உள்ளடக்கத்துக்குச் செல்

செம்மொழிப் புதையல்/004-020

விக்கிமூலம் இலிருந்து

4. பிறப்பொக்கும் : சிறப்பொவ்வா

டுவிலா வையத்து மன்னிய மூன்றனுள் நடுவணதெய்த இரு தலையுமெய்தும் என்னும் செம்பொருளுணர்ந்து, அந்நடுவணதாய பொருளீட்டல் கருதித் திரைகடல்வழியும், மைவரைவழியும் பல நாடுகளுக்குச் செல்லும் மக்கள் உளராதல்போல, சிற்றுயிர்களுள் தேன் தேடிப்பலதிசைகளுக்குஞ் செல்வன பலவுள. அவற்றிற்குத் தேன் எனவும், அளியெனவும், வண்டெனவும், கரும்பெனவும் பலபெயர்கள் உண்டு. நிற்க, ஈண்டுத் தேன் தேடிச்சென்ற் வண்டொன்றின் வரலாற்றினையே யான் கூறத்தொடங்குகின்றேன்.

புதுத்தளிர் தோன்ற, பூக்கள் மலர, நறுமணம் எங்கும் நன்கு பரவ, மலையாநிலம் மருங்குவந்தசைய, யாண்டும் இன்பமே இலகித்தேனாறும் இளவேனிற்காலத்து முதுபகலொன்றின் பிற்பகலில், தேனியொன்று நறுந்தேன் வேண்டிக் காவும், சோலையும், கவின்பூந்துருத்தியும் புக்கு, ஆண்டாண்டு மலர்ந்து வயங்கும் பூத்தொறும் சென்று, கொளற்கரிய தேன் மிகைப்படக்கொண்டு, அதனாலெழுந்த உவகையால் விரைந்து எழுந்து, தன்கூடு நோக்கிச் செல்லத் தொடங்கிற்று. ஆயினும், அதுபோது, அது பூவியல் நறவம் மாந்திப் புந்தி மயக்குற்றிருந்தமையால், வழியறியாது மேலெழுந்து சென்று, அருகிருந்த ஒர் பேரகத்தின் மேற்சாளரத்தினுடே அதன் உட்புறம் அடைந்தது.

அக்காலை அப்பேரகத்தின்கண் ஏதோ ஒருசிறப்பு நடைபெற்றது: இனியவும் மணமிக்கவுமாய பண்டங்கள் பல மலிந்திருந்தன. மிகப்பலமக்களும் கூடியிருந்ததோடமையாது சொல்லாடலாலும், இசைக்கருவிகளாலும் பிறவற்றானும் பேரோசையும் செய்வாராயினர். இவற்றைக்கண்ட தேனீயின் கருத்தில் அச்சந்தோன்றி ஒரு புடைவருத்தினும், பண்டங்களின் சுவையும் மணமும் அதனை வெளியேகவிடாது ஒருபுடைத் தகைந்தன. தகையவே, தேனியும் நறுமணப்பண்டங்கள் வைத்துள்ள தட்டொன்றின் புறத்தேதங்கி, அவற்றின் மணத்தை நுகர்ந்தும் சுவையைத் தேர்ந்தும் சிறிதுபோது கழித்து நிற்க, "ஆ! இதோ பார். தேனீ! தேனீ!" எனக்கூறிக்கொண்டே சிறுவர் இருவர் அதனருகேவந்தனர். இச்சொற்களைக் கேட்ட அவ்வியும், உடனே அச்சத்தால் உடல் நடுங்க வெளிச்செல்வான் முயன்று ஒருசாளரத்தின் மேற்பாய்ந்தது. பாவம்! அதன் கதவு கண்ணாடியாலாயதாகலின், அக்களிவண்டு அதனையுணரவியலாது மயங்கி, ஆடியில் மோதுண்டு கலங்கிக் கீழேவீழ்ந்து, பின்னர்ச் சிறிது தேறி, சாளரச்சட்டத்தின் கீழ்ப்புறத்தே தான் மயக்கத்தாலும் அச்சத்தாலும் இழந்த மனவமைதியும் வன்மையையும் மீட்டும் பெறற்பொருட்டு விழுந்து கிடந்தது.

நிற்க, இதனைக்கண்ட சிறுவர்களிருவரும் அருகேபோந்து, இதைப்பற்றிய ஒரு சொல்லாடல் நிகழ்த்துவாராயினர்.

சிறுவன் :-தங்காய்! இதுதான் தேனி. இதனைத் தொழில்புரி தேனி என்பதும் வழக்கு. இதன் இருதுடைகளுக்கு மிடையிலுள்ள மெழுக்குப் பையினையும் காண். ஆ! என்ன ஊக்கமும் உழைப்பு முடையது இது தெரியுமா!

சிறுமி :- அண்ணால் மெழுக்கையும் தேனையும் ஆக்குவது -

இத்தேனி தானோ?

சிறுவன் :-ஆம். பூக்களின் உள்ளிருக்கும் இனியதேனை இது அவற்றின் உட்சென்று கொணர்கிறது. முன்னொரு நாள் நாம் நம்பூம்புதரின் அகத்தும் புறத்தும் "கம் கம்" என எண்ணிறந்த ஈக்கள் மொய்த்து இசைத்தது கண்டோ மன்றோ அவை அங்குமிங்கும் பறந்து திரிந்ததைக் கண்டு நகைத்தோமல்லவா? இளந்தளிர்களின் மீது இவை படருங் காலத்து இவற்றின் மெய்யழகு நம் உள்ளமெல்லாம் கொள்ளை கொள்ளவில்லையா? நிற்க, இது இன்று காலையில் தேனிட்டுங் காலத்தும் யான் பார்த்ததுண்டு. இதற்குத் தேனிட்டலொன்று தான் தொழிலெனல் ஆகாது.

