புல்லின் இதழ்கள்/குருவின்றி வேறில்லை
பாகவதர் எதிர்பாராமல் திடீரென்று நெஞ்சு வலி வந்து அவஸ்தைப்படுவது புதிய அநுபவமல்ல. இரண்டு வருஷங்களுக்கு முன்பு மதுரையிலும், ஆறு மாதங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்திலும் கச்சேரி முடிந்ததும், இதே போல் நெஞ்சு வலி கண்டது. அங்குள்ள ரசிகர்களும், சபாக் காரியதரிசியும் பதறிப் போயினர். ஐந்து நிமிஷத்துக்குள், மூன்று டாக்டர்கள் வந்து விட்டனர். அவர்கள் பாகவதருக்கு உடனடியாகச் சிசிச்சை செய்து குணப்படுத்தினாலும், அவரது உடம்பைப் பரிசோதித்த அவர்கள், ‘உங்கள் இதயம் பலவீனமாக இருக்கிறது. நீங்கள் சிறிது காலம் கச்சேரியே செய்யக் கூடாது. நல்ல ஒய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று வற்புறுத்தத் தவறவில்லை.
ஆனால் பாகவதர் அதைச் சரி என்று கேட்டுக் கொண்டாலும், பிறகு தம் விருப்பப்படிதான் நடந்து கொண்டார். பாடத் தெரிந்த வாயை மூடத் தெரியவில்லை.
“வேறு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வேன். ஆனால் என்னால் பாடாமல் மட்டும் இருக்க முடியாது. அப்படிப் போகிற உயிரானால், அது ஆனந்தமாகப் பாடிக் கொண்டிருக்கும் போதே போகட்டும். தம்பூராவை மீட்டிக் கொண்டே ராமனுடைய பாதார விந்தத்திலே போய்ச் சேர்ந்து விட வேண்டும் என்றுதான் எனக்கும் ஆசை” என்று கூறி விட்டார்.
அதன்படியே, அஞ்சாமல் தொழில் புரிந்தார். ஆனால், மூன்றாவது தடவையாக இப்போது நெஞ்சு வலி வந்து விடவே தம்முடைய எதிர்காலத்தையும், தமக்குப் பிற்காலத்தையும் பற்றி அவருக்கு அச்சம் உண்டாயிற்று. சிந்தனையில் ஆழ்ந்து போனார்.
திருவிடைமருதூரிலிருந்து சுந்தரியையும், வசந்தியையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்த லட்சுமிக்கு, கணவருடைய கட்டிலைச் சுற்றியிருந்த கூட்டத்தையும், டாக்டரையும் பார்த்ததும் வயிற்றைக் கலக்கியது. வைத்தியம் பார்த்த டாக்டரைக் காயத்திரி கேட்ட கேள்வியும், அவர் அளித்த பதிலும் இருதயத்தையே நிறுத்தி விடும் போல் இருந்தன. “இந்தக் கண்டத்துக்கு அண்ணா பிழைத்தது மறு பிழைப்புத்தான். ஆனால், இனி மேல் கொஞ்ச நாளைக்குக் கண்டிப்பாக அவர் பரிபூரண ஒய்வு எடுத்துக் கொண்டாக வேண்டும்” என்று இதற்கு முன் பலர் கூறியதையே அவரும் எச்சரித்து, மருந்தும், மாத்திரைகளும் எழுதிக் கொடுத்துச் சென்றார்.
டாக்டர் கூறியபடியே மருந்துகளை வாங்கி வந்து, அவர் குறிப்பிட்ட நேரப்படி ஹரி தவறாமல் கொடுத்தான். காலை ஏழு மணிக்கு இருந்த நிலைமை மாறி, பத்து மணிக்குப் பாகவதரால் சுமாராகப் பேச முடிந்தது.
“எல்லாரையும் மிகவும் பயமுறுத்தி விட்டேன்; இல்லையா?” என்று சுந்தரியையும், வசந்தியையும் பார்த்து அவர் கேட்டார்.
அதற்கு அவர்கள் எந்தவிதப் பதிலையும் கூறாமல், உண்மையிலேயே பயந்தபடி நின்றனர்.
பக்கத்தில் இருந்த ஹரியின் பக்கம் அவர் திரும்பிப் பார்த்தார். “பஜனை மடத்திலிருந்து யாராவது வந்திருந்தார்களா?” என்று கேட்டார்.
