உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 19

வலதுகையில் உள்ள துடி, காளிகா தாண்டவத்தில் காதுக்கருகில் இருப்பதுபோலில்லாமல் விலகியிருக்கிறது. முகம் சற்றுக் கடுமையாகக் காணப்படுகிறது. பாம்பை அச்சுறுத்துகிற நிலையாகை யால், அதற்கேற்ப இவ்வாறு சிற்பி அமைத்திருக்கிறார். இத்தாண்டவம் முதல் தாண்டவமாகிய காளிகா தாண்டவத்தைவிடச் சற்று வேகமாக நிகழ்கிறது. ஆனால், ஆனந்த தாண்டவம் போன்று அதிக வேகமாக நிகழவில்லை. இச்சிற்பத்தின் முகம், கைகள், கால்கள், அணி கலன்கள் யாவும் தக்கபடி அமைந்து அழகுறக் காணப்படுகின்றன.

இந்தத் தாண்டவத்தில் காணப்படுகின்ற சிறப்பு என்னவென்றால், பொதுவாக இடதுகையில் இருக்கவேண்டிய தீச்சுடர் காணப்படாமல், அதன் இடத்தில் பாம்பு உருவம் அமைந்திருப்பதுதான். வலதுகையில் இருக்கிற துடி படைத்தல் செயலையும், மற்றொரு வலதுகையில் இருக்கிற அபய முத்திரை காத்தல் செயலையும் தெரிவிக்கின்றன. அழித்தல் செயலைக் குறிக்கிற தீச்சுடர் காணப்படாமல், அதன் இடத்தில் ஆன்மாவைக் குறிக்கிற பாம்பு காணப்படுகிறபடியால், இந்தத் தாண்டவத்தில் அழித்தல் செயல் நிகழவில்லை என்பது தெரிகின்றது.

துடி விலகி இருப்பதனால் அதன் செயலாகிய படைத்தல் தொழில் முடிந்துவிட்டது என்பது தெரிகின்றது. அபய கரம், காத்தல் செயலைக் காட்டுகிறது. இடதுகையில் இருக்கவேண்டிய தீச் சுடருக்குப் பதிலாக அந்த இடத்தில் பாம்பு சிறப்புப் பெற்றிருக்கிறது. ஆகவே, இது காத்தல் என்னும் இரண்டாவது செயலைக் குறிக்கிறது என்பது நன்கு தெரிகிறது.

அருளல் (வீடு=மோக்ஷம்) என்னுஞ் செயல் இச்சிற்பத்தில் சிறப்புப் பெறாமல், அச்செயல் அரும்புகிற நிலையில் இருக்கிறது. அதாவது, குஞ்சிதபாதம் உயரத்தூக்கப்படாமலும், வீசிய கரம் (கஜஹஸ்தம்) தூக்கிய திருவடியைச் சுட்டிக்காட்டாமலும் வெவ்வேறாக உள்ளன. இந்தக் குறிப்புகளையெல்லாம் கருதும்போது, இந்தத் தாண்டவம் காத்தல் என்னும் செயலைத் தெரிவிக்கிறது என்பதை அறிகிறோம்.

பாம்பை அச்சுறுத்தல் என்னும் பொருளுடைய 'புஜங்கத் திராசம்’ என்னும் பெயர் உள்ளது கொண்டும். கூத்தப் பெருமான் முகத்தில் உவகைக் குறி காணப்படாமல் சிறிது கோபக்குறி காணப்படுவது கொண்டும் இத்தாண்டவம் இருவகைக் காத்தல் செயல்களில் துன்பக் காத்தல் செயலைக் குறிக்கிறது என அறியலாம்.