உள்ளடக்கத்துக்குச் செல்

செம்மொழிப் புதையல்/014-020

விக்கிமூலம் இலிருந்து

14. வெற்றிலை வாணிகர்


புதுக்கோட்டைப் பகுதியில் வெள்ளாறு ஒடுகிறது. அதன் இரு கரையிலும் உள்ள நாட்டுக்குக் கோனாடு என்று சங்க காலத்தில் பெயர் வழங்கிற்று. இடைக் காலத்தில் விசயாலயன் இராசராசன் முதலிய சோழ வேந்தர் தஞ்சையில் இருந்து ஆட்சி புரிந்தனர். அவர்கள் காலத்தில் முதல் இராசராசனது 18-ஆம் ஆண்டுக்குப் பின் இக் கோனாட்டுக்கு இரட்டபாடி கொண்ட சோழ வளநாடு என்று பெயர் உண்டாயிற்று. ஆனாலும் பழம் பெயரை மறவாதபடி, கோனாடான இரட்டபாடி கொண்ட சோழ வளநாடு என்றே அது கூறப்பட்டு வந்தது.

இந்த நாட்டில் அந்தக் காலத்தில் விளங்கிய பேரூர்களில் திருநலக் குன்றம் என்பது ஒன்று. இப்போது அது குடுமியான் மலை என்ற பெயருடன் நிலவுகிறது. இதனருகே காப்புக்குடியென்பது ஒர் ஊர். அந்த நாளில் வாழ்ந்த வேந்தர்கள், நான்கு வேதங்களிலும் வல்ல பிராமணர்களுக்கு நீர் வளம் பொருந்திய ஊர்களைக் கொடுப்பது வழக்கம். அதற்குப் பிரமதாயம் என்று பெயர்; அது பிரமதேயம் என்றும் மருவி வழங்கும்.

தஞ்சாவூர்ப் பெரிய கோயிலைக் கட்டிய இராசரர்ச சோழனுக்குப் பின் அவன் வழியில் முதற் குலோத்துங்கன் என்னும் வேந்தன் ஆட்சி புரிந்தான். அவன் சுமார் 880 ஆண்டுகளுக்கு முன் அதாவது 1070 முதல் 1120 வரையில் ஆட்சி செய்தான். இந்தக் கோனாடான இரட்டபாடி கொண்ட சோழ வளநாடு அவனுடைய ஆட்சியில் இருந்தது. மேலும், அக் காலத்தில் நாட்டின் பரப்பைக் கணக்கெடுத்தவர், கோனாடு இருபத்து நான்கு வட்டகைப் பரப்புடைய தெனக் கணக்கிட்டனர்; இதை அப் பகுதியில் காணப்படும் கல் வெட்டுக்கள் உரைக்கின்றன.

இந்தக் கோனாட்டில் திருச்சிராப்பள்ளி வழியாகவும், தஞ்சை வழியாகவும் வெற்றிலை வாணிகர் வந்து வியாபாரம் செய்வர். மலைநாட்டிலிருந்து குதிரை வாணிகரும் வந்து குதிரை வியாபாரம் செய்தனர். தஞ்சை மாநாட்டு மன்னார்குடிக் கல்வெட்டால் மிளகு வாணிகரும் பிறரும் மலைநாட்டிலிருந்தும் வேறு நாடுகளிலிருந்தும் வந்து போன செய்தி தெரிகிறது. இவர்களிற் பலர் விற்றற்குரிய பொருள்களைப் பெருந் தொகையாகக் கொணர்ந்து ஒரிடத்தே பண்டகசாலை நிறுவி அதன் கண் தொகுத்துச் சிறிது சிறிதாக ஊர்களுக்கு அனுப்பினர். இவர்களைப் போலவே இந் நாட்டு வணிகர்களில் பலர் வெளிநாடுகளிலிருந்து வாணிகப் பொருள்களை வருவிப்பதும், இந் நாட்டுப் பொருள்களை வெளிநாடுகட்குக் கொண்டு செல்வதும் உண்டு.