“காரியதரிசியும், கணபதியும் வந்திருந்தார்கள். இரவு எட்டு மணிக்குக் கச்சேரியாம். ஏழரைக்கெல்லாம் புறப்பட்டு வந்தால் போதும் என்று சொல்லிவிட்டுப் போனார்கள். மருந்து வாங்கிக் கொண்டு வரும் போது பார்த்தேன்: வழக்கம் போல் பந்தலெல்லாம் பெரிதாகப் போட்டிருக்கிறார்கள். வழக்கத்தை விட இந்தத் தடவை சுவரொட்டியைப் பெரிசாக அச்சடித்து, எல்லா வித்துவான்களுடைய பெயர்களும் போட்டிருக்கிறார்கள்” என்று கூறினான் ஹரி.
“முதலில், உன் பெயர் போட்டிருக்கிறதா?” என்று பாகவதர் கேட்டார். ஹரி அதற்கு எந்தப் பதிலும் கூறாமல் மௌனமாக நின்றான். ‘எனக்கு ஏது பெயர்? நானும் என் பெயரும் எல்லாம் நீங்களே உருவாக்கியதல்லவா?’ என்று அவன் மனத்துக்குள்ளேயே எண்ணங்கள் உருண்டோடின,
“என்ன ஹரி, நான் கேட்டேனே? நோட்டீசில் இன்றையக் கச்சேரி யார் என்று போட்டிருக்கிறது?” என்று. பாகவதர் அதே கேள்வியைத் திரும்பவும் கேட்டார். அதற்குள் வசந்தி சிரித்துக் கொண்டே, “நான் சொல்லுகிறேன் அப்பா, உங்களுடைய பெயர்தான் போட்டிருக்கிறது” என்றாள்.
“என் பெயரா?” என்று ஆச்சர்யத்துடன் கேட்டார் பாகவதர்,
“ஆமாம் அப்பா. சங்கீத சாகரம் மகாவித்துவான் சுப்பராம பாகவதர் என்பதைத்தான் பெரிய கொட்டை எழுத்தில் போட்டிருக்கிறார்கள். பிறகு அவர்களின் சிஷ்யன் ‘ஹரி பாடுவார்’ என்பதைப் பூச்சிப் பறக்கிற மாதிரி எழுத்தில், அருகில் வந்து பார்த்தாலன்றித் தெரியாதபடிப் போட்டிருக்கிறார்கள்” என்று தன் குறையை மறைமுகமாகத் தெரிவிப்பது போல், ஆதங்கத்துடன் கூறினாள் வசந்தி.
“பரவாயில்லை. பெரிய எழுத்தில் போடா விட்டாலும்? சிறிய எழுத்தில் பெரிய வித்துவான் இருக்கிறான் என்பதை ஹரி நிரூபித்து விட்டால் போகிறது” என்று மெதுவாகக் கூறி விட்டுப் பிறகு, ஹரியிடம் தனிமையில் கூறினார்: “நீ இப்போதே அரசூருக்குப் போய் உன் அப்பா, சித்தி, மாமா எல்லாரிடமும் உன் அரங்கேற்றத்தைப் பற்றிச் சொல்லி, ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு வந்து விடு” என்றார்.
ஆனால் வாயே திறக்காத ஹரி, அந்த இடத்தை விட்டு அசையவில்லை. பாகவதர் வற்புறுத்தினார்.
“முன்பே ஒரு சமயம் உன் மாமா, ‘இன்னும் அரங்கேற்றம் ஆகவில்லையா?’ என்று கேட்டதாகச் சொன்னாய். இப்போது சொல்லா விட்டால், பின்னால் பேச்சுக்கு இடமாகாதா?” என்று அவர் கேட்டுக் கொண்டிருந்த போதே ஹரி, நெடுஞ்சாண் கிடையாக விழுந்து, குருவின் இரு பாதங்களையும் பிடித்துக் கொண்டு கூறினான்;
“எனக்கு இவைதாம் உலகத்தில் தாய், தந்தை, சுற்றம், உறவு அனைத்தும் என்றோ எல்லாவற்றையும் உதறி வந்து விட்ட என்னைக் கொண்டு போய், மீண்டும் எதிலும் ஒட்ட வைக்க வேண்டாம். என்னைப் பற்றி எதற்கும் கவலைப்பட, இந்த உலகில் யாரும் இல்லை. அவர்களுக்கு வேண்டியவை நானும் என் நலனுமல்ல; என் உழைப்பும், நான் ஈட்டும் பொருளுமே. நான் உழைத்துப் பொருளீட்டும் போது என் கடமையைச் செய்தால் போதும். இப்போது என்னைத் தாங்கள் எங்கும் அனுப்ப வேண்டாம்” என்று ஹரி மிகவும் பணிவோடு மறுத்துக் கூறி விட்டான்.
