உள்ளடக்கத்துக்குச் செல்

செம்மொழிப் புதையல்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

செம்மொழிப் புதையல்



சித்தாந்த கலாநிதி உரைவேந்தர்

ஒளவை துரைசாமி



மணிவாசகர் பதிப்பகம்,

31, சிங்கர் தெரு பாரிமுனை

சென்னை - 600108

உரைவேந்தர் பற்றிப் பாவேந்தர்


அவ்வை துரைசாமிப்பிள்ளை அருந்தமிழின்
செவ்வை உரைசாமிப் பிள்ளையன்றோ - இவ்வையம்
எக்களிக்கத் தந்தான் இருந்தமிழ் நூலுரைகள்
சிக்கலின்றித் தந்தான் தெளிந்து.

புறத்தின் உரைகள் புலமைத் திறமை
வரலாறு பேசும் மகிழ-உறவாடும்
பாட்டின் குறிப்பெல்லாம் பண்பாட்டுச் சங்கத்தேன்
கூட்டில் விளையும் கொடை.

நூலுக்கு நூலருமை காட்டுவதில் நுண்ணறிஞன்
மேலுக்குச் சொல்லவில்லை வேர்ப்பலாத்-தோலுக்குள்
உள்ள சுளைகொடுக்கும் உண்மை உழைப்பாளன்
அள்ளக் குறையாத ஆறு.

இரவுபகல் தானறியான் இன்தமிழை வைத்து
வரவு செலவறியான் வாழ்வில்-உரமுடையான்
தன்கடன் தாய் நாட்டு மக்கட் குழைப்பதிலே
முன்கடன் என்றுரைக்கும் ஏறு.

பள்ளிமுதல் பல்கலைச் சாலைவரை பாங்கெண்ணிக்
கொள்முதல் செய்யும் கொடைமழை - வெள்ளத்தேன்
பாயாத ஊருண்டா? உண்டா உரைவேந்தை
வாயார வாழ்த்தாத வாய்!


சித்தாந்த கலாநிதி உரைவேந்தர்
ஒளவை துரைசாமி
(வாழ்க்கைக் குறிப்பு)

ங்கத் தமிழையும் சைவத் திருமுறைகளையும் சைவ சித்தாந்தக் கோட்பாடுகளையும் போற்றி வளர்த்து அரிய நூல்களுக்கு உரை வளங் கண்டு வாழ்நாள் முழுவதும் ஆராய்ச்சி உரைவேந்தராக நிலைத்த புகழ் கொண்டவர் பேராசிரியர் ஒளவை துரைசாமி.

தென்னார்க்காடு மாவட்டத்தில், ஒளவையார் குப்பம் என்னும் சிற்றுாரில், சுந்தரம் பிள்ளை, சந்திரமதி அம்மையார் இணையருக்கு 1902-ஆம் ஆண்டு, செப்டம்பர் திங்கள் 5-ஆம் நாள் இரட்டையருள் ஒருவராகப் பிறந்தார் ஒளவை துரைசாமி. இவருடைய தந்தையார் தமிழ்ப்பற்று மிக்கவர். மயிலம் முருகன் குறித்த இசைப் பாடல்களை வாய்மொழியாகப் பாடி எழுதினார் என்பர்.

“ஒளவை துரைசாமி அவர்கள் பிறந்த 'ஒளவையார் குப்பம்'-செல்லும் வழி” என்று குறிக்கும் நினைவு நடுகல், மயிலம் தாண்டி கூட்டேரிப்பட்டுக்கு முன்னால் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் நிற்பது குறிப்பிடத்தக்கது.

திருக்குறளுக்குத் திரு என்னும் அடைமொழி சேர்ந்தது போல், இவருக்கும் ஒளவை என்னும் ஊர்ப்பெயர் அடைமொழியாக இணைந்து ஒளவை துரைசாமி என்னும் பெயர் விளங்குவதாயிற்று.

உள்ளூரில் தொடக்கக் கல்வி கற்றுத் திண்டிவனம் அமெரிக்கன் ஆர்க்காடு பணிமன்ற உயர்நிலைப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பு வரை பயின்றார். அப்போதே இவர் ஓலைச் சுவடிகளை ஆராய்ந்தார் என்பது நினைக்கத்தக்கது. கல்லூரிக் கல்வியை வேலூர் ஊரிகக் கல்லூரியில் சில திங்களே பயின்றார்.

இளமையிலேயே தமிழார்வம் பூண்டு, தமிழ்ப்பணியிலேயே தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள முனைந்தார். ஆனால், ‘பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை’ எனும் கூற்று இவர் வாழ்க்கையில் மெய்யாயிற்று. அதனால் திங்களூதியம் பெறும் பணி தேடும் சூழ்நிலை ஏற்பட்டது. அத்தருணத்தில் 'உடல்நலத் தூய்மைக் கண்காணிப்பாளர்’ வேலையை விருப்பமில்லாமல் இவர் ஏற்க வேண்டியதாயிற்று. எனினும், அவர் நினைவெல்லாம் தமிழாகவே இருந்தது. அல்லும் பகலும் அன்னைத் தமிழையே எண்ணியிருந்தார். அதனால் அமர்ந்த பணியிலிருந்து நீங்கி தமிழ்ப்பணியிலேயே முழுமையாகப் பங்கு பெற்றார்.

கரந்தையில் தமிழவேள் உமாமகேசுவரன் அரவணைப்பில், நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், கரந்தைக் கவியரசு வேங்கடாசலனார் ஆகியோரிடம் சங்க இலக்கியங்கள், இலக்கணங்கள் முதலியன கற்றுத் தேர்ந்தார். மேலும் சைவ சமய மெய்யியற் கல்வியையும் கற்றுத் தெளிந்தார். 1930-ஆம் ஆண்டு, சென்னைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் பட்டம் பெற்றார்.

முதலில், வடார்க்காடு மாவட்டக் கழகப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். அப்போது, திருக்குறள், சங்க இலக்கிய வகுப்புகளைத் தொடர்ந்து தம் இல்லத்திலேயே நடத்தினார். இது, தமிழார்வலர்களைப் பெரிதும் கவர்ந்ததுடன், இவருக்குப் பெரும் புகழையும் தேடித் தந்தது. பேரறிஞர் அண்ணா, காஞ்சியிலிருந்து இங்கே வந்து, இந்த இலக்கிய வகுப்பில் பங்கு கொண்டு, ஒளவை துரைசாமியின் பேருரையைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ச்சியடைந்தார் என்பர்.

பின்னர், சேயாறென்னும் திருவத்திபுரத்தில் இவர் பணிபுரிந்தபோது, புலவர் கோவிந்தன் ஒளவையிடம் தமிழ் கற்றுப்பின்னாளில் சட்டப்பேரவைத் தலைவராக விளங்கியதைத் தமிழுலகம் நன்கறியும்.

ஒளவை துரைசாமி-உலோகாம்பாள் திருமணம் சிறப்பாக நடந்தது. இல்லற வாழ்க்கை இனிதே விளங்கியதன் பயனாக மக்கட் செல்வங்களான திருவாளர்கள் ஒளவை நடராசன், ஒளவை திருநாவுக்கரசு, ஒளவை ஞானசம்பந்தன், டாக்டர் மெய்கண்டான், டாக்டர் நெடுமாறன், திருமதியார் பாலகுசம், மணிமேகலை, திலகவதி, தமிழரசி ஆகியோர் பிறந்து இன்றும் சிறந்து விளங்குகின்றனர். வடார்க்காடு மாவட்டத்தில் காவிரிப்பாக்கம், செங்கம், போளூர் முதலிய உயர்நிலைப் பள்ளிகளில் ஒளவை பணியாற்றினார். பின்னர் திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரியில் விரிவுரையாளர் பொறுப்பை ஏற்றார். தொடக்கத்தில் கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரியிலும் சில காலம் பணியாற்றினார்.

நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் திடுமென மறைந்ததும் முன்னரே அவர் விரும்பிக் கேட்டது போல மணிமேகலையில் உள்ள சமயப் பகுதிகளுக்கும், தருக்கப் பகுதிகளுக்கும் நுண்ணிய நல்லுரை வரைந்து பெரும்புகழ்பெற்றார். இதற்காகப் பவுத்தசமய, வடமொழி நூல்களைக்கற்றுத் தெளிந்தார்.

உரை எழுதுவதில் சிறந்து விளங்கிய புலமைக்காக, இவரை ‘உரைவேந்தர்' எனத் தமிழுலகம் போற்றிப் புகழ்ந்தது. யசோதர காவியத்துக்கு இவர் வரைந்த உரை அறிஞர் பெருமக்களின் பாராட்டினைப் பெற்றது. ஒளவை துரைசாமியின் உரைத்திறத்தையும், தமிழ்ப்புலமையையும் கண்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இவரைத் தம் தமிழ்த் துறையில் இணைத்துக் கொண்டு மகிழ்ந்தது. அப்போது, சைவ இலக்கிய வரலாறு என்னும் அரிய நூலை இவர் தமிழுக்குப் புதிய வரவாக வழங்கினார். அதற்குப் பிறகு ஐங்குறுநூற்றுக்குப் பேருரை எழுதினார். ஞானாமிர்தம் எனும் சைவ சமய நூலுக்கும் விளக்கவுரை கண்டார்.

உரை வளம் வழங்குவதில் வல்லவரான ஒளவை துரைசாமி, தமிழே வாழ்வெனக் கொண்டு, அது குறித்தே சிந்திப்பதும், செயலாற்றுவதுமாகத் தம் வாழ்நாளை இனிதே கழித்தார். இவர் தமிழ்ப் பணிக்கு மாணிக்க மகுடமாகப் புறநானூற்றுக்கு இவர் வரைந்த ஒப்பற்ற உரை மிளிர்ந்தது. பிறகு நற்றிணைக்கு நல்லுரை கண்டார். பதிற்றுப்பத்துக்குப் பாங்கான உரையும் கண்டார். இவர் பொன்னுரைகள் தமிழுலகத்திற்குப் பெருமை சேர்த்தன. அதன் அருமை உணர்ந்து தமிழுலகம் உரைவேந்தரை உச்சிமேல் வைத்துப் பாராட்டியது. சிலம்பு, மேகலை, சிந்தாமணி ஆகிய முப்பெருங் காவிய ஆராய்ச்சிகளை முதலில் எழுதிய பெருமையும் இவரைச் சாரும்.

நாளும் நற்றமிழ் வளர்த்து, தமிழ்த் தொண்டிலேயே திளைத்திருந்த இவரை, மதுரை தியாகராசர் கல்லூரி, தமிழ்ப் பேராசிரியராகச் சேர்த்துக் கொண்டது. உரை வரையும் பணி அங்கும் தொடர்ந்தது. ஒய்வுக்குப் பிறகு அருட்செல்வர் நா. மகாலிங்கம் அவர்கள் வேண்டியபடி 'திருவருட்பா’ முழுமைக்கும் தெளிந்த நல்லுரை எழுதியிருப்பது, உரையுலகுக்கே உரைகல்லாக விளங்குகிறது.

மாவட்ட ஊர்ப்பெயரும் கல்வெட்டும் குறித்த ஆய்வுக்காக, இந்தியப் பல்கலை நல்கைக் குழு, இவரைப் பேராசிரியராக அமர்த்திக் கொண்டது. அவ்வமயம், தமிழகம் ஊரும் பேரும் குறித்த வரலாற்று ஆய்வுத் தொகுதியைப் பல்லாயிரக்கணக்கான கல்வெட்டுக் குறிப்புக்களோடு பேரறிஞர் ஒளவை உருவாக்கினார். உரையாசிரியர் விரிவுரை வரைவதோடு, மேடையில் உரையாற்றுவதிலும் சிறந்த நாவலராக விளங்கினார்.

ஒளவை துரைசாமி, வடமொழி நாடகமான மத்த விலாசத்தைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். தொடர்ந்து ஒளவைத் தமிழ், மதுரைக் குமரனார், தமிழ்த் தாமரை, பெருந்தகைப் பெண்டிர், தெய்வப்புலவர் திருவள்ளுவர், நந்தா விளக்கு, சிவஞானபோதச் செம்பொருள், பண்டைச் சேரமன்னர் வரலாறு முதலான நற்றமிழ்க் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். ‘An Introduction to the Study of Tirukkural’ என்னும் ஆங்கில நூலையும் இவர் படைத்தார்.

பேராசிரியர் ஒளவை துரைசாமியின் தமிழ்ப் பணியைப் பாராட்டி உரைவேந்தர், சித்தாந்த கலாநிதி விருதுகள் வழங்கப்பட்டன. மதுரைப் பல்கலைக்கழகம் தமிழ்ப் பேரவைச் செம்மல் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. இலக்கண நுணுக்கம், சிந்தனை வளம், கல்வெட்டுக்களைக் காட்டித் தெளிய வைப்பது முதலிய நலங்களால் இவர் உரையை உலகம் புகழ்ந்தது. ஒளவை மூதாட்டியார் ‘சங்கத் தமிழ் மூன்றும் தா’ எனக் கேட்ட பாடலை நாம் அறிவோம். ஆனால், தமிழுலகம் 'சங்கத் தமிழ் மூன்றும் தா' என்று ஒளவை துரைசாமி அவர்களிடமே கேட்டுப் பெற்றது என்று முத்தமிழ்க் காவலரின் வாழ்த்துரை சொல்கிறது.

தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்ப்பில், தமிழ்த் தொண்டு செய்த பெரியார் என்ற வகையில், ஒளவிை துரைசாமிக்குக் கேடயம் பரிசாக வழங்கியபோது, மேடைக்குத் தளர்ந்த நிலையில் வந்திருந்து, 'தமிழ்த் தொண்டாற்றிய எனக்கு, நீங்கள் வாள் அல்லவா தந்திருக்க வேண்டும். எவரிடமிருந்து என்னைக் காத்துக் கொள்ளக் கேடயம் தந்திருக்கிறீர்கள்!' என்று முழங்கினார்.

ஒளவை துரைசாமி மதுரை தியாகராசர் கல்லூரியில் இருந்தபோது, அழகப்பர் பல்கலைக்கழகத் துணைவேந்தராகத் திகழ்ந்த திருமதி டாக்டர் இராதாதியாகராசன் அம்மையார் இவரிடம் தமிழ்க் கல்வி கற்ற பெருமை வாய்ந்தவர். ஒளவை அவர்களின் செந்தமிழ்ச் சாயலும், சங்கத் தமிழ்ப் புலமைச் சால்பும் அம்மையார் உரைகளில் இன்றும் மிளிர்வதைக் காணலாம். ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு மதுரையில் நடந்தபோது நிறைவு நாளன்று, பாரதப் பிரதமர் திருமதி இந்திராகாந்தி தலைமையில் புரட்சித் தலைவர் அவர்கள், ஒளவை.துரைசாமி அவர்களுக்கு நிதி வழங்கிச் சிறப்பித்தார்.