இதனொடு வேறுபல காரியங்களும் இது செய்தல் வேண்டும். தேன் கூடு கட்டுதல், அதனை யழகு செயல் முதலிய எல்லாக் காரியங்களையும் இதுதான் செய்தல் வேண்டும். இது பற்றியேதான் இது தொழில்புரி தேனி என்றழைக்கப் பெறுதலும் காண்க. பாபம்! பாபம்!!

சிறுமி :- தொழில்புரிதேனி என்பது யாது? அண்ணா தாங்கள் "பாபம்! பாபம்!" என்று இதன்மாட்டு இரங்குவதேன்!

சிறுவன் :- ஏன் தெரியாது? நம் அத்தான் நேற்று நமக்குச் சொன்னதை மறந்துவிட்டாய் போலும்: தம்மைச் சிறிதும் ஒம்பாது பிறர்நலமே யோம்பி யவர்க்கே ஆட்பட்டுச் சிறு தொழில் புரியும் மக்களனைவரும் இரங்கற்பாலரே! அவர் வகையின் பாற்படுவதே இத்தேனியுமாகலின், யான் இதன் மாட்டும் மனமிரங்கல் வேண்டிற்று. இவ்வீக்களுக்கு அரச ஈ ஒன்றுளது. அதனை ஈயரசி யென்பதுவே பெரு வழக்கு. அது ஒரு சிறுதொழிலும், செய்யாது, எஞ்ஞான்றும் தொழிலீக்கள் அமைத்த கூட்டின்கண்ணே இருந்து, அவை கொணரும் தேனையுண்டலும், கொணர்ந்த ஈக்கட்கு வேறுபணி பணித்தலும், தான்பயந்த சிற்றிக்களைப் புரத்தலும், இவற்றோரன்ன பிறவுமே செய்து கொண்டுவரும். அதற்கு வேண்டும் சிறுபணிகளை, மருங்கிருந்து ஆர்க்கும் வண்டுகள் செய்யாநிற்கும். இவற்றிற்கு வேறாக வெற்றிக்கள் பலவுள. அவை ஒரு தொழிலும் செய்யாது வீணே அங்குமிங்குந் திரிந்துகொண்டிருப்பவை. ஏனையவை யாவும் இவ்வியைப்போன்று தேனிட்டிப் பிறவற்றிற்களித்தலோடு, அவற்றிற்காம் சிறுதொழிலைப் புரிபவையே யாகும். இக்கூறியவற்றை நம் அத்தான் அறிவாரேல் அவரால் நகைத்து அடங்குதல் முடியாது.

சிறுமி:- ஆனால், இச்செய்திகள் அத்தானுக்குத் தெரியாவோ?

சிறுவன் :- இல்லை. அவருக்குத் தெரியும் என்று யான் - நினைக்கவில்லை. தெரியுமாயின், அவர் இவற்றைப் பிடித்தலும் பிடித்துத்துன்புறுத்தலும் செய்யாரன்றே. யான் எவ்வாறு அறிந்தேனெனின், எனக்கு நம் சோலைக்காவலன் கூறினான். நிற்க, நெருநல் அவர் கூறியவற்றை நோக்கினையா? இவ்வுலகில், அரசர், அரசியார் என உயிர்களுட் சிலரிருத்தல் இயற்கைக்கே மாறானதாம்; எல்லாரும் ஒரே அச்சாக இருப்பதே இதற்குப் போதிய சான்றாம்; இயற்கையிற் றோன்றும் ஒவ்வொரு பொருட்கும் பிறப்பினால் ஒருவகை வேறுபாடும் இன்றாம்; எனவே, அரசர் எனவும் அரசியரெனவும் இருப்பவர் நடுநிலைவரம்பைக் கடந்தவரே யாவராம்.

சிறுமி :-ஆனால், இவற்றை உய்த்துணர்ந்து கோடல் இவ்விக்களுக்கு இயலாதென யான் நினைக்கின்றேன்.

சிறுவன் :- நினைப்பதென்ன உண்மையிலே அது அவற்றிற்குக் கிடையாதுதான். சோலைக்காவலன் கூறியவற்றை மட்டில் இத்தொழிலீக்கள் கேட்டிருக்குமாயின், எத்தகைய சினங் கொண்டிருக்கும்! நீயே நினைத்துப்பார்!!

சிறுமி :- அவன் கூறியதென்ன?

சிறுவன் :- அரசியையும் ஆட்பட்டொழுகும் சிற்றிக்களையும் சீர் தூக்குங்கால் பிறப்பினால் அவற்றிற்கிடையில் ஒருவகை வேறுபாடும் இல்லை. பிறப்பும் தோற்றமும் ஒன்றே. எனினும் இவ்வேறுபாட்டைத் தருவன உண்டிவகையும், உறையுளின் தன்மையுமேயாம். இச்சிற்றிக்களை வளர்க்கும் பெடை வண்டுகள், சிலவற்றிற்கு ஒருவகை உணவும், வேறு சிலவற்றிற்கு ஒருவகை உணவும்; சிலவற்றிற்கு ஒரு வகைக்கூடும், வேறு சிலவற்றிற்கு வேறுவகையான கூடும் தருகின்றன. அதனால் சில ஈயரசிகளாகவும், சில தொழிலீக்களாகவும் மாறுகின்றன. இக்கருத்தே நெருநல் நம் அத்தான் மேன்மக்களையும் தொழில் மக்களையும்பற்றிக் கூறியவற்றுள் அமைந்து கிடந்தது. ‘பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்.” என்பது தமிழ்மறை. நிற்க, உண்ணுங்காலம் ஆயிற்று. வா, போகலாம்.

