உள்ளடக்கத்துக்குச் செல்

செம்மொழிப் புதையல்/012-020

விக்கிமூலம் இலிருந்து

12. எட்டில் இல்லாத இலக்கியம்

-பழமொழிகள்-


ம் தமிழகத்தில் ஏட்டில் எழுதப்படாமல் மக்கள் பேச்சு வழக்கிலேயே சில இலக்கியங்கள் நிலவுகின்றன. அவை பொருள் செறிந்த சிறு சிறு சொற்களால் இயன்றுள்ள பழமொழிகளாகும். அவை ஏட்டில் எழுதப்படாவிட்டாலும் ஏட்டில் எழுதப்பட்டுக் கற்றவர்களால் பாராட்டப்பட்டும், ! இலக்கிய வகைகளில் ஒன்றாகக் கருதப்பட்டும், தமிழ்ப் பெரியோர்களால் போற்றப்பெற்றும் வருகின்றன. அவைகளைப் பழமொழி என்பதோடு முதுமொழி என்றும் மூதுரை என்றும் சான்றோர் வழங்குவர்.

‘அப்பனைப்போலப் பிள்ளை’, என்பது நாட்டில் வழங்கும் பழமொழிகளில் ஒன்று. இதனைத் தொல்காப்பியரே தம் தொல்காப்பியத்தில் 'தந்தைய ரொப்பர் மக்கள் என்பதனால் அந்தமில் சிறப்பின் மகப்பழித்து நெருங்கலும்," என்று கற்பியல் சூத்திரம் ஆறில் குறித்துள்ளார். “கும்பிட்ட தெய்வம் கொடுமை செய்யுமா," என்பதொரு பழமொழி. இதனை நல்லந்துவனார் என்ற சான்றோர் “வழிபட்ட தெய்வந்தான் வலியெனச் சார்ந்தார்கட்கு அழியும்நோய் கைம்மிக அணங்காகியதுபோல," (கலி) என்று கூறியிருக்கின்றார். "இறைக்கிற ஊற்றுத்தான் சுரக்கும்," என்பது மற்றொரு முதுமொழி. இதை நம் திருவள்ளுவர் "மறைப்பேன்மன் யான் இஃதோர் நோயை இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும்," என்று தமது திருக்குறளில் அமைத்து வழங்கி யிருக்கின்றார். இவ்வண்ணம் தமிழிலக்கிய உலகில் புகழ்பெற்ற சான்றோர் அனைவரும் எழுதா இலக்கியமாகிய இம்முதுமொழிகளை உயர்ந்த மணிகளாகக் கருதி தாங்கள் எழுதிய இலக்கியங்களாகிய அணிகலன்களில் வைத்து இழைத்து அழகு செய்திருக்கின்றார்கள்.


16-1-49-இல் திருச்சிராப்பள்ளி வானொலியில் பேசியது.

இப்பழமொழிகள் நுட்பமும் சுருக்கமும் எளிமையுமாகிய இனிய நலங்களை யுடையவாகும். இவைகளைக் கண்ட தொல்காப்பியர் இவைகளையும் செய்யுள் வகையில் ஒன்றாக எடுத்து நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும் என்றிவை விளங்கத்தோன்றிக் குறித்த பொருளை முடித்தற்கு “வரூஉம் ஏது நுதலிய முதுமொழி என்ப," என்று இலக்கணம் கூறியுள்ளார். மேலும் அவர் "முதுமொழி என்ப," என்றதனால் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பிருந்தே சான்றோர்கள் இந்த முதுமொழிகளைக் கண்டு பாராட்டியிருக்கின்றனர் என்று அறியலாம்.

