உள்ளடக்கத்துக்குச் செல்

செம்மொழிப் புதையல்/002-020

விக்கிமூலம் இலிருந்து



2. உழைப்பு


“வினையே ஆடவர்க் குயிரே வாணுதல்
மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரென
நமக்குரைத் தோரும் தாமே
அழாஅல்தோழி அவர் அழுங்குவர் செலவே...”

-குறுந்தொகை:135

ற்குணமும் நற்செய்கையும் சிறந்த நங்கையொருத்தி, அறிவும் ஆண்மையும் பெருகிய தோன்றல் ஒருவனை மணந்து இல்லறம் பூண்டு வந்தனள். ஒருநாள் அவன், தான் செய்வதற்குரிய வினையொன்று குறித்துத் தன் மனையின் நீங்கிச் செல்லவேண்டியவனானான். மணந்தநாள் தொட்டுத் தன் கணவனைப் பிரிந்தறியாத அந்நங்கைக்கு இது தெரியின், அவள் பெருவருத்தம் எய்துவள் என்பதை அத்தோன்றல் எண்ணினன். உண்மைக் காதல்வழி யொழுகுவார்க்குப் பிரிவுபோலப் பெருந்துன்பம் தருவது பிறிது கிடையாது. "இன்னாது இனனில்லூர் வாழ்தல், அதனினும் இன்னாது இனியார்ப் பிரிவு" என்று திருவள்ளுவரும் கூறியுள்ளார். அதனால் தன் கருத்தினை, அவன், அவளது தோழிக்கு உரைத்து, பின்னர் மெல்லத் தன் மனையாட்குத் தெரிவிக்குமாறு பணித்தான். அவளும் அதற்கு ஒருவாறு உடன்பட்டு, காலம் வாய்த்த போது அவனது கருத்தினைப் பைய வுணர்த்தினாள். கேட்டாளோ இல்லையோ, நங்கைக்குப் பெருந்துயர் உண்டாகிவிட்டது; கண்ணீர் விட்டுக் கதறியழத் தொடங்கினாள். அவளை ஆற்றுவிக்கத் தொடங்கிய தோழி, "நங்காய், கணவன் சொல்லைக் காப்பது மனைவிக்குக் கடன். அவர் ஒருநாள் சொன்னது ஒன்றுண்டு. அது நினக்கும் தெரிந்ததே. அஃதாவது: 'ஆடவர்க்குத் தாங்கள் செய்யும் வினையே உயிர்; மனையுறையும் மகளிர்க்கு அவ்வாடவரே உயிர். அவர்க்கு உயிராகிய வினைமேற் சென்றால்தானே, அவர் நினக்கு உயிராக இருத்தல்கூடும்; நீ அழுதால் அவர் வினைமேற்செல்வதைக் கைவிடுவரே. அதனால் ஏதமன்றோ விளையும், "என்றனள். அது கேட்ட அந்நங்கையும் தேறி அவன் பிரிவை ஆற்றித் தனக்குரிய அறத்தினையும் ஆற்றிவந்தனள்.

இச்சிறிய பாட்டினைப் பாடியவர் பாலை பாடிய பெருங்கடுங்கோ என்னும் சான்றோராவர்.

இவ்வாறு வினை மேற் செல்ல நினைந்த தலைமகன் ஒருநாள் மாலைப்போது வரக்கண்டு, "ஆ. இப்போது நம் காதலி நம் மனையகத்து விளக்கேற்றி அதன் முன் நின்று, 'இன்னும் காதலர் வந்திலரே' என்று நினைக்கும் போது அன்றோ?" என்று தனக்குள் நினைத்தான். நினைத்தவன், இம்மாலை,


‘உள்ளினேன் அல்லனோ யானே, உள்ளிய
வினைமுடித் தன்ன இனியோள்
மனைமாண் சுடரொடு படர்பொழு தெனவே.”

- நற்றிணை 3

எனத் தனக்குள் நினைந்து இனைந்தான் என இளங்கீரனார் கூறியுள்ளார். இவ்விரு செய்யுட்களையும் நோக்குவோமாயின், நமக்கு ஓர் உண்மை புலப்படும். அஃதாவது, ஓர் ஆண் மகனுக்கு அவன் செய்தற்குரிய வினைதான் உயிர்; அதனை முடித்த வழியுளதாகும் இன்பம் காதலின்பம் போல்வது என்பதாம்.

