செம்மொழிப் புதையல்/010-020
பண்டைநாளில் வாழ்ந்த தமிழ்மகன் என்னாது சங்ககாலத் தமிழ்மகன் என்றே தலைப்பு அமைகிறது. பண்டைக்காலம் என்பது ஒரு காலவெல்லைக்குள் அடங்காது பரந்த பண்பினதாய் இருக்கிறது. சங்ககாலம் என்ற வழி, முற்காலத்தே நம் செந்தமிழ்நாட்டில் சங்கம் இருந்து தமிழ்த் தொண்டாற்றித் தனிப்பெருஞ் சிறப்பெய்தியிருந்த காலம் என்ற உணர்வு நம் உள்ளத்தில் எழக் காண்கின்றோம். ஆயினும் இச் சங்ககாலம், இத்துணை ஆண்டுகட்கு உட்பட்ட காலம், மேற்பட்ட காலம் என எண்ணிட்டுக் காண முடியாத நிலையில் உள்ளது. சங்கத்தின் உண்மையையே ஐயுறுவோரும், ஐயுற்றுச் சங்கமென்பதே இருந்ததில்லையென்போரும், உண்டென்போரும், கிறிஸ்து பிறப்பதற்கு முன்னென்போரும் பின்னன்போரும் எனப் பல திறத்தராய் ஆராய்ச்சியாளர் உளர். மற்று, நம் செந்தமிழ் மொழிக்கண் பழைய நூல்கள் பல சங்க இலக்கியங்கள் என்ற பெயரால் வழங்கி வருகின்றன. அவ்விலக்கியங்கள் தோன்றி நிலவிய காலமே சங்க காலமாம் என்ற பொது எல்லையை ஈண்டுக் கால வெல்லையாகக் கொள்கின்றேன். அவ்விலக்கியங்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க் கணக்கு என மூவகையாய் இயலுகின்றன. இவை எழுந்து வளர்ந்த சிறந்த காலம், சங்க காலம் இன்றேல், இவை சங்க இலக்கியம் எனப்படா.
பத்துப்பாட்டு என்பது ஒரு தொகை நூல். இதன்கண் திருமுருகாற்றுப்படை முதலாகக் கூத்தராற்றுப்படை ஈறாகப் பத்துப் பெரும்பாட்டுக்கள் உள்ளன. இவற்றுள் இயற்கையின் இனிய காட்சி இனிது காட்டப்பெறுகிறது. அக்காட்சியைக் காட்டும் கட்டுரைகள் இலக்கணவரம்பு கடவாது, உள்ளம் கொள்ளத்தக்க அளவில் நின்று இன்பம் சுரப்பிக்கும் திறம் எண்ணுந்தோறும் நமக்கு இறும்பூது தருகின்றது. இதனால் கல்வியின் இன்றியமையாமையை வற்புறுத்துகின்றார்கள். தமிழ்மன்னன் ஒருவன் தன் கோல் நிழலில் மக்களை நோக்கி,
“உற்றுழி யுதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே;
பிறப்போ ரன்ன உடன்வயிற் றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனம்திரியும்;
ஒரு குடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக என்னாதுஅவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்.”
என்று வற்புறுத்துகின்றான். ஒரு பெரியவர், வாழ்நாள் மிகுதியாகிய வழியும், தமக்கு நரையோ திரையோ உண்டாகாமல் இருந்தார். அது கண்ட அறிஞர் சிலர் அவரை நோக்கி, இதற்குக் காரணம் என்னை என வினவினர். அவர்கட்கு அவர், "என் மனைவி, மக்கள் முதல் அனைவரும் என் கருத்திற்கேற்ப ஒழுகும் இயல்புடையவர். வேந்தனும் அல்லவை செய்வதிலன். சான்றோர் பலர் யான் வாழும் ஊரே" என்றார். எனவே, சான்றோர் இனத்தனாய், கல்வியறிவு சிறந்து நிற்பது தனக்கு இன்றியமையாதது என்பதைச் சங்ககாலத் தமிழ்மகன் இனிதறிந்து ஒழுகிய திறம் நாம் காண்கின்றோம்.
வீரமகனொருவன், மனக்கினிய மகளொருத்தியை மணம் புணருங் காலத்தே, அரசனது போர்ப்பறை முழங்கக் கேட்டான். ஒருத்தியை மணந்து நுகரும் இன்பத்திலும், தன் நாட்டிற்கு உற்ற இடர் நீக்குதலால் உளதாகும் இன்பம் பெரிதெனக் கருதி மணத்தைத் தள்ளிவைத்துப் போர்க்குச் செல்கின்றான்.
"விளங்கிழைப் பொலிந்த வேளா மெல்லியற்
சுணங்கனி வனமுலை யவளொடு நாளை
மணம்புகு வைகல் ஆகுதல் ஒன்றோ,
ஆரம ருழக்கிய மறங்கிளர் முன்பின்
நீளிலை யெஃக மறுத்த உடம்பொடு
வாரா உலகம் புகுதல் ஒன்றெனப்
படைதொட் டனனே குரிசில்.”
என்று பரணர் கூறுகின்றார்.