பாகவதர் அவனை அன்புடன் அணைத்து, அவன் முதுகை வருடி, “உன் விருப்பம் அதுவானால், அப்படியே நடக்கட்டும்” என்று கூறினார்.
நெஞ்சிலிருந்த ஏதோ பெரிய பாரத்தைக் கீழே உதறி விட்டாற் போல்; அதன் பிறகுதான் ஹரியின் மனம் சமாதானம் அடைந்தது. சற்றுக் காலாறக் காவிரிக் கரைப் பக்கமாக நடந்து வந்தான்.
பஞ்சு அண்ணாவும், ராஜப்பாவும் இப்படிச் செய்வார்கள் என்று, ஹரி நினைக்கவே இல்லை. தன்னுடைய குரு அழைத்துங்கூட, அவர்கள் ஒத்திகைக்கு வராததுதான் அவன் மனத்தில் வேதனையை மூட்டியது. ‘பாகவதர்தாம் படுக்கையில் விழுந்து விட்டாரே, இனி மேல் என்ன?’ என்ற நினைப்பா, அல்லது, ‘அரங்கேற்றக் கச்சேரிதானே!’ என்கிற அலட்சியமா? எதுவாக இருந்தாலும், இவர்களுக்குப் புத்தி வர வேண்டும் என்று அவன் மனம் தவித்தது. ஆனால்—
ஹரி வீட்டுக்குள் நுழைந்த போது, பிடில் பஞ்சு அண்ணாவும், மிருதங்கம் ராஜப்பாவும் பாகவதர் அருகில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் வந்திருக்கிற காரணத்தை உணர்ந்து கொண்ட ஹரி, சட்டென்று உள்ளே சென்று தம்பூராவோடு வந்து உட் கார்ந்து கொண்டான்.
“பத்து நாளாவது பிடில், மிருதங்கத்தோடு சேர்த்துப் பாட வைத்து, உன்னைத் தயார் பண்ண வேண்டுமென்று நினைத்தேன். பஞ்சு அண்ணாவுக்கும், ராஜப்பாவுக்கும் இன்றுதான் தயை பிறந்திருக்கிறது. இப்போது நீ, மேடையில் கச்சேரி பண்ணுவதாகவே நினைத்துக் கொண்டு பாடு. அதுதான் ஒரே வழி. இப்போது கூட இவர்கள் இருவரும் இங்கே வரவில்லையானால், நீ என்ன செய்வாயோ அப்படி நினைத்துக் கொண்டு பாடு” என்றார் பாகவதர் ஹரியிடம்.
இந்த வார்த்தை பஞ்சு அண்ணாவுக்கும், ராஜப்பாவுக்கும் சற்று துன்புறுத்துவதாகத்தான் இருந்தது. எத்தனைதான் வெளியூர்க் கச்சேரிகள் இருந்தாலும், ஹரியின் அரங்கேற்றத்துக்கு அவர்கள்தாம் பக்க வாத்தியம் என்று ஏற்பாடான விஷயம். மனம் இருந்தால், நிச்சயம் எப்படியும் ஒரு வாரமாவது ஹரியுடன் சேர்ந்து வாசித்து, அவனது கூச்சத்தைப் போக்கியிருக்க முடியும். அவர்கள் அப்படி நடந்து கொள்ளவில்லை. அதை மனத்தில் வைத்துக் கொண்டுதான் பாகவதர் அப்படிக் கூறினார் என்பது அவர்களுக்குப் புரிந்தது.
