உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

பத்து ஆண்டுகள் கடந்தன. இந் நூல் எழுதுவதுபற்றிப் பலரும் முன்னமே அறிந்திருந்தபடியினால், பல நண்பர்கள் நேரிலும் கடிதம் எழுதியும் இதைப்பற்றிக் கேட்டார்கள். இலங்கையிலிருக்கும் நண்பர்கள் சிலரும் கடிதம் எழுதிக் கேட்டார்கள். அவர்களுக் கெல்லாம், 'வெளிவரும், வெளிவரும்,' என்று கூறினேனே யல்லாமல் என் மனவேதனையைக் கூறவில்லை.

உண்மை அறிந்த நெருங்கிய நண்பர்கள் சிலர் இதனை வெளியிடுமாறு வற்புறுத்தினார்கள். 'கிருஸ்துவமும் தமிழும்' 'பௌத்தமும் தமிழும்,' எழுதியது தமிழ்நாட்டின் சமயவரலாறு இலக்கிய வரலாறுகளை அறிதற்கு ஏற்றதாயிற்று. அதுபோலவே, சமணமும் தமிழும்' வெளிவர வேண்டும். அதுமட்டுமன்று 'இஸ்லாமும் தமிழும்,' 'இந்துமதமும் தமிழும்' என்னும் நூல்களையும் எழுத வேண்டும் என்று அடிக்கடி வற்புறுத்தத் தொடங்கினார்கள். கடைசியாக சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் ஆட்சிப் பொறுப்பாளர் திரு. வ. சுப்பையா பிள்ளை அவர்கள் இந் நூலை அச்சிடுவதாகக் கூறிக் கையெழுத்துப் பிரதியைக் கேட்டார்கள். அதற்கு இணங்கிக் கையெழுத்துப் பிரதியைத் தேடினேன். அந்தோ நான் கண்டதென்ன! பெட்டியினுள் சிதல் அரித்த ஏடுகள்! தாள்கள் பெரும்பாலும் மறைந்துவிட்டன. சில தாள்களே அரைகுறையாகச் செல்லரிக்கப்பட்டுக் கிடந்தன. எனது சில ஆண்டு உழைப்பு வீணாய்ப் போயிற்று. மீண்டும் எழுத வேண்டியதாயிற்று. இயன்றவரையில் சான்றுகளையும் ஆதாரங்களையும் தேடி மறுபடியும் எழுதினேன். ஆனால், இது முற்பகுதியே. இப் பகுதியில் சமய வரலாறு மட்டும் பேசப்படுகிறது. பிற்பகுதி எழுதப்படுகிறது. அப் பகுதியில் தான் சமண சமயத்தினர் தமிழ்மொழிக்குச் செய்த தொண்டுகள் கூறப்படுகின்றன. அப் பகுதியும் விரைவில் வெளிவரக்கூடும்.

வாழ்க்கைப் போருக்கிடையே, பல இன்னல்களுக்கிடையே கிடைத்த சிறுசிறு ஓய்வுக்காலத்தைப் பயன்படுத்தி இந் நூல் எழுதி முடிக்கப்பட்டது. இதில் மறைந்து போன வரலாறுகளும் செய்திகளும் கூறப் கின்றன. உண்மை காண விரும்புவோர் காய்தல் உவத்தல் இல்லாமல் இவற்றை ஆராய்ந்து பார்த்துக் குற்றங் களைந்து குணங் கொள்வாராக.