தந்தை பெரியார், தமிழ்த் தென்றல் திரு.வி.க. முதல் நாவலர் பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், பேரறிஞர் அண்ணா, ப.ஜீவானந்தம், சிலம்புச் செல்வர் ம.பொ.சி.ஆகியோரைக் கொண்ட சிறப்புப் பேச்சாளர்கள் பதின்மரின் பட்டியலில் செந்தமிழ் நலந்துலங்கப் பேசும் சிறந்த பேச்சாளரென்று உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்களையும், ‘சிறந்த பேச்சாளர்கள்' (1947) என்னும் நூலில் நூலாசிரியர் மா.சு.சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

தமிழே தம் வாழ்வாகக் கொண்டு அல்லும் பகலும் புலமைப் பணியாற்றிய அருந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் ஒளவை துரைசாமி, 1981-ஆம் ஆண்டு, ஏப்பிரல் திங்கள் 2-ஆம் நாள், மதுரையில் தமது 78ஆம் அகவையில் இயற்கையெய்தினார். அவர் மறைந்தாலும், தமிழ் நெஞ்சங்களிலெல்லாம் அவர் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார் என்று நாம் நெஞ்சம் நிமிர்ந்து சொல்லலாம். கன்றும் உதவும் கனியென்பது போல நம் துணைவேந்தர் ஒளவை நடராசன் நின்ற சொல்லராக நீடு புகழ் நிலவப் பணியாற்றுவதும் மகிழ்வைத் தருகிறது. மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் என்று பழந்தமிழ் நூல்கள் பாராட்டுவது போல மேடைதொறும் உரைவேந்தர் மகனார் துணைவேந்தர் என்று ஒளவை நடராசனாரைப் பாராட்டுவது உலகத் தமிழர்கள் அறிந்ததாகும்.

★ ★ ★


தொகையுரை

இலக்கியமாமணி

பி.வி. கிரி

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமிப்பிள்ளை அவர்கள், காலங்காலமாய் எழுதிக்குவித்த செம்மொழிச் செல்வங்களெல்லாம் இன்று காணக்கிடைக்கவில்லையே என்று ஆய்வாளர்களும், தமிழார்வலர்களும் வருந்துகின்ற நிலையை அறிந்தேன். இந்தக் குறையைப் போக்க வேண்டும் என்ற ஆவல் பலர் உள்ளங்களிலும் எழுவது இயல்புதானே?

உரைவேந்தரின் திருமகனார் துணைவேந்தர் டாக்டர் ஒளவை நடராசன் அவர்கள், தந்தையாரின் கட்டுரைகளையெல்லாம் நாம் தேட வேண்டுமே என்று தம் நெடுநாளைய எண்ணத்தை ஆர்வத்தோடு என்னிடம் தெரிவித்தார்கள்.

‘அவற்றையெல்லாம் தேடி எடுப்பது சற்றுக் கடினமான செயல் என்றாலும், அதனைத் தாங்கள்தான் செய்ய வேண்டும்' என்று அன்போடு வேண்டினார்கள். பின்னர் உரைவேந்தரின் கட்டுரைகளைத் தேடித் தொகுக்கும் பணியில் அயராது முயன்றேன்.

உரைவேந்தரின் கட்டுரைத் தேனைப் பருகப் போகிறோமே என்று உளம் மகிழ்ந்து ஒரு வண்டாக நூலகமெனும் பூங்காக்களுள் நுழைந்தேன். ‘கொங்குதேர்வாழ்க்கை' என்பதற்கு அப்போதுதான் பொருள் புரிந்தது. சில இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. என்றாலும் மனம் சோராமல் மறைமலையடிகள் நூலகத்துக்குச் சென்றேன். அங்கே அந்தத் தமிழ்ப் புதையல் இருப்பது அறிந்து நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

உரைவேந்தரின் திருவுருவத்தை நான் நேரில் கண்டதில்லை. ஆனால், அந்த அழகிய எழுத்துக்களிலே அவர் திருவுருவத்தைக் கண்டேன். காலையில் கட்டுச்சோற்றுடன் தமிழ்க் கடலாம் மறைமலையடிகளின் திருப்பெயரால் அமைந்த அரும் பெரும் நூலகத்துக்குச் சென்று, அங்கேயே மாலைவரை இருந்து உரைவேந்தரின் அரிய கட்டுரைகளைத் தாங்கிய பழம் பெரும் இதழ்களைக் கண்ணுறும் பேற்றைப் பெற்றேன். இப்பணி ஒரு திங்களுக்கு மேலாக நாள்தோறும் நடந்தது.

‘தமிழ்ப் பொழில்’, ‘செந்தமிழ்’, ‘செந்தமிழ்ச் செல்வி' முதலான இதழ்களைப் புரட்டிப் பார்த்தபோது, உரைவேந்தரின் உரைச் சித்திரங்கள் மிளிரக் கண்டேன். காலப்போக்கில் அவர் எழுதிய மலையளவுக் கட்டுரைகளெல்லாம் எங்குச் சென்று மறைந்தனவோ தெரியவில்லை. ஆனால், அந்த அரிய கருவூலங்கள் சிலவாவது கைக்குக் கிடைத்தனவே என்ற மனநிறைவே அப்போது ஏற்பட்டது. எல்லாவற்றையும் பொறுமையாக, பெருமையாகப் படியெடுத்து அவற்றையெல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு வந்து, டாக்டர் ஒளவை நடராசன் அவர்களிடம் அளித்தபோது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. உடனே தம் அருமை மகன் டாக்டர் அருளிடம், “தாத்தாவின் கட்டுரைகளைப் பார்த்தாயா, அறிஞர் கிரியின் அயராத முயற்சியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்” என்று தம் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். அந்தக் காட்சி எனக்குப் பெருமிதமாக இருந்தது.

பின்னர், அவற்றையெல்லாம் இலக்கியம்-சமயம் - சமுதாயம் என முப்பெரும் பிரிவுகளாகப் பிரித்துப் பகுத்தும் தொகுத்தும் வைத்தோம்.

கால வெள்ளத்தில் கரைசேர்ந்த அந்தக் கட்டுரை மணிகளையெல்லாம் திரட்டி ஒருசேரச் சேர்த்து, நூல் வடிவமாக்கினோம். அந்த அரிய கட்டுரைகளின் ஓர் அழகிய வடிவம்தான் இந்த நூல். உரைவேந்தரின் உரைச் செல்வங்கள் காலக் கல்வெட்டாகும்; அந்தந்தக் காலக் கலை, வாழ்க்கை, நாகரிகம், மொழி, நடை, இலக்கியக் கூறுகளைப் படம்பிடித்துக் காட்டும் பண்பாட்டுப் பெட்டகம் அது.

உரைவேந்தரின் உரைக்கோவைக்குச் 'செம்மொழிப் புதையல்' என்று பெயரிட்டேன். இதனை விரும்பி ஏற்று வெளியிடும் புகழ் வாய்ந்த மணிவாசகர் பதிப்பகத்தார்க்கு என் நன்றி என்றும் உரியது. தமிழுலகம் இந்நூலை ஏற்றுப்போற்றிப்பயன்பெறும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. தொகுத்த நிரலும் முயற்சியும் சுட்டிக்காட்டிய வகையில் இத்தொகையுரை அமைகிறது.

★★★

முகப்புரை

டாக்டர் அருள் நடராசன்

(உரைவேந்தர் ஒளவை அவர்களின் பெயரன்)

கால வெள்ளத்தால் கரையாதது; கல்வெட்டுகளால் நின்று நிலவுவது இயற்கைச் சீற்றங்களினால் இடருறாதது இலக்கியமேயாகும். இல்லையென்றால், காலத்தால் மூத்த திருக்குறள் இந்த ஞாலத்துக்கு இன்று வரை பயனளிப்பதாக நிலவுமா? சங்க இலக்கியங்களில் நமது வாழ்வுச் சரிதையைக் கண்டின்புறத்தான் முடியுமா? அந்த வகையில் புதையலாகத் தேடித் தொகுத்து உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்கள் எழுதியிருந்த கலையோவியங்களின் கலம்பகமாகச் ‘செம்மொழிப் புதையல்’ என்ற நூல் வடிவெடுத்துள்ளது.

எங்கள் மரபுக்கும் குடும்பத்துக்கும் மாறாப் புகழ் வளர்த்த எங்கள் அருமைப் பாட்டனார் உரைவேந்தர் சித்தாந்த கலாநிதி ஒளவை துரைசாமி அவர்கள் அறுபதாண்டுகளுக்கு முன்னர் தமிழ்ப் பொழிலிலும், பிற இதழ்களிலும் எழுதிய கட்டுரைகள் இங்கே இப்போது தொகுக்கப்பெற்றுள்ளன. உரைவேந்தர் என் தாத்தா ஒளவை துரைசாமி அவர்கள் தமிழுக்காகவே வாழ்ந்தவர். தன்னேரிலாத தனிப்பெரும் பேராசிரியர் என்பதை உலகு நன்கறியும். கரந்தையில் தன் வாழ்வு தொடங்கிய நாள்தொட்டுக் காலையில் பயில்வது, மாலையில் எழுதுவது என்ற வரன்முறை வகுத்துக் கொண்டு இலக்கியக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதினார்கள். தமிழிலக்கியங்களைப் போலவே ஆங்கிலத்திலும் பல்வேறு துறை நூல்களைத் தாம். பயின்று மகிழ்ந்ததை அறிவு, உழைப்பு, உலக வரலாறு என்றெல்லாம் கட்டுரைகளாக எழுதியிருப்பதைக் கண்டு பெருமிதமடையலாம். ‘என் கடன் தமிழ் செய்து கிடப்பதே’ என்னும் நோக்கில் அவரது வாழ்க்கை அமைந்தது. கட்டுரைகள், வரலாறுகள் எழுதத் தொடங்கி உரை எழுதுவதில் ஒவாப் புகழ் நாட்டித் தமிழுலகில் கலங்கரை விளக்காய் ஒளிர்ந்தார். ஒளவை அவர்களின் சிந்தனை, சொல், செயல் எல்லாமே தமிழ் வளர்ச்சியாக மலர்ந்தன. அவர் ஆற்றிய தமிழ்ப்பணிக்குத் தமிழுலகம் தலை வணங்கியது. என்றோ எப்போதோ ஒளவை எழுதியிருந்த அந்தத் தமிழ்ச் செல்வங்களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்று என் தந்தையார் டாக்டர் ஒளவை நடராசன் அவர்கள் என்னைத் தூண்டி வந்தார். அப்பணியை நிறைவேற்ற அவர் நினைவுக்கு வந்தவர் இலக்கியமாமணி எழுத்துச்செம்மல் பி.வி.கிரி அவர்களாவார். திரு பி.வி.கிரி அவர்கள் விடாமுயற்சியும், கடின உழைப்பும், செய்வன திருந்தச் செய்யும் திறமும் வாய்ந்தவர். எல்லாவற்றுக்கும் மேலாகத் தமிழார்வமிக்க தலைசிறந்த எழுத்தாளர். தமிழ்நாட்டரசின் 'தமிழரசு’ இதழில் பணியாற்றி எழுத்துலகில் தனித்திறம் பதித்த மூத்த எழுத்தாளர். இன்று தம் 69ஆம் ஆண்டு அகவை நிரம்பிய நிலையில் 69 நூல்களை எழுதியுள்ளார்.

என் தந்தையார் அவர்கள் தம் எண்ணத்தை அவரிடம் சொன்னபோது, அந்தப் பணியை மிக்க மகிழ்ச்சியுடன் ஏற்று, என்னை நாடோறும் வலியுறுத்தி, ஒளவை துரைசாமி அவர்களின் கட்டுரைகளைத் தேடித் தொகுப்பது, இலக்கியமாமணியோடு இணைந்து செய்யும் பெரும்பணி என்ற தனியுவகையோடு பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்தோம். அரிதின் முயன்று, நூலகங்களுக்கெல்லாம் சென்று பழைய இதழ்களைத் தேடி எடுத்து, படிப்படியாய்க் கட்டுரைகளையெல்லாம் படியெடுத்து வந்து மணிவாசகர் பதிப்பகத்தாரிடம் வழங்கினோம்.

இதுகாறும் நாங்கள் திரட்டிய கட்டுரைகளை முறையாகத் தொகுத்து, அவற்றை ஒவ்வொன்றாக வெளியிடுவதென, திரு.பி.வி.கிரி முடிவு செய்துள்ளார். அதன்படி, 'செம்மொழிப் புதையல்' என்னும் நூல் இன்று வெளிவருகிறது. தாத்தாவின் கட்டுரைகளிலே தனித்தமிழ் நடை, அரிய சொல்லாட்சி இடைமிடைந்த புலமை வீறு, மொழியழகு, சிந்தனை வளம், உரை காணும் திறம் ஒருசேரப் பொலிவதைக் கண்டு மகிழலாம். அறிவு, உழைப்பு, வரனென்னும் வைப்பு, பிறப்பொக்கும் சிறப்பொவ்வா, யாதும் வினவல் என்னும் இருபது கட்டுரைகள் இந்நூலை அணி செய்கின்றன. ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு வகையில் சிறப்புற்றுத் திகழ்கின்றது. எல்லாக் கட்டுரைகளும் இலக்கிய மேற்கோள்களுடன் மேலைநாட்டு அறிஞர் பெருமக்களின் குறிப்புக்களுடன் மிளிர்கின்றன. எல்லாவற்றுக்கு மேலாக அந்தக் கட்டுரைகளில் தம் கருத்தினை ஒளவை அவர்கள் உறுதியுடன் நிலை நிறுத்தும் பாங்கு நம்மை வியப்பில் ஆழ்த்தும்.

உரைவேந்தர் ஒளவை அவர்களின் கட்டுரை நடை இனித்த தனித் தமிழில் இலங்குவதாகும். ஒருமுறைக்குப் பன்முறை ஆழ்ந்து தோய்ந்து படித்தாலன்றிப் பொருள் எளிதில் புலனாகாது. மெய்வருத்தக் கூலிதரும் என்பது நூற்றுக்கு நூறு உண்மையாகும். பொதுவாய்ப் பொருள் விளங்காத இடமெல்லாம் எழுதியவர் பிழையென்று எண்ணிச் சிலர் நிறைவடைவார்கள். தமக்கே முயற்சியும் திறனும் குறைவாயிருப்பதாற்றான் சில தொடர்கள் விளங்கவில்லை என்று படிப்போர் எண்ண வேண்டுமென்று என் இளம் பருவத்தில் பத்து வயதை நான் எட்டிய நிலையில் என் பாட்டனார் நகைபட விளக்கிக் கூறியது என் நினைவில் இப்போது நிற்கிறது. ஆங்கிலம் கற்றுப் பட்டம் பெற்றிருந்தாலும் எமர்சனையும் தி குவின்சியையும் எடுத்த மாத்திரத்தில் படித்துப் பொருள் தெரியாமல் இளைஞர் தடுமாறுவது இயல்பு. நூற்றிலே ஒருவருக்குத்தான் அவை தெளிவாக விளங்கும் என்று அறிஞர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். எனவே, செம்பொருட் செறிவுடையதாய் செந்தமிழ்ப் பொலிவுடையதாய் விளங்கும் இக்கட்டுரைகளில் தோய்ந்து முயன்று படித்தல் வேண்டுமென்பதால் ‘செம்மொழிப் புதையல்' என்று பெயரை இந்நூலுக்கு அமைத்தோம்.