இவ்வண்ணம் கல்வியறிவும், உடல் வன்மையும் ஒருங்கு பெற்றுத் திகழும் தமிழ் மகனுக்குத் திருமணம் செய்விக்கும் எண்ணம் இந்நாளில், பெற்றோர்க்கு அமைகின்றது. அந்நாளில் அங்ஙனம் இல்லை. தக்கோனாய் மணப்பதம் பெற்ற மகன், தன் மனம் விரும்பும் மாண்புடைய மகள் ஒருத்தியைத் தானே தேர்ந்து காண்கின்றான். அவளது மனவொருமையைப் பல நெறிகளால் ஆராய்கின்றான். கற்பின் திண்மையைக் களவில் ஒழுகிக் காண்கின்றான். பின் தன் களவு நெறி உலகறிய வெளிப்படுத்து கின்றான். "அம்பலும் அலரும் களவு வெளிப்படுத்தலின், அங்கு அதன் முதல்வன் கிழவன் ஆகும்" என்றே ஆசிரியர் தொல்காப்பியனார் உரைக்கின்றார். பின்னர், பெற்றோர் மணத்திற்கு இயைந்து மணம் புணர்விக்கின்றனர்.
மனைவாழ்க்கையின் மாண்பு குறித்து அவன் செய்யும் திறம் மிக்க வியப்புத் தருவதாகும். தான் நடத்தும் வாழ்க்கை தன் நலமே குறித்த வாழ்வாதல் கூடாது. ஈதலும் இசைபட வாழ்தலுமே மனைவாழ்க்கை, தன் வாழ்வு ஏனை எவ்வகை மக்கட்கும் ஏமம் பயக்கும் வாழ்வாதல் வேண்டும். தான் ஈட்டிய பொருளைத் தானே நுகர்தலின்றிப் பிறர்க்கும் பயன்பட வாழவேண்டிய தமிழ்மகன் பொருள் ஈட்டல் கருதிக் கலங்கள் ஏறிக் கடல் கடக்கின்றான். செல்பவன் தன் மனைவியின் பிரிவாற்றாமை கண்டு தெருட்டு முகத்தால் வாழ்வின் குறிக்கோளை நன்கு வற்புறுத்துகின்றான். அவன் பிரிந்தவழி, அதனை அவன் மனையுறையும் மகளிர் பேசிக்கொள்வதால் நாம் இனிது அறியலாம்.
"அறந்தலைப் பிரியாது ஒழுகலும், சிறந்த
கேளிர் கேடுபல ஆன்றலும், நாளும்
வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல்.”
என்றும்,
"அறன்கடைப் படாஅ வாழ்க்கையும், என்றும்
பிறன்கடைச் செலாஅ செல்வமும் இரண்டும்
பொருளின் ஆகும் புனைஇழை.”
என்றும் பொருளைக் கருதித் தமிழ்மகன் வாழ்ந்திருக்கின்றான். இவ்வண்ணம் தானும், தன் நாட்டு மக்களும் பொருட் குறைபாடின்றி இனிது வாழ்தல் வேண்டும்; நாட்டில் வறுமை தோன்றின், (நாட்டவர் மனத்தே நல்ல எண்ணங்கள் வற்றிவிடும்;) நல்லறிவு மாயும் என்று அஞ்சி, அவன், “செல்வம் என்பது சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் மென்கட் செல்வம்" என்று பிறர்க்கென வாழ்தலைப் பொருளாகப் பேணி வாழ்ந்து வந்தான்.
தான் ஈட்டிய பொருளைத் தானும் ஏனைத் தமிழ்மக்களும் பிறரும் பெற்று இன்ப வாழ்வு நடத்த வேண்டும் என விரும்பும் அத் தமிழ்மகனுக்கு வேறொரு கடமையும் உண்டாகின்றது. நாட்டுப் பகைவரால் உண்டாகும் கேடும் அச்சமும், வாழ்க்கையின்பத்தைச் சிதைக்கும் என்ற எண்ணங் கொள்கின்றான். அதனால், தன் நாட்டிற் காவல் குறித்துப் போர் செய்தற்கும், பிற வினை செய்தற்கும் அவன் உள்ளம் கொண்டு, அது குறித்து வினை செய்வதும் கடமை என்பதை உணர்கின்றான். தான் இளமையிற் பெற்ற கல்வி, நாட்டின் நலம் கருதிச் செய்வன செய்தற்குப் போதிய துணை செய்யாமை கண்ட வழி, நிரம்பிய கல்வி பெறுவதும் கடன் என்று தெளிகின்றான். ஒரு கால் ஒரு தமிழ்மகன் கல்வி குறித்துப் பிரிந்திருந்தபோது, அவன் பிரிவாற்றாது வருந்திய அவன்றன் மனைமகளிர், வாடைக் காற்றை நோக்கிக் கூறுவாராய், “ஏ, வாடைக்காற்றே,
தமியோர் மதுகை தூக்காய் தண்ணென,
முனிய அலைத்தி, முரண்இல் காளை
கைத்தொழு மரபின் கடவுட் சான்ற
செய்வினை மருங்கின் சென்றோர் வல்வரின்
நீ, கரிகாலனோடு வாகையென்னுமிடத்தே ஒன்பது வேந்தர் ஒன்றுகூடி எதிர்த்தபோது, அவனால் அலைப்புண்டு தம் கொற்றக்குடை இழந்த அந்தப்
“பீடில் மன்னர் போல
ஒடுவை மன்னால் வாடைநீ எமக்கே.”