வினையென்பது நாம் செய்யும் செய்கையாகும். ஒவ்வோருயிரும் உலகில் தோன்றும்போதே வினை செய்வதற்கென்றே பிறக்கின்றது. வினையே ஒருவன் எய்தும் இன்பத்துக்கும் துன்பத்துக்கும் காரணமாவது. இன்பத்தையே எவ்வுயிரும் பெற விரும்பும்; துன்பத்தை விரும்பும் உயிர் எதுவுமில்லை. துன்பம் என்ற சொல்லைக் கேட்கும்போதே நம் உள்ளம் சுளிக்கும்; சொல்லுதற்கும் நாக்குக் கூசும். இன்பத்தைத் தரும் வினையே யாவரும் விரும்பும் தொழிலாகும். அதனால்தான் இன்பம் தரக்கூடியதனை நல்வினை, நற்செய்கை என்றும், துன்பம் தருவதனைத் தீவினை, தீச்செய்கை என்றும் சொல்லுகின்றோம்.

இனி இவ்வினையைச் செய்யும்பொழுது நம் உடலும் உயிரும் பெரிதும் பாடுபடுகின்றன. இவ்விரண்டும் ஒருங்கே கூடிச் செய்யாத வழி, எந்தத் தொழிலும் நடைபெறுவது இல்லை. எத்தொழிலைச் செய்வதாயினும் இவை உழைக்க வேண்டியிருக்கின்றன உயிர் உடலொடு கூடியிருப்பது இவ்வுழைப்புக்கே; இவ்வுழைப்பால், உயிர் உடல்படும் துன்பமனைத்தையும் தான் படுகிறதென்றாலும், உயிர்க்கு உடலின்மேல் உள்ள பற்றினால் உழைக்க உழைக்க, அதற்கு அதன்மேல் பற்று மிகுகின்றது; "துன்பம் உழத்தொறும் காதற்று உயிர்"எனத் திருவள்ளுவர் கூறுகின்றார். எனவே, உடலோடு கூடி வாழும் ஒவ்வோருயிர்க்கும் உழைப்பு இயல்பாக அமைந்திருப்பதை அறிகிறோம். ஆனால், இவ்வுயிர்களுள் மக்களுயிர்மட்டில், ஏனை உயிர்களை விடச் சிறிது மேம்பட்டதாகும். தன் உழைப்பால் ஆண்டவன் படைப்பில் உள்ள ஏனை உயிர்களையும் உயிரில் பொருள்களையும் முறையே அடிமையாகவும் உடைமையாகவும் ஆக்கிக் கொள்ளற்கு வேண்டிய உரிமை மக்களுயிர் பெற்றிருக்கிறது. ஆதலாற்றான் இன்று மனிதன் நிலம், நீர், தீ, காற்று, விசும்பு ஆகிய பூதம் ஐந்தும் தான் விரும்புமாறு அமையச் செய்கின்றான். நிலத்திற்குள் நுழைந்து குடைந்து செல்கின்றான். நீரின் மேலும் கீழும் நிமிர்ந்து செல்கின்றான்; காற்றை ஏவல் கொள்ளுகின்றான்; விசும்பில் பறந்தேகுகின்றான். சுருங்கச் சொன்னால், மனிதன் ஆண்டவனுக்கு அடுத்தபடியாக விளங்குகின்றான் என்னலாம்.

மனிதன் இத்துணை ஏற்றமுடையவனாக இருத்தற்குரிய உரிமை அவன்பால் நிலைத்திருக்க வேண்டுமாயின், அவன் சலிப்பின்றி உழைத்தல் வேண்டும். உழைப்பினால் அவன் உடல் தூய்மையடைகிறது. அதனால் அவன் உள்ளம் ஒளிபெறுகிறது; அப்போது ஆண்டவன் அவற்கு அருளியுள்ள உரிமை கதிர்விட்டுத் திகழ்கின்றது. அதுவழியாக அவன்பால் உயரிய எண்ணங்களும், உலவாத இன்பமும் உண்டாகின்றன. மக்களுட் சிலர், அவ்வுரிமையைக் காத்துக்கொள்ளும் வலிகுன்றியிருக்கின்றனர்; உரிமையை நிலைப்பிக்கும் உழைப்பினை நெகிழ்த்துச் சோம்பலுறுகின்றனர். சோம்பல் உடலைக் கெடுக்கின்றது; அதனால் உயிர் மடங்குகின்றது; உரிமை நிலவும் உள்ளம் மடிகின்றது. ஆகவே, சோம்பல் மடிமைக்கு உயிரை இரையாக்கி, உள்ளத்தே இருளையும் உயிர்க்கு இறுதியையும் விளைவிக்கின்றது. ஒரு பெரியாரது உடன்பிறந்தார் இறந்துபோனார் என்பது கேள்வியுற்று, வேறொரு பெரியார் அவரை நோக்கித் "தங்கள் தம்பி எவ்வாறு இறந்தார்?" என்று கேட்டதற்கு, அவர், "அவன் உழைத்தற்கு இன்றி இறந்தான்" என்றாராம். ஆகவே, உழைப்பின்றிச் சோம்பியிருப்பவன், விரைவில் தன் உயிரை இழக்கின்றான்; அவன் உள்ளத்தே, உயிர்க்குத் தீங்கு செய்யும் தீய எண்ணங்களும் அறியாமையுமே குடிகொள்ளும் என அறியலாம்.