“என் போக்கில் யான் அறிந்ததை எழுதலை என் கடனாகக் கொண்டே உரை விளக்கங்களையும் பொருண்மைத் திறங்களையும் தொடர்ந்து வரைந்தேன். காலநிலை மாற, கருத்துக்களும் புது மாற்றத்தைப் பெறும். எனவே, என் நூல்களைச் சில ஆண்டுகள் கழித்து, மீள்பதிப்புக் கொணர்தலையும் நான் விழைந்தேனில்லை. வெளியிட்ட தமிழ் நூல்களைக் கற்று விளங்கித் தெளிவு பெறும் அறிவுடைமையும் தமிழகத்தில் முறையாக அமையவில்லை. இந்நிலையில் அறிஞர் எழுதல் ஒரு சுமை, பதிப்பது ஒரு சுமையாகும். விளங்கிப் பயில்வோருக்காக எளிமை எள்ளல்கள் பெருகி வரும் நிலையையும் நான் காண்கிறேன். வாழ்வில் வறுமையில் வருந்திப் பின்னர் முதுமையில் பெருமை பெற்றதாகப் பேசி, இலக்கியப் பரிசிலைக் காட்டி என் குடும்பத்தார் நாட்டுடைமைப் பலன் பெற விழைவதும் நகைப்பிற்குரியதாகும். வளம் தேடியபோது வாய்க்காததை என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லை. எழுதுவதொன்றே என் கடன். எவரேனும் எந்நாளேனும் படித்துப் பயன்பெற்றால் நலமாகும் என்ற நிறைவோடுதான் இலக்கியப் பணியில் வாழ்கிறேன்” என்று உரைவேந்தர் ஒளவை அவர்கள் அந்நாளில் ஆற்றிய உரைத் துணுக்கை இங்கே இணைப்பது தக்கதென்று கருதுகிறேன். எழுத்துச்செம்மல் திரு. பி.வி. கிரியின் சோர்விலாத உழைப்புக்கும் இக்கருத்து பொருந்துவதாகும்.

இந்நூலில் மலர்ந்துள்ள 'உலக வரலாறு' என்னும் கட்டுரை, அறிவியல் நோக்கில் ஆராயப்படுகின்றது. இன்றைய நிலையில் அவை பழங்கருத்துக்களாகவே அமையும். ஊழ், வெல்லத்தக்கதே என்று 'ஊழ்வினை' கட்டுரையில் உறுதிப்படுத்துகின்றார். எனினும் அறுபதாண்டுக்கு முன்னர் ஒளவை அவர்களுக்கிருந்த அறிவியல் நாட்டமும், ஆங்கிலப் பயிற்சியும் நினைக்கத்தக்கன. 'சங்ககாலத் தமிழ்மகன்,' தன்னலம் கருதாது பிறர்நலம் பேணி வாழ்ந்தவன் என்றும், பழந்தமிழ் மகளிரின் பெருமையினைத் 'தமிழ் மகளிர்' என்ற கட்டுரையில் திண்ணிய சான்றுகளுடன் வரைந்துள்ளார்.

ஏட்டில் இல்லாத இலக்கியம், எது? அதுதான் பழமொழிகள். இந்தக் கட்டுரை, இதுவரை சில பழமொழிகள் குறித்துத் தவறாகத் தெரிந்ததை மாற்றித் தெளிவூட்டுகின்றன. வாணிகம் செழிக்க வேண்டுமானால், நான்கு மந்திரங்களைக் கடைப்பிடித்தாலே போதும் என்று கூறி, அந்த நான்கு மந்திரங்களை நம் மனத்திலே பதிய வைத்துள்ளார்.

'வெற்றிலை வாணிகர்' குறித்தும், ‘உரிமை வாழ்வில் இலக்கியப் பணி'யையும் ஆய்வுரையாக எழுதியுள்ளார். உரை எழுதுவது ஒரு தொழிலா? என்ற ஒரு வினாவை எழுப்பி, அதற்கு விடை தரும் வகையில், 'உரையனுபவம்’ என்னும் கட்டுரையில் தம் புலமை நுணுக்கத்தை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

தமிழுக்குப் பிற சமயத்தாரும் தொண்டாற்றியதைக் காட்டும் வகையில், 'சமண முனிவர் தமிழ்த்தொண்டு’, ‘இசுலாம் செய்த இனிய தொண்டு ஆகியவை குறித்த கட்டுரைகள் நூலுக்கு அணி செய்கின்றன. தத்துவஞானத்துக்கு அறிவியல் பாங்கு இன்றியமையாது வேண்டப்படும் என்னும் கருத்தை 'விஞ்ஞானமும் தத்துவஞானமும்' என்னும் கட்டுரையில் காணலாம்.

இவ்வாறாக, என் தாத்தாவின் ஒளிவீசும் ஒவ்வொரு கட்டுரை மணியும் நன்கு கோக்கப்பட்டு அழகிய தமிழ் மாலையாக இந்நூலினைப் புலமை மணம் கமழுமாறு தொகுத்து வழங்கிய எழுத்துச்செம்மல் திரு. பி.வி. கிரி அவர்களுக்கு எங்கள் குடும்பத்தினர் சார்பில் பெரிதும் நன்றி பாராட்டுகின்றோம்.

தமிழகத்தில் தமிழ்ச் சுரங்கமாகத் திகழும், பதிப்புச்செம்மல் ச. மெய்யப்பன் அவர்கள் நிறுவிய மணிவாசகர் பதிப்பகத்தின் வாயிலாகத் தாத்தாவின் 'செம்மொழிப் புதையல்' நூல் வெளிவருவது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. இந்நூலைத் தமிழக மக்களுக்கு வழங்குவதில் இறும்பூதெய்துகிறோம்.

இந்த நூலை மகிழ்ச்சியுடன் வெளியிட முன்வந்த பதிப்புச் செம்மலின் அருமைத் திருமகன் செயலாண்மைச் செம்மல் திரு. ச. மெ. மீனாட்சி சோமசுந்தரம், குணக்குன்று என்று எந்தையார் பரிவோடு அழைத்து மகிழும் மேலாளர் திரு. இராம. குருமூர்த்தி ஆகிய இருவரைப் பாராட்டி மகிழ்கிறோம். தமிழுலகம் தமிழ்ப் புதையலைப் பெற்று, அறிவு நலம் பெற அன்புடன் அழைக்கின்றோம்.

ஆசிரியர் பிரான் ஒளவை

கோமான் ம.வி. இராகவன்
(நாடறிந்த நல்லாசிரியர் - ஒளவை அவர்களின் தலைமாணவர்)

ருபதாம் நூற்றாண்டு நம் தாய்மொழியாம் தமிழ்மொழி மறுமலர்ச்சியுற்று மாண்பு பெற்ற காலம். இந்நூற்றாண்டின் தம் நலமும், தம் முன்னேற்றமும் கருதாது தமிழின் மறுமலர்ச்சியே குறியாக அல்லும் பகலும் அயராதுழைத்த நல்லிசைப் புலவர் பெருமக்கள் பல்லோராவர். அவருள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர் உரைவேந்தர் என்று புலவருலகம் ஒரு சேரப் புகழ் கூறும் செந்தமிழ்ச் செல்வராகிய ஒளவை துரைசாமிப் பிள்ளையவர்கள், தமிழ் வளர்த்த தனிப் பெருமைக்குரிய மதுரையம் பதியில் கல்லூரிப் பேராசிரியராகப் பல்லாண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள பிள்ளையவர்கள் மறைவைக் கேட்டுத் திடுக்குற்றேன். ஈரம்மலிந்த என் விழிகளோடு என் நினைவும் ஐம்பதாண்டுகள் பின்னோக்கிச் செல்கின்றது.

தெரிந்தெடுத்த அருந்தமிழ் ஆசிரியர்.

நாற்பதாண்டு கட்குமுன் பிள்ளையவர்கள் உயர்நிலைப் பள்ளியொன்றில் தலைமைத் தமிழாசிரியர் நான் தகுதி வாய்ந்த தமிழாசிரியரைத் தேடி அலைந்து கொண்டிருந்த தமிழார்வம் கொண்ட இளைஞன். உடற்பிணியின் குறுக்கீட்டால் என் ஆங்கிலப் பயிற்சி இடையில் தடைப்பட்டது. பிணியினின்றும் விடுபட்டபின் விட்ட ஆங்கிலப் பயிற்சியைத் தொட்டுத் தொடர விருப்பமின்றித் தமிழ் பயிலத் தொடங்கினேன். புலவர் சிலரை அடுத்துச் சிறுநூல்கள் பலவற்றைப் படித்து முடித்த நான் பெருங்காப்பியங்கள், சங்கத் தொகை நூல்கள், பேரிலக்கணங்கள் ஆகிய பெருநூல்களைத் தொடர்ந்து பயின்று பல்கலைக் கழகப் புலவர் (வித்துவான்) தேர்வு எழுத விரும்பினேன். அதுபோது அருகிலிருந்த புலவர்களுள் எவரையும் அப்பெருநூல்களைப் பாடம் சொல்லுவதற்குரிய தகுதி வாய்ந்தவராக என் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே, ஓராண்டுக் காலம் வறிது கழிந்தது. காலக் கழிவை எண்ணிக் கவன்றிருந்த நிலையில் என் நல்வினைப் பேறாகப் பிள்ளையவர்கள் சேயாறு கழக உயர்நிலைப் பள்ளிக்குத் தலைமைத் தமிழாசிரியராக வந்து சேர்ந்தார்கள் (1931).

பணியேற்ற சில நாட்களுக்குள்ளேயே பிள்ளையவர்களின் புகழ் வெள்ளமென எங்கும் விரைந்து பரவலுற்றது. பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும், நகர அறிஞர்களும் அவரைப் பற்றிப் பெருமையாகப் பாராட்டிப் பேசலானார்கள். ஏற்ற ஆசிரியரை எய்தப் பெறாமல் ஏக்கமுற்றிருந்த யான் ஊக்கம் பெற்று அவரை நேரில் ஆய்ந்தறியத் தொடங்கினேன். அவர் பிறரோடு பழகும் பண்பையும், பள்ளியில் பாடம் நடத்தும் பாங்கையும் கவனித்தேன். உரையாற்றும் அவைகட்குச் சென்று அவர் சொற்பொழிவுகள் பலவற்றைக் கேட்டேன். நான் எதிர்பார்த்த தகுதிகள் யாவும் அவரிடம் ஏற்றமுற நிறைந் திருப்பது கண்டு, என் தமிழ்ப் பசியைத் தணிவிக்கும் தகவுடையார் அவரே எனத் தெளிந்து, அவரை அணுகி என் விருப்பத்தைக் கூறி வேண்டிக் கொள்ளத் துணிந்தேன்.

பூவேத்தப் பழஞ்சைவப் பயிர்விளைத்த புகழ்ப்பிள்ளை
நாவேத்தத் திருவோத்தூர் நயந்தேற்றா ரருள் செய்வென்

வரைசாமி யரங்கமென மகிழ்ந்தாடு மனத்தவனே!
துரைசாமி! அருந்தமிழன் சுவைகனிந்த புலவ! கேள்

உலகுவளை கடல்மடுத்த வொருமுனியு மாற்றாமே
விலகு தமிழ் வியன்கடலை வியப்புறுமா றுண்டனை நீ!


உற்றுயர்வான் கலையனைத்து முரைகுற்ற மூன்றுமறக்
கற்றுயர்வான் வருமவர்க்குக் கற்பகம்போனின்றனை நீ!

சொல்வன்மை யஞ்சாமை சோர்வின்மை யொடுவாதில்
வெல்வன்மை யும்முடைய வித்துவச் சிகாமணி நீ!

கம்பர்கவிக் கவினையுமுட் கரந்தமைந்த பொருட்சுவையு
மிம்பருனைப் போலெவர்மற் றினிதறிந்தார்? எடுத்துரைத்தார்?

பன்மொழிக்குந் தாயாகிப் பரந்துலவுந் தமிழ்க்கன்னி
நன்மொழிக்கு நாயகனாய் நவிறலுநிற் குயர்வேயோ!

குன்றளிக்குங் குமரனருள் கொழுந்தமிழை யன்றேபோ
லின்றளிக்குந் தலைவனி யெனலு நினக்கிசையேயோ!

அஃதான்று

ஓயா தொழுகுஞ் சேயாற் றடைகரை
விளங்கு மோத்துர் வியனக ருயர்நிலைப்
பள்ளி மாணவர் கள்ள மின்றி
யாற்றிய தவத்தி னாசிரி யத்தொழில்
ஏற்றவர் தம்மட மாற்று மொண்புலவ!
சிறியேன் தமிழிற் பேரவாக் கொண்டு
சிலரை யண்மி யிலக்கிய விலக்கணஞ்
சிறிது பயின்றுளேன்; செம்மல் நின்றிறங்கேட்
டரியவை யறிவா னார்வமுற் றடைந்தனென்
குலனருள் வாய்ந்த குரவ! எற் கிரங்கி
யொல்காப் பெருமைத் தொல்காப்பியமொ
டேனை யைவகை யிலக்கண நூல்களும்
பல்காப் பியங்களும் பரிந்தனை பயிற்றிப்
பல்கலைக் கழகம் நல்கும் ‘வித்துவான்'
பீடுறு பட்டம் பெறவெற் கருண்மதி
அருளுவை யாயின் பொருளிலாச் சிறியேன்
காலந் தன்னிற் சீல! நீ புரியும்
ஞாலந் தன்னினுஞ் சாலப் பெரிதாம்
நன்றி யிதனை யென்று
மறவா துள்ளி மகிழ்ந்து வாழ்த்துவனே.'

