உள்ளடக்கத்துக்குச் செல்

செம்மொழிப் புதையல்/001-020

விக்கிமூலம் இலிருந்து

1. அறிவு

றிவாவது சொல்வாரது இயல்பு நோக்காது சொல்லப் பெறும் பொருளின் பயனோக்கிக் கொள்ளுதல் ஒழிதல் செய்வதாம். சொல்வார் தாம் உயர்ந்தோர், தாழ்ந்தோர், நட்டோர், பகைவர் எனப் பல்வகையினராதலோடு, முக்குண வயத்தராதலானும், இவருள் ஒவ்வொருவரிடத்து ஒவ்வொன்று ஒரோ வழிக் கேட்கப்படுதலானும். அவரது இயல்பு நோக்காமை வேண்டும் என்பது புலப்படும். அன்றியும், வேண்டப்படுவது பொருளேயன்றிப் பிறிதன்று. ஆகவே, “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் - மெய்ப்பொருள் காண்ப தறிவு” என்னும் தமிழ்மறை துணியப்பட்டது. படவே, சொல்வாரது இயல்பு நோக்கிப் பொருளின் பயன்காணாது ஒழிதல் அறியாமை என்பதும், அதனாலெய்தும் பயன் துன்பமே யென்பதும் பெறப்படுகின்றன. இவ்வுண்மை கீழ்க்காணும் பொருட்கதையில் விளங்குதல் காண்க.

அகலிரு விசும்பிற் பாயிருள் பருகிப் பகல்கான்று எழுதரும் பருதியஞ் செல்வன் கீழ்க்கடல் முகட்டில் எழுமுன், வெள்ளி முளைப்ப விடியல் வந்தது; ஓதல் அந்தணர் பாடினர்; கூவின பூங்குயில்; கூவின கோழி; குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்; இருஞ்சேற்றகன்வயல் முட்டாட்டாமரைத்துஞ்சி, வைகறைக் கட் கமழும் நெய்தலூதி, எற்படக் கண்போல் மலர்ந்த காமர்சுனை மலரை அஞ்சிறைவண்டின் அரிக்கண மொலித்தன. இவற்றினிடையே, முகையவிழ்ந்த முருக்கலரொன்றை வண்டினஞ் சூழ்வந்து முரலாநிற்ப, "ஐயகோ! ஐயகோ!!" எனும் அழுகுரலொன்று, அவ்வலர்க்கீழ் விளங்கிய அழகிய தளிரிடையெழுந்து, கேட்போர் செவிப்புலம்புக்கு, அவர் தம் மனத்திடை அருளூற்றெழச் செய்தது. இங்ஙனம், எவ்வுயிர்க்கும் இன்பக் காட்சி நல்கும் இளஞாயிறு தோன்றுங்காலைத் தோன்றிய துன்பக் காட்சி ஆண்டுற்ற உயிர்ப் பொருளனைத்தும் மருளச் செய்தது. யாண்டும் அமைதி நிலவிற்று. சிறு சுரும்புந் தேனாடிற்றன்று. புனையாவோவியம் கடுப்ப யாவும் போந்தனவாக, மீட்டும் அப்புலம்பிசை கல்லும் புல்லும் கனிந்துருக எழுந்தது. ஒசையியலுணர்ந்தாருளராயின், அது, இறந்துபடுநிலைக்கண் பல்பொறிப் பூச்சியொன்றிடும் மெல்லிசை யாமென வுணர்வர். மற்று, யான் அவ்வறிவிலேன் ஆதலின், நெடுங்காலந் தாழ்த்துப் பின்னரே யுணர்ந்தேன். உணர்ந்தேன், அவ்வோசையை நுனித்துக்கேட்குமவா மீக்கொண்டேனாக, ஆண்டெழுந்த பொருண்மொழி பின் வருமாறு கேட்டேன். அது,

"இருநிலம்புரக்கும் இறைவ! எவ்வுயிர்க்கும் நலம் பயக்கும் இயவுள்!! இச்சினைகளை யான் ஈண்டு இட்டிறத்தல் ‘ஒல்லுமா! ஆ! இவை தோன்றிய நாழிகைகூட இன்னும் கழிந்ததின்றே! அந்தோ! இதற்குள் யான் இறக்கின்றேனே! இன்னாதம்ம வுலகம், இனிய காண்க இதன் இயல் புணர்ந்தோரே என்றெல்லாம் பெரியோர் கூறுதல் உண்மையே! இறைவ! இறத்தற்குப் பணித்த நீ எனக்கு இப்பச்சிளஞ்சினைகளை யளித்தல் எற்றுக்கோ? இது முறைகொல் யான் இறந்துபடின், இவ்வருமந்த சினைகளைப் புரக்கவல்லுநர் யாவர் கொல்லோ? உயிர்க்குணவளித்தற்கு நீ உளையெனினும், ஒரு பற்றுக்கோடு மின்றி உயிர் நீத்தற்கன்றே என் உளம் உளைகின்றது! அந்தோ! ஏ! உலகே! என்னே நின் இயற்கை!! உனைத் துறக்கும் நிலைக்கணுற்ற என் உள்ளத்தை இங்ஙனம் தளைசெய்தலே நின் பண்புபோலும்!! நன்று! நன்று! அம்மவோ! புலன்கலங்க பொறிகலங்க நெறிமயங்குகின்றதே! அறிவு அழிகின்றதே! ஆவியும் அலமருகின்றதே!! ஐயகோ! யாரொடு நோகேன், யார்க்கெடுத் துரைப்பேன்! ஆசா கருளினர் யார்கொலோ. ஆ.!..." என்பது.