இன்று நாம் அழகிய நகரங்களையும், பெரிய பெரிய மாட மாளிகைகளையும், பசும் கம்பளம் விரித்ததுபோலத் தோன்றும் பரந்த பண்பட்ட வயல்களையும் காண்கின்றோம். காடழிந்து நாடாகியிருக்கிறது; கருங்கடலில் பெருங்கலம் செல்கின்றது; கம்பியின்றியே தந்தி பேசுகிறது; விரைவில், ‘'கண்டேன் அவர் திருப்பாதம், கண்டறியாதன கண்டேன்" என நம் நாவரசர் பாடியதை நாமும் பாடப்போகின்றோம். இவையாவும் உழைப்பின் பயனன்றோ! "உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?" எனப் பட்டினத்தடிகள் உரைத்தது உண்மை மொழியன்றோ உழைப்பின்றி உடல் சோம்பி, உயிர் ஒய்ந்து ஒடுங்கியிருக்கும் ஒருவனைப் பாருங்கள் அவன் உள்ளத்தில் ஒளியில்லை. அதனை அவலம், கவலை, கையாறு, அழுங்கல், ஆசை, வெகுளி, அழுக்காறு முதலியன சூழ்ந்து அரிக்கின்றன; அவனும் உருக்குலைந்துமெலிகின்றான். அவனை ஏதேனும் ஒரு தொழிலைச்செய்ய விடுவோம்: உடனே, அவனது உடலும் உயிரும் ஒருப்பட்டு அத்தொழிற்கண் உழைக்கத் தொடங்குகின்றன. அவன் வன்மை முழுவதும் அத்தொழிலை முடித்தற் கண் ஒன்றிவிடுகின்றது. அவன் உள்ளத்தை யலைத்த அழுக்குணர்வுகளனைத்தும் அகலப்போய் எங்கேயோ மறைந்து போகின்றன. அவன் மனிதன், மனிதனாக வயங்குகின்றான். அவனது உள்ளம் பேரொளி விட்டு மிளிர்கின்றது; அவ்வழுக்குணர்வுகள் அவ்வொளியின்கண் புகைந்து எரிந்து புத்தொளி செய்கின்றன. ஆகவே, ஒருவனது உள்ளத்தைத் தூய்மை செய்வதற்கு உழைப்பே சிறந்த மருந்தாக இருக்கிறதென்பது எளிதில் விளங்குகிறது.

நாம் வாழும் இம்மண்ணுலகு ஆதியில் ஞாயிற்றிலிருந்து போந்தது என்றும், அன்றுமுதல் இன்று வரையில் சுழன்று கொண்டேயிருக்கிறது என்றும் நாம் அறிந்திருக்கின்றோம். இதனை இவ்வாறு சுழல்வித்த பரமன் கருத்து யாதாகல் வேண்டும்? இடையறாது சுழலும் சுழற்சியினால் நாம் வாழும் மண்ணுலகு, விண்ணுலகில் வட்டமாக இயன்று, பல விகார உருவங்களைப் பெற்று, முடிவில், இற்றைய உருண்டை வடிவத்தைப் பெற்றிருக்கிறது. சுழலலாவது நின்றுபோமாயின், இந்நிலவுலகம் யாதாய் முடியும்? ஒருசார் பகலும் மற்றைய பகுதி இருளுமாய் எவ்வுயிரும் வாழ்தற்கின்றி, எப்பொருளும் நிலைபெறுவதின்றிக் கெட்டழியுமென்பதனைச் சொல்லவும் வேண்டுமோ அளித்தக்க இம்மண்ணகம், இடையறவின்றிச் சுழன்றுழலும் உழைப்பினால்தான் இதன்பால் முறை திரும்புதலும், நேர்மை கோடுதலும் பிற தீமைகளும் இலவாயின; விகாரங்கள் நீங்கிச் சீரிய இவ்வுருவமும் அமைவதாயிற்று.

