்ள பொன் நாணயம் என்பது தெரிகிறது.

என்னும்

மாடை என்னும் பொற்காசின் பெயர் மாடு பெயரிலிருந்து ஏற்பட்டிருக்கக் கூடும் என்று சொன்னோம். பண்டைக்காலத்தில் நமது நாட்டிலிருந்தது போலவே, உலகத்தில் மற்ற நாடுகளிலும் மாடு செல்வத்திற்குரிய பொருளாக மதிக்கப்பட்டது என்றும் கூறினோம். பண்டைக்காலத்துக் கிரேக்க நாட்டிலும் கிரேக்கர்கள் மாடுகளைச் செல்வமாகக் கருதிப் பண்டமாற்றாக வழங்கி வந்தார்கள். பிற்காலத்தில் அவர்கள் மேலும் நாகரிகம் பெற்று, காசை நாணயமாக வழங்கியபோது, அந்தக் காசுக்கு மாடு என்றே பெயர் வைத்தனர். அக்காசின் மேல் மாட்டின் உருவத்தைப் பொறித்திருந்தனர். (படம் காண்க.)