இங்ஙனம் கூறிப் புலம்பிக்கொண்டிருக்கும் பல்பொறிப் பூச்சி (வண்ணாத்திப்பூச்சி) ஒன்றினருகே பச்சிலைப் புழுவொன்று போந்து, இவ்வுரைகேட்டு எரியிடையிழுதென இனைந்து நின்றது. கண்ட அப்பூச்சி “உடைகலப்பட்டோர்க்கு உறுபுணை தோன்றி யாங்கு, இடர்ப்படும் என் முன்றோன்றிய அன்னாய்! வாழி! ஆருயிர் அலமர அழுது சாம்புவேனுக்கு நீ ஓர் உதவியருளல் கூடுங்கொல்லோ! உற்றுழி உதவுதல் உரவோர் கடனாதலின், உன்னைக் காண்டலும், உதவி நாடிற்று என் உள்ளம்” என்றலும், புழுவும் “பிறருறு விழுமம் துடைத்தல் சால்பெனப் பெரியோர் கூறுவர். அவர் வழி நிற்றல் கற்பவை கற்பதின் அழகு. ஆதலின், நின்மாட்டு எய்திய துன்பம் யாது?

“கடல்பாடவிந்து தோணி நீங்கி
நெடுநீ ரிருங்கழி கடுமீன் கலிப்பினும்.”

இயன்றன செய்தற் கிடையேன். கூறுக” என்றது.

இக்கூற்று பூச்சின் செவிப்புலம்புக்கதும், அது ஒருவாறு மனந்தேறி, “பைந்தழை வாழ்க்கை பரித்தோய்! ஆவியோ நிலையிற் கலங்கியது. அது என் யாக்கையின் அகத்ததோ புறத்ததோ அறியேன். இந்நிலையில் இறைவன் எனக்கு இப்பச்சிளஞ்சினைகளை யருளியுள்ளான். அவற்றையும் அறிவிலியாய யான் இம் முருக்கிலையிலிட்டுள்ளேன். அவற்றை எனக்குப்பின் களைகணாய் நின்று புரப்பார் ஒருவரையும் காணாது மறுகுகின்றேன். இவற்றையருளிய இறைவர்க்கு அளித்தல் கூடும் என்பது உறுதியே எனினும், என் உள்ளந் தடுமாறுகின்றது. ஆகலின், உற்றாரின்றி யுயங்கும் என் முன் ஒருதனித்தோன்றிய நீயே களைகனாய் நிற்பாய் கொல்! அங்ஙனம் நிற்றல் உனக்கு அரிதன்றன்றே. அன்றியும், ஆவி துறக்கும் நிலையிலிருக்கும் என்னுடைய இப்புல்லிய வேண்டுகோளை மறாது ஏற்றருள்க. இது நினக்குப் பேரறமாகும்,” என்றது.

புழு:- ஆம். பேரறமே. ஆயினும் இவற்றை யான் புரத்தல் யாங்ஙனம்? இவையும் என் இனத்தைச் சார்ந்தன வல்லவே!

பூச்சி:- சாராமையால் வரும் குற்றமொன்றுமில்லை. யான் கூறும் உணவை மட்டில் நீ அருத்தியொடு அளித்துவரின், ஒருவகை இடையூறும் நேராது. இது முற்றும் உண்மை.

புழு:- அற்றேல், உரைத்தருள். நின் உடல் நிலையும் குன்றி வருகின்றது. காலம் தாழ்த்தற்க.

பூச்சி:- கூறுவல், செடிகளின் இளந்தளிரும் பனிநீரும் தாம் அவற்றிற்குத் தக்க உணவாம். வேறு எவையேனும் அளிக்கப்பெறின், அவை உண்ணாது இறந்துபடும். ஆகலின் இக்கூறிய உணவை...யே...அ...