குலாலனதுழைப்பும், அவனது தண்ட சக்கரமும் மனிதன் உணவட்டு உண்ணத்தொடங்கிய நாண்முதல் அறிந்தனவாகும். சமய நூல்களும் இலக்கண நூல்களும், அவனையே அவன் செய்யும் வினையையும், வினைக்குரிய கருவி கரணங்களையும் அடிக்கடி எடுத்துக்காட்டித் தம் அறிவுப் பொருளை வழங்குகின்றன. அச்சக்கரத்தின் நடுவில் வைக்கப்படும் மண்திரளைப் பாருங்கள்! அதனிடத்தில் ஏதேனும் பாண்டவமைப்புக்குரிய வடிவமுளதோ? அழகிய உருவமும் திருந்திய வடிவமுமுடைய மட்கலங்கள் அச்சக்கரத்தின் சுழற்சியால் பிறக்கின்றன. அஃது இல்லையாயின் அக்குலாலன் மட்கலன்களை யாக்குதல் கூடுமோ? எத்துணைத் தொழிற்சிறப்பும், உலையாவுழைப்பு முடையனாயினும் அவன் யாதுசெய்ய முடியும்? அவன் செய்ய முயலும் கலங்கட்கு அழகும் வடிவும் அமையுங்கொல்! இயற்கையுலகும், சக்கரத்துணையில்லாத குலாலனைப்போல, ஓய்ந்து ஒடுங்கி நிற்குமாயின் அதன் பயன் என்னாய் முடியும்! அவ்வாறு செய்யாது சலிப்பின்றி, உழைக்குமாறு அருளிய ஆண்டவனை எப்போதும் வணங்குவோமாக. உழைத்தலின்றிச் சோம்பிக் கிடக்கும் ஒருவன் எத்துணைப் பொருணலங்கள் உடையனாயினும், அவற்கு அவை ஒரு பயனையும் செய்யா. சகடசக்கரமின்றிக் கையற்று நிற்கும் குலாலன்பால் உள்ள மண்திரள் போல, உழைப்புச் சிறப்பில்லாத ஒருவனும் வெறுந்தசைப் பொதியும் சிறப்பில் பிண்டமுமாவதல்லது பிறிதில்லை. குலாலனை மகனாகவும், அவனது சக்கரத்தை உழைப்பாகவும் கொண்டு நோக்குக. உழைப்பு உயர்வு தரும்; உழைப்பாளி உலகாள்வான். ஆகவே, உழைப்புப் பெற்றவன் உறுதிபெற்றவனாகின்றான். உயிர் வாழ்க்கையின் உறுதிப்பயன் அவன் பாலேயுளது. உயர்வு வேண்டுவோன் உழைப்பு வேண்டுக. கருவரைவீழ் அருவிகளும் கான்யாறும் கைகலந்து கலித்தோடுகின்றன. இடைப்பட்ட மாண்பொருளை வரன்றி யேகும் உழைப்பு வன்மையால் அவை கலித்துச் செருக்குகின்றன. அழுக்கும், மாசும், குப்பையும், கூளமும் அவற்றின் நெறியிற் பட்டு அலைத்துக் கொண்டேகப்படுகின்றன. கால் காலாய் வயலிடைப்படிந்து உரமாகித் தாம் பரவும் நிலப் பரப்பைப் பசும் புல்லும், நறுமலரும் கண்கவர் வனப்புமுடைய வண்பொழிலாக்கும் சிற்றாறுகளின் மாண்டொழிலை என்னென்பது! அவற்றின் தெண்ணீர் உண்ணீராகிறது. அது சுமந்து கொணர்ந்த அழுக்குகளும் அவற்றோரன்ன மாசுகளும் மாய்ந்து போகின்றன. இதனாலன்றோ, "உணவெனப் படுவது நிலத்தொடு நீரே; நீரும் நிலனும் புணரியோர், ஈண்டு, உடம்பும் உயிரும் படைத்திசி னோரே" எனக் குடபுலவியனாரும் பாண்டியன் நெடுஞ்செழியற்குப் பாடியறிவுறுத்தினார். இத்தகைய நீர் யாறே உழைப்பெனவறிக.