சிறுமி :- அண்ணால் சிறிது நில்லுங்கள். யான் இவ்வியை வெளியே விடுத்துவருகிறேன்.

இங்ஙனம் கூறிக்கொண்டே, அச்சிறுமி தன் கைத்துணியால் அதனைப் பையவெடுத்து அருளொழுக நோக்கி, “அந்தோ ஏ! கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி! குழவிப்பருவத்தே உன்னை வளர்த்தோர் உனக்கு உண்டியும் உறையுளும் உயர்ந்தன கொடுத்திருப்பரேல், ஆ! இன்றுநீயும் ஒரு ஈயரசியாக இருப்பாயன்றோ! என்ன இழிந்த நிலையை உனக்கு அவர் தந்துள்ளார்: அறிதியோ? கிடக்க, நீ இனி வெளிச் சென்று, உன்வானாள் முற்றிலும் மெழுகு செய்தலிலும், தேனிட்டலிலும் செலவிடல் வேண்டும். செல்க. செல்க. நீ மேற்கொண்ட சிறுதொழில் சீர்த்தொழிலாமாக!" என வாழ்த்தி, சாளரத்தின் புறத்தே விடுத்தனள். வெளிப்போந்த வண்டு, கழிபேருவகைகொண்டு தன் வழிச்செல்கை தொடங்கிற்று.

ஆ! என்ன இனிய்மாலைக்காலம்! காட்சிக்கினியமாலைக் காலம்! காதலர்கூடிக் கலந்துரையாடும் மாலைக்காலம்! இங்கனம் இளவேனிலின் முதுமாலை, மன்னுயிர்க்குப் பேரின்பம் பயந்து இனிதாய்த் தோன்ற, அத்தொழிலிக்குமட்டில் அத்தன்மையின் மாறுபட்டுத் தோன்றிற்று. அதன் மனம் ஏதோ ஒர் பொருளாற் பற்றப்பெற்றுத் துயர்பூண்டிருந்தது; அடிக்கடி அது ஒருவகையுணர்ச்சியால் நாணி மிக வருந்தத் தொடங்கிற்று. இவ்வாறு வருத்தமும் துயரமும் மயங்கிய உள்ளமொடு அது தன் கூட்டை - பணிசெய்து கிடப்பதே தன்னறமாகும் என்னும் கொள்கையுடன் அன்று காலையில் விட்டுப்பிரிந்த தன் கூட்டை - அடைந்தது. அடைதலும், அடக்கலாகா வெறுப்பும் வெகுளியும் அதன் உள்ளத்துத் தோன்ற, அது தான் கொணர்ந்த தேன்பையை நெகிழ்த்தெறிந்து, மனம் சலிப்படைய, “எல்லாவுயிரினும் கடைப்பட்டேன் யானே காண்" என அறைந்தது.

அக்காலை, அங்குச் சிறுதொழில் செய்துகொண்டிருந்த - மற்றொரு தொழில் இதனைக் கேட்டு, "என்னை செய்தி? என்னே நின் செய்கை யிருந்தவாறு வெறிமிக்க வேங்கையின் தேன் உண்டனைகொல்லோ அன்றி அக்கொடிய பச்சிலைப்புழு நம் கூடுகளில் தன் முட்டையிட்டுளது பற்றிச் சினங் கொண்டனையோ? என்னைகாரணம்?’ என வினவிற்று. அதற்கு இது, “நீ கூறிய யாதேனும் வேண்டுங் காரணமாகாது. ஐயோ பாவம்! அவையென் செய்யும்? தாந்தாமுன் செய்தவினையைத் தாமே துய்ப்ப தல்லது பிறர் செய்வதென்?" எனவிடையிறுப்ப, அது, "பின்னர் என்னையோ காரணம். உரைத்தி" என மீட்டும் வினவ, இது கூறும்:- "இல்லை. அன்ப! இன்று காலையிற் சென்ற யான் மிக்க சேணிற் சென்றேன். சென்றவிடத்து யான், இதுகாறும் கேட்டறியாதனவெல்லாம் கேட்டேன். கேட்டவற்றின் கருப்பொருள் “நாமெல்லோரும் இழிதொழில்புரியும் இழித்தக்க உயிர்களாவோம் என்பதே.”

இவ்வுரை அதன் செவிப்படலும், அது திடுக்கிட்டு, "நீ இதுகாறும் அறியாத இதனை உனக்கு உணர்த்தியவர் யாவர்?” எனக் கேட்ப, இது சாலவெகுண்டு, உண்மையை யுணர்த்துபவர் யாவராயினுமென்! யான் இன்று அறிந்தது முற்றிலும் உண்மையே. இதுமட்டில் உறுதியே." என்றது.