இவ்வாறு, வணிகரது போக்கு வரவில். இடைச் சுரங்களில் ஆறலைகள்வரது குறும்பும் இருந்து வந்தது. அவற்றினின்றும் தம்மைக் காத்துக் கொள்ள வேண்டிய நிலை இவ்வணிகர்க்கு நேரிட்டது. அவர்களைக் காக்க வேண்டிய கடமை அந் நாளை அரசர்க்குண்டென்பதைச் சங்க நூல்களே கூறுகின்றன. அத்தம் செல்வோர் அலறத் தாக்கிக், கைப் பொருள் வெளவும் கள வ்ேர் வாழ்க்கைக், கொடியோர் இன்றவன் கடியுடை வியன் புலம்’ என்பதனால், வழிப் போக்கர்க்கு ஊறுண்டாகா வண்ணம் பழைய நாளைத் தமிழ் வேந்தர் காவல் புரிந்தமை விளங்குகிறது. என்றாலும், வணிகர் செல்லும்போ தெல்லாம் அரசனது படையைக் கொண்டேகுவது வணிகர்க்குப் பல சமயங்களில் இடுக்கண் விளைத்தது. சில சமயங்களில் அரசியற் படையின் உதவி கிடைப்பது அரிதாகும். அதனால் வணிகர் தாமே படைகளை வைத்தாளும் உரிமை பெற்றுப் படையும் கொண்டிருந்தனர். இம் முறை அந் நாளில் மேனாடுகளிலும் இருந்தது. ஐரோப்பியர் நம் நாட்டில் வாணிகம் செய்ய வந்தபோது தமது செலவிலேயே படைகளை வைத்தாண்ட செய்தியை நம் நாட்டுச் சரித்திரமே கூறுகிறதல்லவா? பகை பெரிதானபோதே அரசர் முன் வந்து தாங்கள் பெரும் படை கொண்டு பகைவர் குறும்புகளை அடக்கினர்.

இந் நிலையில் இரட்டபாடி கொண்ட சோழ வள நாட்டில் வணிகர் பலர் வாழ்ந்தனர். அவருள் வெளிநாட்டு வணிகரும் இருந்தனர். அவருள் தெலுங்கு நாட்டினர் பலர். அந் நாட்டில் வாணிகம் செய்து வந்தனர். தெலுங்கு நாட்டில் கோகழி யைஞ் துறு, திரிபுர தளம் மூன்று லக்ஷம் என நாடுகள் பெயர் பெற்று விளங்கின. அந்நாடுகளிலிருந்து வந்து வாணிகம் செய்தோர் தங்களை ஐஞ்னூற்றுவர், ஆயிரவர் எனக் கூறிக் கொள்வர். தெலுங்கு நாட்டிலிருந்து வந்து கோனாட்டில் வாணிகம் செய்தோருட் சிலர் தங்களை ஆயிரவர் என்று கூறிக் கொண்டனர். அவருள் கிராஞ்சி மலை கிளிய னின்றான் திருமலை சகஸ்ரன் என்பவன் ஒருவன். கிராஞ்சி மலை யென்பது கிரெளஞ்ச மலை யென்பதன் திரிந்த பெயர். கிழிய நின்றான் என்பது கிளிய நின்றான் எனத் திரிந்து போயிற்று. ‘கிளியனூர் எனத் தொண்டை நாட்டில் ஊர்கள் இருப்பதை நோக்க இக் கிளியன் என்பது, ஒர் இயற்பெயராக இருக்கலாமெனக் கருதுதற்கும் இடந் தருகிறது. கிராஞ்சி மலை இப்போது குண்டுர் மாவட்டத்தில் உள்ளது. குண்டுர் மாவட்டத்துக்குக் குண்டுரின் பழம் பெயர் குமட்டுர் என அவ்வூர்க் கல்வெட்டுக் கூறுகிறது. வடுக நாட்டுக் கிராஞ்சி மலையில் தோன்றிக்கிளிய நின்றான் என்னும் வணிகன் மகனாய்க் கோனாட்டில் வந்து வாணிகம் செய்த திருமலை, சகஸ்ரம் என்னும் குடியைச் சேர்ந்தவனாவன். சகஸ்ரன், ஆயிரவன் என்னும் பொருள் தருவது.