என்னும் பாடலை இயற்றி எடுத்துக்கொண்டு ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை பிள்ளையவர்களின் இல்லத்திற்குச் சென்றேன். அவர் வெளித் திண்ணையில் புத்தகக் குவியல்களுக்கிடையே சிறிய சாய்வு மேசையின் முன் அமர்ந்து ஏதோ குறிப்பெடுப்பதில் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருந்தார். நான் வணக்கம் கூறி முன்னே நின்றேன் அவர் நிமிர்ந்து பார்த்து, இருக்கப் பணித்து, என்னைப் பற்றி உசாவலுற்றார். நான் சுருக்கமாக என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு எடுத்துச் சென்றிருந்த பாடல் தாளை அவரிடம் கொடுத்தேன். அவர் பாடலை ஊன்றிப் படித்துப் பார்த்துவிட்டு, 'இது யார் எழுதித் தந்தது?’ என்று கேட்டார். ‘நான் இயற்றியதே’ என்றேன். பழகிப் பண்பட்ட பண்டிதர் பாடலாக இருப்பதால் கேட்டேன். இதில் என்னைப் பலவாறு சிறப்பித் திருக்கிறீர்களே, அச்சிறப்புக்களை என்னிடம் எவ்வாறு கண்டீர்கள்?’ என்றார். நான் அவர் அறியாமலே அவரைப் பல நாட்கள் ஆராய்ந்ததையும், அவ்வாராய்ச்சியில் கண்டவற்றுள் சிலவே அவை என்பதையும் எடுத்துரைத்தேன். அதனை அடுத்து ‘நீங்கள் யார் யாரிடம் என்னென்ன நூல் படித்திருக்கிறீர்?' என்று வினவினார். நான் பாடங்கேட்ட புலவர்களையும், அவர்களுள் ஒவ்வொருவரிடமும் படித்து முடித்த நூல்களையும் வரிசையாகக் கூறினேன். உங்கள் தகுதியையும், உணர்ச்சியையும், வேட்கை விருப்பத்தையும் இப்பாடலிலிருந்தே உணர்ந்து கொண்டேன். உங்களுக்குப் பாடம் சொல்லுவதில் மகிழ்ச்சியே. நல்ல நாள் பார்த்துக் கொண்டு வாருங்கள் என்றார்,

நான் நாள் பார்த்துக் கொண்டே வந்துள்ளேன். இன்று நல்ல நாளே என்றேன். அவர் 'அப்படியானால் இன்றே தொடங்கிவிடுவோம்’ என்று கூறி, ஒரு தாளில் சில பாடல்களை எழுதி என்னிடம் தந்து, இப்பாடல்களைப் படியுங்கள். ஒவ்வொரு நாளும் பாடம் தொடங்கும் பொழுது முதலில் இவற்றைச் சொல்ல வேண்டும் என்றார். அப்பாடல்கள் அகத்தியர், தொல்காப்பியர், திருவள்ளுவர், சேனாவரையர், நச்சினார்க்கினியார், பரிமேலழகர் ஆகிய புலவர் பெரு மக்களுக்கு வணக்கம் கூறுவனவாக இருந்தன. நான் முன்னமே இயற்றியிருந்த,

முத்தலை நெடுங்கடல் முழுது முண்டலர்
புத்தமிழ் துகுபொழில் பொதிய மேவிய
வித்தக முனிவரன் வளர்த்த மெல்லியல்

முத்தமிழ்க் கிழத்தியை முடிவ ணங்குவோம்.

என்னும் தமிழ் மொழி வாழ்த்துப் பாடலை முதலிற் கூறிப் பின் அப்பாடல்களையும் படித்தேன். முதலில் திருக்குறளை எடுத்துக் கொள்வோம் என்று கூறி, தம் புத்தகத்தையே கொடுத்து உரைப்பாயிரத்திற்கு வியப்புறும் வகையில் விளக்கம் கூறியபின், கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ள ஒவ்வொரு குறளுக்கும் பரிமேலழகர் உரையையும் பிறர் உரைவிகற்பங்களையும் தமக்கே உரிய தனிமுறையில் தடைவிடைகளால் தெளிவாக விரித்து விளக்கி முடித்தார். அன்று முதல் நிழல்போல் அவரை நீங்காமல் உடனிருந்து, தொடர்ந்து ஐந்தாண்டுகள் அரிய இலக்கிய இலக்கணங்கள் பலவற்றையும் முறையாகப் பயின்று சென்னைப் பல்கலைக்கழக வித்துவான் தேர்வு எழுதி முதல் வகுப்பில் மாநிலத்தில் இரண்டாமவனாகத் தேறி, சென்னையில் உள்ள மிகப் பெரிய உயர்நிலைப் பள்ளியொன்றில் தலைமைத் தமிழாசிரியனாக அமர்ந்து, முப்பது ஆண்டுகட்குமேல் தொடர்ந்து பணி யாற்றினேன். இந்நிலைக்கு என்னை உருவாக்கி, வழிகாட்டி, வாழவைத்த வள்ளல் பிள்ளையவர்களேயெனின் அவர் பெருமைக்கு வேறு சான்று வேண்டுவதில்லை.

உழைப்பால் உயர்ந்தவர்

பிள்ளையவர்கள் உழைப்பின் உயர்வுக்கு எடுத்துக்காட்டு. அவர் வாழ்வு ஒயா உழைப்பினால் உருவானது, அவர் இன்றைக்கு எண்பதாண்டுகட்கு முன் தென்னார்க்காடு மாவட்டத்தில் உள்ள ஒளவையார் குப்பம் என்னும் சிற்றுரில் எளிய குடும்பம் ஒன்றில் தோன்றினார். இளமையில் பல வேறு இன்னல் இடையூறுகட்கிடையில் உழைத்துப் படித்து இண்டர்மீடியட்டில் முதலாண்டு மட்டும் பயிலத் தொடங்கி, தொடர்ந்து படிக்கக் குடும்ப நிலை இடந்தாராமையால் நகராண்மைக் கழகத்தில் நலத்துறைக் கண்காணி (Sanitary Inspector) யாக வாழ்வைத் தொடங்கினார். இயற்கையில் அறிவும், ஆற்றலும் சிறக்கப் பெற்ற இளைஞராகிய பிள்ளையின் வளமை கண்ட தமிழன்னை அவர்மீது தன் அருள் நோக்கைச் செலுத்தி அவரை ஆட்கொண்டாள். அவர் உள்ளத்தில் தமிழார்வம் ஊறிச் சுரக்கலுற்றது. அவர் நகராண்மைக் கழகப் பணியை விடுத்துக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை அடுத்து, நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், கவியரசு வேங்கடாசலம்பிள்ளை போன்ற பெரும் புலவர்களிடம் அருந்தமிழ் இலக்கிய இலக்கணங்களைத் திருந்தக் கற்றுத் திறமான புலமை பெற்றுச் சென்னைப் பல்கலைக் கழக வித்துவான் தேர்வில் சிறப்புறத்தேரிப் பட்டம் பெற்றார். பின்னர் வட ஆர்க்காடு மாவட்டக் கழகத்தில் தமிழாசிரியராகச் சேர்ந்த சில ஆண்டுகள் பல உயர்நிலைப் பள்ளிகளில் பலரும் பாராட்டும் வகையில் பணியாற்றினார். பின்னர், திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரியில் பேராசிரியர் பதவியேற்றுச் செந்தமிழ்ப் பணிபல சிறக்கச் செய்தார். அடுத்து அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆராய்ச்சித் துறை அவரை அழைத்து அமர்த்திக் கொண்டது. அங்கு அமர்ந்த அவர், கல்வெட்டு ஆராய்ச்சியிலும், மொழி வரலாற்று ஆராய்ச்சியிலும் பங்கு கொண்டு பயனுள்ள பணிபல புரிந்தார். இறுதியாகச் சங்கமிருந்து தமிழ் வளர்த்த மதுரையம்பதி பிள்ளையை வரவேற்றது. அங்கு அவர் தியாகராசர் கல்லூரியில் பேராசிரியராகப் பல்லாண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். பதவியினின்று ஒய்வு பெற்றாரேயன்றிப் பணியினின்றும் ஒய்வு பெற்றாரில்லை. பதவி ஓய்வைப் பயன்படுத்திக் கொண்டு செந்தமிழ்த் தொண்டைத் தொடர்ந்து செய்து வந்தார்.

ஆசிரியத் துறையில் பிள்ளையவர்கள் எய்திய இவ்வுயர்வு இயல்பாக அமைந்த வளர்ச்சியே ஆகும். ஆசிரியருக்கு உரிய அரிய பண்புகள் அனைத்தும் அவருக்கு இயற்கையிலேயே இனிதமைந்திருந்தன. பிறவியாசிரியாராகிய அவர் அத்துறையில் தமக்கென்று தனிமுறை ஒன்றை வகுத்துக் கடைப்பிடித்து, அப்பண்புகளைப் பேணி வளர்த்துக் கொண்டார்; அவ்வளவே. அவர் சிலர் போலத் தாம் உலகியல் வாழ்வில் உயர்வதற்கு வேண்டும் வசதிகளைப் பெற விரும்பியிருப்பாராயின், ஆங்கில மொழியில் அவருக்கு இருந்த தேர்ச்சிக்கும், தமிழ் மொழியில் அவருடைய ஆழ்ந்தகன்ற புலமைக்கும் அரிய ஆராய்ச்சி அறிவுக்கும் எம்.ஏ. (M.A.) பி.எச்.டி. (Ph.D.) போன்ற பயன்தரும் பட்டங்கள் பலவற்றை எப்பொழுதோ எளிதில் பெற்றிருக்கலாம். தம்மைப் பற்றிய நினைவே, தம்முன்னேற்றம் பற்றிய சிந்தனையே சிறிதும் இன்றி, தாம் குறிக்கொண்ட தமிழ்த் தொண்டுக்குத் தம்மைப் பயன்படுத்திக் கொள்வதிலேயே கருத்தாயிருந்தார் அவர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியராக இருந்த நாள் தொட்டு அவர் அதற்காக அயராது உழைத்தார். அவர் உழைப்பை உடனிருந்து காணும் வாய்ப்புப் பெற்றிருந்த நான் அதனை இன்று நினைக்கினும் அது என்னை நின்று நடுங்கச் செய்கிறது.

பள்ளியில் பாடம் நடத்தும் நேரம் நீங்க மற்ற நேரத்தில் ஒரு கணமும் ஓயாமல் ஒழியாமல் உழைத்தார். பள்ளியை விட்டு வீடு வந்ததும் திண்ணையில் புத்தகங்களைப் பரப்பிக் கொண்டு அமர்ந்து விடுவார். படிப்பதிலும், ஆராய்வதிலும், குறிப் பெடுப்பதிலும் சுற்றுப் புறத்தை மறந்து சுறுசுறுப்பாக ஈடுபட்டு விடுவார். அப்பொழுது அவர் குடியிருந்த வீட்டில் மின் விளக்கு வசதி இல்லை. இரவில் எண்ணெய் விளக்கின் முன்இருந்து நெடுநேரம் வரையில் எடுத்த குறிப்புகளைக் கொண்டு கட்டுரை, ஆய்வுரை, மறுப்புரை, நூலுரைகள் எழுதுவார். அவர் எப்பொழுது உறங்குவார், எத்தனை நேரம் உறங்குவார் என்பவை யாருக்கும் தெரியா. விடியற்காலம் விழித்துப் பார்த்தால் விளக்கின்முன் அமர்ந்து விரைவாக எதையோ வரைந்து கொண்டிருப்பார். விடிந்தபின் பள்ளி செல்லும் வரையில் அதே உழைப்பு அல்லென்றும் பகலென்றும் பாராமல், ஊனும் உறக்கமும் நினையாமல் பிள்ளையைப் போலத் தமிழுக்காகப் பேயுழைப்பு உழைத்தவர்களை நான் கண்டதில்லை. ஒய்வு என்பது இன்னதென்று அறியாத ஒர் அற்புதப் பிறவி அவர். அவர் மேற்கொண்ட முயற்சியில் அவருக்குத் துணை செய்யும் அறிவும் ஆற்றலும் பண்பும் வாய்ந்த புலவர்களோ, அன்பு கொண்டு ஆதரவு காட்டும் செல்வர்களோ இல்லாத அக்காலத்தில் புறங்கூறப் புல்லறிவினோர் பலர் இருந்தனர். பிள்ளையவர்கள் பிறர் துணை நாடாமல், புல்லறிவாளரின் பொறாமையையும் புறங்கூறுதலையும் பொருட்படுத்தாமல், தமக்குத் தாமே முயன்று பண்படுவதில் முனைந்து உழைத்தார். அன்று அவர் உழைத்த அவ்வுழைப்பே பின்னர் அவரைப் பண்டை உரையாசிரியர்கள், வரிசையில், அவர்களோடு சரியாசனத்தில், ஏற்றி, 'உரைவேந்தர்' என்று புலவருலகம் புகழ் கூறும் உயர்நிலையை எய்துவித்தது.

எளிமையில் வளமை

பழந்தமிழ்ப் புலவர்க்ளின் பண்பட்ட வாழ்க்கை சங்கத்தமிழ் நூல்களில் நன்கு விளக்கப்பட்டுள்ளது. அவர்கள் பரிசில் வாழ்க்கையினராயினும் வரிசைக்கு வருந்துவோராகவும், மண்ணாளும் மன்னரைப் போன்ற மாண்புடையவராகவும், தளர்வறியாமல் வாழ்வாங்கு வாழ்ந்தனர். அவர் வாழ்வு எளிமையில் வளமை கண்ட வாழ்வு. வாழ்வில் எளிமை; சிந்தனையில், சொல்லில் செயலில், உயர்வு; இதுவே பிள்ளையவர்களின் பெருமை. நான் பழகிய காலத்தில் பிள்ளையவர்கள் குடும்பம் மிகச் சிறியதொன்றே. அந்நாளில் தமிழாசிரியர்களின் ஊதியம் மிகக் குறைவு. வேறு வருவாய்க்கும் வழியில்லை. எனவே, பிள்ளையின் வருவாய் அச்சிறிய குடும்பத்தையும் செம்மையாக ஒம்புதற்குப் போதியதாக இல்லை. எனினும் அவர் குறைந்த வருவாயைக் கொண்டு நிறைந்த உள்ளத்தோடு நேர்மை தவறாமல் நிமிர்ந்து வாழும் நெறியாளராக விளங்கினார். எளிய உடையையும் எடுப்பாக உடுக்கும் கலை அவருக்குக் கைவந்திருந்தது. கவலைக் குறியின்றிக் களை தவழும் முகத்தோடு கலகலப்பாகச் சிரித்து உரையாடும் சீரிய பண்பு அன்றோ அவர் பால் சிறப்பாக அமைந்திருந்தது. எந்நிலையிலும் தம் கொள்கைகளை விட்டுக் கொடுக்கவோ, கருத்துகளை மாற்றிக் கொள்ளவோ அவர் இணங்கியதில்லை. அதனால் இடுக்கண் நேர்ந்த பொழுது நடுக்கமுறாமல் அதனை நகைமுகத்தோடு ஏற்று நலியச் செய்யும் மிடுக்குடைமை அவரது சிறப்பியல்பாகும். வாழ்விலும் பிறரோடு பழகும் முறையிலும் எளிமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கினா ரெனினும் ஏக்கழுத்தும் பீடு நடையும் கொண்ட ஏற்றம்மிக்க தோற்றம். அவருக்குப் பிறவிப் பேறாக வாய்த்திருந்தது.

