உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 18

போர் நடக்கும்போது மகளிர் போர்க்களஞ் செல்லும் வாய்ப்புப் பெற்றிருந்தால், “தன் மகனைச் சான்றோன் எனக் கண்ட தாய்” என்று கூறியிருப்பார். இந்தப் பழந்தமிழர் மரபை உணர்ந்து பொருள் கூறாமல், சான்றோன் என்றால் கல்வி கேள்விகளால் நிறைந்தவன் என்றும், கேட்ட தாய் என்பதற்கு இயல்பால் தானாக அறியாமையின் “கேட்ட தாய்” என்றும் பரிமேலழகர் முதலியோர் மனம் போனபடி பொருந்தாவுரை கூறுவது ஏற்றதன்று.

கற்றவர் அவைக்களத்திலே நேரில் சென்று காணும் வாய்ப்பு பெண்மகளிர்க்கும் உண்டு.சான்றோன் என்பதற்குத் திருவள்ளுவர் அறிஞன் என்னும் பொருளைக் கருதியிருந்தால், இக்குறளில் “சான்றோன் எனக் கண்ட தாய்” என்று கூறியிருப்பார். அவர் அறிஞன் என்னும் பொருளைக் கருதாதபடியால், "கேட்ட தாய்” என்று கூறினார். அன்றியும் இக்குறளில் சான்றோன் என்பதற்கு அறிஞன் என்று பொருள் கருதியிருந்தால், திருவள்ளுவர், மகன் என்று கூறாமல், மக்கள் என்று இருபாலாரையும் கூறியிருப்பார். சான்றோன் என்று ஆண் மகனை மட்டும் கூறியிருப்பதனாலும், கேட்ட தாய் என்றிருப்பதனாலும் இங்கு வீரன் என்னும் பொருள் சிறப்புள்ளதாகக் காணப்படுகிறது.

மேலும், “ஈன்ற பொழுதிற் பெரிது உவக்கும்” என்னும் தொடரும், சான்றோன் என்பதற்கு வீரன் என்று பொருள் கொள்ள வேண்டும் என்பதை வற்புறுத்துகிறது. மூதிற் பெண்டிரான வீரத் தாய், தன் மகன் போர்க்களத்திலே வீரப்போர் செய்தான் என்று பார்த்தவர் கூறியதைக் கேட்டபோது, அந்த மகனைப் பெற்ற காலத்தில் அடைந்த மகிழ்ச்சியைப் பார்க்கிலும் அதிகமாக மகிழ்ந்தாள் என்பதைத் தமிழ் நூல்களிலே காண்கிறோம்.

மீனுண் கொக்கின் தூவி மன்ன

வால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன் களிறெறிந்து பட்டனன் என்னும் உவகை ஈன்ற ஞான்றினும் பெரிதே

என்பது புறநானூறு, 277-ஆம் செய்யுள்.

தலை நரைத்து முதுமையடைந்த மூதாட்டி, தன் மகன் போர்க் களத்திலே யானைப் படையுடன் போர் செய்து வென்று, அக்களத்திலே மாண்டான் என்ற செய்தி கேட்ட போது, அவனை ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தாள் என்று இச்செய்யுள் கூறுவது காண்க.