உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை

நமது நாட்டிலே ஆதிகாலந்தொட்டு சைவ, வைணவ, பௌத்த, ஜைன (சமண) மதங்கள் இருந்தன. இந்த மதங்களைச் சார்ந்த பற்பல சிற்ப உருவங்கள் நமது நாட்டில் ஆங்காங்கே இருக்கின்றன. அவற்றில் சைவ சமயத்தைச் சார்ந்த சிற்பங்களில் ஒரு பகுதியாகிய தாண்டவ மூர்த்தங்களைப் பற்றி மட்டும் இதுகாறும் இந்நூலில் ஆராய்ந்தோம்.

தாண்டவ மூர்த்தங்கள் சைவசமயத்தைச் சேர்ந்தவையாகை யால், இவ்வாரய்ச்சியில் சைவ சித்தாந்த நூல்கள், சைவாகம நூல்களின் துணையைக் கொண்டு ஆராய்ந்து விளக்கினோம். சைவசித்தாந்த நூல்களில் கூறாமல் விடுபட்ட சமய நுட்பங்களைச் சைவாகம நூல்கள் விளக்கமாகக் கூறுகின்றன; சைவாகம நூல்கள் விளக்காமல் விட்டதைச் சைவசித்தாந்த சாத்திரங்கள் விளக்கிக் கூறுகின்றன. இவ்விரண்டு சாத்திரங்களிலும் கூறப்பட்ட சாத்திரக் கருத்துகளைத் தாண்டவச் சிற்ப மூர்த்தத்தில் சிற்பக் கலைஞர்கள் அமைத்துக் காட்டியிருக்கிறார்கள். ஆகவே, இம்மூன்றையும் ஒருங்குவைத்து ஆராயும்போது, சைவ சித்தாந்த தத்துவம் உள்ளங்கை நெல்லிக்கனிபோல நன்கு விளங்குகிறது. இந்த முறையில் இம்மூன்றையும் ஒருங்கே வைத்து முதன்முதலாக ஆராய்ந்து வெளிப்படுத்தப்பட்ட நூல் இது என்பதை வாசகர்கள் அறிவார்களாக.

பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னே, 1948-ஆம் ஆண்டில், இந் நூலின் முதற் பதிப்பை வெளியிட்டபோது, காளிகா தாண்டவ மூர்த்தம், புஜங்கத்திராச மூர்த்தம் முதலிய புதிய தாண்டவ மூர்த்தங்களை முதன்முதலாக வெளியிட்டேன். இந்த இரண்டாம் பதிப்பிலே இது வரையில் வெளிப்படாத வேறுபல தாண்டவச் சிற்ப உருவங்களைப் புதிதாகச் சேர்த்து வெளியிட்டிருக்கிறேன். இந்தச் சிற்பப் படங்கள் எல்லாம் சிற்பக் கலையின் செவ்வியோடு சாத்திரக் கருத்துகளை நன்கு விளக்குகின்றன.