உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

உபாயம் உண்டு எனக் கூறி, அதனை விளக்கிச் சொல்கிறான். 'இப்போது சேரமன்னன் ஆட்சிக்குட்பட்டிருக்கிற நன்செய்நாடு (நாஞ்சில் நாடு) என்று ஒரு நாடு உண்டு. அது முறைப்படி பாண்டியராகிய உமக்கே உரியது. அது நீர்வளம், நிலவளம் பொருந்திய செழிப்பான நாடு. அங்கு வழங்குவது மலையாளமொழி அல்ல; தமிழ் மொழி. அங்கு வழங்கிவருகிற பழக்கவழக்கங்களும் தமிழரின் பழக்கவழக்கங்களே. (இந்த நன்செய் நாட்டின் இயற்கை எழிலையும் வளப்பங்களையும் நூலாசிரியர் இங்குக் குடிலன் வாயிலாக நன்கு சிறப்பிக்கிறார்.) இந்நாடு இப்போது சேரன் ஆட்சியில் இருந்த போதிலும், அதன் உரிமையை நாம் விட்டுவிடவில்லை. அதனைக் கைப்பற்றுவதற்காகத்தானே அதற்கு அருகிலே இந்தத் திருநெல்வேலிக் கோட்டையைக் கட்டினோம்? இப்போது புருஷோத்தமனிடம் தூது அனுப்பி நன்செய் நாட்டைத் திருப்பிக் கொடுக்கும்படி கேட்போம். நமது புதிய கோட்டையின் வலிமையைக் கருதி அவன் திருப்பிக் கொடுப்பான். அல்லது ஏதேனும் வாதம் தொடங்குவான். அந்தச் சமயத்தில் இரு தரத்தாருக்கும் பொதுவான முறையில் இந்தத் திருமணத்தைப் பேசி முடிப்போம்.'

இவ்வாறு சூழ்ச்சியாகக் குடிலன் பேசியதை அரசன், உண்மை எனக் கருதி 'இது நல்ல உபாயந்தான். மெத்த மகிழ்ச்சி' என்று கூறுகிறான். குடிலன், இந்தக் காரியம் கைகூடவேண்டுமானால், தூது போகிறவர் திறமையுள்ளவராயிருக்க வேண்டும். பெருமானடிகளே தகுந்த தூதனைத் தேர்ந்தெடுத்தனுப்புங்கள் என்று கூறுகிறான். அதற்கு அரசன், உமது மகன் பலதேவன் இருக்கிறானே. அவன் முன்னமே சில தடவைகளில் பகையரசர்களிடம் தூது சென்றிருக்கிறான் அல்லவா? அவனையே தூது அனுப்புவோம்' என்று கூறுகிறான். குடிலன் நினைத்த காரியம் கைகூடிற்று என்று மனத்தினுள் மகிழ்ச்சிகொண்டு அதை வெளியில் காட்டாமல், 'அடியேனுடைய உடல் பொருள் ஆவி சுற்றம் யாவும் அரசர்பெருமானுக்குரியனவே. பலதேவனைத் தூது அனுப்பலாம். ஆனால், அவன் இளைஞன். இப்பெரிய காரியத்துக்கு அவனைத் தூது அனுப்புவது தகுமோ என்று யோசிக்கிறேன்' என்று மனமில்லாதவன்போலக் கூறுகிறான்.

6

வெள்ளையுள்ளம் படைத்த அரசன், 'பெரிய காரியம் ஆனால் என்ன? சேரனிடம் சொல்ல வேண்டியவைகளை எல்லாம் முறையாகச் சொல்லி அனுப்பினால் பலதேவன் நன்றாக எடுத்துக்