புல்லின் இதழ்கள்/அரங்கேற்றம்
விழித்துக் கொண்ட சிறு குழந்தை தொட்டிலிலிருந்து தலையைத் தூக்கிப் பார்ப்பது போல; பாகவதர் கட்டிலில் படுத்தபடியே குரல் வந்த திசையைத் திரும்பிப் பார்த்தார். எதிரே வண்டிக்கார நாகசாமி பணிவோடு நின்று கொண்டிருந்தான்.
“அவுங்களெ யெல்லாம் கொண்டு போய்ப் பத்திரமா பஜனை மடத்திலே விட்டுட்டேனுங்க” என்று அவன் சொல்லும் போதே, பாகவதருடைய உள்ளத்தில் திடீரென்று ஒரு யோசனை தோன்றியது.
“நாகசாமி, கச்சேரி ஆரம்பமாகி விட்டதா?” என்று பரபரப்புடன் கேட்டார்.
“இல்லீங்க; இன்னும் அரை மணி ஆவும் போலே இருக்கு. கலெக்டர் வந்துதான் ஆரம்பிச்சு வெக்கப் போறாராம்; அவரும், அவர் சம்சாரமும் வர்ரதுக்காகக் காத்துக்கிட்டிருக்காங்க” என்றான் நாகசாமி.
“ரொம்பக் கூட்டமோ?”
“அதை ஏன் எசமான் கேக்கிறீங்க? பஜனை மடத் தெருவைத் தாண்டி, வடக்குத் தெருவெல்லாம் ஒரே கும்பல். தெக்குத் தெருவிலேயே வண்டி நின்னுப் போச்சு. அப்பாலே, ஐயா, அம்மா எல்லாம், இறங்கிப் போறதுக்கே, ஜனங்கள் வழி விட மாட்டேன்னுட்டாங்க. யாரோ ஒருத்தர் வந்து தம்பூராவை வாங்கிக்கிட்டு, ‘பாடறவங்களுக்கு வழியை விட்டாத்தானே கச்சேரி செய்ய முடியும்?’ன்னு சொன்ன பிறகுதான் கூட்டம் வழி விட்டுது. அம்மா எல்லாரும் பஜனை படத்துக்குப் பின்புறமா உள்ளே நுழைஞ்சாங்க” என்று முடித்தான் நாகசாமி.
இதையெல்லாம் கேட்டதும், பாகவதர் நிமிர்ந்து உட்கார்ந்தார். ‘கலெக்டர் வந்து கச்சேரி ஆரம்பிப்பதற்குள், நான் அங்கே போய் விட வேண்டும். நேரிலேயே ஹரியின் கச்சேரியைக் கேட்க வேண்டும்; அவனுடைய கச்சேரியைப் பற்றி வேறு யாருடைய அபிப்பிராயமும் வேண்டாம்’ என்ற முடிவுக்கு அவர் மனம் வந்து விட்டது. சட்டென்று, “நாகசாமி, நீ எனக்கு ஓர் உதவி செய்ய வேண்டுமே” என்றார்.
“என்ன எசமான்?”
“என்னை எப்படியாவது நீ கச்சேரி நடக்கிற இடத்துக்கு அழைத்துப் போக வேண்டும்.”
“என்ன எசமான்? இந்த உடம்போடயா?”
“பரவாயில்லை நாகசாமி. இன்று ஹரி பாடுவதை நான் கேட்கா விட்டால், என் பிராணன் இப்போது இங்கேயே போய் விடும். என்னை வண்டியிலே ஏற்றி உட்கார்த்தி விடு. செட்டி மண்டபத்துக்குப் பக்கமாக வண்டியைக் கொண்டு நிறுத்தினால் போதும். பாட்டு நன்றாகக் கேட்டும்; ஒரளவு மேடையும் தெரியும். ஊம், சீக்கிரம்! என்னை ஒரு கை பிடி. உனக்கு வேறு எங்கேயும் சவாரி போக வேண்டியதில்லையே? பணத்தைப் பற்றி யோசிக்காதே” என்றார்.
“என்னங்க ஐயா, இப்படிப் பேசறீங்க? சவாரியையும், பணத்தையும் பார்த்தா, நான் உங்க குடும்பத்திலே பழகிக்கிட்டிருக்கேன்? உங்களுக்கு உடம்பு சரியில்லையே, அழைச்சுப் போனா அம்மா ஏதாவது சொல்லுவாங்களே அப்படீன்னுதான் சாமி யோசிக்கிறேன்” என்று நாகசாமி கூறிய போதே, பாகவதர் இடைமறித்தார்.
“அதெல்லாம் ஒன்றும் வீணாக யோசிக்காதே. இப்படி என் பக்கம் வந்து ஒரு கை பிடி. கச்சேரியை ஆரம்பத்திலிருந்து எனக்குக் கேட்டாக வேண்டும்” என்று துரிதப்படுத்தினார்.
அதற்கு மேலும், நாகசாமியால் மறுக்க முடியவில்லை. நாலைந்து தலையணைகளை எடுத்து வண்டியில் பரப்பினான். பாகவதரைப் பத்திரமாக வண்டியில் ஏற்றி உட்கார வைத்தான். வீட்டைப் பூட்டிச் சாவியை அவரிடம் கொடுத்தான். மறுகணம் ‘ஜல் ஜல்’ என்று இரட்டை மாட்டு வண்டி செட்டி மண்டபத்தை நோக்கி ஓடியது.