அதே போல, குருவின் நோக்கம் என்ன என்பதும், அவர் எதை மனத்தில் வைத்துக் கொண்டு இப்படிப் பேசுகிறார் என்பதும், ஹரிக்கும் நன்கு புரிந்தது. ஆனால் ‘பஞ்சு அண்ணா மீதும், ராஜப்பா மீதும் உள்ள நம் வருத்தத்தைக் காட்ட வேண்டிய இடம் இது அல்ல’, என்று மனத்துக்குள் முடிவு செய்து கொண்டான். மறுகணம் எல்லாவற்றையும் மறந்து, சுமார் இரண்டு மணி நேரம் ஹரி பாடினான். ஆனால் திருவிடைமருதூரில் பக்க வாத்தியம் இல்லாமல் அவன் பாடிய திறமையில் பாதியைக் கூடப் பாகவதரால் அன்று ஹரியின் பாட்டில் காண முடியவில்லை. ‘ஒரு வேளை பையன் பெரிய பக்க வாத்தியத்தைப் பார்த்ததும் பயந்து விட்டானோ?’ என்று அவர் மனதுக்குள் எண்ணிக் கொண்டார். ஆயினும் தம் ஐயத்தை அவர் வெளிப்படுத்தி, அவனை அதைரியப்படுத்த விருப்பமில்லாமல் உற்சாகப்படுத்தினார்.
பஞ்சு அண்ணாவும், “பிரமாதமாகப் பாடுகிறானே! கீர்த்தனைகள் எல்லாம் கச்சிதம். ராகங்கூட பரவாயில்லை. போகப் போகச் சரியாகி விடும். நிரவலும், ஸ்வரமும் இன்னும் கொஞ்சம் விஸ்தாரமாகப் பாடினால், கச்சேரி ‘ஏ ஒன்’ தான். ‘வழி’ எல்லாம். அவ்விடத்துப் பாணி அப்படியே சொட்டுகிறது” என்று கூறினார். ஆனால் அதையெல்லாம், பாகவதர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
“சரி, அப்போ நீங்கள் எல்லாரும் நேரே மடத்துக்கே வந்து விடுகிறீர்களா? இவனும் இங்கிருந்து நேரே அங்கே வந்து விடுவான்” என்று கூறி, “என்ன ஹரி?” என்று அவனைப் பார்த்துக் கேட்டார்.
“ஆமாம், நானும் அப்படித்தான் நினைத்தேன். இவர்கள் நேரேயே மடத்துக்கு வந்து விடட்டும் நாம் இங்கிருந்து போய் விடலாம்” என்றான்.
“அப்படியே” என்று பஞ்சு அண்ணாவும், ராஜப்பாவும் விடை பெற்றுக் கொண்டு, ஹரியைப் பார்த்துத் தலையை ஆட்டிச் சென்றனர்.
அவர்கள் சென்ற பிறகு, ஹரி தம்பூராவைக் கீழே வைத்தான். கட்டிலில் இருந்த பாகவதருடைய பாதங்களில் முகத்தைப் பதித்துக் கொண்டு, சிறு குழந்தையைப் போல் தேம்பித் தேம்பி அழுதான். அந்த அழுகைக்குக் காரணம் அவருக்கு மட்டும் புரிந்தது. அவனைத் தேற்றினார்.
உலகத்திலுள்ள மகிழ்ச்சியெல்லாம் உருண்டு திரண்டு, பாகவதரின் நெஞ்சில் குடி கொண்டிருந்தது. சுசீலாவும், வசந்தியும் கச்சேரிக்குப் போகத் தங்களைச் சிங்காரித்துக் கொண்டிருந்தனர். அதிலும் அவர்களுக்குள் போட்டி மூண்டது.
சுசீலாவும், வசந்தியும் புடவையையும், பின்னலையும் போட்டி போட்டு மாற்றி, மாற்றி அலங்காரம் செய்து கொள்வதைக் கண்டு, கச்சேரி செய்யப் போவது ஹரியா அல்லது இவர்களா என்று எண்ணி சுந்தரியும், லட்சுமியும் சிரித்துக் கொண்டனர்.
ஹரி கச்சேரிக்குத் தயார் செய்து கொண்டு குருவின் அருகில் வந்து நின்றான். அவனைத் தம் பக்கத்தில் உட்காரும்படி சமிக்ஞை செய்தார் பாகவதர்.
இதற்குள், வசந்தி நச்சரித்துக் கொண்டிருந்த ஒரு விஷயம் ஹரியின் நினைவுக்கு வந்தது. கேட்டால் நடக்காது, சரியில்லை என்பதுடன், அதைப் பற்றிக் குருவிடம் கேட்கவும் அவனுக்குத் தைரியமில்லை.