என்று கூறிக்கொண்டே உயிரை விடுகின்றது. கண்டுகலங்கிய புழுவிற்கு அச்சினைகளையும், அவற்றிற் கெனப் பணிக்கப்பெற்ற உணவையும் நினைத்தொறும் உள்ளம் நெக்குருக, நினைவு தடுமாறலுற்றது. இது இயற்கையே. செத்தாரைக்கண்டு சாவாரும் வருந்துதல் இயல்பன்றே! தாந்தாமும் தம் ஆற்றலறிந்தன்றோ ஒவ்வோர் பணியை ஆற்ற முன் வர்ல் வேண்டும். எண்ணித்துணிக கருமம். துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கன்றோ நிற்க, செயக்கடம்பூண்ட பணியை யெவ்வாற்றானும் செய்து முடித்தலும் வேண்டுமன்றோ. இறந்ததனை எண்ணுதலால் இனிப் பயன் யாதேனும் எய்துமோ? மெய்வருத்தம் பார்த்தல், பசிநோக்கல், கண்டுஞ்சல், செவ்வியருமை பார்த்தல், அவமதிப்புக் கொள்ளல் ஆகிய இவற்றைக் கரும்மே கண்ணாயினார் கண்ணாரன்றே. சிறுசினை புரக்கும் பெரும்பணி மேற்கொண்ட புழு ஒருவாறு தேறி, “ஐயகோ! இவற்றை யான் எங்ஙனம் புரத்தல் கூடும்? இளந்தளிரும் பணி நீரும் எவண் கிடைக்கும்? கிடைப்பினும் யான் எவ்வாறு கொணர்வேன்? இச்சினைக்குட் பிறங்கும் பூச்சிகள் பறக்குந் தன்மைய; யான் அவ்வினத்தைச் சாரேன். இயற்கையான் மாறுபட்டயான் புரத்தற்கு உடன்பட்டேனே! என்னே என் அறிவிருந்தவாறு இவற்றினின்றெழும் பூச்சிகள் சின்னாட்களிற் பறந்தெழுமே, அஞ்ஞான்று யான் அவற்றை எவ்வாறு அடக்குதல் கூடும் ஆ என்ன காரியம் செய்தேன் ஆய்ந்திடும் உணர்வொன்றில்லார் அலமால் இயற்கை அம்மா!’ எனப் பெரியோர் கூறுதல் எத்துணை யுண்மையுடைத்து,” என வீழ்ந்து சோர்ந்து, பின்னர்ச் சிறிது தெளிந்து, "இனியான் இங்ஙனம் வருந்துதல் கூடாது. இதனை முன்னரே நன்கு ஆராய்ந்திருத்தல் வேண்டும் 'விழையாவுள்ளம் விழையுமாயினும்... தற்றக வுடைமை நோக்கி, மற்றதன், பின்னா கும்மே முன்னியது முடித்தல்’ என்பர் நல்லிசைச்சான்றோர். கழிந்தன பற்றிக் கலங்கு துயருழத்தல் என நலத்திற்கே கேடுதரு மொன்றாகலின், செய்தல் மேற்கொண்ட இப்பணியை, அறிவின் மிக்கார் பொருளுரை கேட்டுத் தக்கன தேர்ந்து செய்வல். இதுவே யான் இனிச் செயற்பாற் றன்றிப் பிறிதொன்று மன்று” எனத் தேர்ந்து நின்றது. அக்காலை, தேனூண்சுவையினும் ஊனுண் சுவையே உயிரினும் விரும்பிவாழும் பூஞை ஒன்று ஆயிடைப் போதந்தது. கண்டபுழு அதனை யளவளாவித் தான் மேற்செயற்கேற்ற விரகினையறிய அவாக்கொண்டது. கொள்ளினும், அதன் உளத்தச் சிறிது நாழிகைக்குள் அப்பூஞை தன் வேண்டுகோட்குச் செவி சாய்க்காது, தனக்கும். தன்னுழைக் கையடையாத் தரப்பெற்ற சினைகட்கும் ஊறிழைக்கினு மிழைக்கும் என்னும் ஓர் எண்ணம் எய்த அது அம்முயற்சியைக் கைவிட்டது.

கைவிடலும், போன வெஞ்சுரம் புளியிட வந்தாங்கு, மறைந்திருந்த வருத்தம் மீட்டும் அதன் மனத்தே தோன்ற, அது சிறிதுதேறி, தன் மனக்கியைந்த அறவுரை கூறும் ஆற்றலுடையார் இனியாவருளர் என்னுமோர் ஆராய்ச்சியைப் பின்னரும் செய்தல் தொடங்கிற்று. அவ்வுழிக் கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தென, வானிற் பறந்துழலும் வன்சிறைப்பருந்தொன்று அதனருகே சென்றது. இதனை யப் புழுக்காண்டலும், தன் மனத்திற் பலதிறப்பட்ட எண்ணங்களைக் கொண்டது. அவற்றுள், “இப்பருந்தினும் அஃகி யகன்றவறிவுடையார் யாவருளர்? மனத்தானும் எண்ணற்கியலாத சேணிற் பறத்தலும், ஆண்டிருந்தே, மண்மீதியங்கும் திற்றிகளை (ஈண்டுத் தின்னற்குரிய சிற்றுயிர்களை யெனக் கொள்க)க் கண்டு, அவற்றின்மேற் குறிபிழையாது ஞெரேலெனப் பாய்ந்து படிந்துண்டலுமாய உயரிய செயல்களைச் செயல்வல்லார் வேறொருவருமில ரன்றே! ஆகலின், இதனிடை, யான் எனக் காவனவற்றை யுசாவி யறிகின்றேன்” என்பது மொன்றென்க.

இங்ஙனம் எண்ணி முடிவுசெய்து கொள்ளும் அப்புழு விருந்த புலத்திற் கயலிருந்த வயலொன்றில் வேறு பருந்தொன்று வாழ்ந்து வந்தது. அதற்கும் அப்புழுவிற்கும் நெருங்கிய நட்பு முண்டு. அந்நட்புரிமை யேதுவாக, புழு, அப்பருந்தினை வரவழைத்துத் தான் அச்சினைகளை வளர்க்கு மாற்றைத் தெரிந்து கோடலை நாடி நிற்ப, செல்வக்காலை நிற்பினும் அல்லற்காலை நில்லா மாட்சியமைந்த கேண்மைசால் பருந்தும் காகதாலியமாகப் புழுவைப் பார்த்துச் செல்வான் வந்தது. வரக்கண்ட புழுவும் கழிபேருவகைகொண்டு, “அன்பு கெழுமிய நண்பே வருக. இன்பங்கனியும் நின்முகங்கண்டும் யான் இன்பமின்றியிருத்தலை யறிதியோ? இங்ஙனமிருக்கு மெனக்கு ஒரு மாற்றுக்கூறல் வல்லை கொல்லோ?” என்றது.

பருந்து:-அறிவல். மற்று நின்னையுற்ற துன்பம் ஒன்றுண்டென அறிந்தனனேயன்றி அது இத்தன்மைத்து, இவ்வேது வுடைத்து என்பவனவற்றை யறியேனாகலின், மாற்றுக்கூறல் யாங்கனம் இயலும்?