இந்தப் பழமொழிகள் எல்லாம் உண்மை நிகழ்ச்சிகளைக் குறிப்பவை. இவற்றில் பொய்யோ, புனைந்துரையோ கிடையா. அழகிய சொல்லாட்சியும் பிறிதுமொழிதல் முதலிய அணிநலமும் இவற்றின் தனிச்சிறப்பாகும். ஒருவர் வேறொரு, வரைக் கேட்டு யாதேனும் ஒன்றைக் கடனாக வாங்குகிறபோது முகம் ஒருவாறு மகிழ்ச்சியாகவும், அதையே கொடுத்தவர் கேட்டு வாங்கும்போது தருபவர் முகம் ஒருவாறு வேறுபட்டும் இருப்பதும் உண்மை நிகழ்ச்சியாம். இதுவே “கேட்கிறபோது பசப்பு, கொடுக்கிறபோது கசப்போ," என்ற பழமொழியாக வழங்குகின்றது. இதனை இப்போதும் காண்கின்றோம். 2000 ஆண்டுகட்கு முன்பு விளங்கியிருந்த பாலை பாடிய பெருங் கடுங்கோ என்பவர் "உண்கடன் வழிமொழிந்து இரக்குங்கால் முகனும்தாம், கொண்டது கொடுக்குங்கால் முகனும் வேறாகுதல், பண்டும் இவ்வுலகத் தியற்கை அஃது இன்றும், புதுவதன்றே புலனுடை மாந்தீர்," (கலி) என்று பாடியுள்ளார்.

இந்த முதுமொழிகளிடத்தே உண்மையும் தெளிவும் இருப்பதுகொண்டே சுமார் 1500 ஆண்டுகட்கு முன்பு முன்றுரை யரையனார் என்ற சான்றோர் ஒருவர் 400 பழமொழிகளை எடுத்து ஒவ்வொன்றின் கருத்தையும் ஒவ்வொரு வெண்பாவில் வைத்துப் பழமொழி நானூறு என்ற பெயர்வைத்து ஒரு நூல் பாடியிருக்கின்றார். அது பதினெண் கீழ்க்கணக்கு என்ற நீதிநூல் தொகையில் ஒன்றாய் இருக்கிறது. மேலும், இப்பழமொழிகள் மக்களுடைய சமுதாயம், பொருளாதாரம், வாணிகம், கைத் தொழில், சமயம், கல்வி, அரசியல் முதலிய பல துறைகளிலும் அமைந்திருக்கின்றன. "குலங்கெட்டவரோடு சம்பந்தம் செய்தாலும் குணம் கெட்டவரோடு சம்பந்தம் செய்யக்கூடாது.” "செத்த பிணத்தையும் சீரிட்டழு," முதலியன சமுதாயத்தில் வழங்குவன.

“பணமில்லாதவன் பிணம்" “பணம் பத்தும் செய்யும்," முதலியன பொருள் பற்றி வழங்கும் பழமொழி. "கப்பலேறிப் பட்ட கடன் கொட்டை நூற்றுத் தீருமா?" "திரைகடலோடியும் திரவியம் தேடு, முதலியன வாணிகத்தில் வழங்கும் முதுமொழி கள். "வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்," "உழைப்பாளிக்கு ஒருத்தர் சோறுபோட வேண்டியதில்லை,” என்பவை முதலியன தொழில் சார்பாக நிலவும் மூதுரைகள். "விதைப் பழுது முதற்பழுது," "பார்க்காத பயிரும் கேட்காத கடனும் பாழ்," என்பவை முதலியன உழவுபற்றி வழங்கும் உலகுரை. “அவனே “அவனே என்பதைவிடச் சிவனே சிவனே என்பது மேல்”, "இரவெல்லாம் இராமாயணம் கேட்டுவிட்டு விடிந்தபின் சீதைக்கு இராமன் சிற்றப்பன் என்றார் போல, என்பன சமயம்பற்றி வழங்கும் பழமொழி. “தோட்டிமுத்ல் தொண்டை மான் வரை, என்பது இடைக்காலச் சோழபாண்டியர் கால அரசியல் பற்றியும் "டில்லிக்கு ராசாவானாலும் தல்லிக்குப் பிள்ளை," யென்பது விசயநகர வேந்தர் காலத்தும் முகம்மதிய வேந்தர் காலத்தும் நிலவிய அரசியல் பற்றியும் "நாட்டுக்கு நல்லதுரை வந்தாலும் தோட்டிக்குப் புல்சுமை போகாது," "பரங்கிக்குத் தெரியுமா சடங்கும் சாத்திரமும்," என்பவை முதலியன மேனாட்டவர்காலத்து அரசியல் பற்றியும் உண்டாகி நிலவும் பழமொழிகள். அரசியல் சீர்திருத்தம் வந்தபின் தேர்தலுக்கு நின்று ஒட்டுப் பெறுபவர்களைப் பற்றி "ஒட்டுக்குப் போனாயோ ஒடுவாங்கப் போனாயோ!" என்பது முதலிய பழமொழிகள் உண்டாகியிருக்கின்றன.