அடக்கமும் அஞ்சாமையும்

பிள்ளையவர்கள் கடல் போன்ற கல்வியினராயினும் அவரிடம் தருக்கோ, தற்பெருமையோ தலைகாட்டக் கண்டாரிலர். தன்னடக்கத்திலும் நன்னடக்கையிலும் அவர் ஆன்றவிந்தடங்கிய சான்றோர் வரிசையில் வைத்து மதிக்கத்தக்க மாண்புடையவர். அவரைப்போல ஆரவாரத்தில் ஆர்வம் காட்டாமல், பாராட்டையும் புகழையும் எதிர்பாராமல், ‘என் கடன் பணி செய்து கிடப்பதே என்னும் கொள்கையைக் கடைப் பிடித்து அமைதியாகத் தமிழ்ப்பணியில் ஆழ்ந்திருந்தவரைக் காண்டல் அரிது. நீர் தளும்பாத நிறைகுடம் போல ஆரவாரமின்றி அமைந்தொழுகிய பிள்ளையவர்கள் அறியாத ஒன்றும் உண்டு. அதுவே அச்சம். பழந்தமிழ்ப் புலவர்களைப் போலவே அவர், அச்சம் அறியாத ஆண்மையர். அவையஞ்சாமை அவருக்குக் கருவிலே வாய்ந்த திருவாகும். தாம் உண்மை என்று கொண்டதை எவரிடையிலும் வன்மையோடு நிலைநிறுத்தும் உறுதியும், தவறு என்று கண்டதை அதற்குரியார் யாராயிருப்பினும் தயை தாட்சணியமின்றி அஞ்சாமல் அழுத்தமாக மறுத்துக் கூறும் துணிவும் உடையவர் அவர் வாதிடுவாரையும், வல்வழக்காடு வாரையும் வாயடங்கச் செய்யாமல் வணங்கிப் போனதை அவர் வாழ்வில் காண முடியாது. ஆயினும் மாறுபட்டோரிடம் பகைமை பாராட்டி மரியாதைக் குறைவாக நடந்து கொள்ளும் இழிகுணம் அவரிடம் இடம் பெற்றதில்லை. அவர்களிடம் அன்பு காட்டி நண்பு கொண்டு பண்பாகப் பழகும் பான்மை அவரது மேன்மையாகும்.

செய்ந்நன்றி மறவாச் சீர்மை

செய்ந்நன்றி மறவாது போற்றும் சீர்மையிலும் பிள்ளையவர்கள் பண்டைப்புலவர்களோடு ஒப்பவைத்து மதிக்கத்தக்க உயர்வுடையவர். அவர்பின் எய்திய உயர் நிலைக்கு அடிகோலிய ஆசிரியப் பெருமக்களாகிய நாவலர், நாட்டார், கரந்தைக் கவியரசு ஆகியோரிடம் அவர் கொண்டிருந்த பற்றும் வைத்திருந்த மதிப்பும் அளவிடற்கரியவை. அவர்களுடைய கல்விச் சிறப்பையும் பாடம் சொல்லும் திறத்தையும் அவர் உணர்ச்சி பொங்கப் பாராட்டிப் பேசியதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். அவரிடம் தமிழ் பயின்ற மாணாக்கர்களை ஒவ்வொரு நாளும் பாடம் தொடங்கு முன், தொல்காப்பியர் முதலிய புலவர் பெருமக்கட்கு வணக்கம் கூறும் பாடல்களோடு அவர் தமிழ் பயின்ற கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு வாழ்த்துக் கூறும் பாடலையும் சேர்த்துச் சொல்லுமாறு பணித்திருந்தது அவர் அந்நிறுவனத்தினிடம் கொண்டிருந்த நன்றியறிவுக்குச் சான்றாகும். கர்ந்தைத் தமிழ்ச் சங்கம் கண்ட உமாமகேசுரம் பிள்ளையை அவர் தம் நினைவில் நிலையான இடம் தந்து. மறவாது போற்றி வந்த மாண்பை அவர் நண்பர்கள் நன்கு அறிவர்.

புலமை நலம்

பிள்ளையவர்களின் புலமை பள்ள நீர்க்கடல் போன்று அளந்தறிதற்கரிய ஆழமுடையது; விரிந்தகன்ற வானம் போன்று வரைந்துணர்தற்கரிய பரப்புடையது. அசைக்கலாகாத மலை போன்று அலைக்கலாகாத திட்பம் வாய்ந்தது. எந்த நூலையும் மேற்போக்காகப் படித்து முடிக்கும் பழக்கம் அவருக்கு இல்லை. படித்தது போதுமென்று விடுத்திராமல் பல நூல்களையும் பலமுறை பயின்று நயங்கண்டு பயன் கொள்ள முயல்வது அவர் இயல்பு; அரிய நூற்பொருள்களையும் துருவியாராய்ந்து கடிதிற் கண்டு நெடிது போற்றுவது அவர் சிறப்பு. சங்கத்தொகை நூல்கள், திருக்குறள், பெருங்காப்பியங்கள், சிறு காப்பியங்கள், கம்பராமாயணம், பெரியபுராணம் ஆகிய இலக்கியங்களும், தேவாரம், திருவாசகம், திவ்வியப் பிரபந்தம், சைவ சாத்திரங்கள் ஆகிய சமய நூல்களும், தொல்காப்பியம், பிரயோக விவேகம், வீரசோழியம், இலக்கண விளக்கம், இலக்கண விளக்கச் சூறாவளி, யாப்பருங்கலம் ஆகிய இலக்கண நூல்களும் அவற்றிற்குப் பண்டையாசிரியர்கள் கண்ட உரைகளோடு அவருக்கு மனப்பாடம். இலக்கியத்திலும் இலக்கணத்தில் அவருக்கு ஈடுபாடு மிகுதி. தொல்காப்பியத்தில் அவருக்குள்ள தேர்ச்சியும், அதன் பல்வேறு உரைகளில் அவர் அரிதில் முயன்று பெற்றுள்ள பயிற்சியும், ஆராய்ச்சியும் நான் அறிந்து அனுபவிக்கும் பேறு பெற்றவை. இலக்கியங்களுள் சிறப்பாகச் சங்கத்தொகை நூல்களிடத்தும், திருக்குறளிடத்தும் அவர் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர். முற்காலக் காப்பியங்களுள் சிந்தாமணி யும், பிற்காலக் காப்பியங்களுள் கம்பராமாயணமும் அவர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவை. சிந்தாமணியின் தமிழ்ச் சுவையையும், கம்பராமாயணத்தின் கவிச் சுவையையும் அவர் தெவிட்டாமல் நுகர்ந்து திளைப்பவர்.

பிள்ளையவர்களின் புலமை ஒரு நெறிக்கு உட்பட்டதன்று; பல துறைகளில் பாய்ந்து பரவியது. இலக்கியம், இலக்கணம், சமயம், அளவை, வரலாறு, கல்வெட்டு ஆகிய பல்வேறு துறைகளுள் ஒவ்வொன்றிலும் தனித்தனிப் புலமை பெற்றவர் பலர் இருக்கக் கூடும். ஆனால், பிள்ளையவர்களைப் போல அவ்வனைத்தினும் ஆழ்ந்தகன்ற புலமை பெற்றவர் அரியராவர். அவர் எடுத்துக்கொண்ட நூல் எதுவாயினும் அதனைப் படித்தறிவதோடு அமையாமல் தம் நுண்மாண்நுழைபுலத்தால் நுணுகி ஆராய்ந்து அதன் உண்மைப் பொருளை உணர்வதில் ஆர்வமும் முயற்சியும் உடையவர்; பிறர் கடுமையானவை என்று கருதிக் கைவிடும் நூல்களைக் கைக்கொண்டு பொறுமையாகப் பலகால் பயின்று பயன் கண்டு மகிழும் பண்புடையவர். அவர் புலமை பழமையினின்றும் மலர்ந்து புத்தொளிகானும் புதுமையது. பிறர் சிலரைப் போலப் பழைய நூல்களையும் உரைகளையும் பழித்து ஒதுக்குவதும், புதுமை மோகத்தால் மரபோடு மாறுபட்ட பொருந்தாத புதுக்கருத்துகளைப் புகுத்திப் போலிப்புகழ் பெற முயல்வதும் ஆகிய புன்மைக்குணம் அவரிடம் இல்லை. அவ்வாறே புதுமைக்கு இடங்கொடாமல் பழமையையே பற்றி நிற்கும் பிடிவாத குணமும் உடையவர் அல்லர். அவர் தம்மிடம் பாடங்கேட்கும் மாணாக்கர்களைப் பாடம் தொடங்குமுன் பரிமேலழகர், நச்சினார்க்கினியர் போன்ற பண்டை உரையாசிரியர்கட்கு வணக்கம் கூறும் பாடல்களை ஒதுமாறு வற்புறுத்தி வந்தது அவர்களிடத்தும் அவர்களுடைய உரைகளிடத்தும் அவருக்கிருந்த பற்றையும் மதிப்பையும் விளக்குவதாகும். ஆனால், அவர் வேறு சிலர்போல உழுத சால் வழியே உழுது செல்லும் இழுதை நெஞ்சினர் அல்லர். அவர் பண்டையாசிரியன்மாரின் கருத்துகளோடும் உரைகளோடும் மாறுபட்டுப் புதுக் கருத்துகளையும் உரைகளையும் கண்டு கூறத் தயங்கியதில்லை. ஆனால், அத்தகைய இடங்களில் அவர்கள் அவ்வாறு கருதியதற்கும் உரை கூறியதற்கும் உரிய காரணங்களை ஆராய்ந்து கண்டு அவற்றின் பொருத்தத்தைத் தெளியத் தெரிந்து கொண்டு, பின்னர் அவர்களைக் குறை கூறாமலும், அவர்களுடைய கருத்துகளையும் உரைகளையும் இகழ்ந்து விலக்காமலும், அவற்றிற்கு மாறாகத் தாம் கொள்ளும் புதுக்கருத்துகளையும் காணும் உரைகளையும்கூறி அவற்றின் சிறப்பைக் காரணம் காட்டி விளக்குவது வியப்புக்குரிய அவரது சிறப்பியல்பாகும். இங்ஙனம் பழமைக்கு அமைதி கண்டு புதுமைக்கு வழிகோலும் பிள்ளையவர்களின் புலமைத் திறம் பிறரிடம் காண்டற்கரிய தொன்று.

பிள்ளையவர்கள் பெரும்புலவர் பலராலும் நன்கு மதிக்கப் பெற்றவர். டாக்டர் உ.வே. சாமிநாதையர், மறைமலையடிகள், பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார், மகாவித்துவான் மு. இராகவையங்கார், திரு.வி.க., சச்சிதானந்தம் பிள்ளை, எஸ். வையாபுரிப்பிள்ளை, சேதுப்பிள்ளை, கா. நமசிவாய முதலியார் முதலிய பெருமக்கள் நான் பிள்ளையவர்கள் மாணவன் என்பதால் என்னிடம் அன்பு கொண்டு மதிப்பும் மரியாதையும் காட்டிப் பழகியதொன்றே அவர்கள் பிள்ளையவர்களிடம் கொண்டிருந்த நன்மதிப்புக்கு உற்ற சான்றாகும். பிள்ளையவர்களின் ஆக்கம் கண்டு ஆற்றாது அழுக்காறு கொண்டோர் சிலர் இருந்தனர்; எனினும் பெரும்புலவர் பலரும் அவர் புலமை வளம் கொண்டு அவரைப் போற்றவே செய்தனர். பிள்ளையவர்கட்கும் அவர்களிடம் பெருமதிப்பு உண்டு. ஆனால், யாரிடமும் தம்மைத் தாழ்ந்தவராகக் கொண்டு பணிந்தொழுகும் தாழ்வு மனப்பான்மை பிள்ளையிடம் காணப்படாத ஒன்று. எவரிடமும் சரிநிகர் சமானமாகவே பழகுவது அவர் தனிச் சிறப்பாகும்.

நல்லாசிரியர்

பலதிறப்பட்ட பொதுநலப் பணிகளிலும் ஆசிரியர் பணி அருமை வாய்ந்தது. அதற்குரிய பண்புகள் படிப்பாலோ, பயிற்சியாலோ பெறலாவன அல்ல; பிறவிப் பேறாகக் கருவிலேயே உருவாவதற்குரியன. ‘குலன், அருள், தெய்வங் கொள்கை, மேன்மை, கலைபயில் தெளிவு, கட்டுரை வன்மை, நிலம், மலை, நிறைகோல், மலர்நிகர் மாட்சியும், அமைபவன் நூல் உரை ஆசிரியன்’ என நல்லாசிரியர்க்குரிய பண்புகளைத் தொன்னூல்கள் தொகுத்துக் கூறுகின்றன. பிள்ளையவர்கள் இப்பெறலரும் பண்புகள் அனைத்தையும் கருவிலே வாய்த்த திருவாகப் பெற்ற பிறவியாசிரியர். ஆசிரியராவார் மாணவர் உள்ளத்தில் தம்மாட்டுத் தனிமதிப்பும் மரியாதையும் தம்மிச்சையாகவே தோன்றச் செய்யும் சான்றோராக அமைதல் வேண்டும். அவர்க்கு இன்றியமையாத அடிப்படைப் பண்பு அசைவற்ற தன்னம்பிக்கை; அதனை அடுத்து வேண்டப்படுவன பெருமிதமான தோற்றப் பொலிவு, நகை தவழும் மலர்ந்த முகம், எடுப்பான இனிய குரல், தெளிவான திருந்திய உச்சரிப்பு, அரிய கருத்துகளையும் எளிய முறையில் எடுத்துச் சொல்லும் சொல்வன்மை, இவை அனைத்தும் பிள்ளையவர்களிடம் சிறப்பாக அமைந்திருந்தன. இப் பண்புகள் மாணவர்களை அவரிடம் "அழலின் நீங்கார் அணுகார் அஞ்சி, நிழலின் நீங்கா நிறைந்த நெஞ்சமொடு” பழகச் செய்தன. அவர் ஒழுக்கமும், உறுதியும், ஒழுங்கும் மாணவர்களை அவரிடம் பக்தியும் பணிவும் கொண்டு ஒழுகச் செய்தன. எத்தகைய துடுக்கான மாணவனும் அவரிடம் அடக்கமின்றி நடந்து கொள்ளத் துணிந்ததில்லை.

