உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்

தமிழ் என்னும் சொல்லுக்கு அர்த்தம் தெரியாதா? தமிழ்

என்றால், தமிழ் மொழி தமிழ் பாஷை

என்பது அர்த்தம் என்று நீங்கள் கூறுவீர்கள். ஆம்; அது உண்மைதான். அன்றியும் தமிழ் என்னும் சொல்லுக்கு இனிமை என்னும் பொருளும் உண்டு.

இந்த இரண்டு பொருளைத் தவிர மூன்றாவதாக வேறு ஒரு பொருளும் தமிழ் என்னும் சொல்லுக்கு இருந்தது. அப்பொருள் பிற்காலத்தில் வழக்கிழந்து மறைந்து விட்டது. அந்த மூன்றாவது பொருள் என்ன? அதுதான் அகப்பொருள் (காதல்) என்பது. அதாவது, தமிழ் என்னுஞ் சொல்லுக்கு அகப்பொருள் என்னும் அர்த்தமும் இருந்தது. கடைச்சங்க காலத்தின் இறுதியிலே தோன்றி, சில நூற்றாண்டு வரையில் நிலைபெற்றிருந்து, பிறகு மறைந்துபோன, அகப்பொருள் என்னும் அர்த்தமுடைய தமிழ் என்னும் சொல்லைப்பற்றி இங்கு ஆராய்கிறோம்.

இறையனார் அகப்பொருள் என்னும் ஒரு தமிழ் நூல் உண்டல்லவா? அது அகப்பொருள் இலக்கணத்தைக் கூறுகிற நூல் என்பது எல்லோரும் அறிந்ததுதானே! அந்த இறையனார் அகப் பொருளின் உரையாசிரியர், உரைப்பாயிரத்தில் இவ்வாறு எழுதுகிறார்:

“இனி நுதலிய பொருளென்பது நூற்பொருளைச் சொல்லுத லென்பது. இந்நூல் என்னுதலிற்றோவெனின் தமிழ் நுதலிய தென்பது.

66

وو

“இனி - நுதலியதுவும் உரைக்கற்பாற்று. அது பாயிரத்துள்ளே உரைத்தாம்: தமிழ் நுதலிய தென்பது”

இவ்வாறு, இவ்வுரையாசிரியர், இறையனார் அகப்பொருள் என்னும் நூல் தமிழைக் கூறுகிறது என்று உரைக்கிறார். தமிழைக் கூறுகிறது என்றால் பொருள் என்ன? இந்நூல் தமிழ் மொழியின் இலக்கணத்தைக் கூறவில்லை. அகப்பொருள் இலக்கணத்தைத் தான் கூறுகிறது. ஆனால், உரையாசிரியர் இந்நூல் தமிழைக் கூறுகிறது என்று சொல்லுகின்றார். இதன் கருத்து என்ன?