ஆயினும், அவள் அந்த அறைக்குள் வருகிற சமயம் பார்த்து, “வசந்திக்கு உங்களிடம் ஏதோ கேட்க வேண்டுமாம்” என்று மெதுவாகக் குருவிடம் கூறினான்.
பாகவதர் பெண்ணைப் பார்த்தார். “ஒன்றுமில்லையப்பா; இன்று இவர் கச்சேரிக்கு நான் தம்பூராப் போடலாமா என்று கேட்டேன்; அதுதான்” என்றாள்.
அதற்குப் பாகவதர் பதில் சொல்வதற்குள், சுசீலா ஹரியின் தம்பூராவையே கையில் எடுத்துக் கொண்டு வந்தபடி “அப்பா, இன்று நான்தான் கச்சேரிக்கு தம்பூரா போடப் போகிறேன்” என்ற வண்ணம் அறைக்குள் நுழைந்தாள். இதைக் கண்ட ஹரிக்கும், வசந்திக்கும் தூக்கி வாரிப் போட்டது.
பாகவதர் நிதானமாக வசந்தியின் பக்கம் திரும்பி, “அதோ அந்த அறையில் என்னுடைய தம்பூரா இருக்கிறது. அதை எடுத்துக் கொண்டு வா” என்றார். வசந்தி சந்தோஷத்தோடு வேகமாகச் சென்று, அதை எடுத்துக் கொண்டு வந்தாள்.
“சரி, நீங்கள் இரண்டு பேரும் சுருதி சேர்த்துக் கொண்டு, தம்பூரா போடுங்கள். ஹரியின் கச்சேரியை இன்னொரு நாள் சாவகாசமாக வைத்துக் கொண்டால் போகிறது. அதற்கு இப்போது என்ன அவசரம்? இன்று உங்கள் தம்பூராக் கச்சேரி நடக்கட்டும்” என்றார்.
அப்பா இப்படித் தங்களை ஏககாலத்தில் அவமானப் படுத்துவார் என்று அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை. வசந்தி தம்பூராவை அதன் இடத்தில் வைத்து விட்டுத் திரும்பினாள். சுசீலாவினால் பொங்கி வந்த அழுகையை அடக்க முடியவில்லை.
“பஜனை மடத்தில் தம்பூராப் போடறத்துக்குன்னு ஒருத்தர் இருக்காரே, உங்களுக்கேன் சிரமம்? இந்த மாதிரி வழக்கமில்லாத வழக்கமெல்லாம் செய்யலாமா? பத்துப் பெரிய மனிதர்களும், வித்துவான்களும் வந்து கூடுகிற இடம் அல்லவா அது?” என்றார். சகோதரிகளுக்கும் அப்போதுதான் தங்களுடைய தவறு புரிந்தது.
மணி ஏழு அடித்தது. அடுக்களைக் காரியங்களையெல்லாம் முடித்துக் கொண்ட லட்சுமியம்மாள், கணவருக்கு ராத்திரிக்கு வேண்டிய ஆகாரத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு, அந்த அறையில் கொண்டு வந்து வைத்தாள். சுந்தரியும் அங்கு வந்தாள்.
அவளுடைய அழகையும், அன்றைத் தோற்றத்தையும் கண்ட பாகவதருக்கு, இறந்த கால நினைவுகள் வந்தன. காயகல்பம் சாப்பிட்ட மாதிரி வயதினால் தீண்டப்படாத அவளுடைய உடற்கட்டையும், அழகையும் கண்டு மனம் பூரித்தார். இந்தக் கோலத்தில் அவர் சுந்தரியைக் கண்டு பல வருஷங்கள் ஆகி விட்டன. காரணம், அவள் வீட்டை விட்டு இம்மாதிரிப் பொது இடங்களுக்கென்று எப்பொழுதாவது புறப்பட்டிருந்தால்தானே!
பாகவதரும் அப்படியெல்லாம் அவளைத் தம்முடன் புதிய இடங்களுக்கு அழைத்துக் கொண்டு போகிற வழக்கம் இல்லை. இன்று அவளை அலங்கார பூஷிதையாகப் பார்த்த போது, அவர் மனம் பெருமையால் பூரித்தது. லட்சுமியம்மாளைப் பற்றி அவருக்குக் கவலை இல்லை. என்றுமே அவளுக்கு அவருக்காகவும், குடும்பத்துக்காகவும் உழைத்துக் கொண்டிருப்பதிலேயேதான் இன்பம். சுந்தரி மட்டும் இப்படி இருக்கிறாளே என்கிற பொறாமை மனப் பான்மையோ, ஒப்பிட்டுப் பார்க்கும் சுபாவமோ அவளுக்கு இல்லை. அதனாலேயே, அவரால் அத்தனை காலம் இரண்டு குடும்பங்களையும் ஏற்று நிம்மதியாக நடத்த முடிந்தது.