பாடம் சொல்லும் முறை

பிள்ளையவர்கள் உயர்நிலைப் பள்ளிகளில் தமிழாசிரியராகவும், கல்லூரி, பல்கலைக் கழகங்களில் பேராசிரியராகவும் பணியாற்றியவர். பாட போதனையில் அவர் கையாண்ட முறை புதுமையானது. மாணவர்களைச் சொற்களுக்குத் தனித்தனிப் பொருளுணரச் செய்வதினும் கருத்துகளை அவர்கள் உள்ளத்திரையில் உருவோவியமாகப் பதியச் செய்வதையே சிறப்பாகக் கருதி, அதற்கேற்பக் கற்பிக்கும் முறையை மேற்கொண்டார். சிறப்பாக, செய்யுட்பாடம் நடத்தும் பொழுது ஒவ்வொரு செய்யுளையும், கருத்து விளங்க, நிறுத்த வேண்டும் இடங்களில் நிறுத்தி, இடத்திற்கேற்ப எடுத்தும் படுத்தும், வலிந்தும் மெலிந்தும் தெளிவாக இசையோடு படித்துக் காட்டுவார். அவர் படிக்கும் பொழுதே பாட்டின் திரண்ட கருத்து மாணவர்களின் மனத்திரையில் முழு உருவம் கொண்டு. தெள்ளத்தெளியப் பதிந்துவிடும். கருத்து விளக்கத்தின் துணையால் பாடலில் உள்ள சொற்கள் பலவற்றிற்கும் மாணவர்கள் தாமே பொருள் உணர்ந்து கொள்வர். அவர்கட்குப் பொருள் விளங்காத அருஞ்சொற்கள் எவையேனும் இருப்பின் கேட்டறிந்து, அவற்றிற்கு மட்டும் பொருள் கூறுவார். பொதுவாக இலக்கண பாடம் என்றால் மாணவர்கள் மருண்டுமயங்கி அஞ்சி விலக்குவது வழக்கம். ஆனால், பிள்ளையவர்கள் இலக்கணம் கற்பிக்கும் இனியமுறை, மாணவர்கள் அதனை விரும்பிக் கேட்டுத் தெளிந்து மகிழச் செய்யும், பிள்ளையிடம் பயின்ற மாணவர்கள் பிற பாடங்களினும் இலக்கணத்திடமே மிக்க ஆர்வம் காட்டியதை நான் கண்டு வியந்திருக்கிறேன். உரைநடைப் பாடம் கற்பிப்பதிலும் அவர் தனி முறையைக் கையாண்டார். பாடத்தின் மையக் கருத்தைக் குறித்துக்காட்டி, ஒவ்வொரு பத்தியிலும் விளக்கப்பட்டுள்ள அதன் கூறுகளை வகைபட விரித்துரைத்து, முடிவில் அவற்றை நிரல்படத் தொகுத்துக் கூறி, மாணவர்கள் உணர்ந்து உளங்கொள்ள வேண்டிய சிறப்புச் செய்திகளை நினைவுறுத்தி முடிப்பார். இதனால் மாணவர்கள் கேட்ட பாடத்தில் தெளிவும் மன நிறைவும் பெறலாயினர். பல்கலைக் கழகத் தேர்வு குறித்துப் பிள்ளையவர்களிடம் பழந்தமிழ் இலக்கிய இலக்கணங்களைப் பாடம் கேட்டுப் பயன்கொண்டவர் பலர். அவர்களுள் முதல்வனாகும் பேறு எளியேற்கு வாய்த்த வாழ்வாகும். பேரிலக்கிய இலக்கணங்களைப் பாடம் சொல்லுவதில் பிள்ளையவர்கள் உவகையும் உற்சாகமும் உடையவர்; தாம் பலகால் பயின்று அரிதில் ஆய்ந்து கண்ட அரும்பொருள் நுட்பங்களைத் தம்மை அடுத்த மாணவர்கள் வருத்தமின்றி அறிந்து பயனடையுமாறு பரிந்து வழங்கும் வள்ளன்மை வாய்ந்தவர். அவர் மாணவர்களை நுனிப்புல் மேயவிடாமல், நூற்பொருளை நுனித்து ஆயவும், ஆய்ந்து அறிந்தவற்றை அஞ்சாமல் பிறர்முன் எடுத்துரைக்கவும், பயிற்சியும் துணிவும் பெறச் செய்வார். அவர் இன்ன இடத்தில் இன்ன நேரத்தில்தான் பாடம் சொல்லுவது என்னும் வரையறை வைத்துக் கொண்டதில்லை. மாலையில் உலாவச் செல்லும் பொழுதும், சொற்பொழிவாற்ற அயலூர்களுக்கு வண்டிப் பயணம் செய்யும்பொழுதும், உடன் தொடரும் மாணவர்கட்கு உரிய இலக்கிய இலக்கணப் பாடப்பகுதிகளில் உள்ள அரிய கருத்துகளை அளவளாவும் முறையிலேயே எளிதில் உணருமாறு எடுத்துக்காட்டிச் செல்வது அவர் வழக்கம்.

மாணவர்களின் தகுதியும் தரமும் தெரிந்து, அவர்கள் மனம் கொள்ளுமாறு பாடம் சொல்வதில் பிள்ளையவர்கள் தனித் திறமை வாய்ந்தவர். ஒரு நூலை எடுத்துக் கொண்டால் அதில் உள்ள பாடல்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாகப் படித்துப் பதம்பதமாகப் பொருள் கூறும் வழக்கம் பிள்ளையவர்களிடம் இல்லை. முதலில் எடுத்துக் கொண்ட நூல் எந்த வகையைச் சார்ந்ததென்பதை எடுத்துக்காட்டி, அதனை அணுகும் முறை, பயிலும் விதம், பொருள் காணும் நெறி, ஆயுள் அடைவு, நயம் காணும் திறம் ஆகியவற்றை விளக்குவார். பின்னர், பாடல் பயிலும் இடத்தைச் சுட்டி, பாடலின் திரண்ட கருத்தைத் தொகுத்துக் கூறி, அருஞ்சொற்கள், தொடர்களுக்குப் பொருள் விளக்கம் செய்வார். அரிய இலக்கண அமைதிகள், வரலாற்றுச் செய்திகள், புராணக்கதைகள் ஆகியவற்றைச் சுருங்கச் சொல்லி விளங்க வைப்பார். சொல் நயம், பொருள் நயம், செய்யுள் நயங்களை மாணவர்கள் உணர்ந்து சுவைக்கச் செய்வார். சில நாட்கள் தொடர்ந்து இம்முறையில் பல பாடல்களை நடத்திப் பின்னர், எஞ்சிய பாடல்களை நாடோறும் சிலவாக மாணவர் களையே இம்முறையில் படித்துப் பொருளறிந்து வரச் செய்வார். அவ்வப்பொழுது அவர்களைச் சோதித்து, குற்றம் குறை காணின் குறித்துக் காட்டித் திருத்தம் செய்வார்; படித்த பாடல்களுக்கு அவர்கள் கண்டவாறு விரிவுரை எழுதிவரச் செய்தும், தலைப்புத் தந்து அப்பாடல்களின் பொருளைத் தழுவிக் கட்டுரை வரைந்து வரச்செய்தும் படித்துப் பார்த்துத் திருத்தித் தருவார்.

தொல்காப்பியம் போன்ற பேரிலக்கண நூல்களைப் பாடம் சொல்வதில் பிள்ளையவர்கள் பேரார்வம் கொண்டவர். அவர் அவற்றைப் பாடம் சொல்லும் முறை, மாணவர்களை அவற்றிடம் ஆழ்ந்த பற்றுக் கொள்ளச் செய்யும். தொல் காப்பியத்தைப் பாடம் சொல்லும் பொழுது தேர்வுக்குரிய ஒர் ஆசிரியன் உரையை மட்டும் விளக்குவதோடு அமையாது பிற ஆசிரியர்களுடைய உரைகளையும் உடன் வைத்து ஒருங்கு விளக்குவார். தொல்காப்பிய முதற் சூத்திர விருத்தி, இலக்கணக் கொத்து, இலக்கண விளக்கம், இலக்கண விளக்கச் சூறாவளி ஆகிய தொடர்புள்ள பிற நூல்களையும் சேர நடத்துவார். நச்சினார்க்கினியர், பேராசிரியர், அடியார்க்கு நல்லார், பரிமேலழகர், சிவஞான முனிவர் ஆகியோர் தாம் உரை கண்ட இலக்கிய; சமய நூல்களின் உரைகளில் தந்துள்ள இலக்கணக் குறிப்புகளை எடுத்துக்காட்டி இனிது விளக்கம் செய்வார். உரையாசிரியர்கள் தம்முள் மாறுபட உரை கண்டுள்ள இடங்களில் மாறுபாட்டுக்குரிய காரணங்களை நுணுகி ஆராய்ந்து முடிவு கூறுவார். தொல்காப்பியப் பகுதிகள் பற்றிப் பிற்காலப் புலவர்கள் ஆய்ந்து வெளியிட்டுள்ள ஆய்வுரைகளையும் நூல்களையும் படிக்கச் செய்து, அவர்கள் கொண்ட கருத்துகளின் வன்மை மென்மைகளைக் காரண காரியத்தோடு விரிவாக விளக்கிக் காட்டுவார். பின்னர், தனித்தனித் தலைப்புகளில் ஆய்வுரைகள் எழுதி வரச் செய்து படித்துத் திருத்தம் செய்வார். இம்முறையால் மாணவர்கள் தாம் பாடம் கேட்ட நூல்களில் ஐயம், திரிபு, அறியாமையின்றித் தெளிவும் தேர்ச்சியும் பெறலாயினர். மாணவர்கள் ஒவ்வொரு நூலையும் நூற்பகுதியையும் ஆசிரியரிடம் பாடம் கேட்டே அறிவதினும் ஆசிரியர் வழிகாட்ட, அவ்வழி நின்று தம் முயற்சியால் தமக்குத் தாமே பல்வேறு நூல்களையும் பகுதிகளையும் ஊன்றிப் பயின்று தேர்ந்து தெளிவும் திறம்பெற அவர்கட்குப் பயிற்சியளிப்பதையே சிறப்புப் பணியாகக் கருதினார். ஒரு நூலில் தேர்வுக்குரிய பகுதியை மட்டும் படித்தறியச் செய்வதோடு அமையாது, மாணவர்களை அந்நூல் முழுவதையும், அதனோடு தொடர்புடைய பிற நூல்களையும் படித்தறியுமாறு வற்புறுத்துவது அவர் வழக்கம்.

பிள்ளையவர்கள் தம்மிடம் புதியராகப் பயிலவரும் இளமாணவர்கட்குத் தம்மிடம் பயின்றுவரும் முது மாணவர்களைக் கொண்டு பாடம் சொல்ல வைப்பார். அவர்கள் பாடம் சொல்லும் பொழுது உடனிருந்து கவனித்து, தவறும் இடங்களில் திருத்துவார். புதியனவாக வெளிவரும் இலக்கிய, இலக்கண ஆராய்ச்சிக் கட்டுரைகள், நூல்களைப் படித்து, மாறுபட்ட கருத்துக் காணும் இடங்களைக் குறித்துவரச் செய்து, அவை பற்றி விரிவாக விவாதித்து, அவற்றிற்கு மறுப்புரை எழுதி வரப்பணிப்பார். அதனைத் திருத்திப் படி எடுப்பித்து இலக்கிய இதழில் வெளியிடச் செய்வார். அவர் இவ்வறு செய்வது அவ்வாசிரியர்களிடம் அழுக்காறு அல்லது பகைமை காரணமாகவோ, அவர்கள் கருத்தை மறுத்து அவர்கட்கு இழுக்கு உண்டாக்க வேண்டும் என்னும் எண்ணம் கொண்டோ அன்று; பிறர் கருத்துகளை ஆயவும் ஆய்ந்து கண்டதை விளக்கி அழுத்தமாக எழுதவும் தம் மாணவர்கட்குப் பயிற்சியளிக்கும் அருள்நோக்கமே அதற்குக் காரணம் ஆகும். இதனால் அவரிடம் பயின்ற மாணவர்கள் பலரும் தன்னம்பிக்கையையும் தன் முயற்சியும் உடையராய், எந்நூலையும் தாமே பயின்றறியும் தனித்திறம் பெற்றதோடு தாம் அறிந்ததைப் பிறர் அறியுமாறு விளக்கிச் சொல்லும் சொல்வன்மையும், விரித்து எழுதும் எழுத்தாற்றலும், துணிவும் உடன் பெற்றனர்.

நூலாசிரியர்

பிள்ளையவர்கள் இணையற்ற போதகாசிரியர் மட்டுமல்லர்; ஈடற்ற நூலாசிரியருமாவர். தம் கோள் நிறுவவும், தம் பெயர் பரப்பவும், தம் வாழ்வுக்கு வசதி பெறவும் நூலியற்றுவோர் பலர். தமிழ் மொழியின் உயர்நிலையில் உள்ள குறையை நிறை செய்யவும், அதன் நூல்வளம் பெருக்கவும், நூலியற்றுவோர் ஒரு சிலரே. அவ்வொரு சிலருள் பிள்ளையவர்களும் ஒருவராவர். அவர் செய்யுள் இயற்றுவதில் ஆர்வம் கொண்டிலர். அதனால் அவர் செய்யுள் நூல் ஏதும் இயற்றவில்லை. ஆனால், அவர் அவ்வப்பொழுது புனைந்த பாடல்கள் பல உண்டு. அவை யாப்பமைப்பிலும், சொல் நலம், பொருள் வளம், ஓசை நயங்களிலும் சங்கச் சான்றோர், இளங்கோவடிகள், திருத்தக்க தேவர் ஆகிய பழந்தமிழ்ப் பாவலர்களின் பாடல்களை நினைப்பூட்டும் சிறப்பினவாகும். பிள்ளையவர்கள் உரைநடை நூல்கள் இயற்றுவதிலேயே பெரிதும் ஈடுபாடுடையவர். அவர் தமக்கென்று தனி உரைநடை ஒன்றை இனிது அமைத்துக் கொண்டார். அது சொல் அழுத்தமும், பொருள் அழகும், மிடுக்கும் பெருமிதமும் வாய்ந்தது. கதைகள், பாட நூல்கள், எளிய இலக்கியத் திறனாய்வுகள், புதினங்கள் போன்றவற்றை எழுதுவதில் அவர் பொழுதைப் போக்கவில்லை. அருந்தமிழ்ப் புலவர்களும் தனித் தமிழ் மாணவர்களும் படித்துப் பயன் கொள்ளத் தக்க இலக்கிய, இலக்கண, சமய வரலாற்று ஆராய்ச்சி நூல்கள் ஆக்குவதையே நோக்கமாகக் கொண்டார். இவ் வகைகளில் அவர் படைத்துத் தந்துள்ள பயன்கெழு நூல்கள் பலவாகும். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சூளாமணி ஆகிய பேரிலக்கியங்கள் பற்றி அவர் எழுதியுள்ள சீரிய நூல்கள் அவரது இலக்கிய ஆராய்ச்சியை எடுத்துக் காட்டுவன. திருவள்ளுவர், சேரமன்னர் வரலாறு, வரலாற்றுக் காட்சிகள் . முதலியவற்றில், வரலாற்றுத் துறையில் அவரது ஆராய்ச்சியின் அகலத்தையும் ஆழத்தையும் அளந்தறியலாம். மத்தவிலாசப் பிரகசனம் இவரது மொழிபெயர்ப்புத் திறனுக்கு விழுமிய சான்று. இவையே அன்றி, அவர் இயற்றிய இலக்கண சமய ஆராய்ச்சி நூல்கள் இன்னும் பலவாம். அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் அடங்கிய களம், பல்வேறு தமிழ் இதழ்களில் அவ்வப்பொழுது வரைந்து வெளியிட்ட கட்டுரைகள், ஆய்வுரைகள், மறுப்புரைகள் எண்ணில.