இந்தப் பழமொழிகளை நோக்குவோமாயின், பழங்காலக் குறிப்புகளில் பல காணப்படுகின்றன. இடைக்காலப் பாண்டி வேந்தருள் 12, 13-நூற்றாண்டில் அரசுபுரிந்த வீரபாண்டியன் காலத்தில் திருக்கொடுங்குன்றத்துப் பகுதியில் வாணாதிராயர் என்பவர் வந்து குறும்புசெய்து ஊர்களைச் சூறையாடிச் சென்றனர். கோயில் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கு. அக்காலத்தில் தனித்தனிக் கழகங்கள் இருந்தன. அவற்றில் கோயிற் பணிசெய்யும் சிவப்பிராமணர்களும் வயிராகிகளும் இருப்பர். அப்போது திருக்கொடுங்குன்றத்துக் கோயிலில் பொன்னப்ப அணுக்க வன்றொண்ட வயிராகி என்பவன் இருந்து வந்தான். சூறையாட வந்த வாணாதிராயர்க்கும் வன்றொண்ட வயிராகிக்கும் சண்டை உண்டாயிற்று. கோயில் சொத்துக்களைக் காக்கும் வகையில் வன்றொண்ட வயிராகி மிக்க வலியுடன் போர்செய்து வாணாதிராயரைத் தோற்றோட்ச் செய்து தானும் புண்பட்டு வெற்றி பெற்று விளங்கினான். ஊரவர் அவன் புண்ணையாற்றி அவனுக்குச் சிறப்புச் செய்தார்கள் என்று இடையாத்தூர்க் கோயில் கல்வெட்டெர்ன்று கூறுகிறது. (P.S. ins. 380) இந்த வயிராகிகளுக்கு வீரமுஷ்டி என்று பெயர் வழங்கும். கோயில் பணிசெய்பவருள் வயிராகிகள் குத்துக்கும் சண்டைக்கும் முன்னின்று காத்த செய்திகள் பல கல்வெட்டுக் களில் காணப்படுகின்றன. இவ்வரலாற்றை "உண்பான் தின்பான் சிவப்பிராமணன், குத்துக்கு நிற்பான் வீரமுஷ்டி," என்ற பழமொழி குறித்து நிற்கிறது.