தெலுங்க நாட்டு வணிகனான திருமலை சகஸ்ரன் கோனாட்டில் வாணிகம் செய்கையில், அருளாளன் சகஸ்ரன் என்ற வேறொருவனும் வந்து வாணிகம் செய்தான். அவனது ஊர் வேத கோமபுரம்; அதனால் அவன் வேத கோமபுரத்து அருளாளன் சகஸ்ரன் என்று வழங்கப்பட்டான். இவனது வேத கோமபுரமும் தெலுங்க நாட்டில் உள்ளதோர் ஊர். இவ் ஆரவர் பலர் சோழ நாட்டில் ஆடுதுறைப் பகுதியில் தங்கியிருந்தனர். அதனால் அப்பகுதி விக்கிரம சோழச் சதுர்வேதி மங்கலத்து வேத கோமபுரம் என்று பெய ரெய்தியிருந்தது (A.R. 366 of 1907). முதல் இராசராசனுடைய அரசியற் சுற்றத்தாருள் இராசேந்திர சிம்ம வள நாட்டுக் குறுக்கை நாட்டுக் கடலங்குடி வேத கோமபுரத்துத் தாமோதர பண்டன் என்ற ஒருவன் (Ep. Indi XXII. பக். 54). எனவே, கி.பி. பத்து, பதினோராம் நூற்றாண்டிலேயே வடுக நாட்டு வணிகர் பலர் தமிழ் நாட்டிற் புகுந்து வாணிகம் செய்தனரென்பதும், வேதியர்கள் கோயில்களிலும் அரசியலிலும் பணிபுரிந்தன ரென்பதும் தெரிகின்றன.

பணி மேற்கொண்ட நாட்டவரும் பிறரும் மீண்டும் ஒருங்கு கூடி 'கோவிராச கேசரி வன்மரான சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு கூம்சு -வது (முப்பத்தாறாவது) இரட்டபாடி கொண்ட சோழ வளநாட்டு நாட்டோம். திருநலக் குன்ற முடைய மகா தேவர்க்கு இந் நாட்டுப் பிரமதேயம் காப்புக்குடி, கிராஞ்சி மலை கிழிய நின்றான் திருமலை சகஸ்ரனும், வேத கோமபுரத்து அருளாளன் சகஸ்ரனும் இவ் விருவரும் இந் நாட்டில் வந்திறங்கின வெற்றிலைக்குத் தரகு கொண்டு முப்பத்தாறாவது முதல் இத் தேவர் அடைக்கா யமுதுக்கு ஆட்டு (ஆண்டு) முப்பதினாயிரம் பாக்கும் வெற்றிலைக் கட்டு எழு நூற்றைம்பதும் இவ் விருவரும் இவர்கள் வர்க்கத்தாருமே சந்திராதித்தவல் (சந்திராதித்தர் உள்ள வரையில்) இடக்கடவராகவும். இது நாட்டோமும் மூன்று படைப் பொற் கோயில் கைக்கோளரும் இந் நாட்டுப் படை பழியிலி ஐஞ் நூற்றுவருமே இது நிலை நிறுத்தக் கடவோமாகக் கல் வெட்டுவித்தோம் (P.S. No. 125) என்று திருநலக் குன்ற முடையார் கோயில் முன் மண்டபத்துக் கீழ்ப்புறச் சுவரில் கல் வெட்டுவித்தனர்.

இவ் வேற்பாட்டின்படி இரண்டாண்டுகள் கழிந்தன. சகஸ்ரர் இருவருக்கும் முன்னர் இருந்த சிறப்புப் பண்டு போல் உண்டாகவில்லை; வருவாயும் குறைந்தது. புதியராய்த் தோன்றிய வணிகருள் சிறுத் தொண்ட நம்பி யென்பான், தான் முன்னர் நிகழ்ந்த உடன்படிக்கையில் கலந்து கொள்ளாதது பற்றித் தனக்குள்ளே வருத்த முற்றான். கைக் கோளர் தலைவரும் பழியிலித் தலைவரும் சொன்னதை ஏற்காது போனது பெருங் குறையாகத் தோன்றிற்று. பின்பு ஒரு நாள் அவர்களைக் கண்டு தன் கருத்தைத் தெரிவித்தான். அவர்கள் நாட்டுத் தலைவர்களுக்குத் தக்க முறையிற் சொல்லிச் சிறுத்தொண்ட நம்பியின் வேண்டுகோளை ஏற்குமாறு செய்தனர். சோழ வேந்தன் ஆணைபெற்று, தானைத் தலைவரும் நாட்டவரும் கூடித் திருமலை சகஸ்ரனையும் அருளாளன் சகஸ்ரனையும் வருவித்து ஆராய்ச்சி செய்தனர். திருநலக் குன்ற முடையார்க்குச் செலுத்த வேண்டு மளவிற் செம் பாகத்தைச் சிறுத் தொண்ட நம்பி ஏற்றுக் கொள்வது தக்க தெனத் துணிந்தனர். சிறுத்தொண்ட நம்பியும் அதற்கு இசைந்தான். பின்பு, முன்பு கல் வெட்டின திருமலையும் அருளாளனும் இவ்விருவரும் செம் பாகமும், தாமோதரன் சீகிருஷ்ணனான சிறுத் தொண்ட நம்பி செம் பாகமும் கொண்டு திருநலக் குன்றத்திலே இருந்து பரிமாறித் திருநலக் குன்றமுடையார்க்கு இப்படியா லுள்ளது செலுத்தக் கடவார்களாக' என முன்பு வெட்டின கல் வெட்டின் கீழ் பொறித்தனர்.