எனவே, அது, “ஒரு காலும் நீ கூறியது உறுதியுடைத்தன்று. பேதைச்சிற்றுயிரொன்று இங்ஙனம் பிதற்றியதுகொண்டு, பிழைபட்டொழுகுதல் பெருந்தகைமையேயன்று. நீ இழித்தக்கோய் என உணர்வுணர்த்தினாரா லுரைக்கப்பட்ட அச்சிறு பொழுது காறும் நீ அப்பெற்றியை யல்லை யென்பதை நீயே நன்கறிவாய். ஆகவே, அவர் உரைத்தாரென நீ கூறும் உரை வெற்றுரையென்பதனினும் வெளிற்றுரையெனவே யான் கூறுவேன். இனி இதைப் பற்றிக் கூறுதலும் அறமாகாது." எனக் கூறிக்கொண்டே தான் முன்னர்க் குறைபடவிட்ட காரியத்தைச் செய்யத் தொடங்கிற்று. -

எனினும், இவ்வுரைமுழுவதும் செவிடன் காதில் ஊதப்பெற்ற திவவொலியே போலப் பயனின்றி யொழிந்தது. ஆனால், இதுமட்டில், தன்னொத்த ஈக்கள் பலவற்றை ஒருங்கழைத்துத் தான் தேன்றேடிச் சென்றவிடத் தறிந்தவை யனைத்தையும் தெளிவாகக் கூறிற்று. கேட்டவற்றுட் சில பெருவியப்பும், சில பெருங்கலக்கமுங் கொண்டன; முடிவில் அவ்வீக்குழாத்தி னிடையில் ஒரு பெருங்குழப்பம் உண்டாயிற்று.

பின்னர்ச் சில ஈக்கள் எழுந்து, உண்மையில் தாம் பிறப்பினால் ஒப்பானவை யெனினும், தம்மை அரச ஈக்கள் நடாத்து முறை இழிவானதே யெனவும், அது தம்மையடிமைப்படுத்துவ தொன்றெனவும், அதனை விரைவிற் போக்குவது முதற்கடன் எனவும் முடிவு செய்தன. இடையிற் சில ஈக்கள் முன்வந்து தாம் தொடங்கிய இயக்கத்துக்குத் தலைமை தாங்கித் தம்மை உரிய நெறியில் நடத்துவதற்கேற்றவர் அச்சிறுவர் தம் அத்தானே யாவர் எனவும் கூறின. அதுபோது, வேறு சில எழுந்து, முன்னர்க் குறிக்கப்பெற்றவரே தலைவராயின், அவர் தம்மை ஒருங்கே யரசஈக்க ளாக்குதலோ டமையாது தம் கூடுகளையும் செவ்வனம் புரந்து, தமக்கு ஒரு மேதக்க சிறப்புரிமையும் தந்தருள்வாரெனவும் வழிமொழிய, ஒக்கும் ஒக்கும் என்னும் பேரொலி கம்மென அக்குழாத்திடை யெழுந்தது."

ஆ! இதுவும் தகுமா? யாவரும் சிவிகையூரத் தொடங்கின், அதனைக் காவுவார் யார் இந்நிலையில், சிறிது நாள் முதிர்ந்த தொழிலியொன்று, அக்கூட்டத்திடைத் தன் தலையை நீட்டி, “பிறர் நலத்துக்கெனத் தொழில்புரியும் ஈக்களனைத்தும் அரச ஈக்களாக மாறின், நன்று! நன்று!! அவற்றிற்கு ஆம்பணியைப் புரிபவை யாவோ?" என்றது. கல்லா அறிவிற் கயவர்பாற் கற்றுணர்ந்த நல்லார் தமது கனம் நண்ணுவரோ? நண்ணாரன்றே! ஆகலின், அவ்விக்க ளனைத்தும், இதனைக் கேட்டதும் சாலவெகுண்டு, மதியிலி எனவும், தன்னுரிமை யறியாத் தறுதலையெனவும் கூறி, “நாம் அனைவரும் அரசாக்க ளாகுங்கால், இற்றைப் போது அரசு பூண்டிருப்பனவும், அவற்றின் வழித்தோன்றல்களும் தாம் உள்ளளவும் நமக்குப் பணிசெய்து கிடக்கலாமே!” என்றன. என்றலும், அவ் ஈ மறுமுறையும் எழுந்து, "அவற்றிற்குப் பின்னர் அத்தொழிலை மேற்கொள்ளுவோர் யார்" எனக் கேட்ப, கம், கம் என்னும் பேரொலி ஆங்கு மிக்கெழுந்தது. உடனே, அதுவும் தன் நாவையடக்கிக் கொண்டது.

மற்றொரு ஈ எழுந்து, "அன்புடையீர்! எனக்கு முற்பேசிய ஈக்கு நிகழ்ந்த வசை அழகற்றதாகும். அது நமக்குட் பிளவையுண்டுபண்ணினும் பண்ணும். பண்ணுங்கால், நாம் கைக்கொண்ட இயக்கம் வெற்றிபெறாது. நம் கொள்கைக்கு மாறாகவுள்ள, பழைய நிலையிலே தம் வாணாளைச் செலவழித்தார்க்குப் புதிய கொள்கைகளும், உணர்ச்சிகளும், இயக்கங்களும், பிறவும் வெறுப்பைத் தருவனவாகலின், அவ்வெறுப்பை யுடையவரையும் நம் இயக்கத்திற்குக் கொணர்தல் இன்றியமையாது.

"நிற்க, தேனிட்டலும் மெழுகு செய்தலுமாய தொழில் களைச் செய்யும் நாம் அனைவரும் ஈயரசிகளாக மாறிவிடுவோமாயின், நமக்காக அத்தொழில்களைப் புரிபவையிலவாக, நம் நிலை மிக்க துன்ப நிலையாய் முடியும். இது நீங்கள் நன்கறிந்த தொன்று. இதனை நீங்களே எண்ணிப் பாருங்கள்.

"என்றாலும், எனக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது; அதனை அசட்டை செய்யாது கேட்டு, அமைவுடைத்தாயின் ஏற்றுங் கொள்ளுங்கள். அது யாதெனின், நாம் அனைவரும் ஈயரசிகளாதலினும், அவ்வரசுரிமையையே முற்றிலும் களைந்து விட்டு, அரசஈ முதல் வெற்றிவரையுள்ள அனைத்தீக்களும் தொழிலீக்களாகமாறி, நமக்குள் ஒருவகை யுயர்வு தாழ்வுமின்றி ஒருமித்து வாழ்தல் வேண்டும்" என்றோர் சொற்பொழிவு செய்தது.