என்கின்றனர். இங்கே, தமிழ்ம்கன் மேற்கொண்ட கல்வியை, “கைதொழு மரபின் கடவுட்சான்ற செய்வினை" என்கின்றனர். அரசு முறையாயினும், வாழ்க்கை முறையாயினும் அவ்வதற்கு வேண்டிய கல்வியறிவு இல்வழிச் சிறவாது என்பதற்காகக்,
“காவற் சாகாடு உகைப்போன் மாணின்,
ஊறின் றாகி ஆறுஇனிது படுமே;
உய்த்தல் தேற்றா னாயின், வைகலும்
பகைக்கூழ் அள்ளல்பட்டு
மிகப்பல் தீநோய் தலைத்தலைத் தருமே.”
என்று இளந்திரையன் கூறுகின்றான்.
நாட்டின் காவல் குறித்துப்போருடற்றி உயிர்கொடுப்பது நல்வினையென்றும், அவ்வாறு உயிர்கொடுத்துப் புகழ் கொள்வாரே சிறந்தோர் என்றும் தமிழ்மகன் கருதியிருந்தான். அக்கருத்தை அவனேயன்றி, அவன் மகளிரும் இனிதறிந்து இருந்தனர். பகைவருடன் போருடற்றச் சென்ற தமிழ்மகன் - ஒருவன்றன் மனைமகளிர்,
“நோற்றோர் மன்ற தாமே கூற்றம்
கோளுற விளியார் பிறர்கொள விளிந்தோர் எனத்
தாள்வலம் படுப்பச் சேட்புலம் படர்ந்தோர்”
என்று பேசிக் கொள்கின்றனர். இந்நெறியில் மகளிர் வீரத் தீ எரிய நிற்கும் உள்ளமுடையராதல் சங்ககாலத் தமிழ்மகள் இயலறியும் நெறியிற் புலப்படும்.
மனைவாழ்க்கையில் பொருளிட்டல், கல்வியறிவு பெறுதல், வினைசெய்து நாடுகாத்தல் முதலியன செய்தொழுகும் தமிழ் மகன் மகப்பேறு குறித்து மகிழ்கின்றான். மக்களை யில்லாத வாழ்க்கையை விரும்புவதிலன். "மக்களை இல்லோர்க்குப் பயக்குறையில்லை தாம்வாழும் நாளே” என்று கூறுவன். பெற்ற மக்கள் தம் குடியின் உயர்ச்சிக்கு உழைத்தல் வேண்டுமெனக் கருதுகின்றான். அன்ன மக்களைப் பெற்றோரை வாயார வாழ்த்தி மகிழ்வன்.
"எண்ணியல் முற்றி ஈரறிவு புரிந்து,
சால்பும் செம்மையும் உளப்படப் பிறவும்
காவற் கமைந்த அரசுதுறை போகிய
வீறுசால் புதல்வற் பயந்தனை.”
என்று பாராட்டுதலைக் காண்க.
இனி, இவனது உள்ளத்தே கடவுள் உணர்ச்சி வீறுபெற்று நிற்கின்றது. "பல்லோரும் பரம்பொருள் ஒன்று உண்டு; அதன்பால் பரிவுகொடு பரசி வாழ்தல் எல்லோரும் செய்கடனாம்” என்று கருதி வாழ்பவன். இவன் ஆண்டவனை வழிபட்டு வேண்டுவன மிக்க வியப்புத் தருவனவாம். சங்க காலத்தே ஏனை. நிலத்து மக்கள் வேண்டியன வேறு. பிறர் அழிவதையும், பிறர் ஆக்கம் கெடுவதையும் பொருளாகக் கருதி ஆண்டவனை வேண்டினர் பிறர்; தமிழன்,
“யாம் இரப்பவை
பொருளும் பொன்னும் போகமு மல்ல,
அருளும் அன்பும்அறனும் மூன்றும்.”
என்றும்,
“யாமும் எம் சுற்றமும் பரவுதும்,
ஏம வைகல் பெறுகயாம் எனவே.”
என்றும் வேண்டுகின்றான்.
இங்ஙனம், சங்ககாலத் தமிழ்மகன், தன் வாழ்க்கையைத் தனக்கேயன்றிப் பிறர்க்கும் தன் நாட்டின் நலத்துக்கும் எனக் கருதிச் செலுத்தி, வழிபாட்டை மறவாது, மேற்கொண்டு, அவ்வழிபாட்டிலும் தன் வாழ்வின் குறிக்கோள் கை கூடுதற்கு ஆக்கமாகும் அருள், அன்பு, அறம் என்ற மூன்றுமே விரும்பியிருந்த நிலையை, இற்றைநாளில் மக்கள் அறிந்து நலம் பெறுவாராக!