புழு :- நன்று. கேட்டிசின். எனக்கு நின்னொப்ப உயிர்த் தோழமை பூண்ட சேடப்பூச்சி (வண்ணாத்திப்பூச்சி) யொன்று ஈண்டுச் சின்னாட்களுக்கு முன் வாழ்ந்து வந்தது. அதன் வழியெச்சமே ஈண்டு நீ காண்குறும் பச்சிளஞ் சினைகள். இவற்றை அதுதான் இறக்குங் காலத்து ஈன்று, என்னையும் புறந்தருமாறு பணித்தது மன்றி, இவை குடம்பை தனித்தொழியப் பறந்தேகு நாள்காறும் தற்குணவளித் தோம்புதல் செய்யுமாறும் கூறியகன்றது. அவ்வோம்படையேற்ற யான் அங்ஙனம் செய்யுமா றறியாது அலமருகின்றேன்.

பருந்து:- என்னை?

புழு :- அவ் வாற்றினை யான் அறியேனாகலின்.

பருந்து:- என் அறியாய்?

புழு :-அப்பூச்சியோ பறக்குமியல்பிற்று; மற்று, யானோ . ஊர்வனவற்றைச் சார்ந்த புல்லிய புழுவானேன். பறப்பனவற்றை ஊர்வன புரத்தல்,

   “பாய்திரைப் புணரி பாடவிந் தொழியினும்,
   காய்கதி ரிரண்டுங் கதிதிரி யோடினும்,"

கூடாது என்பது உண்மையன்றோ. அது பற்றியே இம்மயக்கம் எய்தியது.

பருந்து:- மயங்கல் வேண்டா. நுனித்து நோக்கின், இவற்றைப் புரத்தலும், ஏற்ற வுணவு கொடுத்தலும் நின்னா லெளிதிற் செயற்பாலன வென்பதே தோன்றுகின்றது. அன்றியும், செல்வுழிச் செல்வுழி மெய்ந்நிழல் போல, நினைத்தொறும் நினைத்தொறும் இம்முடிபே எய்துகின்றது.

புழு :- உய்ந்தேன் உய்ந்தேன்!! கூறுக.

பருந்து:-கூறுவல். தடையுமின்று. மற்று, யான் கூறுவனவற்றை நீ உள்ளவாறே யுட்கொள்ளுவாயோ வென்றையுறு கின்றேன். எப்பொருள் எத்தன்மைத்தாயினும், அன்றி யார்யார்வாய்க் கேட்பினும், அப்பொருளின்கண் மெய்ப் பொருள் காண்டல் கூடும் என்னும் உறுதி நோக்கு (Faith) நின்னுழை யுளதானாலன்றி, என் மொழியின் உண்மைப் பொருள் புலனாகாது. இந் நோக்கின்றிக் கேட்டல் அரங்கின்றி யாடல் புரிவாரது நோக்கினோடொக்கும்.

புழு :- ஆம். சார்ந்ததன் வண்ணமாதலே மனவியல்பு. எந்நோக்கங் கொண்டு எப்பொருணோக்கப்படுகின்றதோ, அந்நோக்கிற் கமைந்தே அப்பொருளுந் தோன்றும். ஒருவனைக் குற்றமுடையனே யெனக்கருதி நோக்குவார்க்கு அவன் குற்றமுடையனாகவும், அல்லனெனக்கருதி நோக்குவார்க்கு அல்லனாகவும் தோன்றல் கண்கூடன்றோ! நிற்க, யான், அவ்வுறுதிநோக்கு உடையேன், வெளிப்படையாகக் கூறின், நீ கூறுமனைத்தையும் கூறியாங்கே நம்புவல். இது உறுதி.

பருந்து:- உறுதியாயின், கூறுவல்: முதற்கண் நீ இவற்றிற்கேய்ந்த வுணவு யாதென நினைக்கின்றனை? நின் உளத்தில் தோன்றுவனவற்றை மட்டிற் கூறுக.

புழு :-(நினைத்து) யாதாகும்? பனித்திவலையும் பைந்தேனுமாம்! ஆ!

பருந்து:- அல்லவே. அவற்றிற்கேற்கு முணவை நீ மிக்க எளிதிற் கொணர்தல் கூடுமே. அன்றியும், அது இவ்வனைத்தி னும் மிக்க அண்மையிற் கிடைத்தற்பாற்றன்றோ!

புழு :- (திகைத்து) என்னருகில், எளிதில், பெறக்கூடியது இம் முசுக்கொட்டையிலை யன்றிப் பிறிதொன்றுமிலையே. பருந்து:-ஆம் ஆம்! நன்று சொன்னாய் நீயே அவ்வுணவை

நன்கு உணர்ந்து கொண்டனை. இம் முசுக்கொட்டை யிலைகடாம் அவற்றிற்குத் தக்கவுணவாவன.

புழு :- (சினந்து) ஏ என்னே நின் மடமை!! இவற்றையன்றோ அது தருதல் கூடாதென வன்புறை செய்தது. முகநகவொன்று மொழிதலும், பின்னர் மற்றொன்று செய்தலும் அறனல்ல. அதனால் விலக்கப்பட்ட வுணவையே யளிக்குமாறு கூறல் நின் அறிவுடைமைக் கழகன்று; அமைதியுமன்று.