இடையில், முன்னர் வசைபெற்றுச் சென்ற தொழிலி மறுமுறையும் எழுந்து, "நாம் அனைவரும் இன்றுவரைத் தொழிலீக்களாகவே உள்ளோம். அற்றாகவின், நமக்கு இவ்வியக்கத்தால் ஒரு வகைப்பயனும் எய்துதல் முடியாதென நினைக்கிறேன்" என்றது.

என்றலும் எழுந்தன. ஈக்கள். புகைப்படலம் போலத் திரண்டெழுந்து கம் கம் எனப் பேரொலி செய்து, தம் சினத்தை எவ்வெம்முறையில் அதற்குக் காட்டுதல் கூடுமோ அவ்வம் முறையில் காட்டின. காட்டக்கண்டஞ்சிய அது முன்போலவே தன் இருப்பிடம் அடைந்தது. அடைதலும், பகலவனும் மறைந்தனன், பறவைப்பாட்டு அடங்கின; எங்கும் இளையிருள் பரந்தது; நீலவானத்து நித்திலம் பதித்தாற்போலக் கோல மீனினம் தம் சிற்றொளி பரப்பின; பிற்பகல் முற்றும் குழப்பத்திடையுழந்த ஈக்கள் தத்தம் கூடடைந்து உறங்குவவாயின. பின்னர் அவ்விரவு முற்றும் வேறு குழப்பமின்றி யொழிய யாண்டும் அமைதியே தலைசிறந்து நின்றது.

வெள்ளி முளைப்ப, விடியல் வந்தது; தாமரையிற் றுஞ்சிய காமர் வண்டினம், கட்கமழும் நெய்தலுக்குச் சென்று, தாதுதிப் பின்னர், கண்போல் மலர்ந்த காமர்சுனைமலரை யடைந்து ஒலி செய்யா நிற்ப, முன்னாள் நிகழ்ந்த குழப்பத்தில் ஈடுபட்ட ஈக்கள் மட்டில் ஒருங்கு கூடி மீட்டும் தம் நிலைமையையும், அதற்கேற்ற முறைகளையும் பன்னிப்பன்னிப் பேசத்தொடங்கின. வேறு சில, கூடுகளில், அரசியர் ஏவிய பணிகளை இனிது செய்து வந்தவை, இக்குழப்பத்தைப் பற்றியேனும், அதனிடையே நிகழும் விரிவுரைகளையேனும் ஒரு பொருளாக நினையாது தம் தொழிலிலே தம் கருத்தைச் செலுத்தி நின்றன. நிற்க, குழப்பத்திற் கலந்த ஈக்குழாத்தினிடை நிகழ்ச்சிகள் பல நிகழ, முதிரா ஈக்களிற் சில முனிவு மீதுாரக் கொண்டு, அதனால் தம்மையும், தம் மனத்திண்மையையும் இழந்து, பெருங்கலக்கத்தை விளைவிக் கும் நிலைமையெய்தின. அதுபோது, இக்குழப்பத்திற்கு முதற்காரணமாகவிருந்த ஈ அவற்றின் முன்னர், "அன்பர்களே! நீங்கள் கைக்கொண்ட இயக்கம் நன்மை பயக்கக் கூடியதே. எனினும், இடையிலிருக்கும் ஒரு பொருளை நீங்கள் எண்ணாது போய்விட்டீர்களே! அப்பொருள் தான் எதுவெனின், நீங்கள் அனைவரும் முதிர்ந்துவிட்டமையன்றோ? நான் முதிர்ந்த உங்களை எவ்வாறு இனி அரச ஈக்களாக மாற்றுவது, கூடாதன்றோ. ஆயினும், நாம்கொண்ட இயக்கத்தின் வெற்றிக் கடையாளமாக யாதானுமொரு புதிய முடிபை எய்துதல் வேண்டும். என் அறிவிற்கெட்டிய முடிபொன்றைக் கூறுகிறேன் கேளுங்கள். பிறகு உங்கள் விருப்பம்போற் செய்யுங்கள்" என்றது. உடனே, அவ்வீக்களனைத்தும் ஒருபடியாக நீ கூறுகின்றவற்றை யாங்கள் மிக்க விருப்புடன் ஏற்றுக் கொள்ளுகிறோம். சொல்லியருள்க" எனப் பேரொலியிட்டுக் கூறின. கூறலும், அது புன்னகை தவழும் இன்முகங்கொண்டு, "அன்பர்களே! நாளின் முதிர்ந்த நமக்கு இனி அரசியர் வேண்டுவதில்லை. நாம் அனைவரும் இன்றிருப்பது போலவே தொழிலீக்களாகவே யிருப்போம்; நாம் இனி ஒருவருக்கு அடிமைப்பட்டு அவர்கள் காலாலிடும் ஏவலைத் தலையாற் செய்தல் வேண்டா. நாமார்க்கும் குடியல்லோம்! நலமே வாழ்வோம். நம்மைக் கேட்பவர்க்கும், தூய வீரத்தோடும் “யாம் யார்க்கும் குடியல்லோம். யாதும் அஞ்சோம்’ எனவே, நாம் இனிக்கூறுவோம். இதுவே என் சிற்றறிவிற கெட்டிய முடிபாகும். யான் கூறியவற்றில் குற்றங்களிருந்தாற் பொறுத்துக் கொள்ளும்படிக் கேட்டுக்கொண்டு, இம்மாட்டோடு என் சிறிய விரிவுரையை நிறுத்திக்கொள்ளுகிறேன், என்றது. எனவே, வண்டினம் முற்றும் கம்மெனும் இசை செய்து "இது தகும். தகும் தகும்!!" என உடன் பட்டன. பின்னர், அவைகள் ஒருங்கே திரண்டு தாம் இனித்தமித்து வாழ்தற்கேற்ற இடம் நிறுவுதற் பொருட்டு மறுமுறையும் ஒரு கூட்டம் கூடின. இதுபோது இவற்றிற்குத் தலைமைபூண்டு இயல் நெறியிற் செலுத்த வல்லதாய ஒன்றும் வரவில்லை. ஆகவே, அக்கூட்டத்தில் ஒருவகைக்கட்டுப்பாடும் ஒழுங்கும் இலவாயின. என் செய்வது இதுவும் உலகவியற்கையே!!

