உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதலாவது

படைத்தல் செயலாகிய காளிகா தாண்டவம்

ஐஞ்செயல்களில் முதலாவதாகிய ஆக்கல் (படைத்தல்) செயலைக் குறிப்பது காளிகா தாண்டவம் ஆகும். இதற்கு முனிதாண்டவம் என்னும் பெயரும் உண்டு.

இந்தக் காளிக தாண்டவத்தைக் காளி தாண்டவம் எனக் கருதி மயங்கக் கூடாது. காளிகா தாண்டவம் வேறு; காளி தாண்டவம் வேறு. காளிகா தாண்டவம் படைத்தல் செயலைச் செய்வது; காளி தாண்டவம் அருளல் செயலைச் செய்வது.

நற்காலமாகக் காளிகா தாண்டவத்தின் சிற்ப உருவங்கள் கிடைத் திருக்கின்றன. இது கலையாராய்ச்சி யாளருக்கு மகிழ்ச்சியளிக்கும் நற்செய்தியாகும். இச் சிற்பங்களை ஒவ்வொன்றாக ஆராய்வோம்.

தஞ்சை மாவட்டத்துத் திருநல்லூரில் உள்ள கலியாணசுந்தரர் கோவிலில் இவ்வுருவம் இருக்கிறது. இக்கோயில், பாவநாசம் இரயில் நிலையத்திலிருந்து கிழக்கே மூன்று மைலுக்கப்பால் இருக்கிறது. இக்கோயிலில் உள்ள காளிகா தாண்டவ மூர்த்தியின் பஞ்சலோக உருவம், சாத்திரச் செய்திகளை வெள்ளிடை மலைபோல் விளக்குகிறது. (படம் 1 காண்க).

அழகுள்ள இந்தச் சிற்பத்தைக் கூர்ந்து பாருங்கள். காலடியில் உள்ள முயலகனை நன்றாக நோக்குங்கள். பாதங்கள், கைகள், கைகளில் காணப்படும் பொருள்கள், உடம்பின் சாய்வு, சடைமுடி முதலிய யாவற்றையும் பாதாதிகேசம் வரையில் உற்றுப் பாருங்கள். முயலகன் கால்களை நீட்டி, எதிர் முகமாக நோக்கி அமர்ந்து, இறுமாந்திருக்கிற விசித்திரத்தைப் பாருங்கள். ஏனைய தாண்டவ உருவங்களில் இது போன்று நிமிர்ந்து அமர்ந்துள்ள முயலகனைக் காணமுடியாது. ஏனைய தாண்டவ உருவங்களில், முயலகன் குப்புறக் கவிழ்ந்து படுத்துக் கிடக்கிறான். பட்டினத்து அடிகள் கூறியபடி, 'முரன்று முயலகன் நைந்து நரல' தாண்டவப் பெருமான் முயலகனை மிதித்து