பல திறமாய், பல்வகைப் பொருள்களையாக்கி, நாடுகளை நாடா வளமுடையவாகச் செய்து, மக்களை இன்பமும், பொருளும், அறமும், வீடும் இனிது எய்துவித்து, அவர்தம் வாழ்க்கையின் பெரும்பயனை நுகர்விப்பது உழைப்பேயாகும். ஆகவே, உழைப்பே உயிர் என அறிகின்றோம். உயிர் உடலோடு கூடி வாழ்க்கை நடத்துந்தோறும், அதன்பால் பேரின்பம் பெறுதல்போல, உழைப்பாளியும் உழைக்குந்தோறும் உவட்டாத பேரின்பமும் ஊக்க மிகுதியும் பெறுகின்றான். ஆண்டவன் திருவருள் அவன் உள்ளத்தே ஊறுகிறது. உயர் நோக்கும், ஒள்ளறிவும், பெருந் தன்மையும் அவன்பால் உளவாகி யோங்குகின்றன.

நோன்மை, துணிவு, முயற்சி, அறிவுப் பேற்றின்கண் ஆர்வம், தன்குற்றம் தேர்ந்து கடிதல் முதலியன இன்ப வாழ்வுக்கு ஆக்கமாகும் நல்லறங்கள். உணர்த்த உணர்வதிலும், இவற்றை நாமே நம் உழைப்புவாயிலாக உணர்ந்து நன்னெறிகளிற் செலுத்துவதே நம் உயிர் வாழ்க்கையாகும். உழைப்பு வாயிலாக இவற்றை நாம் உணர்தல் வேண்டும். நோன்மை என்பது எத்துணை இடுக்கண்கள் அடுக்கிவரினும்,அவற்றிற்கு அழியாது, அவற்றால் வரும் துன்பத்தைப் பொறுத்து மேற்கொள்ளும் தன்மையாகும். அங்ஙனம் மேற் கொள்ளுதற்குரிய துணையாகும் மனத்திட்பமே துணிவு என்பது. துணிந்தவழி, இடையில் வந்து தகையும் இடையூறுகளால் உள்ளமுடையாமல், செய்வினையைக் கடைபோக உழைத்து வெற்றிகாணும் திறம் முயற்சியாகும். அதன்கண் அறியாதனவற்றை அறிந்தாற்றும் விரகு வேண்டியிருத்தலின், அறிவறியும் ஆர்வம் வேண்டுவதாயிற்று. அவ்வார்வத்தால், முதற்கண் தாமே தேர்தலும் பிறர் காட்டக் காண்டலும் ஆகிய இரு நெறிகளால் தம் குற்றத்தைக் கண்டு அதனைக் கடிவதும், செய்த குற்றத்தை இனிச் செய்யா வகையில் தம்மைப் பாதுகாத்து, அடுத்த முறையில் நன்காற்றல் வேண்டும் என்னும் நற்பண்புடையனாவதும் உழைப்பாளிக்கு இன்றியமையாதனவாகும். இப்பண்புகளைக் கைக்கொண்டு உழைப்போர்முன், வான்றோய் மலையனைய பேரிடர்கள் வந்து நிற்கும். "நற்செயலுக் கன்றே நானூறு இடையூறு." ஆயினும் உண்மை யுழைப்பாளியோ, ஏனையவற்றால் வரும் "இன்பம் விழையான்; இடும்பை இயல் பென்பான்; துன்பம் உறுதல் இலன்." கருமமே கண்ணாக உழைக்கும் அவன், "மெய் வருத்தம் பாரான்; பசி நோக்கான்; கண் துஞ்சான்; எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளான்; செவ்வியருமையும் பாரான்; அவமதிப்பும் கொள்ளான்." சுடச் சுடரும் பொன்போல், அவன் உள்ளம் துன்பங்கள் தொடர்ந்து போந்து சுடச்சுட, ஒட்பமும் திட்பமும் பெற்று ஓங்கி யொளிரும். நிலவுலகினும், அவன் புகழே ஓங்கிப் பொன்றாது நின்று நிலவும், அத்துன்பங்களும் "எரி முன்னர் வைத்துறு போலக் கெடும்.”