நிற்க, இடம் நிறுவுதற் பொருட்டு நிகழ்ந்த இக்கூட்டத்திடை, "ஒன்று எழுந்து, காட்சிக்கினியவும் கள் நிறைந்தவுமான மலர்கள் செறிந்துளதும், இதோ நம்முன்னர்த் தோன்றுவது மாய சோலையே நாம் இனிது வாழ்தற்கேற்ற இடமாகும்" என்றது; மற்றொன்று எழுந்து, "அச்சோலையினும், அதற்குச் சிறிது சேய்த்துள்ள வயலே இனிதாகும். சோலைக்கு வருவாரும், வருவனவும் பலவாதலானும், காற்றும் எஞ்ஞான்றும் விரைவுடன் மோதியலைத்தலானும் நமக்கும், நம் கூடுகட்கும் தீங்குவிளையினும் விளையும்." என்றது; வேறொன்று, "நன்கனம் அமைத்துள்ள வீடொன்றின் கூரையே மேற் கூறப்பட்ட விரண்டினும் நன்றாகும். அன்றியும் அது நம்மை மழைக்காலத்தில் இனிது "காக்கவல்லதாகும்” என்று சொல்லிற்று. நான்காவதாக, வேறொன்று, "பழுமரமொன்றின் கொழுவிய கிளையே நல்லது" என, மற்றொன்று, மலை முழைஞ்சினையும், வேறொன்று கற்பாறையையும் குறித்தன. இங்ஙனம், ஒவ்வொன்றும் தன்தன் கருத்திற் புலனாய இடங்களைக் கூறிச் சென்றனவே யொழிய, உறுதியான இடம் ஒன்றேனும் குறிக்கப்பெறவில்லை. அன்றியும், ஒன்று கூறியது மற்றொன்றின் கருத்துக் கொவ்வா தொழிந்தது.

இவ்வண்ணம் ஈக்கள் ஒன்றுக் கொன்று முரணிய கருத்துக் கொண்டு, கலாய்த்து நிற்பக் காலமுஞ்சென்றது; பிற்பகல் எய்திற்று. அதுபோது, அத்தேனீ இவ்வியக்கத்துக்குக் காரணமாயிருந்த அத்தேனீ - வேறோரீயினை நோக்கி, ‘என்னே உங்கள் அறிவின்மை யிருந்தவாறு! உங்களைக் காணும்தோறும் என் உளத்தில் வெகுளி யெழுகின்றதேயன்றி விருப்புண்டாகின்றதில்லை. எத்தகைய அறிவுள்ள சிற்றுயிரும் இவ்வண்ணம் வீணே காலத்தைக் கழிக்காது. அந்தோ! இதனை அறிவின்மை யென்பதா? அறியாமை யென்பதா?" என, அது சாலவும் சினந்து, என்னை கூறினை? ஏ, அறிவிலி! உனக்கு ஈயரசு பெறவேண்டும் எனும் எண்ணம் உளது போலும்! அறிந்தேன். அறிந்தேன். இன்றேல், நீ என்னை இங்ஙனம் கேட்டல்கூடுமா? நிற்க, யாங்கள் காலத்தை வீணேகழிப்பதால் உனக்கு உண்டாகும் இழவென்னை? யாங்கள் எதையேனும் செய்கிறோம். அது பற்றி நீ வெகுளுதல் எற்றுக்கு? நீ உன் காரியத்தைப் பார்த்துக் கொள்க.” என்றறைந்தது. இத்தகைய மாற்றத்தை எதிர் நோக்காது பெற்ற அத்தேனீ, மனமுளைந்து, தனக்குண்டான மானத்தையும், இழிவையும், உன்னியுன்னிப் பெரிதும் வருந்தத் தொடங்கிற்று. அப்போது, தான் அக்கிளர்ச்சிக்குக் காரணமாயிருந்தமையையும், அதனால் தனக்கே துன்ப மெய்தினமையையும் அது எத்துணையோ அடக்கிக்கொள்ள முயன்றது. மற்று, அம்முயற்சியாற் பயனொன்று முண்டாயிற்றன்று. ஆகவே, அது மற்ற ஈக்களின் முக்த்தைக் காணுதற்கே வெட்கி, சிவ்வென் றெழுந்து பூம்புதரொன்றை யடைந்து, பண்டேபோல் தேன்றேடத் தொடங்கிற்று. புதர்க்குட் புகுந்து, ஆண்டு அழகு ஒளிர மலர்ந்து நின்ற மலரொன்றின் உட்புகுந்து, தான் இதுகாறும் கண்டறியாத சுவையும், மிகுதியுமுடைய தேனுண்டு களித்தது. ஆ" இது போதன்றோ அது களிவண்டென்னும் பெயர்க்கு இலக்காயிற்று! அது இதுபோது கொண்ட களிப்புக்கு ஒர் எல்லையுமின்று! அது தன் வாணாளி லோர்நாளிலேனும் இதுபோன்ற களிப்பினை யடைந்த தின்றெனின் வேறு கூறுவதென்னை வேட்கை முற்றுங் காறும் நறவமுண்டு, வேண்டுவனவும் உடன்கொண்டு தன் கூடு நோக்கி, என்றும் அறியாத ஒருவகைப்பற்று, அன்று அதன் மனத்தை ஈர்ப்ப, அது விரைந்தெழுந்தது. எழுதலும், அதன் முன்னர், பண்டு தான் கேட்டறிந்தனவற்றை முதன் முதலுரைப்பக் கேட்ட முதிர்ந்தவண்டு போதந்தது. கண்டதும், அதற்குப் பெரு நாண் எழுந்து அறிவை மயக்க, அருகிருந்த மலரொன்றிற்குச் சென்று மறைந்தது. ஆயினும் அம்முதிர்வண்டு, நடந்தனவற்றைக் குறிப்பாக வுணர்ந்தும், ஒன்றும் தெரியாததையொப்பக் கூர்த்த நோக்கத்தோடு, "என்கொல்! நீ ஏன் இங்கு வந்தனை? உனக்கு உற்ற தென்னை? நீ வந்திருப்பாய் என யான் ஒருகாலும் நினைத்ததின்றே! ஓ! உன் உழைவண்டுகள் யாண்டுள? அவற்றை நீ பிரிதற்கேய்ந்த காரணம் யாதோ? கூறுதி” என வினவிற்று.