பண்டைநாளில் வீரர்கள் போர்செய்து புண்பட்டு இறந்து போவராயின், அவர்களுடைய பெயரையும் அவர் பெற்ற பெருமைகளையும் ஒரு கல்லில் எழுதி, அதை நீராட்டிப் பலபேர் செல்லகூடிய வழிகளிலும் ஆற்றங்கரையிலும் நிறுத்தி வைப்பது வழக்கம். அந்தக் கல்லைக் கல் நின்ற வீரனுடைய மனைவி நீராட்டி நெல்லும் பூவும் சொரிந்து அதைத் தன் கணவனாகவே எண்ணி வழிபடுவாள். இதை “ஒலிமென் கூந்தல் ஒண்ணுதலரிவை, நடுகல் தொழுதுபரவும்," எனப் புறநானூறு முதலிய சங்க நூல்கள் கூறுகின்றன. இதுபற்றியே "கல்லென்றாலும் கணவன்," என்ற பழமொழி உண்டாயிற்று. மேலும், கொல்லை களிலும் வயல்களிலும் கதிர்முற்றிவரும் பயிர்களுக்குக் காவலாகப் புல்லும் வைக்கோலும் கொண்டு ஆள்போல உருவம் செய்து வயல்வரப்புகளில் நிறுத்துவது வழக்கம். அதனைப் புல்லாள் என்பர். அதனிடத்தில் வீரச் செய்கை ஒன்றும். இல்லையாயினும் துலையில் வருபவர்க்கும் இரவில் வருபவர்க்கும் ஆள்போலத் தோன்றி ஒரளவு காவலாவதுபற்றி அப்புல்லாளை நிறுத்திவைப்பர். இவ்வாறே போர்க்குரிய ஆண்மையில்லாமல் வழிப்பறிசெய்து வாழ்பவரையும் புல்லாள் என்பது வழக்கம். இதைச் சான்றோர் “புல்லாள் வழங்கும் புள்ளலை வைப்பின் புலம்," என்று பதிற்றுப்பத்தில் குறித்திருப்பதைக் காணலாம். தன்னைக் கொண்டவன் நேரிய வீரமில்லாத புல்லாளாயினும் அவனையும் கணவனாகக் கொண்டு ஒழுகவேண்டியது பெண்கட்கு வகுத்துரைக்கும் முறை. இம்முறை இரண்டையும் சேர்த்துக் "கல்லென்றாலும் கணவன், புல்லென்றாலும் புருடன்,” என்ற பழமொழிதோன்றி வழங்கி வருவதாயிற்று.

"ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே," என்பது ஒரு பழமொழி. மதுரையில் கண்ணகியின் காற்சிலம்பை விற்கச் சென்ற அவள் கணவனான கோவலனைக் கள்வன் என்று கொலைத்தண்டனைக் கொடுத்தான் பாண்டியன். அதனையறிந்த கண்ணகி, பாண்டிவேந்தன் அவைக்களம் சென்று தன் சிலம்பைக் காட்டித் தன் கணவன் "கள்வனல்லன்," என்பதை நிலை நாட்டினாள். கோவலன் கள்வனென்ற பழியில்லாதவனானான். பாண்டியன் தான் செய்தது குற்றமென்று உடன்பட்டுக் கீழே வீழ்ந்து உயிர்விட்டான். அவனுடைய மதுரை நகர் தீப்பட்டழிந்தது. பாண்டியன் குலமும் வேரற்றுப் போயிற்று. இதனையறிந்த வேந்தனான சேரன் செங்குட்டுவன் வடநாடு சென்று கல்கொண்டு வந்து கண்ணகிக்கு வடிவம் செய்து, கோயிலமைத்து வழிபாடு செய்தான். இதனை அடிப்படையாகக் கொண்டே "ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே," என்ற பழமொழி தோன்றுவதாயிற்று. இதனை வற்புறுத்துவதற்கு வேறொரு செய்தியுண்டு. கொங்கு நாட்டில் மேற்கு மலைத்தொடரின் அடிப்பகுதியில், நன்னன் என்றொரு தலைவன் வாழ்ந்து வந்தான். பொள்ளாச்சித் தாலுகாவிலுள்ள ஆனைமலை என்னும் ஊர்க்குப் பழங்காலத்தில் நன்னனுர் என்றே பெயர் வழங்கிற்றென அவ்வூர்க் கல்வெட்டொன்று கூறுகின்றது. (Annual Report on South Indian epi, Madras No. 214 of 27-28) அவ்வூரில் அவனொரு மாமரத்தை வைத்து வளர்த்து வந்தான். அது காய்த்துப் பழுக்கத் தொடங்கியதும் அதற்குக் காவலும் ஏற்படுத்தினான். அந்த மரம் இருந்தது ஆற்றங்கர்ை. ஒருநாள் ஒரு செல்வனுடைய மகள் ஆற்றில் குளிப்பதற்குச் சென்றாள். அவள் குளித்துக் கொண்டிருக்கையில் நன்னனுடைய மாமரத்திலிருந்து நன்றாய்ப் பழுக்காத மாங்காய் ஒன்று தானே உதிர்ந்து தண்ணீரில் மிதந்துகொண்டு அப்பெண்ணருகே வந்தது. அதனை அவள் எடுத்துத்தின்றாள். அதைக் கண்ட காவற்காரன் சென்று நன்னனுக்குத் தெரிவிக்கக் கொடியவனான நன்னன் அவளைக் கொன்றுவிடுமாறு கட்டளையிட்டான். அதையறிந்தஅப்பெண்ணின் தந்தை அவள் நிறையளவு பொன்னும் 81-யானைகளும் தந்து அவளைக் கொலைசெய்யாது விட்டுவிடுமாறு வணங்கி வேண்டினான். நன்னன் சிறிதும் இரக்கமின்றிக் கொன்றுவிட்டான். அவனை அன்றுமுதல் சான்றோர் "பெண்கொலைபுரிந்த நன்னன்," என்று புறம் பழித்தனர். அவன் மரபினரையும் இகழ்ந்தனர். அந்த நன்னன் வழியும் பின்பு அழிந்துபோயிற்று. இது முதல் "ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே," என்ற பழமொழி நிலை பெற்று வருவதாயிற்று.

“ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திலே கண்,” என்பதொரு மூதுரை. இயல், இசை, நாடகம் என்ற பிரிவில் நாடகம் என்பது கூத்து. இது தமிழ்க்கூத்து ஆரியக்கூத்து என இரு வகைப்படும். “ஆரியம் தமிழெனும் சீர்நடம் இரண்டினும்," என்று அறிஞர் கூறுவர். ஆரியக்கூத்தாடுவோர் ஆரியநாட்டிலிருந்து வந்து கழைக்கூத்தர்போல் கயிற்றின்மேல்நின்று பக்கத்தே பறை கொட்ட அழகாக ஆடுவர் எனக் குறுந்தொகையில் பெரும்பது மனார் பாடிய பாட்டில அறிகின்றோம். அவர்கட்கு வேந்தரும் செல்வரும் பொன்னும் பொருளும் பரிசிலாகத் தருவர். அவற்றைப் பெற்றுக்கொண்டு அவர்கள் தம் ஆரியநாட்டிற்குச் செல்வர். தமிழ்க்கூத்தர்க்கு நிலம் விடுவது வேந்தர்க்கும் செல்வர்க்கும் மரபு. பின்பு தமிழ்க்கூத்தரும் ஆரியக் கூத்தாடத் தொடங்கினர். அதற்குரிய பரிசிலாகப் பொன்னும் பொருளும் பெறுவதையே விடுத்து நிலம் பெறுவதையே தமிழ்க்கூத்தர் விரும்பினர். தமிழ்க்கூத்தர் இவ்வண்ணமே பரிசில் பெற்று வாழ்ந்த திறத்தைக் கும்பகோணத்து நாகநாத சாமிகோயில் கல்வெட்டும், திருவாவடுதுறைக் கோயில் கல்வெட்டும் கூறுகின்றன. (Annual report No. 90 of 32 and No. 120 of 1925) அதனால் தமிழ்க்கூத்தர் ஆரியக்கூத்தாடினாலும் காரியமாகிய கூத்தாட்டுக் காணிபெறும் நாட்டமே யுடையராயினர். அதுபற்றியே "ஆரியக்கூத்தாடினாலும் காரியத்தில் கண்,” என்ற பழமொழி வழங்கிவருவதாயிற்று. -

