உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -18

இவ்வாறு சிலப்பதிகாரம், நற்றிணை, நாச்சியார் திருமொழி என்னும் மூன்று நூல்களிலும் நங்கையர் நகில் குறைக்கும் செய்தி கூறப்படுகிறது. சிலப்பதிகாரமும், நற்றிணைச் செய்யுளும், கண்ணகியாரும் திருமா வுண்ணியாரும் தமது ஒரு கொங்கையை அறுத்துக்கொண்டார்கள் என்னும் இறந்தகால நிகழ்ச்சியைக் கூறுகின்றன. நாச்சியார் திரு மொழியோ, தலைமகள் தான் விரும்பிய தலைவனைப் பெறாவிட்டால், அல்லது அவன் தன்னைப் புறக்கணித்தால், தனது கொங்கையைப்பறித்து எறிவேன் என்று சொல்லுவதாக எதிர்கால நிகழ்ச்சியில் கூறுகிறது. ஆண்பால் புலவரும் பெண்பால் புலவரும் கூறுகிற, கொங்கை பறித்த லாகிய இச்செய்தி, உயர்ந்த இலக்கிய நூல்களிலே இடம்பெறுகிற அளவு வழக்காற்றில் இருந்து வந்திருக்கிறது என்பது வெள்ளிடை மலைபோல் விளங்குகிறது. ஆகவே, இதன் உண்மைப் பொருள் என்ன என்பதை ஆராய்ந்து காண்போம். கொங்கைகுறைத்தல் என்பது இயற்கைக்கு மாறுபட்ட, நடைமுறையில் நிகழாத செய்தி என்று முதலிலேயே கூறினோம். அங்ஙனமானால், கொங்கை குறைத்தல் என்பது, மறைபொருளை உள்ளடக்கிய ஓர் குறிப்புச் சொல்லாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. மறைபொருளை யுணர்த்தும் ஓர் குறிப்புச் சொல்லாக இருந்தால், அதன் மறை பொருள் யாது? அதன் உண்மைப் பொருள் என்ன?

இதன் உண்மைப் பொருளை விளக்குகின்ற சான்றுகள் எமக்குக் கிடைக்கவில்லை. ஆகவே, நாமே முயன்று இயன்ற வரையில் உண்மை காண்போம். முதலில் நாச்சியார் திருமொழியை எடுத்துக் கொள்வோம்.

தலைமகள் ஒருத்தி கண்ணன் மாட்டுப் பெருங்காதல் கொண்டிருக் கிறாள். கண்ணன் வந்து தன்னை மணந்து தன்வேட்கையைத் தீர்ப்பான் என்று நெடுங்காலம் எதிர்பார்த்திருக்கிறாள். கண்ணன் பரா முகமாக இருந்து இவளது வேட்கையைத் தீர்க்க வரவில்லை. ஆகவே, தலைவி தன் வாழ்க்கையை வெறுக்கிறாள். கற்புடைய மங்கையாகலின், வேறு தலைவன் மாட்டுக் காதல் செலுத்த இவள் துணியவில்லை. ஆகவே, தன் வாழ்வு கெட்டுவிட்டது; அழிந்துவிட்டது; இறந்துவிட்டது என்று கருதுகிறாள். நெடுநாள் காத்திருந்தும், பல ஆண்டுகள் பொறுத் திருந்தும், தலைவன் தன்னைப் புறக்கணித்து விட்டபடியால், இனித் தனக்கு இன்பவாழ்வு இல்லை; மணவாழ்க்கை இல்லை; தன்வாழ்வு அழிந்தது என்று கூறுகிறவள், அக்கருத்தைத் தன் கொங்கை மேல் ஏற்றிக் கூறுகிறாள்.