இலண்டன் நகரத்தில் உள்ள செயின்ட் பால் கதீட்ரல் என்னும் பெருங்கோயில் உலையாவுழைப்பின் உருவுடைப் பயனாகும். அதனை யெடுத்தற்கு முயன்ற சர் கிறிஸ்தபர் ரென் என்பார், கணிதநூல், வானநூல், சிற்பநூல் முதலியவற்றிற் பெரும் புலமையும் வினைத்திட்பமும் உடையர். ஆயினும், அவர் இதனைக் கட்டியமைத்தற்கு முயன்ற காலத்து உளவாகிய இடையூறுகட்கு அளவேயில்லை. உரோம் நகரத்துச் செயின்ட் பீட்டர்ஸ் பெருங் கோயில் போலவே இக்கோயிலையும் எடுத்தல் வேண்டுமென எண்ணி முயன்ற அவர்தம் எண்ணம் துார்ந்து போமாறு, அரசியற் பேரதிகாரிகளும் சமயப் பணியாளரும் பிறரும் மண்ணள்ளி எறிந்த வண்ணமே இருந்தனர்; பொருளுதவி புரிவோர் இருளில் மறைந்தனர்; கிறிஸ்தபருக்கும் இடுக்கண் பல அடுக்கி வரலாயின. ஆயினும் என்? "மடுத்தவாயெல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடுடைத்து" என்ற திருவள்ளுவப் பெருமொழிபோல, அவ்விடையூறுகளும் இடர்ப்பட்டுத் தாமே யழிந்தன. கதீட்ரல் கண்கவர் வனப்பும் மண்மகிழ் தோற்றமும் பெற்று இன்றும் நின்று நிலவும் பெருஞ் சிறப்புடன் திகழும் செம்மை யெய்திற்று. இன்றும் அதனைக் காண்போர், "பெரியார்" எனப் பொறித்துள்ள பெரும் பெயரைக் காணுந்தோறும், நம் கிறிஸ்தபரின் வினைத்திட்பம், முயற்சி முதலிய வினைமாண்புகளை நினைந்து பாராட்டாநிற்கின்றனர்.

திருவும் கல்வியும் சிறந்து விளங்கும் நாடுகளுள் இப்போது அமெரிக்க நாடு எத்துறையிலும் ஈடுமெடுப்புமின்றி விளங்குவதனை நாம் அறிகின்றோம். இதன் உண்மையினை யுணர்ந்து கண்டு உரைத்த கொலம்பஸ் என்னும் பெரியாரை மேனாட்டவர் அனைவரும், நம் நாட்டவருட் கற்றவரும் நன்கறிவர். நம் நாட்டிற்குப் புதுநெறி யொன்று காணப்புகுந்த அப்பெரியார் அவ்வமெரிக்க நாட்டினைக் கண்டறிந்தனரா யினும், அதனை முதலிற் காண்டற்கண் அவர் உற்ற இடுக்கண் உரைக்குந் தரமுடையதன்று. புதுநெறி காண்டல் கூடுமென்ற எண்ணம் அவர் உள்ளத்திற் புகுந்த நாள் முதல், புதுப்பெரு நாடாகிய அதனைத் தம் கண்களாற் காணுந் துணையும், அவரை, அவமதிப்பு, அச்சுறுத்தல், அறியாமை, இகழ்ச்சி, ஏமாற்றம், வசைவு, கொலை, அச்சம் முதலிய பல செயல்கள் பல்லாற்றாலும் அரித்து அலைத்தன. நாட்டின் காட்சியை யெய்துதற்கு இரண்டொரு நாழிகை யிருக்கும்போதும், அவர் சென்ற வங்கத்திலிருந்தோர் அவரைப் பற்றிக் கொலைசெய்துவிடவும் துணிந்தனர்: மலைபோல் அலையெழுந்து முழங்கும் மறிகடல், முன்னே கிடந்து, மருட்சி விளைவித்தது; பின்னே அவரது நாடு நெடுந்தொலைவிற் கிடந்து, வறிதே திரும்பின் அவரை இகழ்ந்தெள்ளி இன்னற் , படுத்தற்கு எதிர்நோக்கியிருந்தது; அருகில் சூழ விருந்தோர் மடித்தவாயும், வெடித்த சொல்லும், கடுத்த நோக்கும் உடையவராய்த் தீவினையே சூழ்ந்து கொண்டிருந்தனர். கணந்தோறும், நிலையின்றிப் புரளும் அலைகள் அவர்தம் கலத்தைச் செலவொட்டாது தடுத்தற் கெழுந்தன போல வெழுந்து அலைப்ப, அவற்றிடையே ஒடுங்கா வுள்ளமும் கலங்காக் கொள்கையு மல்லது பிறிதில்லாத அவர் மனத் திட்பம், அவ்வலைகளின் தலையை மிதித்தேகியது; விரிகடலைச் சுருக்கிற்று; நெடும்போது குறும் போதாக, நீர்க்காற்று நிலக்காற்றாக, பகல் மாய, இரா வணுக, வினை முடிவின் துனைவு மிக, அமெரிக்கப் புது நாட்டின் அடைகரை புலனாயிற்று, அடர்த் தற்கெழுந்த அலைகள் அவரைத் தலைமேற் சுமந்து தாலாட்டின; வன்காற்றாய் மடித்தற்கு நின்ற கடற்காற்று, மென்காற்றாய் அவர் மெலிவு தீர்த்து மகிழ்வித்தது, ஈதன்றோ வினைமாண்பு! என்றும் பொன்றாத இன்பவிசை நல்கும் - வினையினும், உழைப்பினும் ஏற்றமுடைய தொன்று உண்டுகொல்! இல்லை! இல்லை! எஞ்ஞான்றும் இல்லை!

