உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

நரம்பெழுந் துலரிய நிரம்பா மென்றோள் முளரி மருங்கின் முதியோள் சிறுவன் படையழிந்து மாறினன் என்றுபலர் கூற மண்டமர்க் குடைந்தனன் ஆயின் உண்டவென் முலையறுத் திடுவேன் யானெனச் சினைஇக் கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்

செங்களம் துழவுவோள் சிதைந்துவே றாகிய படுமகன் கிடக்கை காணூஉ

ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே

என்பது புறநானூறு, 278-ஆம் செய்யுள்.

69

போர்க்களம் சென்ற தன் மகன் போரில் புறங்காட்டி ஓடினான் என்று சிலர் சொல்லக் கேட்ட வீரத்தாய், அவன் புறங்கொடுத்து ஓடினான் என்பதை நம்பாமல், தானே போர்க்களஞ் சென்று மாண்டு கிடந்த போர்வீரர்களிடையே தன் மகன் மார்பில் புண்பட்டு இறந்து கிடந்ததைக் கண்டு, அவன் வீரத்தோடு போர் செய்தமைக்காக, ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தாள் என்பது இச்செய்யுளின் கருத்து.

இச்செய்யுள்களில், “ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனள்” என்று கூறியிருப்பதற்கேற்பவே, திருவள்ளுவரும் இக்குறளில், “ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்” என்று கூறியிருப்பதை ஊன்றிப் பார்க்க வேண்டும்.

தன்னுடைய மகன் அறிஞன் என்று கூறக்கேட்ட தாய், “ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனள்" என்று தமிழ் இலக்கியத்தில் சான்று காணமுடியவில்லை. இருந்தால் யாரேனும் காட்டட்டும். நான் கண்ட வரையில் அவ்வாறு சான்று இல்லை. மகனுடைய வீரத்துக்காக, அவனைப் பெற்ற காலத்து மகிழ்ச்சியைவிடப் பன்மடங்கு மகிழ்ச்சி யடைவது வீரத்தாய்மார்க்கு மரபாதலின், அந்த மரபைப் பின்பற்றியே திருவள்ளுவரும் ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் என்று கூறினார் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

இதுகாறும் விளக்கியவற்றால், இக்குறளில் சான்றோன் என்னும் சொல்லுக்கு வீரன் என்பதுதான் சிறந்த செம்பொருள் என்பது விளங்கும். அதாவது, “ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்” என்னும் தொடரும் “கேட்ட தாய்” என்னும் தொடரும் சான்றோன் என்னும் சொல்லுக்கு வீரன் என்னும் பொருளை வலியுறுத்துகின்றன. எனவே,