உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்

என்பது கல்லாடம்(28 ஆம் செய்யுள்.)

பஞ்சேசுவரர் கோவில் சிற்பம்

113

ஹைதராபாத்துக்கு அருகில் பங்கல் என்னும் ஊரில் பஞ்சேசுவரர் கோவில் இருக்கிறது. இக்கோவில் இப்போது இடிந்து சிதைந்து கிடக்கிறது. இங்கு விழுந்து கிடக்கிற கருங்கற்களில் பல சிற்ப உருவங்கள் காணப்படுகின்றன. அச்சிற்பங்களில் தாண்டவமூர்த்தமும் காணப்படு கிறது. (படம் 9 காண்க.) இது காத்தல் செயலைக் குறிக்கிற சிற்பமாகத் தெரிகிறது.

இந்த உருவத்தில், தாண்டவமூர்த்திக்கு எட்டுக் கைகள் உள்ளன. இரண்டு கைவிரல்களினால் பாசக்கயிற்றின் இரண்டு நுனிகளை விரல்களினால் பிடித்து, அப்பாசக் கயிற்றைத் தலைக்குமேல் தூக்கிப் பிடித்திருப்பது இந்தத் தாண்டவத்தின் சிறப்பாக இருக்கிறது. இந்தப் பாசக்கயிறு மூன்று புரிகளாகக் காணப்படுகிறது. ஆன்மாவைப் பற்றிக் கிடக்கிற ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று பாசங்களையுடைய ஆன்மாவைக் குறிக்கிறது இந்த முப்புரி பாசக்கயிறு. (பாசக்கயிற்றுக்குப் பதிலாகப் பாம்பு ஒன்றை இறைவன் இரண்டு கைகளினால் பிடித்துத் தலைக்குமேல் உயர்த்தியிருப்பது போலவும் சில சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.) முப்புரிப் பாசக்கயிறும் பாம்பின் உருவமும் மும்மலங்களோடு கூடிய ஆன்மாவைக் குறிக்கின்றன.

கூத்தப் பெருமான் வலது கையொன்றில் திரிசூலம் ஏந்தியிருக் கிறார். திரிசூலம் அவருடைய ஆக்கல், காத்தல் அழித்தல் என்னும் முச்செயல்களைக் குறிக்கிற அடையாளமாகும். இன்னொரு வலது கையில் எதையோ பிடித்திருக்கிறார். பிடித்திருக்கும் அமைப்பி லிருந்து, அது மயிலிறகாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஏனென்றால், சந்தியா தாண்டவத்தில் தாண்டவமூர்த்தி கையில் மயில் இறகு பிடித்திருக்கிறார் என்று ஆகமம் கூறுகிறது. மற்றொரு வலது கையில் துடி (உடுக்கு) ஏந்தியிருக்கிறார். அது செயற்படாமல் வாளா கிடக்கிறது.

இடது பக்கத்துக் கைகள் ஒன்றிலே தீச்சுடர் இருக்கிறது. அதுவும் அகன்று விலகி இருக்கிறது. இன்னோர் இடது கை வலது பக்கமாக, வீசிய கரமாக அமைந்திருக்கிறது. மற்றோர் இடது கை பாம்பு ஒன்றை ஏந்தியிருக்கிறது. பாம்பு ஆன்மாவைக் குறிக்கிற அடையாளமாகும்.