உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 18

கலிங்க தேசம் கூறப்படுகிறது. கி.பி. 12-ம் நூற்றாண்டில், சோழ அரசர்கள் கலிங்க நாட்டை வென்றார்கள். அதன் காரணமாக, கலிங்கத்துப் பரணி என்னும் நூல் எழுதப்பட்டது.

இவ்வளவு பழமைவாய்ந்த கலிங்க தேசத்துக்கும் தமிழ் நாட்டுக்கும் பண்டைக் காலத்தில் வாணிபத் தொடர்பு இருந்தது. கலிங்க நாட்டிலிருந்து புடவைகளும், ஆடைகளும் சங்ககாலத்தில் தமிழ் நாட்டிற்கு வந்தன. கலிங்க நாட்டிலிருந்து வந்த பருத்தி ஆடை களுக்குத் தமிழர் கலிங்கம் என்று பெயரிட்டார்கள். கலிங்க நாட்டி லிருந்து வந்த பட்டு ஆடையைத் தமிழர் நூலாக் கலிங்கம் என்று கூறினர். நூலாக் கலிங்கம் என்றால், பருத்தி நூலைப்போலக் கையினால் நூற்கப்படாத (இயற்கையாகவே நூற்கப்பட்ட) கலிங்க ஆடை என்பது பொருள். இவ்வாறு, கலிங்க தேசத்திலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்த ஆடைக்ளுக்குக் கலிங்கம் என்று பெயர் ஏற்பட்டது. கலிங்க நாட்டுத் துணிகளுக்குக் கலிங்கம் என்று ஏற்பட்ட பெயர், பிற் காலத்தில் பருத்தி ஆடைகளுக்கெல்லாம் பொதுப் பெயராக அமைந்து விட்டது.

கலிங்கம் என்னும் பெயரைப் பழைய தமிழ் நூல்களிலே காண்கிறோம். வறுமையினால் வருந்திய ஒரு புலவர், அதிகமான் பொகுட்டெழுனி என்னும் சிற்றரசனிடம் சென்றார். அவர் அணிந் திருந்த ஆடை தண்ணீரில் மிதக்கும் பாசி என்னும் செடியைப்போலக் கிழிந்திருந்தது. அதை நீக்கிவிட்டு, அவ்வரசன் அப்புலவருக்கு நல்ல கலிங்க ஆடையைக் கொடுத்து அணியச் செய்தான் என்று ஒரு பாட்டு கூறுகிறது.

ஊருண் கேணிப் பகட்டிலைப் பாசி வேர்புரை சிதாஅர் நீக்கி நேர்கரை நுண்னூற் கலிங்கம் உடீஇ1

என்பது அப்பாட்டின் பகுதி.

மேலும், “ஒண்பூங் கலிங்கம்” என்றும், “போதுவிரி பகன்றை புதுமலரன்ன, அகன்று மடி கலிங்கம்" என்றும் பழைய நூல் கூறுகிறது.2

கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய

அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்

என்பது சிறுபாணாற்றுப் படை.