இது நிகழ்ந்த சில ஆண்டுகட்குப் பின் வெற்றிலைப் பாக்கின் விலை உயர்ந்தது. அதனால் திருமலை முதலிய தரகர்கட்கு வருவாய் மிகுந்தது. ஆகவே, நாட்டில் முன்னர் நிகழ்ந்தது போன்ற பூசல்கள் உண்டாதற் கேற்ற குறிகள் வணிகரிடத்தே உண்டாயின. நாட்டுத் தலைர்கள் அவற்றை முன்னறிந்து ஆராய்ந்து தரகு விகிதத்தை உயர்த்தக் கருதினர். அவர் கருத் தறிந்த வேந்தன் முதற் குலோத்துங்கன், தனது ஆட்சியின்சயஅ - ஆம் ஆண்டு முதல் (நாற்பத்தெட்டாம் ஆண்டு முதல்) உயர்த்துக் கொள்க என்று ஆணை யிட்டான். மிக்குவரும் வருவாய்க்குச் செலவினமும் கண்டு, நாட்டவர் கூடி, வெற்றிலைத் தரகர் மூவரையும் கூட்டி, 'இக் கல் வெட்டுப் படியுள்ள அடைக்கா யமுதும் இலை யமுதும் இடக் கடவார் திருமெய்ப் பூச்சுக்கு சயஅ-வது முதல் திங்கள் ஒன்றுக்கு ஐந்து திராமமாக ஆண்டுக்கு அறுபது திராமம் இறுக்கக் கடவார்களாகக் கல் வெட்டுவித்தோம்’ என்று முடிவு செய்து வேந்தற்குத் தெரிவித்தனர். வணிகர் மூவரும் அவ்வாறே செய்து வருவாராயினர். கோனாட்டில் வெற்றிலை வாணிகத்தில் குழப்பமும் கலகமும் இலவாயின.

நிற்க, மேலே கூறிய திருமலை சகஸ்ரனும் அருளாளன் சகஸ்ரனும் கோனாட்டில் இருந்து வாணிகம் செய்து பெருஞ் செல்வத் தலைவர்களாய் விளங்கினர். ஏனை வணிகர் பலரும் இவ் விருவர்க்கும் அடங்கியே இருந்தனர் ஆயினும், பொன்னாசைமக்களைச்சும்மா இருக்கவிடாதன்றோ? திருமலையும் அருளாளனும் ஒருவரின் ஒருவர் மிக்க செல்வம் ஈட்ட விரும்பித் தம்மிற் போட்டியிட்டு மாறுபடுவாராயினர். ஈர் பேனாகிப் பேன் பெருமாளாயிற் றென்பது போல, இம் மாறுபாடு முறுகிப் பெருகிப் பெரும் பகையாய் முற்றிவிட்டது. இரு வரிடையேயும் போரும் பூசல்களும் மிகுந்தன. இருவருடைய படைகள் அடிக்கடி போரிடத் தலைப்பட்டமையின், வாணிகப் போக்கு வரவு ஆறலைக் கள்வரால் அலைப்புண்டது. இவ்விருவரும் வெற்றிலையும் பாக்கும் கொணர்ந்து வாணிகம் செய்பவர்கள். இவர்களுடைய செயலால் கோனாட்டில் வெற்றிலை பாக்குப் பஞ்சம் பெரிதாயிற்று. இவர்கள் பால் வெற்றிலை பாக்கு வாங்கி விற்கும் சிறு வணிகர் பெருந் துன்ப முற்றனர். சில காலங்களில் வெற்றிலை பாக்குக் கிடைப்பது அரிதாகவே, கோயில் காரியங்களும் முட்டுப்பட்டன. வேறே வணிகர் சென்று வெற்றிலை பாக்குக் கொணர்தற்கு அஞ்சினர்.