திருஞானசம்பந்தர் சீகாழித் திருக்குளக்கரையில் நின்று சிவஞானப் பாலுண்டது முதல் “அழுதபிள்ளை பால் குடிக்கும்.” என்ற பழமொழியும், அவர் வரலாறு மட்டில் பெரியபுராணத்தில். திருஞானசம்பந்தர் புராணத்திலும் திருநாவுக்கரசு புராணத்திலும் கலந்து பாதியளவுக்குமேல் இருப்பதால் "பிள்ளை பாதி பெரியவர் பாதி" என்ற பழமொழியும், சிறுவயதில் கற்கப்பட்டு, ஆயுள் முழுதும் பயன்பட்டுவரும் சிறப்புபற்றித் திருக்குறளையும் நாலடியாரையும் அடிப்படையாகக் கொண்டு, "நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” என்ற பழமொழியும், கற்றவர், கல்லாதவர் என்ற இருதிறத்தாருக்கும் கம்பராமாயணம் இலக்கிய இன்பம் தருவதுபற்றி “கல்வியிற் பெரியவர் கம்பர்,” என்ற பழமொழியும், கம்பராமாயணம் தவிர வேறு நூல்களைக் கல்லாதவரும் கவிபாடும் பாவலராக விளங்குவதுபற்றிக் "கம்பர் வீட்டுக் கற்றுத்தறியும் கவிபாடும்," என்ற பழமொழியும் தோன்றி நிலவுகின்றன. கற்றுத்தறி = கற்றுவரும் மாணவன். இது பின்பு கட்டுத்தரியென மருவிவிட்டது; ஏடுகளிலும் கட்டுத் தரியென்றே காணப்படுவதாயிற்று. அதனால், "எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான் படித்தவன்பாட்டைக் கெடுத்தான்," என்ற பழமொழியும் மெய்யுரையாய் நிலவுவதாயிற்று.

இவ்வாறு இலக்கியத்துறை பற்றியும், இசை நாடகம் பற்றியும், "விருத்த வைத்தியம் பாலிய சோதிடம்," என மருத்துவம், சோதிடம் முதலிய துறை பற்றியும் பழமொழிகள் பல நூற்றுக்கணக்காக நாட்டவர் நவிலும் நயம்பெற்றுத் திகழ்கின்றன. இவற்றைக்கண்ட மேனாட்டு ஆராய்ச்சியாளருள் ஒருவரான Charles. E. Gover. M.R.A.S. என்பவர் "உயர்ந்த கருத்துக்கள் நிறைந்த பழமொழிகளும் நாட்டுப் பாடல்களும் பொதுவாகத் தமிழ் தெலுங்கு மொழிகளிலும் சிறப்பாகத் தமிழில்மிகுந்தும் உள்ளன. இத்துறையில் உழைத்து இவைகளை வெளியிட்டுப் பொதுமக்கள் கண்டு மதிக்கவும் திராவிடர் மனப்பான்மையின் விளைவை அறிந்துகொள்ளவும் செய்வது பழுத்தபுலவர்கட்கும் சிறந்த நாகரிகம் படைத்த அரசியலாருக் கும் தகுதியாம்" என்ற கருத்தமைய, -

“There is a great mass of (thoughts) ready to hand in Tamil and Telegu folk-literature, especially in the former. To raise these to public estimation, to exhibit the true products of the Dravidian mind would be a task worthy of the ripest scholar and the most enlightened government (Introduction to folk songs of southern India printed in 1871) என்று கூறியிருப்பது அறிஞர்கருதத்தக்கது.

"https://ta.wikisource.org/w/index.php?title=செம்மொழிப்_புதையல்/012-020&oldid=1625135" இலிருந்து மீள்விக்கப்பட்டது