இனி இவ்வுழைப்பினை நம் பண்டைச் சான்றோர் ஆள் - வினையென்றே வழங்கி யிருக்கின்றனர். உள்ளத்தின் ஆட்சி வழி நிற்கும் உடல் புரியும் வினை உழைப்பாதலால், அதனை ஆள்வினை யென்றது எத்துணை அழகுடைத்து! காண்மின், அவ்வாள்வினையே ஆடவர்க்கு உயிர் என்பதனால், ஆடவனை ஆண்மகன் என்றல் எத்துணை அறிவுடை மொழி! காண்மின் ஆண்மக்களே! உங்களது ஆண்மை, ஆள்வினையே, அயரா, உழைப்பே, அதனையுடைய நீவிர் என் செய்கின்றீர்கள்? அயர்ந்து உறங்குகின்றீர்கொல்? உறங்கன்மின்; உறங்குதல் உய்வற்றார்க்கே உரியது, ஓய்வு உலையா உழைப்புடையார்க்கே உரியது. உழைப்பவர் ஓய்வு கோடற்குரியர், ஓய்வுற்றவர் உறங்குதற் குரியர்; உறங்குவோர் மீட்டும் உழைத்தற்கு உடற்கும் உள்ளத்திற்கும் உரந்தருபவராவார். உங்களது உறக்கம் மீட்டும் உழைத்தல் வேண்டி உங்கட்கு ஊக்கம் செய்தற்கமைந்தது; அதற்குரிய போது இரவுப்போதே, ஆகவே, பகற்போது உழைப்புக் குரியதாகும். உழைப்புக்குரிய அப்பகற்போது உறங்குதற்குரிய தன்று; அதனால் பகற்போதில் நன்கு உழைமின்.

உலகம் விரிந்து கிடக்கின்றது; இதன்பால் உயரிய பயன் உளது; உழைப்பவர் அப்பயனை நுகர்தற்குரியர்; உலகையளித்த ஒருவன் உங்கட்கு உடம்பு நல்கியுளன்; அவ்வுடம்பினை உலகில் இயக்கி உறுபயன் பெறுதற்குரிய உறுகருவியாக உங்கட்கு, அவன் உள்ளத்தையும் உதவியுளன், உள்ளத்தால் உள்கியவழி உழைத்தற் குரிமையும், ஆற்றலும் உங்கள்பால் உள என்பது விளங்கும். அவற்றை வெளிப்படுத்தல் உங்கள் கடன். ஆற்றலும் உரிமையுமுடைய நீவிர் உழைக்குமிடத்து, எங்கெங்கு முறை பிறழ்ச்சி தோன்றுகின்றதோ, அஃது உங்கள் உயிர்க்கிறுதி பயக்கும் உறுபகையாதலின், அங்கங்கு முறைமையை நிறுவுதல் வேண்டும்; நெல்விளையும் வயலிடத்துப் புல் முளைய விடுவிர்கொல் துரும்பாயினும் விரும்பி பீட்டுமின் பருத்தியின் பஞ்சு காற்றிற் பறக்கும் புன்மைத்தாயினும் விடாது பற்றுமின், ஈட்டுமின்; பாங்குற நூன்மின்; அஃது அற்றம் மறைக்கும் ஆடையாகுமே; "அணியெல்லாம் ஆடையின் பின்.”