பருந்து:- அன்பே பொறுத்தருள். இனிய உளவாக, இன்னாத கூறல் கனி இருப்பக் காய்கவர்ந்தற்று என்பதை நினைத்தருள்க. நிற்க, இவற்றின் தாய்ப்பூச்சி இவ்வுண்மையினை யறியாது. அது பெரும்பேதை, அன்றியும் யான் கூறுவனவற்றை யுறுதி நோக்குடன் கேட்பலெனக் கூறி, கூறக்கேட்டலும், உண்மை நோக்காதொழிதல் நின் உயர்வுக்குக் குறையன்றோ! அறிவும், அமைந்த நம்பிக்கையும் அமைவுறினன்றோ வுண்மை தெள்ளிதாம்.

புழு :-ஒ! அற்றன்று. என் செவிப்புலனாம் பொருள் பலவற்றினும் அமைவுறும் உண்மைப்பொருள் காண்டலே என்னியல்பு. உறுதிநோக்கும், உண்மை நம்பிக்கையும் உடையாரின் மிக்கார்த்தேரின், யானலதில்லை இவ்வுலகத்தானே என்பதை மீட்டும். நினக்கு வற்புறுத்துகின்றேன். அறிக!

பருந்து:- அறிவதென்! நின்சொல்லின் வலியின்மையை நின் சொற்களே நன்கு காட்டுகின்றன. யான் கூறும் உணவுப் பொருளையே நீ முதற்கண் ஏலாதொழியின், பின்னர்க் கூறப்போவனவற்றை நீ எங்ஙனம் ஏற்றல் அமையும்? நிற்க, இப்பச்சிளஞ் சினைகள் பொரித்தலும் என்னாமென நினைக்கின்றனை? இதனையேனும் உண்மையாகக் கூறுதி.

புழு :- என்னாம்! விதையொன்று போடப் பதமொன்று விளையுங் கொல்! ‘பண்டு செய்வினையலாற் பரவுதெய்வமொன் றுண்டெனில், தான் பயன் உதவ வல்லதோ’ என்னும் செம்பொருளையும் தெளிக. ஆகலின், சேடத்தின் சினை சேடமா மேயன்றிக்கீடமாகா.

பருந்து:-அற்றன்று. சேடத்தின் சினை சேடமாகாது முதற்கட் கீடமே யாம். உண்மையைக் கூறின், அவை

பொரித்தலும், நின்னொப்பப் புழுக்களாமே யன்றி நீ

நினைத்துக் கூறும் வண்ணாத்திப் பூச்சிகளாகா. நீ இவ்வுண்மையை ஏலாதொழியினும் ஒழிக. உண்மை

பின்னர்ப் புலனாம். யான் சென்று வருவல்.

இங்ஙனம் கூறிக்கொண்டே பருந்து சேணோக்கிச் சிவ்வென்றெழுந்து பறந்து சென்றது. அன்றியும், ஆண்டேயிருந்து, புழுவிற்கு உண்மையுணர்த்தும் வகையாற் கலாய்த்தற்கு அப்பருந்து விரும்பிற்றன்று. ‘இருள்படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும் அருள் நன்கு உடையராயினும், சான்றோர், பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்’ என்பர் பெரியார். ஆகவே, பருந்தும் கலாய்த்துப் பழியெய்தற்கு அஞ்சி யகன்றதென்க.

இங்ஙனம் விழுமிய நட்புக்கடம்பூண்ட பருந்து பிரிதலும். புழு மிக்கதோர் மருட்சிகொண்டு, செய்தொழிலறியாது திகைத்து அருகுகிடக்கும் சினைகளைக் காண்டலும், கண்ணிருகுத்தலும், பன்முறை யவற்றைச் சூழ்வரலும் செய்து கொண்டு வரும். இடையிடையே பருந்துகூறிய மொழிகளை எழுத்தளவாய் ஆயும்; பொருட்பயனைப் பன்முறையும் சூழ்ந்து நோக்கும்; தன் யாக்கைப் பண்பையும், பூச்சியின் பொலிவையும் மனத்தா னொப்பு நோக்கும். அதுகாலைப்பின் வருமாறும் நினைக்கும். அது:

"மாந்தர் இனத்தியல்பதாகும் அறிவு" என்பது தமிழ்மறை. இதுபற்றியன்றே, உயர்ந்தோர் கூட்டமே யுறவாய்க் கொண்டுழலும் இப்பருந்தும் மிக்க அறிவமைதியுடையதா மென்றெண்ணிக் கெட்டேன் ஒருகால், அது இம்முறை நெடிது சேணிற் பறந்திருக்கும், அதனாற்றான் இக்கலக்கம்! ஆ என்ன அலகைத் தன்மை உலகத்தோர் உண்டென்ப தில்லென்பான் வையத்து அலகை யென்று எண்ணப்படுமன்றோ ஆ உயிர்க் கூட்டத்துள், உயர்ந்தாரோடு கூடி வாழ்வனவும், கூடி வாழ்வதாகத் தம்மை யுயர்த்திக்கூறிக் கொள்வனவுமாய பலவுயிர்கள் முடிவில் எத்துணைப்பேதைமையும் கொடுமையும் உடையவாய்த் தோன்றுகின்றன. என்ன உலகம் பெறுதற்கரிய யாக்கை தமக்கு எய்திற் றென்றால், அது கொண்டு அறிவும் ஒழுக்கமும் அமையப்பெற்று, தக்கவின்ன, தகாதனவின்னவென ஒக்க வுன்னி, ஒப்பனவற்றைக் கோடலன்றோ யாவர்க்கும் ஒரு படித்தாய் வேண்டப்படுவது.

