உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 19

புலியைக் கொன்று, அதன் தோலை உரித்து ஆடையாக அணிந்து கொண்டார்.

புலி இறந்துபோகவே, அவர்கள் மறுபடியும் யாகம் செய்தார்கள். யாகத்தீயிலிருந்து பூதங்கள் புறப்பட்டு வந்தன. அப்பூதங்களை அவர்கள் சிவபெருமான்மேல் ஏவினார்கள். அப்பூதங்களாலும் அவரைக் கொல்ல முடியவில்லை. அப்பூதங்கள் அவருக்கு அடங்கி, அவருடைய ஏவலைச் செய்யும் ஊழியர்களாகிவிட்டன.

பிறகு யாகத்தீயிலிருந்து துடியை (உடுக்கையை) உண்டாக்கி, அதை அவர் மேலே ஏவினார்கள். பயங்கரமான பேரொலியை உண்டாக்கிக் கொண்டு வந்த அந்தத் துடியை அவர் தம்முடைய கையில் ஏந்திக் கொண்டார்.

பிறகு, குறள் உருவமுடைய முயலகனை உண்டாக்கி, அவனை அவர் மேலே ஏவினார்கள். விகாரமுள்ள அக்கொடிய முயலகனைச் சிவபெருமான் தன் காலின் கீழ் இட்டு, அவன் முதுகு நெரியும்படி மிதித்து அடக்கினார்.

கடைசியாக முனிவர்கள் யாகத்தீயையே அவர்மீது ஏவினார்கள். அக்கொடிய தீயை அவர் தம்முடைய ஒரு கையில் ஏந்திக் கொண்டார். சிவபெருமானை அழிக்க முடியாததைக் கண்ட முனிவர்கள், பிறகு அவரை வழிபட்டு நற்கதியடைந்தார்கள். இதுதான் நடராசரைப் பற்றிப் பாமரர்களுக்குப் புராணம் கூறுகிற கதை. இந்தக் கதைக்கும் நடராச உருவத்தின் தத்துவத்துக்கும் யாதொரு பொருத்தமும் இல்லை.