உழைப்பிற்கு “ஊறு செய்வன பிறவும் சிலவுள. அவை அறியாமையும், மடமையுமாகும். அறிதற்க்ரிய அமைதி பெற்றும், அறியவேண்டுவனவற்றை அறியவிடாது, மருட்சியும் அச்சமும் பயப்பித்துச் செய்வினை சிதறுவித்தலின், அறியாமை உழைப்பிற்கு ஊறு ஆகும். அறிவுடையோர் அறிவுறுப்பவும், ஆற்றற்குரிய வினையும் உரிமையும் அருகில் இருப்பவும், ஆள் வினைக்கண் கருத்தை இருத்தாது, மடிமைக்கண் மடிந்து கிடப்பித்தலின், மடமையினைத் தகர்த் தெறிதலும் ஆண்மகற்கு அறமாகும். அதனைச் செய்யவேண்டு மென்பது ஆண்டவன் ஆணை. "இன்று", “இப்பொழுது", “இக்கணம்” என்று வழங்கும் காலமே, அதனை அயராது ஆற்றற்கமைந்த அருமைக் காலமாகும். அயர்ந்தவழி இரவு வந்துவிடும்; அக்காலத்தில் எவரும் உறங்குவரே யன்றி உழைத்தலைச் செய்யார்.

எல்லா வகை உழைப்பும் ஏற்றமுடையனவாகும்; அவற்றுள் கையால் உழைக்கும் உழைப்பில் கடவுட்டன்மையுண்டு எனக் கார்லைல் என்னும் பெரியார் கவினக் கூறுகின்றார்; இக்கட்டுரைக்கண் அடங்கிய கருத்துகளை வழங்கிய பெரும் புலவரும் அவரே. உழைப்பு உலகேபோல் பரந்த பண்பினையுடையது; இதன் உயர்வு வீட்டுலகின் உச்சியிலுளது. முதற்கண் உடலிலும், பின் மூளையிலும், முடிவில் உள்ளத்திலும் ஒன்றியுலவிப் பயன் உறுவிக்கும் உழைப்பே, கெப்ளர் கண்ட கோணிலைக் கணக்கும், நியூட்டன் நிகழ்த்திய நெடும் பொருளாராய்ச்சியும், அறிவியற்கலைகளும், ஆண்மைச் செயல்களும் இன்னுயிர் வழங்கி இசை நடும் இயல்பும் யாவும் தோற்றுவித்த ஏற்றமுடையது. ஆதலால், ஆண் கடன் இறுக்கும் மாண்புடை மக்காள்! உழைப்பே ஆண்டவன் உருவெனவுணர்மின். அதற்கு அழியாது ஆற்றலே அவனது திருப்பணியென அறிமின்; பரந்த உலகில் சிறந்தோங்கிய பெருமக்கள் கண்டுணர்ந் துரைத்த முதுபொருளும் இதுவேயாம்.

உழைப்பினை வெறுத்து நொந்துரைக்கும் ஒருவன் உளனோ? உளனாயின், அவனை அது செய்யவேண்டாவென உரைமின். ஒடுங்கிக்கிடக்கும் அவன் முன் சென்று, "அன்ப, ஒடுங்குதல் ஒழிக. இதோ, உன்போல் உழைத்த தோழர்கள் உயர்நிலை யுலகத்தில் இன்பஞ் சிறந்து இனிதே உறைகின்றனர். அவர்களன்றோ ஆங்கே இன்புறுகின்றவர்; பிறர் எவரும் இலரே இந் நிலவுலகினும், உழைப்புநலத்தால் உயர்ந்த வரன்றோ, மக்கள் மனநிலத்தில் மன்னி, வானவரும் முனிவரரும் போலக் காலங்கழியினும் கோலங் கழியாது என்றும் நின்று நிலவுகின்றனர்", எனத் தெருட்டித் தெளிவுறுத்துமின்.

"https://ta.wikisource.org/w/index.php?title=செம்மொழிப்_புதையல்/002-020&oldid=1625941" இலிருந்து மீள்விக்கப்பட்டது