உரையாசிரியர்

பிள்ளையவர்கள் பழந்தமிழ்ப் பேரிலக்கியங்கள் பலவற்றிற்கும் யசோதர காவியம், மணிமேகலை ஆகிய காப்பியங் கட்கும் விளக்கவுரை வரைந்து வெளியிட்டு, புலவருலகம் பண்டை உரையாசிரியர்கள் வரிசையில் வைத்து, ‘உரைவேந்தர்' என்று புகழ் கூறும் உயர்நிலையை எய்தியமை அனைவரும் அறிந்ததொன்று. தமிழறிஞர் அவர் ஆக்கிய உரை நூல்களைப் படித்து உரை நல்கியதை ஆய்ந்து, அறிந்து, சுவைத்து, அதன் அருமை பெருமைகளைப் பாராட்டி வருகின்றனர். ஆகவே, நான் இங்கு அவர் உரை நல்கியதை உரை காண முற்பட்டு என் குறையறிவைப் பறை சாற்றிக் கொள்ள விரும்பவில்லை. பிள்ளையவர்கள் உரையாசிரியராவதற்குத் தம்மைப் பண்படுத்திக் கொள்ளும் முயற்சியில் முனைந்திருந்த காலத்தில் மாணவனாக அவரோடு உடனிருக்கும் வாய்ப்புப் பெற்றிருந்ததால், அதற்காக இவர் மேற்கொண்ட உழைப்பையும், உரைகண்ட சிறப்பையும் மட்டும் அறிந்தவாறு அமைவேன்.

உரையாசிரியப் பண்பு பிள்ளையவர்கட்குக் கருவிலே வாய்த்த திரு. அதற்கான இயல்பூக்கம் உரம் பெற வளர்ந்து, அவர் புலவரானதும் திறம்பெறச் செயல்படத் தொடங்கியது. அதன் பயனாக அவர் பழந்தமிழ் இலக்கிய இலக்கண உரைகளிடம் அடங்கா ஆர்வமும், அவற்றை ஆக்கிய ஆசிரியர்களிடம் ஆழ்ந்த பற்றும், அளவற்ற மதிப்பும் உடையவரானார். இலக்கிய நூலாயினும் இலக்கண நூலாயினும் அதன் பண்டை உரைகளை ஆழ்ந்து பயின்று, தோய்ந்து நுகர்ந்து, ஆய்ந்து தெளிந்தார். அவ்வுரையாசிரியர்கள் நூல்களை அணுகும் முறை உரைகாணும் நெறி, உரை வகுக்கும் திறம் ஆகியவற்றை அறிந்தார். பிறர் கருத்தோடோ தம் கருத்தோடோ மாறுபட அமைந்திருக்கும் உரையை உடனே பிழையுரை என்று முடிவு செய்து விடாமல், அவர் அவ்வாறு உரைவகுத்திருப்பதற்குரிய காரணத்தைக் கண்டறிந்தார். அக்காரணம் அவ்வாசிரியர் காலத்தில் மட்டுமன்றிப் பொதுவாக எக்காலத்திற்கும், சிறப்பாக இக்கால் வழக்குக்கும் பொருந்தாதாயின் பொருத்தமான புத்துரை காண முயன்றார். முன்னோரின் ஆய்வுரைகளைக் காய்தல், உவத்தலின்றி நடு நின்று நெடிது ஆராய்ந்தார். இலக்கிய இலக்கண உரைகளை அன்றிச் சிவஞானபோத மாபாடியம் போன்ற சமயச் சார்பான சாத்திரப்பேருரைகளையும் பலமுறை படித்துத் தெளிவுற விளக்கம் கண்டார். நாலாயிரத் திவ்வியப் பிரபந்த வியாக்கியானங்களை மரபறிந்த வடமொழி வல்லுநரின் துணை கொண்டு விரும்பிப் பயின்றார். அவை பதசாரம் கூறும் முறை அவரை மிகவும் கவர்ந்தது. ஆங்கில மொழியில் உள்ள சட்டங்களையும், அவற்றின் விளக்கங்களையும், நடுவர்களின் முடிவுரைகளையும் பெற்றுப் படித்தார்; சட்ட நூற் புலவர்களும், நீதிமன்ற நடுவர்களும் சட்டவிதிகட்கு விளக்கம் காணும் முறையையும் நடுவர்கள் முடிவு கூறும் திறனையும் தெளிவு பெற அறிந்தார். வெவ்வேறு சமயச் செய்திகளை அவ்வச்சமய அறிஞர்களை அடுத்துக்கேட்டு அறிந்து கொண்டார். வரலாற்று ஆசிரியர்கள் ஆராய்ச்சியாளர்களின் நூல்களையும், கல்வெட்டுக்களையும், அவை பற்றிய விளக்க நூல்களையும் பெற்றுப் படித்து ஆராய்ந்து, தமிழ் இலக்கியங்களில் இடம் பெறும், வரலாற்றுச் செய்திகளை வகைப்படுத்திக் கொண்டார். இவ்வாறு பல்லாண்டுகள் முயன்று பழந்தமிழ் நூல்கட்கு நயம்பட உரைகாணும் பண்பும் பாங்கும் உரமும் திறமும் பெற்றார்.

பிள்ளைவர்கள் முதன் முதலாக உரையெழுதி வெளியிட்டது திருஞானசம்பந்தர் அருளிய திருவோத்துர்த் தேவாரத் திருப்பதிகமாகும். அதனோடு ஞானாமிர்தம் என்னும் சமய நூலுக்குத் தெளிவுரை எழுதி வந்தார். பின்னர் எட்டுத் தொகையுள் ஒன்றாகிய 'ஐங்குறுநூறு’ என்னும் நூலுக்கு உரையெழுதத் தொடங்கினார். அகப்பொருள் இலக்கண இலக்கிய நூல்கள் பலவற்றையும் ஆய்ந்து அறிந்து கொண்டு அதற்கு விரிவான விளக்கவுரை வரைந்து முடித்து, அதன் முதற்பகுதியை. அச்சிடுவித்து வெளியிட்டார். பின்னர் மற்றப் பகுதிகளும் வெளியிடப்பட்டன. சொற்பொருள், சொல்நயம், சொல் பொருள் நயங்கள், இலக்கண விளக்கம், அகப்பொருள் அமைதி என்னும் அடைவு முறையில் அமைந்த அவ்வுரை புலவர் பெருமக்களால் புகழ்ந்து பாராட்டப்பட்டது. அதனை, அடுத்துப் பதிற்றுப்பத்து நூலுக்கு உரையெழுத முற்பட்டார். சேரர் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ள இலக்கியப் பகுதிகளையும் தென்னாட்டையும், சிறப்பாகத் தமிழகத்தையும், தமிழரசர்களையும், அவர்களுள் சேர மரபினரையும் பற்றி வரலாற்று ஆசிரியர்களும் ஆராய்ச்சியாளர்களும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ள கட்டுரைகளையும், நூல்களையும், கல்வெட்டுக்களையும் விரிவாக ஆராய்ந்து விளக்கவுரை எழுதி வெளியிட்டார். பதிற்றுப்பத்திற்குப் பின்னர், புறநானூற்றுக்குச் சிறப்புரை வரைவதில் ஈடுபட்டார். பல ஏடுகளைக் கொண்டு ஆய்ந்து குறைப்பாடல்களாக இருந்தவற்றை இயன்ற வரை நிறைவு செய்துகொண்டு முழு நூலுக்கும் விழுமிய விரிவுரை எழுதி முடித்தார். ஒவ்வொரு பாடலுக்கு முன்னும் பாடினோர், பாடப்பட்டோர் வரலாறு பற்றிய அரிய ஆராய்ச்சிக் குறிப்பைச் சேர்த்துப் பதிப்பித்து இரு பகுதிகளாக வெளியிடுவித்தார்.

அதனை அடுத்து வெளியிட்ட உரைநூல் மணிமேகலை. பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் முன்னரே மணிமேகலையின் முற்பகுதிக்கு உரையெழுதி வைத்திருந்தார். அந்நூலின் பிற்பகுதி புத்த சமயத் தத்துவங்களும், வேறு பல சமயங்களின் மாறுபடும் கோட்பாடுகளும், அளவை நூல் நுட்பங்களும் அடங்கியதாக இருத்தலின் அதற்குப் பொருள் கண்டு தெளிவது எத்தகையோர்க்கும் எளிதாக இல்லை. எனவே, அதனை முடிக்க யாரும் முன்வரவில்லை. செயற்கரிய செய்யும் சீரியராகிய பிள்ளையவர்கள் அப்பகுதிக்கு உரைகண்டு முடிக்க உறுதி கொண்டார். புத்த சமய நூல்களையும், பிற சமய நூல்களையும் முயன்று பெற்று முறையாக ஆய்ந்தார். அச்சமயங்கள் பற்றிய வடமொழி நூல்களை அம்மொழி வல்லுநரின்துணை கொண்டு படித்தறிந்தார். அளவை நூற்செய்திகளை ஐயமற ஆய்ந்து தெளிந்தார். பின்னர் அப்பகுதிக்குத் தெளிவான விளக்கவுரை எழுதி முடித்து அவ்வுரை நூலை வெளியிடச் செய்தார். அவ்வுரையின் உதவியால் இன்று யாவரும் மணிமேகலை நூல் முழுவதையும் படித்துப் பயன்பெறுவது எளிதாகியுள்ளது. மணிமேகலை உரைக்குப் பின்னர் அவர் நாட்டம் நற்றிணையின்பால் சென்றது. பல்லாண்டுகட்கு முன் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் தம் புலமையே துணையாக, அவர் காலத்தில் கிடைத்த அருகிய ஆதாரங்களைக் கொண்டு நற்றிணைக்குச் சிற்றுரையொன்று எழுதி வெளியிட்டிருந்தார். பிள்ளையவர்கள் தம் மாணவர்கட்கு நற்றிணைப் பாடம் நடத்தியபொழுது அவ்வுரையின் குறைபாடுகளைக் கண்டு, அந்நூல் முழுவதையும் நன்கு ஆராய்ந்து அரிய குறிப்பு எடுத்திருந்தார். அக்குறிப்பை அடிப்படையாகக் கொண்டு நூல் முழுவதற்கும் விளக்கமான விரிவுரை எழுதி முடித்தார். அண்மையில் அஃது இருபகுதிகளாக வெளியிடப்பட்டது. பிள்ளையவர்களின் முன்னைய நூலுரைகள் அனைத்திலும் இது மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது பிள்ளையவர்கள் மாணவர்கட்குப் பாடம் சொல்லும் பொழுது ஒவ்வொரு நூலுக்கும் விரிவான விளக்கக் குறிப்பு எடுத்து வைத்திருந்தார். பின்னர் அவர் எழுதி வெளியிட்ட உரைகள் யாவும் பெரிதும் அக்குறிப்புகளின் விரிவே ஆகும். அகநானூறு, குறுந்தொகை, தணிகைப் புராணம், தொல்காப்பியச் சொல்லதிகாரம், பொருளதிகாரம் ஆகியவற்றுக்கும் அவர் அரிய குறிப்புகள் வரைந்து வைத்திருந்தார். அவை இன்னும் உரைவடிவு பெற்றில. அவையும் உரைவடிவில் வெளிவருமாயின் தமிழ் மொழியின் வளம் செழிக்க உதவும். பிள்ளையவர்களின் புலமைப்பணி அவர் ஒய்வு பெற்ற பின்னரும் தொடர்ந்தது. ஒய்ந்திராமல் பொள்ளாச்சி வள்ளல் அருட்செல்வர் நா. மகாலிங்கம் அவர்களின் உதவியால் திருவருட்பா நூலுக்கு விரிவுரை எழுதினார். தமிழ் அறிஞர்களின் துணையும், தமிழ்ச் செல்வர்களின் ஆதரவும் கிடைக்கப் பெற்றிருந்தால் அவர் தமிழ்மொழியின் செழிப்புக்கு இன்னும் பல சிறப்புத் தொண்டுகள் செய்திருக்கக் கூடும். அதற்குரிய ஆர்வமும் அளவிறந்த ஆற்றலும் அவருக்கு உண்டு.

பேச்சாளர்

பாடம் சொல்லும் திறமை, எழுத்தாற்றல், பேச்சு வன்மை ஆகிய மூன்றும் ஒருவரிடம் ஒருங்கு அமைவது அரிது. இவற்றுள் ஒன்று இருப்பவரிடம் ஏனை இரண்டும் இருப்பதில்லை. ஆனால், பிள்ளையவர்களிடம் இம் முத்திறனும் ஒருசேர முழுமையாக அமைந்திருந்தன. பேச்சு வன்மை ஒரு கலை; பெறுதற்கரிய கலை. அது பிள்ளையவர்களுக்குப் பிறவிப் பேறாக வாய்ந்தது. இவர் விவேகானந்தரை முன் மாதிரியாகக் கொண்டு தம் பேச்சுத் திறனைப் பேணி வளர்த்துக் கொண்டவர். நேரம் வாய்க்கும் பொழுதெல்லாம் விவேகானந்தரின் ஆங்கிலச் சொற் பொழிவுகளை ஆழ்ந்து படிப்பார். சிறந்த பேச்சாளராக விரும்புவோர் விவேகானந்தரின் உரைகளைப் பலமுறை படிக்க வேண்டும் என்று அவர் தம்மாணவர்கட்குக் கூறுவதுண்டு. கவர்ச்சியான தோற்றம், அவைக்கு அஞ்சாத துணிவு, எடுப்பான இனிய குரல், சீரிய செந்தமிழ் நடை, திருத்தமான உச்சரிப்பு, சிந்தனைத் தெளிவு, நினைவாற்றல், சொல்லழுத்தம், தட்டுத் தடையின்றித் தொட்டுத் தொடரும் பேச்சோட்டம் ஆகிய பேச்சாளர்க்கு இன்றியமையாத அமைதிகள் அனைத்தும் பிள்ளையவர்களிடம் இயல்பாகவே இனிது அமைந்தன. பேச்சுக்குரிய பொருள் இலக்கியம். இலக்கணம், சமயம் ஆகியவற்றுள் எதுவாயினும் அது பற்றிய செய்திகளையும் கருத்துகளையும் வரையறுத்து, வகைப்படுத்தி, முன்பின் முரணாது - காரணகாரியத் தொடர்பமைய நிரல்படத் தொகுத்து, பொருத்தமான மேற்கோள்களோடு வருத்தமின்றி விளக்கி, அவையோர் 'அருமை' 'அருமை’ என்று பெருமை பேசுமாறு உரையாற்றும் திறமை பிள்ளையவர்களின் தனியுரிமையாகும். சமயச் சொற்பொழிவுகளில் அவருடைய சிந்தனைத் தெளிவையும், சாத்திரத் தேர்ச்சியையும் காணலாம். இலக்கணச் சொற்பொழிவுகளில் நுண்மாண்துழைபுலத்தையும் ஆய்வுத் திறனையும் அறியலாம். இலக்கியச் சொற்பொழிவுகளில் ஆழ்ந்தகன்ற நூலறிவையும், நயம் கண்டு சுவைக்கும் பண்பு நலத்தையும் உணர்ந்து இன்புறலாம். இலக்கியங்களும் சிறப்பாகக் கம்பராமாயணப் பகுதிகள் பற்றிக் கற்றோர் இதயம் களிக்குமாறு உரையாற்றுவதால் பிள்ளையவர்களுக்கு இணை பிள்ளையவர்களே. பேச எடுத்துக்கொண்ட பகுதியை நாடகக் காட்சியாக அமைத்து, அதற்குரிய பாத்திரங்களை அவையோர் மன அரங்கிலே மாறி மாறி வந்து நடிக்கச் செய்து அவர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தும் அற்புத ஆற்றலைப் பிள்ளையவர்கள் பாலன்றிப் பிறரிடம் காண்பதரிது. ‘கால் பணத்திலே கல்யாணம், அதிலே கொஞ்சம் வாணவேடிக்கை’ என்னும் பீடிகையோடு அவர் கம்பனின் சொற் சுருக்கத்தையும் கவிநயத்தையும் எடுத்துக்காட்டி விளக்கி அவையோரைச் சுவைக்கச் செய்வார். அவர் பேசச் செல்வதற்கு முன் பேச்சுக்குரிய பொருள் பற்றிச் சிந்தித்துச் சிறு குறிப்பு ஒன்றை வரைந்து கொள்வது வழக்கம். அக்குறிப்பை உரை நிகழ்த்தும் இடத்திற்குக் கொண்டு செல்லமாட்டார். ஆனால், அங்கு நிகழ்த்தும் உரை முற்றிலும் அக்குறிப்பை ஒட்டியே அமைந்திருக்கும். இது கொண்டு இவருடைய சிந்தனைத் தெளிவையும், நினை வாற்றலையும் தெரிந்து கொள்ளலாம்.