வாசலில், இரட்டை மாட்டு வண்டி பூட்டித் தயாராக நின்று கொண்டிருந்தது. ஹரி குருவின் பாதங்களை வணங்கி விட்டு எழுந்திருந்தான், கண்களில் நீர் துளித்தது. பாகவதர் லட்சுமியைக் கூப்பிட்டார். கச்சேரிக்குப் போகும் போது, அவர் அணியும் பீதாம்பரத்தையும், சில்க் ஜிப்பாவையும் கொண்டு வரச் சொன்னார். “இவற்றை எல்லாம் போட்டுக் கொண்டு வா” என்று பணித்தார்.
வியப்புத் தாங்க முடியாமல் தயங்கிக் கொண்டிருந்த ஹரியின் கையில் கொடுத்து, “ஊம். சீக்கிரம் ஆகட்டும்” என்று துரிதப்படுத்தினார். அழகே உருவான ஹரி, அவற்றையெல்லாம் போட்டுக் கொண்டு எதிரே வந்து நின்ற போது, ‘நமக்கு இந்த வயதில் ஒரு மகன் இருந்தால், அவனும் இப்படித்தானே ஹரியைப் போல் இருப்பான்’ என்று லட்சுமியம்மாளின் மனம் எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தது. ஹரி லட்சுமியம்மாளையும், சுந்தரியையும் சாஷ்டாங்கமாக வணங்கினான். மாடத்தில் இருந்த விபூதியை ஹரியின் நெற்றியில் இட்டு, “முருகன் உனக்கு ஒரு குறையும் வைக்க மாட்டார். உன் குருவைப் போலவே, மகாவித்துவானாகப் பிரகாசிக்கப் போகிறாய்” என்று ஆசிர்வதித்த போது லட்சுமியம்மாளின் விழிகளில் நீர் பெருகியது. சுந்தரியைப் போல் அவளுக்கு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளத் தெரியாது என்பதைப் பாகவதர் அறிவார். ஆனால், ஏறத்தாழ அவரும் லட்சுமியின் நிலையில்தான் கலங்கிய கண்களுடன் இருந்தார்.
இதற்குள், “அண்ணா!” என்ற உற்சாகமான அழைப்பைக் கேட்டு எல்லாரும் திரும்பி பார்த்தனர்.
“புறப்படலாமா?” என்று கேட்ட வண்ணம் காரியதரிசி பாபு உள்ளே நுழைந்தார்.
“வாங்கோ, வாங்கோ” என்று அவரை உற்சாகமாக வரவேற்ற பாகவதர், “இதற்காகவா நீங்கள் இவ்வளவு தூரம் வந்தீர்கள்? இதோ இவர்கள் எல்லாரும் கிளம்பிக் கொண்டே இருக்கிறார்கள்” என்றார்.
“அதற்கில்லை அண்ணா. பிடில், மிருதங்கம் எல்லாம் வந்தாயிற்று. பந்தலில் இப்போதிருந்தே கூட்டம் தாங்கவில்லை; பஜனை மடத்தைச் சுற்றிலும் வேறு ஏகப்பட்ட ஜனங்கள். சரியாக எட்டு மணிக்கெல்லாம் ஆரம்பித்தால்தான், தாக்குப் பிடிக்க முடியும்” என்றார்.
“அதற்கென்ன? அப்படியே ஆரம்பித்தால் போகிறது. கொஞ்சமா விளம்பரம் செய்திருக்கிறீர்கள்? கூட்டத்துக்குக் கேட்பானேன்?”
“அதெல்லாம் ஒன்றும் இல்லை அண்ணா. விளம்பரம் செய்தால் மட்டும், ஜனங்கள் வந்து விடுகிறார்களா? எல்லாம் ஜனங்களுக்கு உங்கள் மேல் இருக்கிற அபிமானம். ‘உங்கள் பிரதம சிஷ்யன் பாடப் போகிறான்: கேட்க வேண்டும்’ என்று பெரிய பெரிய வித்துவான்களும், கனவான்களும், வெளியூரிலிருந்து கூட வந்திருக்கிறார்கள்” என்றார்.
