உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

தமிழ் நூல்களில் நாடக இலக்கணங்கள் கூறப்படுகிறபடியால், நாடக இலக்கிய நூல்களும் இருந்திருக்க வேண்டும். அவை பிற்காலத்தில் அழிந்திருக்க வேண்டும். நாடக நூல்கள் இரண்டு வகை. படிப்பதற்காக மட்டும் எழுதப்படும் நாடக நூல்கள் ஒருவகை. நடிப்பதற்காக எழுதப்படும் நாடக நூல்கள் இன்னொரு வகை. தமிழிலே படிப்பதற்காக நாடக நூல்கள் எழுதப்படவில்லை. நடிப்பதற்காக மட்டும் நூல்கள் எழுதப்பட்டன. அந்த நூல்களும் பொதுமக்களுக்காக எழுதப்பட வில்லை; நடிப்பவர்களுக்கு மட்டும் எழுதப்பட்டன. நடிகர்கள் நாடகங்களை நடித்துக் காட்ட, மற்றப் பொதுமக்கள் அவற்றைக் கண்டு மகிழ்ந்தார்கள். ஆகவே பொதுமக்கள் படிப்பதற்காகத் தமிழில் நாடக நூல்கள் எழுதப்படவில்லை. வடமொழியிலே படிப்பதற்காகவும், நடிப்பதற்காகவும் நாடக நூல்கள் இயற்றப்பட்டன.

சங்க காலத்துக்குப் பிறகு, தமிழ்நாட்டிலே ஒரு மரபு இருந்து வந்தது. அந்த மரபு என்னவென்றால், ஒவ்வொரு கலைக்கும் ஒவ்வொரு குழு அல்லது இனம் இருந்தது. சிற்பக்கலை, ஓவியக்கலை, தச்சுக்கலை முதலிய கலைகளுக்கு அததற்கென்று ஒவ்வொரு இனம் அல்லது குழு அமைந்திருந்ததுபோலவே, பரதநாட்டியம், இசை, நாடகம் முதலிய கலைகளுக்கும் அதற்கென்று தனிப்பட்ட இனத்தார் இருந்தனர். அந்தந்தக் கலைகளை அந்தந்த இனத்தார் மட்டும் பயின்று வந்தனர். (சமீபகாலம் வரையில் பரதநாட்டியக் கலையை ஒரு இனத்தார் மட்டும் பயின்றுவந்தனர். ஆனால், அண்மைக் காலத்தில் இக் கலையை எல்லா இனத்தாரும் பயின்று வருகின்றனர். ஒருகாலத்தில் பாணர்கள் மட்டும் சிறப்பாகப் பயின்றுவந்த இசைப்பாட்டுகளைப் பிற் காலத்தில் எல்லோரும் பயின்றனர். ஆனால், நாதசுரம், தவில், மேளம் போன்ற இசைக் கலைகளை இன்றும் ஒரு இனத்தார் மட்டும் பயின்று வருகின்றனர்.) அதுபோன்று, பண்டைக் காலத்தில் நாடகம் நடிப்பதற் கென்றே இரு இனத்தார் இருந்தனர். அவர்கள் நாடகக் கலையைப் பயின்று நாடகங்களை மேடையில் நடித்துக் காட்டினர். அவற்றைப் பொதுமக்கள் கண்டு மகிழ்ந்தனர். எனவே, நாடக நூல்கள் பொது மக்களுக்காக எழுதப்படவில்லை. நாடக நூல்கள் நாடகக் கலைஞருக் காக மட்டும் எழுதப்பட்டன. கி. பி. 15-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு தமிழ் நாட்டிலே அரசியல் மாறுபாடுகளும் சமூக மாறுபாடுகளும் ஏற்பட்ட காலத்தில், பழைய தமிழ் நாடகம் புறக்கணிக்கப்பட்ட காலத்தில், தமிழ் நாடகக்கலை அழிந்து, அந்த இடத்தில் தெருக்கூத்து போன்ற