சில நாட்களுக்குப் பின் வேற்று நாட்டவர் சிலர் இவர்களால் சீர் குலைந்த வெற்றிலை வாணிகத்தை நடத்தலுற்றனர். கோனாட்டு வணிகருட் சிலர் அவர்கட்குத் துணை செய்தார்கள். வணிகர் பலராகவே அவரவரும் கட்டுப்பாடின்றித் தாந்தாம் வேண்டியவாறே விற்பனை புரிந்தனர். அதனால் கோயிலுக்குச் சேர வேண்டிய தரகும் குறையலுற்றது. அது கண்ட திருநலக்குன்றத்துக் கோயிலதிகாரிகள் புதுவராய்த் தோன்றிய வெற்றிலை வாணிகரை ஊக்கி, வேண்டும் வசதிகளைச் செய்து கொண்டார்கள். சுருங்கச் சொல்வோமாயின் வெற்றிலை பாக்கு வாணிகம் பழைய வடுக வாணிகர் கைவிட்டுப் புதியராய் வந்த வணிகர் கைக்கு மாறிப் போவதாயிற்று. ஆயினும், திரு நலக்குன்ற முடையார் கோயிலுக்குரிய வருவாய் செம்மை பெற வில்லை. இதனை எண்ணுவோரும் அருகினர். ஊரிரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போலக் காப்புக்குடி வெற்றிலை வணிகர் இரண்டு பட்டுக் கலகம் புரிய, அயல் நாட்டு வணிகர்க்கு ஆக்கம் பெருகிற்று. உண்ணாட்ட வருக்குச் சலுகை குறைந்தது. திருநலக் குன்றமுடையார் கோயிற்குரிய தரகு வருவாயும் நாட்டவர் வருந்தும் அளவுக்குக் குன்றிப் போயிற்று.

இதற்கிடையே, நாட்டிலுள்ள நல்லோருட் சிலர், கிராஞ்சி மலை கிழிய நின்றான் திருமலை சகஸ்ரனையும் அருளாளன் சகஸ்ரனையும் கண்டு நிகழ்வது முற்றும் நினைவுறக் கூறினர். இருவர் உள்ளமும் உண்மையை ஒர்ந்து கண்டன. சான்றோர் சிலர் கூடி இருவரையும் சந்து செய்வித்தனர். இருவரும் ஒற்றுமை கொண்டு வெற்றிலை வாணிகத்தைத் தொடர்ந்து நடத்தினர். ஆயினும், புதியராய் வந்து தோன்றிய வணிகர் முன்இவ்விருவரது வாணிகமும் சிறக்கவில்லை. வணிகரிடையே பொறாமையும் பூசலும் போரும் உண்டாயின. அவரவர் பக்கலிலும் ஆட்கள் பலர் மாண்டனர்.

அந் நாளில் இக் கோனாடு, இரட்டபாடி கொண்ட சோழ வளநா டென்ற பெயரால் சோழ வேந்தர் ஆட்சியிலிருந்த தென முன்பே கூறினோம். அக் காலத்தே இந்நாடு பொற் கோயிற்படையும் பழியிலிப் படையும் என இரு படைகளின் காவலில் இருந்தது. இவ்விரண்டற்கு முரிய தலைவர் இருவரும் காவற்றலைவராய் இருந்தனர். இவ் விருவரும் தொடக்கத்தில் நடுவு திறம்பாது நின்று நாட்டு மக்கட்கு இவர்களால் ஊறுண்டாகா வண்ணம் பாதுகாத்து வந்தனர். புதியராய்த் தோன்றிய வணிகர், தானைத் தலைவர் இருவரையுங் கண்டு, 'வடுக வாணிகர் பூசலால் நாட்டிலுண்டான வெற்றிலை பாக்குக் குறையை நாங்கள் முன்னின்று நீக்கி நற் பணி புரிந்தோமாதலால், எங்கட்கு இனி இந் நாட்டில் இடமில்லாதவாறு செய்தல் முறையாகாது' என வேண்டிக் கொண்டனர். அவர் செயலின் நலந் தேர்ந்து தலைவர் இருவரும் அவர்கள் வாணிகத்துக்குச் சலுகை தரத் தொடங்கினர். ஆனால், அவர்கள் திருநலக் குன்ற முடையார்க்குச் செலுத்த வேண்டிய தரகினைக் குறைத்தே செலுத்தினர். கிராஞ்சி மலைத் திருமலையும் வேத கோமபுரத்து அருளாளனும் தாம் செய்த தவற்றுக்கு வருந்திக் கோனாட்டுத் தலைவரிடத்தும் கோயிலாரிடத்தும் முறையிட்டனர். பெருஞ் செல்வர்களாதலால், சகஸ்ரர் இருவரும் வாணிகத்தால் ஊதியம் பெருகினும் சிறுகினும் திருநலக் குன்ற முடையார்க்குரிய தரகு குறையாமலே ஆண்டுதோறும் செலுத்தி வந்தனர். புது வாணிகர்க்கு அஃது இயலாதாயிற்று. இவற்றையெல்லாம் எண்ணிய தலைவர்கள் செய்வது தெரியாது திகைப்புற்றுத் தஞ்சை மாநகர்க்குச் சென்று சோழ வேந்தன் முதற் குலோத்துங்கன் திரு முன் முறையிட்டனர். வேந்தர் பெருமான் கோனாட்டுப் படைத் தலைவர் இருவர்க்கும் திருநலக் குன்ற முடையார் கோயிலதிகாரிகட்கும் திருமுகம் விடுத்து 'உண்மை யாராய்ந்து தரகர்களை நிறுவி முறை வழங்குக’ என்று ஆணை பிறப்பித்தான். திருமுகம் கோனாட்டுத் தலைவர்பால் வந்து சேர்ந்தது.