இதைக்கேட்ட அக்களிவண்டு, பெரிதும் நாணி, "யான் அறியேன்; சோலையின் புறத்தே யான் அவற்றைப் பிரிந்து போந்தேன் ஆதலின்" என்றது.

மு. வண்டு:- அவை யாது செய்துகொண்டிருக்கின்றன?

க.வ :- க-லா-ய்-க்-கி-ன்-ற-ன-போ -லு-ம்

மு.வ :- (விரைந்து.) என்னோ காரணம்?

க.வ :- தாம் இனிச்செய்ய வேண்டுவனபற்றி.

மு.வ :- ஆ! என்ன அருந்தொழில் புரிதல் நேர்ந்தன! நன்று! இளவேனிற்காலத்து இனிய காலையில் மேற்கொள்ளப் பட்டதன்றோ இத்தொழில் நன்று! நன்று! செய்கறிய செய்வதன்றோ பெரியோரது தொழில்!

க.வ - :- எள்ளுதல் வேண்டாம் .ஏ! அன்னாய்!! இனியும் இன்னணம் இழித்துக்கூறற்க. என்னைப் பொறுத் தருள்க. இனி யான் செய்ய வேண்டியவற்றையும் பணித்தருள்க. ஒன்று மட்டில் கூறுகின்றேன்; யான் முன்னர்ச் சென்றிருந்த ஞான்று இயற்கையின் இயல்பையும், நம்மனோரின்றன்மையையும் பற்றிக் கேள்வியுற்ற உரை முற்றிலும் வாய்மையாகவே தோன்றிற்று; எனினும், நாம் அவ்வுரைவழி நிற்பான் முயலுங்காலத்து, வீணே கலாய்த்தலும் வெறுத்தலும் செய்தல் நேர்கின்றதேயன்றிப் பெரும் பயனொன்றும் பெறுமாறில்லை. என்னை?

மு.வா :- நிற்க, நின் வயதென்னை.

க.வ :- (இளமைத் தன்மையொடு நாண்மீக்கொள) ஏழு

நாட்களே.

மு.வ :-என் வயதென்னை யறிதியோ?

க.வ :- பல திங்களாம்போலும்.

மு.வ :-ஆம். ஆம்! பல திங்கள் முதிர்ந்து உளேன். நீ கூறிய துண்மையே. யான் நாள் முதிர்ந்த ஒரு வண்டே நிற்க. வருக நாம் இருவரும் பொருது பார்ப்போம்.

க.வ :-ஓ! ஓ!அது கூடாது; கடவுளாணையாக அது ஒரு காலும் கூடாது. யான் கட்டிளமையுடைமையின் பயனாய வலியுடையே னாகலின், நினக்கு ஊறு இழைக்கினும் இழைப்பன்.

மு.வ :-எனவே, நம்மிருவருள் வன்மையற்ற எளியன் யானன்றே. அற்றாக, இளமையும் வன்மையு மிக்க நின்னை என் மாட்டு அறிவுரை கேட்கத்துண்டியது யாது கொல்? இஃது ஓர் வியப்பையன்றோ தருகிறது!

க.வ. :-அற்றன்று. மெய்வன்மைக்கும் அறிவின் வன்மைக்கும் தொடர்பொன்று மின்று. யான் நின்மாட்டறிவுரை கேட்பான் துணிந்தது நீ அறிவுடையை என்பதை யான் நன்குணர்ந்தமையே யாகும். யான் அஃதில் லேனாகலின், இதுபோது இழித்தக்க நிலையை யெய்தியுளேன்.

மு.வ :- முதுமையும் இளமையும் - வன்மையும் மென்மையும் - அறிவும் அறியாமையும் - ஆ! ஏனோ ஒத்த பிறவியும், ஒத்த நிலையும் பொருளாகக் கிளர்ச்சிசெய்த வண்டுகட்கு? எனினும், வருந்தற்க. நாம் இவற்றை யோர் ஒழுங்கிற்குக் கொணர்தல் கூடும். நிற்க, இனி நாம் இருவரும் ஒத்து வாழ்தலாமா? என்னை நின் கருத்து?