உடனே பாகவதர், “என்னவோ போங்கள். சங்கீத வித்துவானுடைய வாழ்க்கை இப்படி முகஸ்துதியிலே மயங்கித்தான் போகிறது” என்றார்.
“அதெல்லாம் ஒன்றுமில்லை அண்ணா” என்று மறுத்த பாபு, “அப்பொழுது நான் வேண்டுமானால், தம்பூராவை எடுத்துக் கொண்டு முன்னால் புறப்படட்டுமா? நீங்கள் எல்லாரும் வண்டியில் வந்து சேருங்கள்” என்றார்.
உடனே பாகவதர், “வேண்டாம், வேண்டாம். தம்பூராவுக்குத்தான் வண்டி வேண்டுமே தவிர, இவர்களுக்கெல்லாம் என்ன? அதைத் தூக்கிக் கொண்டு நீங்கள் நடந்து போகக் கூடாது. பாபு ஸார், நீங்கள் கவலைப்படாமல் போங்கள்; இதோ இவர்களும் பின்னாலேயே வந்து விடுவார்கள்” என்று கூறி அனுப்பி விட்டார்.
சுமார் பத்து நிமிஷங்களுக்கெல்லாம் வீடே காலியாகி விட்டது. தனிமையில் விடப்பட்ட பாகவதரைத் தவிர, எல்லாருமே கச்சேரிக்குப் போய் விட்டார்கள். ஆனால் இந்த மனம் என்பது இருக்கிறதே, அது விஷமம் செய்கிற பொல்லாத குழந்தையைப் போன்றது. நாலு பேர் இருந்தால், வாலைச் சுருட்டிக் கொண்டிருக்கும். தனிமையில் விட்டு விட்டால், பிறகு அது பண்ணுகிற லூட்டியை இந்த ஓட்டை உடம்பால் தாக்குப் பிடிக்கவே முடியாது.
மனத்தின் சேஷ்டைகளைத் தாங்க முடியாமல் பாகவதர், நெருப்பில் விடப்பட்ட புழுப் போல் துடித்துக் கொண்டிருந்தார். பஜனை மடமும், அதற்கு முன்னால் வருஷந்தோறும் போட்டிருக்கும் பந்தலும் அவர் மனக் கண்முன் வந்து நின்றன. அதில் வருஷம் தவறாமல் நடக்கும் அவருடைய முதல் நாள் கச்சேரி, இந்த வருஷந்தான் இல்லை. ஆனால், அதற்காக அவர் வருத்தப்பட வில்லை. தம்முடைய வாரிசு ஒருவனைத் தயார் செய்து, கச்சேரிக்கு அனுப்பிவிட்ட பெருமையும், மகிழ்ச்சியும் அவருக்கு இருக்கத்தான் இருந்தன.
ஹரியைப் பற்றி அவர் என்னவெல்லாம் கனவு கண்டு கொண்டிருந்தார்! அவனுடைய அரங்கேற்றத்துக்குத் தனியாகப் பத்திரிகை அடித்து, எல்லா வித்துவான்களையும் வரவழைத்து, இன்னும் பிரமாதமான ஏற்பாடெல்லாம் செய்ய வேண்டுமென்று அல்லவா அவர் எண்ணிக் கொண்டிருந்தார்? ஆனால், இத்தனைக்கும் சோதனையைப் போல்; தெய்வம் அவன் பாடுகிற இடத்துக்குக் கூடப் போக முடியாமல், அவரைப் படுக்கையில் அல்லவா கிடத்தி விட்டது!
அதே சமயத்தில், பாபு கூறிய வார்த்தைகள் அவர் நினைவுக்கு வந்தன.—‘ஒரு வேளை அப்படியும் இருக்குமோ? சிஷ்யன் பாடுகிறான் என்பதற்காகவே கூட்டம் கூடியிருந்தால்? பாகவதர் எப்படித் தயார் செய்திருக்கிறார் என்று பார்க்கவே வித்துவான்களும் வந்திருந்தால்?’
“எப்போது பையனை மேடையில் ஏற்றுவதாக உத்தேசம்?” என்று அவனுடைய ஒளி பொருந்திய முகத்தைப் பார்த்துக் கேட்காதவர்களே இல்லையே! இப்போது அவர்கள் எல்லாரும் தவறாமல் வந்திருப்பார்கள்; அவரால்தான் போக முடியவில்லை.