திரு முகம் வரக் கண்ட கோனாட்டுத் தலைவர்கள் எதிரெழுந்து வரவேற்று வேந்தனை வாழ்த்தி, பொற் கோயில் கைக்கோளர் மூன்று படைத் தலைவரையும் பழியிலிப் படை ஐஞ்ஞூற்றுவர் தலைவரையும் ஏனைத் தலைவர்களையும் திருநலக் குன்றத்து மகா தேவர் கோயிலினுள்ளால் ஒருங்கு கூட்டி ஆராயத் தொடங்கினர். அரசியலாணைப்படி முதற்கண் திருநலக்குன்ற முடையார் கோயிற்கு ஆண்டு தோறும் வேண்டியிருக்கும் வெற்றிலை பாக்குத் தரகு கணக்கிடப் பெற்றது. ‘ஆண்டொன்றுக்கு அடைக்காய் அமுதுக்கு முப்பதினாயிரம் பாக்கும் எழுநூற்றைம்பது கட்டு வெற்றிலையும்’ வேண்டியிருப்பது தெளிவாயிற்று. மேலும், இவற்றை முன்பெல்லாம் திருமலை சகஸ்ரனும் அருளாளன் சகஸ்ரனுமே கொடுத்து வந்தார்களென்பதைக் கோயிற் கணக்குகள் தெரிவித்தன; அவ்விருவருடைய கணக்குகளும் அவ்வாறே குறித்திருந்தன. பின்னர், இந் நாட்டில் இனி வந்திறங்கும் வெற்றிலை பாக்குகட்குத் தரகு செலுத்தி வாணிகம் செய்யும் தலையுரிமை நல்குவது பற்றி ஆராய்ச்சி நடந்தது. தானைத் தலைவர் இருவரும் அவர்தம் துணைவரும் புதியராய்த் தோன்றிய வாணிகர்சார்பாகப் பேசினர். அவர்களால் மேலே கண்ட தரகினைத் தர இயலாமை விளங்கிற்று. திருமலையும் அருளாளனும் வழக்கம் போலத் தாங்கள் செலுத்துவதாக உடன்பட்டனர். அதனால், கூடியிருந்த மகா சபையார். ‘இனி, இந்த நாட்டில் வந்திறங்கும் வெற்றிலைக்குத் தரகு கொண்டு கிழிய நின்றான் திருமலையும் அருளாளன் சகஸ்ரனும் இவர்கட்குப் பின் இவர்கள் வருக்கத்தாரும் இடக்கடவர்களாக’ என்று தீர்மானித்துச் சோழ வேந்தனுக்குத் தெரிவித்தார்கள். வேந்தர் பெருமான், தனது ஆட்சி ஆட்சி யாண்டு முப்பத்தாறாவது முதல் இங்ஙனமே நடைபெறுக’ என்று கல்வெட்டித் தருமாறு பணித்தான். மேலும், இதனைக் கோனாட்டாரும் மூன்று படைப் பொற் கோயில் கைக்கோளரும் இந் நாட்டுப் படை பழியிலி ஐஞ்னுாற்றுவரும் நிலை நிறுத்தக் கடவ ரென்றும் ஆணை பிறப்பித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=செம்மொழிப்_புதையல்/014-020&oldid=1625137" இலிருந்து மீள்விக்கப்பட்டது