க.வ :-என் இன்னுயி ராணையாக, யான் - இன்றே, ஏன்! இன்னே உடன்படுகின்றேன். நாம் வாழ்தற்கு இடம் யாது? .

மு.வ :-அஃதன்று நான் முதற்கண் வேண்டுவது. நம் இருவர்க்கும் கருத்துக்கள் முரணாங் காலத்து இடைநின்று தகுதி நோக்குவார் யாவராதல் வேண்டும்.

க.வா :- நீயே! என்னெனின் நீயே முதுமையும், அறிவின் திண்மையும் உடையை.

மு.வ :- நன்று, நல்லுணவாய தேன் நாடிச் சென்று கொணருநர் யாவராதல் வேண்டும்?

க.வ :- யான். யானே!

“இளைஞன் வலியன் ஏவின செய்யும்

உளையா முயற்சியன் ஒருவன் யானே.”

மு.வ :- மிகவும் நன்று. ஆகவே, நீ என்னை இதுபோது அரச ஈயாகவும் நின்னைத் தொழிலியாகவும் கருதிவிட்டனை யன்றோ?

க.வ :- ஆம் ஆம்.

மு.வ :-என்னே நின் அறியாமை இது முடிபாயின், நமது பண்டையகூட்டுக்கும், நாம் பேணிநின்ற. அரச ஈக்கும் நேர்ந்த குறை யாதோ? அன்றியும் நம் இருவர்மாட்டே, ஒருவர் தலைவராக ஒருவர் ஏவலிளைஞராதல் வேண்டும் என்பது பெறப்படுகின்றதன்றோ, ஆகவே, பல்லோர்கூடிய கூட்டத்துள் இவரன்ன தலைவராவா ரொருவர் வேண்டப்படுவதனை உரைத்தலும் வேண்டுமோ?

இதனைக் கேட்டலும் அவ்வீக்கு நல்லுணர்வு தோன்ற, அது மிக்க உவகை பூத்துத் தன் ஏனைய இனங்களை நோக்கிச் சிவ்வென்றெழுந்தது. அதுபோழ்து, ஏனைய ஈக்களெல்லாம் குழப்பம் செய்துகொண்டேயிருந்தன. அவற்றுட் சிலமட்டும் தம் வன்மையும், எழுச்சியும் குன்றாதிருந்தனவே யன்றிப் பிறவனைத்தும் குன்றிப் பசியால் வருந்தின. சிறிது பொழுது கழிதலும், சில தம் வழக்கப்படியே தேன் தேடச்சென்றன; சில தம் கூட்டை யடைந்தன.

இங்ஙனம் இவை பெருகுழப்பங் கொண்டு உழலாநிற்ப, இளமையும் ஊக்கமும் மிகுதியாக்கொண்ட பல ஈக்கள் புடைசூழ, அம்முதிர்வண்டு, நறுந்தேன்கொண்டு ஈயரசியிருந்த வெழிற் பெருங்கூட்டைச் சென்றடைந்தது. ஆண்டுக் காவல் புரிந்து நின்ற சிற்றியொன்று, அதனையுட்புக விடாது தகைந்தது.

அவ்வண்டு அதனைக் காரணம்வினவ, அது தன் ஈயரசி பிறந்துபட்டதாகவும், அதற்காங்கடன்கள் நடைபெறுவதாகவும், ஆண்டு ஏனைய ஏகுதல் கூடாதெனவும் கூறிற்று.

கூறலும், அக்களிவண்டு, உளங்கலங்கி, "ஐயோ! எவ்வாறு இறந்தனர் நம் அரசியார்! ஆ!நெல்லு முயிரன்றே நீரு முயிரன்றே, மன்னருயிர்த்தே மலர்தலை யுலகம் ஆ! இனி நமக்குத் தலைமை தாங்கி நம்மை நன்னெறியில் நடாத்துவார் யாவரோ ஏ!காவல! நம் அரசியார் இறந்தது. உண்மையோ கூறுக."என இணைந்து கூறலும், அது, “ஆம். ஆம். இன்றுகாலை கூட்டைக் காக்கும் ஈக்களுட் சில வெளிச்சென்றிருந்த பொழுதை நோக்கி, இளமைமிக்க ஈயரசியொன்று, வெளிப்போதல் கூடாது எனினும், போதந்து, நம் அரசியொடு கலாய்த்துக் கொன்று விட்டது" என்றது.

முடிவில் அக்களிவண்டு தன் அரசி சாதற்கு அடிப்படையாக நின்றது தானே என்பதையும், தன்னா னிகழ்ந்த குழப்பத்தின் பயனே இது வென்பதையும் நினைத்தொறும் அதன் நெஞ்சு அதனைச் சுட்டது; பின்னர் அம்முதிர்வண்டு களிவண்டை நோக்கி, “ஈயரசுகட்கே ஒத்தநிலைமையின்று; அவை பிறப்பினால் ஒத்தன வேனும் தம் தொழிலாற்றான் சிறப்படைகின்றன: ஆதலின், பிறப்பொத்த தோற்றத்தேம் எனினும் சிறப்புறு தொழிற் செய்து உயர்வுபெறுதலன்றோ அமைவுடைத்தாம்"என்றது.

நெஞ்சு சுட வருந்திய அவ்வண்டும் பின்னர்த்தன் தொழினாடி மலர் வனம் புக்கது. யாண்டும் அமைதியே நின்று விளங்கிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=செம்மொழிப்_புதையல்/004-020&oldid=1625127" இலிருந்து மீள்விக்கப்பட்டது