‘ஹரி எப்படிப் பாடப் போகிறானோ. நான் எதிரில் இருந்தாலாவது, சற்றுத் தைரியமாகப் பாடுவான். இப்போது முற்றும் புதிய மனிதர்களுக்கு மத்தியில், புதிய அநுபவமாகத் தனிமையில் மேடையேறி உட்கார்ந்திருக்கிறான். எதிரே திரண்டிருக்கும் ஜன சமுத்திரத்தைப் பார்த்துச் சபைக் கூச்சம் ஏற்பட்டுப் பயந்து விடாமல் இருக்க வேண்டுமே. பஞ்சு அண்ணாவும், ராஜப்பாவும் என்னதான் வேண்டியவர்கள் என்றாலும், எல்லாம் ஓரளவுக்குத்தான். கச்சேரி, மேடை, தொழில் என்று வந்து விட்டால்; அவரவர் தங்கள், தங்களுடைய திறமையையும், புகழையும் நிலை நாட்டிக் கொள்வதிலேயே கண்ணாக இருப்பார்கள். மேலும், மத்தியான்னம் செட்டுச் சேர்த்து வாசித்ததிலேயே, ஹரியை அவர்கள் எடை போட்டு வைத்திருப்பார்கள். ஆனால் இன்று ஹரி பக்க வாத்தியத்தோடு சேர்ந்து வீட்டில் பாடியது என்னவோ எனக்கே திருப்தியாக இல்லை. ஏதோ கடனே என்று-அவர்கள். வாத்தியத்தைத் தூக்கிக் கொண்டு வந்தது போல் - அவனும் கடனுக்குப் பாடித் தீர்த்து விட்டான்.’
“இப்படியே அவன் மேடையிலும் பாடி விட்டால்…?” என்று எண்ணிப் பார்க்கையில், அவரையும் அறியாமல் ஒருவிதக் கவலையும், பயமும் அவர் மனத்தைச் சூழ்ந்து கொண்டன.
‘ஹரி எப்படிப் பாடிக் கச்சேரியை முடித்துக் கொண்டு வந்து விட்டாலும்; எனக்கு எதிரில் யாரும் அவனைப் பற்றி உண்மையான விமரிசனத்தைக் கூற மாட்டார்கள். நல்லதை மிகைப்படுத்திக் கூறினாலும் கூறுவார்களே தவிர; நன்றாக இல்லா விட்டால், அதைச் சொல்லவே மாட்டார்கள். என் வீட்டிலிருந்து போயிருப்பவர்களில் எல்லாருமே விஷயம் தெரிந்தவர்கள். லட்சுமிக்கும், காயத்திரிக்கும் யார் எது பாடினாலும், எப்படிப் பாடினாலும் எல்லாமே பிரமாதந்தான். சுந்தரிக்கு நோட்டம் தெரியும். ஆனால் நன்றாக இல்லாததை, என் மனம் புண்படும் என்று கூற மாட்டாள். சுசீலா தாட்சண்யமில்லாமல் உள்ளதைக் கூறக் கூடியவள். ஆனால், ஹரியைப் பொறுத்த வரையில், அவன் அவள் விரோதி. தேவாமிருதமாகப் பாடினாலும், அவள் குறை. கூறாமல் இருக்க மாட்டாள். வசந்திக்கு இப்போதிருந்தே ஹரியிடம் குரு பக்தி பொங்கி வழிகிறது. குரு நிந்தனைக்கு ஒப்ப மாட்டாள்; உண்மை வராது. ஆக, அந்தரங்கமான இவர்கள் இத்தனை பேரையும் விட்டு, ஹரியின் பாட்டைப் பற்றி, ஊரிலுள்ள இன்னொருவர் சொல்லித்தானா நான் நல்லது கெட்டது தெரிந்து கொள்ள வேண்டும்? இப்படி ஒரு துரதிர்ஷ்டம் எனக்கு ஏற்பட வேண்டுமா?’ என்று எண்ணும் போதே, தாங்க முடியாத துக்கம் அவரது உள்ளத்தை மூடிக் கொண்டது. அப்போது ‘ஐயா’! என்ற பழக்கமான குரல் அவர் செவியருகில் ஒலித்தது.