“கன்று முண்ணாது கலத்தினும் படாது
நல்லான் றீம்பால் நிலத்துக் காங்கு.”

ஆகுமன்றோ, இஃது ஒர் உயிர்க்கு எய்தாவிடின் அதன் பொலிவு கூர் யாக்கை. நிற்க. இப்பறவை அவ்விசும்பைப் படர்ந்து சென்று செய்யும் தொழில் யாது கொல் நெடுங் காலமளவும் இஃது ஆண்டுப் பறந்து கொட்புறுதலின் உட்கிடையென்னோடி இதனொடு அங்கு உரையாடி நல்லறிவு கொளுத்தவல்லார் யாவரோ? இவ்வனைத்தும், எண்ணுந் தோறும் மயக்கத்தை யன்றோ தருகின்றன. என்ன இறும்பூது பயக்கும் வாழ்வுகாண் இதன் வாழ்வு!" என்பது.

இங்ஙனம், அது, நினைத்தவண்ணம் பண்டேபோற் றன் சினைகளைச் சூழ்வந்து காவல் புரிந்து வந்தது. அதுபோது, பருந்தின் மெல்லிசைமட்டிற் புழுவின் செவிப்புலனாகலும், அது, முன்னைக் களிப்பின்றெனினும், சிறிது தேறி, நோக்கக் குழையும் என்பதற்கஞ்சி, இனிமை தோன்ற ஒருவண்ணம் எதிர்நோக்கி நின்றது. பருந்தும் வந்தது. இரண்டன் நட்பும் நகுதற் பொருட்டன்றாகலானும்.

“இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்
நன்பக லமையமும் இரவும் போல
வேறுவே றியல வாகி மாறெதிர்ந் துள.”

என்னும் பொருளை இவை நன்குணர்ந்தவை யாகலானும், முன்னர் நிகழ்ச்சியிற் புழுவின் சினத்தை யறவே மறைய ஒன்றோடொன்று சிறிது அளவளாவிப் பின் வருமாறு மீட்டும் அவை சொல்லாடல் தொடங்கின.

பருந்து:- யான் கூறுவனவற்றை, முன்னரே கூறியுள்ளவாறு, உறுதிநோக்கும், ஒப்பன கொள்ளும் உளமும் கொண்டு கேட்பையேற் கூறுவல்.

புழு :- ஆயின், அவை என்னிடத் திலவென வெண்ணுதி போலும் நன்று நன்று ஆ கேள்வியிலா தெய்தும் எவ்வகைப் பொருளையும் உறுதிநோக்குக் கொண்ட, உளத்திற்கோடலே என்னியல்பென யான் கூறியிருக்கு மது நின் நினைவின்கணில்லை கொல்லோ

பருந்து:- “உணர்ந்தன மறக்கும், மறந்தனவுணரும்" என்பர் பெரியோர். இனி மறவேன்; பொறுத்தருள்க. நிற்க, யான் முன்பு கூறியன நின்னையும், நின் சினைகளையும் பற்றிப் பொதுவாக வுணர்ந்தன; இற்றைஞான்று கூறப்போவது நின்பொருட் டுணர்ந்த சிறப்புப் பொருளாகும். அது, சுருங்கக் கூறின், நீயும் ஒருபகல் அப்பூச்சியே யாதல் வேண்டும் என்பது.

புழு :- என்னை கூறினை? ஏ, மடப்பருந்தே நிறுத்துக நின் சொற்பொழிவினை! நின்னொடு நிமிர்ந்தஞேயம் இப்பயனைப் பயக்கும் நீர்மைத்தாயின், என் கூறுவது. பாலாகித் தோன்றிப் பருகினார் ஆவிகொள்ளும் ஆலால நீர்மைத்தே நின்னன்பு என்பதே சாலப் பொருந்துவது. பொலிவு, திட்பம் முதலியவில்லா யாக்கையேன் என எண்ணி இன்னணம் என்னை இழித்துக் கூறுவான் செய்த கூற்றேயிது. அறிந்தேன். நின் தன்மையை யான் இன்றே உணர்ந்தேன். நீ பெருங்கொடியை அறிவிலி! திருத்த வியலாத் தீயை பேதை!! நாணின்றி என் முன்னிற்றல் நின் மாண்பிற்கே குறைவாம். இனி எனக்கு நின் பொங்கு சோறும் வேண்டா: பூசாரித்தனமும் வேண்டா. போதும் போதும்!!

இவ்வண்ணம் கூறிய புழுவின் நெஞ்சுசுடு நெடுமொழி வன்சிறைப்பருந்தின் மனத்துத் தினைத்துணையும் சினத் தீ கொளுத்திற்றின்று. என்னை, வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை யாகலின். மற்று, அது, அதன்மனத்துத் "திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று" என்னும் தெய்வத் திருவள்ளுவப் பயனை யெழச் செய்து, உறுவது தேராப் புழுவின்மாட்டு இரக்கமும், அதன் அறியாமைக்குக் கவற்சியுமே தோன்றச் செய்தது. வேறு என் செயும் அது அப்புழுவினை, "அன்ப, நீ வெகுண்டு கூறுவனயாவும் வெளிற்றுரைகளே. ஒருபுடை, அவை, நீ இச்சினை மாட்டுப் பூண்டொழுகும் பேராதரவின் உறுதியைப் புலப்படுத்துகின்றன வெனினும், ஆன்ற கேள்வியாற்றோட்ட செவியை யல்லை யென்பதைக் கர்ட்டாது கழியவில்லை. என் சொற்களை நீ ஏற்றுக் கொள்ளாயெனப் பண்டே யான் கூறினேனன்றோ," என்று கூறிற்று.

