உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

91

பிறகு, போர்ச்சுகீசியரைப் பின்பற்றி, ஒல்லாந்தரும், பிரெஞ்சுக் காரரும், ஆங்கிலேயரும் ஆகிய ஐரோப்பியர்கள் மிளகு வியாபாரம் செய்ய நமது நாட்டிற்கு வந்தார்கள். அவ்வாறு வந்தவர்கள், நாட்டைக் கைப்பற்றி அரசாளவும் தொடங்கினார்கள். அவற்றைப் பற்றி இங்கு நாம் கருதவேண்டாம்.

மிளகாய் வந்தபிறகு மிளகின் பெருமை சிறிது குறைந்து விட்ட போதிலும், இன்றும் மிளகின் சிறப்புக் குறையவில்லை. கிழக்கிந்திய மிளகை விட, சேரநாட்டு மிளகுக்கு இன்றும் நன்மதிப்பு உண்டு. இதுதான் சேரநாட்டு மிளகின் சுருக்கமான வரலாறு. இது நிற்க. நாம் கூறப்புகுந்த கருத்தைத் தொடர்ந்து ஆராய்வோம்.

பண்டைக் காலத்திலே முசிறித் துறைமுகப்பட்டினம் மிளகு ஏற்றுமதிக்குப் பேர் பெற்றிருந்ததென்று கூறினோம் அல்லவா? கிரேக்கநாடு, உரோமநாடு முதலிய மேல்நாடுகளில் மட்டும் அல்லாமல், ஏனைய நாடுகளிலும் முசிறி மிளகு பேர்பெற்றிருந்தது. பாரதநாட்டின் வடபகுதியிலும் முசிறிப் பட்டினத்து மிளகு பேர்பெற்றிருந்தது. ஆகவே, அவர்கள், மிளகுக்கு, அது வந்த ஊரின் பெயரைச் சூட்டி முசிறி என்று வழங்கினார்கள். முசிறி என்னும் பெயர் நாளடை வில் மருவி மரிசி என்று ஆயிற்று. நமது நாட்டிலும் சிலர் குதிரையைக் குருதை என்றும், மதுரையை மருதை என்றும் வழங்குகிறார்கள் அல்லவா? அதுபோல, முசிறி மரிசியாயிற்று. பிறகு, சமஸ்கிருதமாகிய வடமொழியில் இந்தச் சொல் நுழைந்து மரிசியாயிற்று. இவ்வாறு முசிறி என்னும் துறைமுகத்தின் பெயர் முரசி என்று திரிந்து பிறகு மரிசியாக மாறி, மிளகு என்னும் பொருளுக்குப் பெயராக அமைந்துவிட்டது. பீப்லாஸ் என்னும் துறைமுகப்பட்டினத்தின் பெயர் பைபிள் என்னும் புத்தகத்தின் பெயரானது போல, முசிறிப்பட்டினத்தின் பெயர் மரிசி என்று மாறி மிளகின் பெயராக வடமொழியில் அமைந்துவிட்டது.

3. கௌர்ணேயம்

வடமொழியில் அர்த்த சாஸ்திரம் என்னும் பொருளியல் நூலை எழுதிய கவுடல்லியர், அந்நூலில் கௌர்ணேயம் என்னும் முத்தைக் கூறுகிறார். அர்த்த சாஸ்திரத்தின் மூன்றாம் பகுதியில் பதினோராம் அதிகாரத்தில் பல தேசத்து முத்துக்களைக் கூறுகிற இடத்தில் கௌர்ணேயம் என்னும் முத்து கூறப்படுகிறது. கௌர்ணேயம் என்பது சேர நாட்டிலே (மலையாள மொழி உண்டாவதற்கு முன்பிருந்த தமிழ் நாட்டிலே) மேற்குக் கடலிலே உண்டான முத்து. பாண்டி நாட்டுக்