உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

67

அறிவைத் தானே நேரில் கண்டு மகிழ்வதை விட, பிறர் கூறக் கேட்டு மகிழ்வது தனிச் சிறப்பு. ஆகையால், அறிவுடையோர் தன் மகனை அறிஞன் என்று சொல்ல, அதுகேட்ட தாய் பெரிதும் மகிழ்வாள் என்று பரிமேலழகர் கூறிய உரையில் என்ன தவறு உண்டு என்று சிலர் கேட்பர்.

அப்படியானால், தன் மகனின் அறிவைப் பிறர் புகழ்ந் துரைக்கக் கேட்ட தாய் மகிழமாட்டாளா? ஆண், பெண் மக்கள் இருவரையும் பொதுவாக, “மக்களைச் சான்றோர் எனக் கேட்ட தாய்” என்று கூறாமல், ஆண்மகனை மட்டுஞ் சிறப்பித்து, “மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்” என்று ஏன் கூறினார்? இக்கேள்விக்கு விடை என்ன? சான்றோன் என்பதற்கு அறிவுடையவன் என்னும் பொருளைத் திருவள்ளுவர் கருதியிருந்தால், சான்றோன் எனக் கண்ட தாய்" என்று கூறியிருப்பார். அப்படிக் கூறாமல், “சான்றோன் எனக் கேட்ட தாய்” என்று ஏன் கூறினார்? 1

இங்குச் சான்றோன் என்பதற்கு வீரன் என்பது தான் செம் பொருள் ஆகும். இதனைத் தெளிவுபடுத்த வேண்டுமானால், இக் குறளின் ஏனைய சொற்றொடர்களையும் விளக்கிக் கூறவேண்டும். கூடுமானவரையில் சுருக்கமாக விளக்குகிறேன்.

முதலில், “கேட்ட தாய்” என்பதை விளக்குவோம். பழைய தமிழ் இலக்கிய நூல்களின் சான்றுகளைக் காட்டி விளக்குவோம். பெண் மக்கள், போர் நடக்கும் போது, போர்க்களத்துக்குப் போகக்கூடாது என்பது தமிழர் மரபு. மறக்குடியில் பிறந்த வீரமகளிருங்கூட, போர்க் களம் செல்வது கூடாது. மறக்குடி மகளிர், போர் முடிந்த பிறகு, போர்க் களம் சென்று, களத்தில் இறந்து போன (மகன், கணவன் முதலிய) உறவினரைத் தேடிக் கண்டுபிடிக்கலாம்.

ஆனால் போர் நடக்கும் போது பெண்மகளிர் போர்க்களம் போகக்கூடாது. இது தமிழர் மரபு. ஆகவே, மறக்குடியில் பிறந்த பெண் மகளுக்குத் தன் மகன் போர்க்களத்தில் எவ்வாறு போர் செய்தான் என்று நேரில் காணும் வாய்ப்பு இல்லை. அவன் போர் செய்வதைப் போர்க்களத்தில் கண்டவர் பிறர் சொல்லக் கேட்டுத்தான், தாய், தன் மகனுடைய வீரத்தை அறிய முடியும். ஆகவேதான், “தன் மகனைச் சான்றோன் (வீரன்) எனக் கேட்ட தாய்” என்று திருவள்ளுவர் பழைய தமிழர் மரபுக்கேற்பக் கூறினார்.