புழு :-ஆம். யான் கேட்பனவற்றில் உறுதிப் பொருளைக் காண்டல் கூடும் என்னும் நோக்கத்துடன் ஏற்றுக் கொள்வ லென்பதைப் பண்டு கூறியதே யன்றி, இன்றும் கூறுகின்றேன், இனி என்றும் கூறுவேன். உரைப்பார் உரைப்பனவற்றை யுரைத்த வாற்றா னுட்கொள்ளு மியல்பினை யுடையார்க்கு, அவர் உண்மை கலந்தவற்றைத் தாமே யுரைத்தல் வேண்டும். ஒரு வாற்றானு மியைபில்லாத வொன்றை யியைத்துக்கூறின் யாவர் தாம் ஏற்பர். நிலையாத வற்றை நிலையின வென்றுணரும் புல்லறிவாண்மை கடையாதல் போல, இயைபில்லனவற்றை யியைபுடையவாக்கிக் கூறலும், கூறக்கேட்டலும் புல்லறிவாண்மை யாதலோடு கடையாதலும் தோன்றிற்றன்றே. நண்ப! சேடப்பூச்சிகளின் சினை பொரியின் கீடங்களாக மாறுமென்பதும், கீடங்களுந் தம் இயங்குதற் றன்மை நீங்கிப் பறத்தற்றன்மையினை யெய்து மென்பதும் முற்றிலும் பொருந்தாக் கூற்றுக்களே. இவற்றோரன்ன புன்மொழிகளை நீ யாண்டு, யாங்ஙனம், கேட்டற்குத் துணிந்தனை? இவை யொல்லுமோ வென்பதை நீயே ஆய்ந்து நோக்குக. அங்ஙனமாதல் ஒருகாலும் முடியாதன்றோ!

பருந்து:- இனி வேறு கூறல் எனக்கு இயலாது. வேண்டுமேல் யான் அறிந்தவற்றைக் கூறுவல்; கேள்: யான் வயல் வழியும், வானாறும் படர்ந்து கொட்புறும் பான்மையேன். அங்கனம், படருங்கால், இடையில் நிகழும் நிகழ்ச்சிகளைக் காணாது செல்வது இல்லை. அவற்றுள் ஒவ்வொன்றும் நினைவுவல்லார் நெஞ்சும் கடந்து நிற்குந்தன்மைத்து. அவற்றைக் கண்ணுற்றுத் தெளிந்தயான் இவ்வாறு நிகழ்தலுங் கூடுமெனத் துணிந்தேன். ஒர் குறுகிய எல்லைக்கணியக்கமும், தான்வாழும் இலையன்றிப் பிறகண்டறியாமையுமுடைய நினக்குப் பிறவனைத்தும் அரியவும், இயைபில்லவும், முடியாதவுமாகவே தோன்றும், கிணற்றுத்தவளை புணரியியல்பை யறியுங்கொல்! புழு :- அந்தோ ஆய்ந்திடு முணர்வுதன்னை நினக்கு அவ்வயன் படைத்திலன்கொல் அவனைக் காண்பனேல், அற்றதலை போக, அறாததலை நான்கினையும் பற்றித்திருகிப் பறிப்பேன்! அறிதியோ!! இக்கூற்று இத்துணையுறுதியுடைத்து; உண்மை யுடைத்து என்பனவற்றையுமோ யான் அறியேன் ஆ!! இத்துணைக்காலம் இவ்வுலகிடைப்பிறந்துழன்ற யான் ஈதறியாது ஒழிவலோ என்னே நின்மடமை என் பசிய நெடிய வுடலையும், எண்ணிறந்த கால்களையும் நோக்கும் இவற்றை நேரிற் கண்டும், எனக்கு இவ்வுடனிங்குமென்பதும், பல்வகை வண்ணமமைந்த புத்துடலொன்று எய்து மென்பதும் எத்துணை இழித்தக்க மொழிகளாகின்றன. இஃதறியாமையே பேதமை யென்பது. கூறுவோர்க்கு உணர்வு குன்றினும், கேட்போர்க்கும் அது குன்றுங் கொலோ?

பருந்து:- (சினந்து) என்னை கூறினை? “யாகாவா ராயினும் நாகாக்க, காவாக்காற் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு” என்னும் பொய்யில் மொழியினை மறத்தியோ? என்னை நீ மதியிலி யென்பது உண்மையே. கல்லா அறிவில் கயவர்பாற் கற்றுணர்ந்த நல்லார் தமது கனம் நண்ணுதலுண்டுகொல்! இதனைச் சிறிதேயு மறிந்திருந்தும், யான் இவ்வுண்மையைக் கூறியவந்தனனன்றே! நின் அறிவுக்கெட்டாதவற்றை வற்புறுத்திக் கூறநினைத்தலும், அது பற்றி நின்னுழை யெய்தலும் என்னிலைக்கு ஏற்பனவல்லவன்றோ! வானோக்கி யெழுங்கால் என்வாய்வழி வரும் இன்னொலி கேட்டோர்க்கு இன்பம் பயந்து, எனக்கு மதுவழியேயோர் சிறப்பினையும் நல்குதல் ஒருதலை. இது கிடக்க, நீ இனியேனும் வருவனவற்றையும், பிறர் கூறுவனவற்றையும் ஒன்றிய வுள்ளமொடு ஏற்றுக்கொள்க.