மாணவர்களிடம் அன்பு

பிள்ளையவர்கள் மானவர்களிடம் பேரன்பு கொண்டவர். இவர் மாணவர்களை 'ஐயா, ஐயா' என்ற அக மகிழ்ச்சியோடு அன்பொழுக அழைக்கும் இன்ப ஒலி இன்றும் என் செவிகளில் இனிது ஒலித்துக் கொண்டிருக்கிறது. தம்மிடம் பயிலும் மாணவர்கள் சிறப்பாகத் தேறிச் சீராக வாழ வேண்டும் என்பதில் இவர் அளவற்ற ஆர்வம் கொண்ட அருளாளர். அதற்கேற்ப அரிய நூல்களையும் ஐயம் திரிபு அறியாமைக்கு இடமின்றி அருமையாகப் பாடம் சொல்வார். தாம் அரிதில் வருந்திச் சேர்த்த தமிழ் வளத்தைத் தம்மாணவர் வருந்தாமல் எளிதில் பெறுமாறு வாரி வழங்குவார். தாம் முயன்று வரைந்து வைத்துள்ள அரிய நூற்குறிப்புகளை மாணவர்கட்குக் கொடுத்துப் பயன்பெறச் செய்வார். தாம் பாடம் கேட்ட நூல்களைப் பிறர்க்கு முறையாகப் பாடம் சொல்லவும், கட்டுரை, ஆய்வுரைகள் வரையவும் அறிஞர் அவையில் அஞ்சாமல் அடக்கமாக உரையாற்றவும் மாணவர்கட்குப் பயிற்சியளிப்பார், தம்மைக் கண்டு அளவளாவ வரும் அறிஞர்கள், புலவர்கள், செல்வர்கட்குத் தம் மாணவர்களை அறிமுகப்படுத்தி வைப்பார்.

மாணவர்களின் ஆக்கத்தில் அவர் காட்டிய அக்கறைக்கும் ஆர்வத்திற்கும் எடுத்துக்காட்டாக என்னைப் பற்றிய சில செய்திகளை இங்குத் தந்துரைப்பது தவறாகாது என்று கருதுகின்றேன். நான் பிள்ளையவர்களிடம் மாணவனாக அணுகியபொழுது ம. விசயராகவன் என்னும் பெயருடையவனாயிருந்தேன். அது என் பெற்றோர் எனக்கு இட்டு அழைத்த பெயர். நான் மாணவனாக அமர்ந்த சில நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் பிள்ளையவர்கள் என்னை நோக்கி, "உங்கள் பெயரில் ஒரு மாற்றம் செய்யலாம் என்று நினைக்கின்றேன். இராகவனுக்கு அடைமொழி எதற்கு? விசயம் இன்றி 'இராகவன்' இல்லை. ஆகவே, உங்கள் பெயரை அடைமொழியின்றி 'இராகவன்' என்று மாற்றிக் கொள்ளுங்கள்; ‘இராகவன்' என்னும் பெயர் எத்துணைச் சுருக்கமாகவும் சிறப்பாகவும் இருக்கிறது. பாருங்கள்" என்றார் நான் ஆசிரியரின் அன்பு ஆசையை அருளாணையாக ஏற்று அவ்வாறே மாற்றிக் கொண்டேன். அன்று முதல் என் பெயரை ‘ம.வி. இராகவாசாரியன்' என்று எழுதி வரலானேன். அதனைக்கண்ட பிள்ளையவர்கள் மீண்டும் ஒரு நாள் என்னை அழைத்து,"‘உங்கள் பெயரில் இன்னும் ஒரு மாற்றத்திற்கு இடம் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்; 'ஆசாரியன்' என்பதற்குப் பதிலாக 'ஐயங்கார்' என்பதை இணைத்துக் கொள்ளுங்கள். ரா. இராகவையங்கார், மு. இராகவையங்கார்களோடு நீங்கள் ம.வி. இராகவையங்காராக இருங்கள்" என்றார். அதனைக்கேட்டு நான் உணர்ச்சிப் பெருக்கால் உடல் வேர்த்துப் போனேன். அன்று தொடங்கி என் பெயரை அவர் விரும்பியாறே அமைத்துக் கொண்டேன். அவர் என்னை அழைக்கும் பொழுதெல்லாம் 'ஐயங்கார்' என்றே அழைத்து அதனை ஆட்சி பெறச் செய்தார்.

பின்னர் நான் 1936ஆம் ஆண்டே வித்துவான் இறுதி நிலைத் தேர்வு எழுத விரும்பி, அதனைப் பிள்ளையவர்களிடம் கூறி அனுமதியும் ஆசியும் வேண்டினேன் அவர், ‘ஏன், இன்னும் ஓராண்டு பொறுத்திருக்கலாகாதா? அடுத்த ஆண்டு, தேர்வு எழுதுவீரானால் முதல் வகுப்பில் தேறி அதற்குரிய பரிசு பெறும் வாய்ப்பும் கிடைக்கும்’ என்றார். அப்பொழுது என் குடும்பநிலை அதற்கு இடந்தருவதாக இல்லாததை எடுத்துக்கூறி, 'நான் மூன்றாம் வகுப்பில் தேறினால் போதும், அன்பு கூர்ந்து அனுமதி தாருங்கள்.' என்று வேண்டிக் கொண்டேன். அவர் என் நிலைக்கு இரங்கி, 'அப்படியானால் சரி. இந்த ஆண்டே எழுதினாலும் முதல் வகுப்பில் தேறும் தகுதி உங்களுக்கு உள்ளது. கட்டணம் செலுத்தி விண்ணப்பம் செய்து கொள்ளுங்கள்' என்று ஆசி கூறி அனுமதியளித்தார். அவ்வாண்டே தேர்வு முடிவும் தினத்தாள்களில் வெளிவந்தது. நான் முதல் இரு வகுப்புகளில் எதனையும் எதிர்பார்க்கவில்லை. ஆகவே, மூன்றாம் வகுப்பில் தேறியவர்கள் வரிசையை மட்டும் பார்த்தேன் அதில் என் பதிவெண் இடம் பெறவில்லை. எனவே, தேர்வு பெறவில்லை என்று தீர்மானித்துக் கொண்டேன். அன்று மாலை சிறிது வருத்தத்தோடு பிள்ளையவர்கள் இல்லத்திற்குச் சென்றேன். என்னைக் கண்டதும் அவர் மிக்க மகிழ்ச்சியோடு, வாருங்கள். உங்களைத்தான் எதிர்பார்த்திருக்கிறேன். தங்களுக்கு என் பாராட்டுக்கள். இனிப்பு எங்கே? வெறுங்கையோடு வந்திருக்கிறீர்களே, என்ன? என்றார். அவர் கூற்று என்னைத் திகைப்புறச் செய்தது. நாணத்தால் நாக்குழற 'நான் தேர்வு பெறவில்லை. உங்கள் சொல்லைக் கேளாததன் விளைவு என்றேன். 'தேர்வு பெறவில்லையா? யார் சொன்னார்?’ என்று கூறியவாறே உள்ளே சென்று இந்து பத்திரிகையை எடுத்து வந்து முதல் வகுப்பில் தேறினவர்களின் வரிசையில் இரண்டாவதாக இடம் பெற்றிருந்த என் பதிவெண்ணைச் சுட்டிக்காட்டி, ‘இது உங்கள் எண்தானே? மறந்து விட்டீர்களா?' என்றார். நான் வியப்பினால் விம்மிதமுற்றேனெனினும், தவற்றுக்கு நாணினேனாய், 'நான் மூன்றாம் வகுப்பையே எதிர்பார்த்தேன், அதனால் பிற வகுப்புகளின் தேர்வு வரிசைகளைக் கவனிக்கவில்லை' என்றேன். அவர் முதல் வகுப்பில் தேறியிருப்பது மட்டும் அன்று மாநிலத்தில் இரண்டாவது இடம் பெற்றிருக்கிறீர்கள். இது மிகவும் மகிழ்ச்சிக்குரியது: என்று கூறி, கற்கண்டு வாங்கிவரச் செய்து உடனிருந்த அன்பர்களுக்கு வழங்கினார். பிள்ளையவர்கள் மாணவர்களிடம் கொண்டிருந்த அன்புக்கும், அவர்கள் தேர்ச்சியிலும் உயர்விலும் அவருக்கு இருந்த அக்கறைக்கும் இந்நிகழ்ச்சி ஒன்றே சிறந்த சான்றாகும் அன்றோ?

பிள்ளையவர்களிடம் பாடம் கேட்டு உயர்நிலை எய்தியோர் பலர். அவர்களுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர் முன்பு தமிழ்நாடு சட்டமன்றத் தலைவராக இருந்த புலவர் கோவிந்தன் ஆவார். புலவர் கோவிந்தன் உயர்நிலைப் பள்ளியில் பயின்றுவந்த நாளிலிருந்தே பிள்ளையவர்களின் அன்புக்குரிய அருமை மாணவராக அமைந்தார். பிள்ளையவர்களிடம் தனித்தமிழ் பயின்ற மற்ற மாணவர்களும் சிறப்புறத் தேறிப் பட்டம் பெற்று உயர்நிலைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மதிப்போடு பணியாற்றி வருகின்றனர். பிள்ளையவர்களின் மாணவர்கள் அனைவரிடத்தும் அவருக்குரிய தனி முத்திரையைக் காணலாம். அவர்கட்குப் புலவருலகில் மதிப்பு உண்டு.

இவ்வாறு தம் உழைப்பினாலும் தாம் உயர்ந்ததோடு தம்மை அடுத்தோர் பலரும் உயர்ந்து உய்ய உதவி வந்த ஒப்புரவாளராகிய பிள்ளையவர்கள் மறைந்தது பெரும் அவலம் தருகிறது. புலமை யாலும் தகுதியாலும் உரைவேந்தரின் திருமகனாகத் திகழும் துணைவேந்தர் ஒளவை நடராசன் நாளும் புகழ்வளர மிளிர்வது எனக்கு ஆறுதலை அளிக்கிறது. மகனறிவு தந்தையறிவன்றோ தமக்கென வாழாது தமிழே உயிர்ப்பாக, உணவாக, உரமாகக் கொண்டு தமிழுக்காகவே வாழ்ந்த அவர் திருப்புகழ் வளமை குன்றாத கன்னித் தமிழே போல இன்னும் பல்லாண்டுகள் மன்னுதல் உறுதி.

“கற்றவர்தாம் கண்ணீர்க் கடல்மூழ்கச் சாய்ந்து தமிழ்
உற்றகடல் மூழ்கி ஒளிதததே - பெற்ற நிலம்
எங்கும் ஒளிசெய்திருந்ததுரை சாமியெனும்
பொங்கு தமிழ்ச்சுடரிப் போது.”

தமிழ்வீறு முதிர்ந்த வீர!
தமிழாகரர் ந.ரா. முருகவேள்



சங்கநூற் பெரும்புலவ! சைவநூற்
              கலைச்செல்வ! தமிழர் போற்றும்
துங்கமிகு காப்பியங்கள் மூன்றனுக்கும்
             ஆய்வுநூல், சுருக்க நூல்கள்,
நன்குமிகத் தொகுத்தளித்து நலஞ்செய்த
             பேராசான்! நனிசிறக்க
ஐங்குறுநூற் றெழில் மிகுத்த அரும்பொருள்கள்
             விரித்துரைத்தோய்! ஐய! வாழி!

'கேட்டாரைப் பிணிப்பதுடன் கேளார்க்கும்
            வேட்கை' மிகக் கிளர்ச்சி ஊக்கம்
ஊட்டாநின் றறிவுவிருந் துதவுமுயர்
            பேச்சாள! உரன்சி றந்தோய்!
நாட்டார்ஐ யாஅவர்கள் நல்லுரையின்
            குறைநிரப்பும் நலம்செ றிந்த
ஆட்டான்நீர் ஒருவரெனின், அரியநின்
            புகழ்நலன் யாம் அளப்ப தெங்ஙன்?

எழுத்தினொடு பேச்சாலும் இனியதமிழ்,
            சிவநெறியென் றிரண்டும் எங்கும்
முழக்கிவரும் நாவலனே! முடுக்குமிகு
            தமிழ்வீறு முதிர்ந்த வீர!
ஒழுக்கநெறி இழுக்காதோய்! உரைப்புமிகு
            கொள்கையினாய்! உவந்தே யாங்கள்
அழைக்கமகிழ்ந் திவண்போந்த அதற்குநினக்கு
            எம்நன்றி அளவொன் றின்றால்!

"https://ta.wikisource.org/w/index.php?title=செம்மொழிப்_புதையல்&oldid=1711454" இலிருந்து மீள்விக்கப்பட்டது