உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 19

ஆனால், ஏனைய ஆறு தாண்டவச் சிற்ப உருவங்களைக் கண்டு பிடிக்க வேண்டுமே. இது எளிதான காரியம் அல்லவே! ஒரு காலத்தில் நமது நாட்டில் சிற்பக் கலை சிறப்படைந்து உயர்நிலை பெற்றிருந்தது. அக்காலத்தில் கலைவாணர் சிறப்புற்றிருந்தனர். அவர்கள் அமைத்த சிற்பக் கலையுருவங்களும் நாட்டில் நிறைந்திருந்தன. சிற்பக் கலையின் அழகையும் இனிமையையும் சுவைத்தின்புற்ற கலைச் செல்வர்களும் இருந்தனர்.

இக்காலத்திலோ கலைச்செல்வர்களைக் காண்பது அரிதாயிருக் கிறது. கலைவாணர்களைக் காண்பது அதினும் அரிதாகயிருக்கிறது. சிற்பக் கலையைப் பற்றிய அறிவு மங்கிவிட்டது. இந்த நிலையிலே ஆறுவிதத் தாண்டவச் சிற்பங்களைக் கண்டுபிடிப்பது எப்படி? அவை எங்குள்ளன என்பதைத் தேடி அலைந்து கண்டுபிடிக்கும் வேலையில் இறங்கவேண்டியிருக்கிறது. தேடிக் கண்டுப்பிடித்தாலும் எந்தச் சிற்பம் எந்தத் தாண்டவத்தைக் குறிக்கிறது என்பதை எவ்வாறு கண்டு கொள்வது?

தாண்டவச் சிற்ப உருவங்களுக்கு ஆக்கல் தாண்டவம், காத்தல் தாண்டவம், அழித்தல், தாண்டவம், மறைத்தல் தாண்டவம், அருளல் தாண்டவம் என்னும் பெயர் கூறப்படுவதில்லை; அத்தாண்டவ மூர்த்தங்களுக்கு வெவ்வேறு பெயர்கள் கூறப்படுகின்றன. எனவே, தாண்டவச் சிற்ப உருவங்களைக் கண்டுபிடிக்க வேண்டிய முயற்சியும், கண்டுபிடிக்கப்பட்ட தாண்டவ உருவங்கள் எவைஎவை எந்தெந்த தாண்டவத்தைக் குறிக்கின்றன என்பதை அறிய வேண்டிய ஆராய்ச்சியும் நம்மைச் சார்ந்திருக்கின்றன. இவ்வாறு முன்பின் அறியாத புதிய பாதையில் சென்று இவ்வாராய்ச்சியைச் செய்து முடித்து, தாண்டவத் திருவுருவங்களையும், அவற்றின் கருத்துகளையும், கலையழகையும் கூற முற்படுகின்றேன். இதற்கு முன்பு ஒருவரும் இக்கலைத் துறையில் இறங்கி ஆராயவில்லை. சைவசித்தாந்தச் சாத்திரங்களுக்கும் சைவ ஆகம நூல்களுக்கும் பொருத்தமாக நடராச சிற்ப உருவங்களை ஆராய்வது இதுவே முதல் முறையாகும். இதனைத் தக்க சான்றுகளுடன் ஆராய்ந்துள்ளேன். ஆகவே, இதில் 'குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள், மிகைநாடி மிக்க கொளல்' கற்றறிந்தார் கடமையாகும்.