இவ்வாறு, புழுவின் புன்மொழிகள் பலவும் பருந்தின் செவியிற் புக்கும் அது வெகுளாது, நானாது, அன்புடை நன்மொழி கூறலும், புழு தன் அறியாமைக்கும், அதனாற் சினந்து பிதற்றிய மொழிகட்கும் உளம் வெள்கி, "அதற்கு நீ கூறும் அந்நம்பிக்கையும் உறுதி நோக்கும் என் மாட்டில வெண்பாயோ? என்றது.

பருந்து:- உளவேல், இத்துணை நெடுமொழிகள் பிறக்குங் கொல்லோ!

புழு :- அற்றேல், அவ்வுறுதி நோக்கு என்னுழை யுண்டாதற்கு யான் செய்யக்கடவதென்? அன்பு கூர்ந்து கூறுக.

இங்ஙனம் அமைதிசான்ற வுரையாடல் இடைநிகழுங் காலத்துப் பருந்து சேட்புலம் படர்ந்தது. புழுவும் தன்னைப் பன்முறையும் நோக்கி, அச்சினையிருந்த முருக்கிலையைச் சூழ்வந்து கொண்டிருப்ப, அவ்விலையைத் துளைத்துக்கொண்டு ஏழெட்டுப் பச்சிலைப் புழுக்கள் அங்குமிங்கு மியங்கத் தொடங்கின. அவை யாண்டிருந்து போந்தன? அவை அச்சினைக்கணின்று போந்தனவே! போதரக்கண்ட புழுவின் புந்தியிற் கலக்கமும் மானமுங்கலந்து தோன்றின: கண்ணகன் ஞாலம் கொட்புறல் செய்தது; உடல் சுமந்து நிற்கும் தன்னையே மாயமோ வென்றெண்ணிற்று. பருந்து கூறிய மொழி யொவ்வொன்றும் அதன் உளத்துத் தோன்றிற்று. இன்னணம் பருந்தின் முதலுரை யுண்மையாதல் காண்டலின், மற்றதும் அவ்வாறாதல் கூடுமெனும் துணிபும் உடனெய்திய எய்தலும், அது பட்டபாடு யாராற் கூறப்படுந் தகைத்தாம்!!

பின்னர் நாட்கள் சில சென்றன; பரந்தவில் வுலகிற் றோன்றும் பொருளினானாம் காட்சியறிவைப் பருந்து உடனுடன் புழுவிற் குரைத்தலும், உண்மையாய்தலும் இரண்டிற்கும் மரபாயிற்று. புழுவும் தன்னினங்கட்குத் தனக்கு நேரவிருக்கும் நிகழ்ச்சியையும், அதுவே யவற்றிற்குமா மென்பதையும் அறிவுறுத்தும்; உறுத்தினும், அதனையவை ஏலாதே யொழிந்தன. புழுமட்டிற்றான்றன் மெய்ந்நட்புக்குரிய பருந்துழைக் கண்ட மெய்ப்பொருள் நிகழ்தற் கேற்ற காலம் எய்திற்றாக, பகல்செய் மண்டிலம் பனிக்கடல் முகட்டெழ, பறவை யின்னிசைபாட, சுரும்புந்தேனும் சூழ்ந்தார்ப்ப, கடிக்கமலம் வாய்விள்ள, பூச்சியினம் பொலிவெய்த, புழுவினங்கள் குழீஇ மறுக, இப்புழுவும் பூச்சியாயிற்று; யாக்கையும் காலொடுமிதக்கும் கவினெய்திற்று இயங்கியவுடல் பறத்தல் செய்தது; இருமருங்கும் சிறகுகளெழுந்தன; அவற்றின்கட் பல்வகைய வொளிதெறிக்கும் வண்ணங்கள் தோன்றியழகு செய்தன.

இவ்வண்ணம், அழகுதிகழப் புத்துடல் பெற்றுப் பூந்தேனுண்டு பொலிவுகூர் சுற்றமொடு புரிந்து வாழ்ந்த சேடப் பூச்சி, பின்னர்ச் சின்னாட்களுட்டன் னின்னுயிர் நீங்குங் கால மெய்தலும், எண்ணரு மின்பங்கனிய, “இம் மறுவின்று விளங்கும் மாயிருஞாலத்து, அறிவு வளர்க்குமாற்றா னமைந்த பொருள்கள் மிகப்பலவுள; அவற்றையாய்ந்து கோடலறிவின் கடன்: அதற்கு இன்றியமையாத வுறுப்பாவது உறுதிநோக்கே (Faith). அதனை அதனருளாலே யடையப்பெற்றேன். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!! இனி எவை வரினும் வருக. யான் விண்ணகம் படர்குவல்" என்றெழுந்து சென்று விண்ணில் மறைந்தது.


* (கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரியினின்று வெளிவந்த பஞ்சாபகேசன் என்னும் கையெழுத்துத் திங்கள் வெளியீட்டின்கண் முன்னர் வெளிவந்ததோர் மொழிபெயர்ப்பு. ஆங்கில நூற் கட்டுரைகளுள் அமிழ்ந்து திளைத்த நிலையில் இக்கட்டுரை ஆங்கிலம் தழுவிய தமிழாக்கமாக அமைந்தது)
"https://ta.wikisource.org/w/index.php?title=செம்மொழிப்_புதையல்/001-020&oldid=1625123" இலிருந்து மீள்விக்கப்பட்டது