பாகவதர் குறிப்பிட்ட இடத்தில், ஓரமாக நாகசாமி வண்டியைத் திருப்பி நிறுத்திக் கொண்டான். குழுமியிருந்த ஜன சமுத்திரத்தையும், பஜனை மடத்தையும் வண்டியில் இருந்தபடியே பாகவதரால் பார்க்க முடிகிறது. மேடைமீது ஜகஜ்ஜோதியாக விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன.
பாகவதர் வருவதற்கும், மேடை மீது இருந்த ராமர் படத்துக்கு ஹாரத்தி காட்டுவதற்கும் சரியாக இருந்தது. வண்டியில் இருந்த படியே பாகவதர் கன்னத்தில் போட்டுக் கொண்டார்.
ஹரி சபையை மேலெழுந்த வாரியாக நோட்டம் விட்டான். மேடை மீது பஜனை மடத்தில் அத்தியயனம் செய்யும் பிள்ளைகளும், சில பெரியவர்களும், பக்கமாக உட்கார்ந்திருந்தனர். முன் வரிசையில் பெரிய வித்துவான்கள் அமர்ந்திருந்தனர். பெண்கள் பகுதியில் முன் வரிசையில் சுசீலாவும், வசந்தியும்; அவர்களுக்குப் பின்னால் லட்சுமியம்மாளும், சுந்தரியும், காயத்திரியும் உட்கார்ந்திருந்தனர். சபையைப் பார்த்த ஹரி சட்டென்று திடுக்கிட்டான். முன் வரிசையில் காந்தாமணி அவனையே பார்த்த வண்ணம் உட்கார்ந்திருந்தாள். அவளுக்குப் பக்கத்தில், அவள் தாயார் இருந்தாள். ஹரியும் அவளை ஒரு கணம் பார்த்து விட்டுத் திரும்பிக் கொண்டான்.
பஜனை மடத்துக் குருக்கள் தீபாராதனைத் தட்டை ஹரியிடம் நீட்டுகிறார். கற்பூரத்தைக் கண்ணில் ஒற்றிக் கொண்ட ஹரி, எதிரே இருந்த வித்துவான்களுக்கும், ரசிகப் பெருமக்களுக்கும் கை குவித்து வணக்கம் தெரிவித்தான். குருநாதரையும், ஸ்ரீராமசந்திர மூர்த்தியையும் ஒரு கணம் மனதில் ஸ்மரித்துக் கொண்டு, தியானத்தில் இருந்தான். பிறகு, ‘ஆரம்பிக்கலாமா?’ என்ற தோரணையில், பக்க வாத்தியக்காரர்கள் பக்கம் பார்த்தான். பாகவதர் ஒரு நிமிஷம் மனத்துக்குள் வியந்து கொண்டார். ‘பாட்டுத்தான் சொல்லிக் கொடுத்தோம். இந்தப் பந்தா எல்லாம் எங்கே கற்றுக் கொண்டான்? அவன் மேடையில் உட்கார்ந்திருக்கிற அழகே போதுமே!’ என்று மகிழ்ந்து போனார்.
“கலெக்டர் பேசி விட்டாராம்” என்று நாகசாமி யாரிடமோ விசாரித்து வந்து கூறினான்.
“பரவாயில்லை. எனக்கு அது முக்கியமல்ல” என்று பாகவதர் கூறிய போதே, பஞ்சு அண்ணாவும், ராஜப்பாவும் தலையை ஆட்டினர். மறு கணம், தம்பூராவின் இனிய ஒசையைத் தழுவிக் கொண்டு ஹரியின் குரல் காற்றிலே ‘கணீரெ’ன்று ஒலித்தது.
பாகவதர் எதிர்பார்க்கவே இல்லை. எடுத்ததுமே ‘நாட்டக்குறிஞ்சி’ வர்ணத்தை துரித காலத்தில் ஆரம்பித்தான். அதை மூன்று காலம் பாடி, மளமளவென்று பத்து ஆவர்த்தனம் ஸ்வரம் விவகாரமாகப் பாடி, அவன் முடிப்பதற்குள் ‘சடசட’ என்று மழை பெய்வது போல், கரகோஷம் காதைப் பிளந்தது. பஞ்சு அண்ணாவும், ராஜப்பாவும் அதற்குள் உஷாராகி விட்டனர்.
அதன் பிறகு ‘ஹம்ஸத்வனி’ ராகத்தை விரிவாகப் பாடி, ‘வாதாபி கணபதிம்’ என்ற தீக்ஷிதர் கிருதியைப் பிரமாதமாகப் பாடினான்.
பஞ்சு அண்ணாவுக்கு, இரண்டாவது பாட்டிலேயே வேர்த்து விட்டது. ‘ராஜப்பாவின் பேச்சைக் கேட்டுப் பயலைத் தப்பாக எடை போட்டு விட்டோம். ஒத்திகைக்கு வரவில்லை என்பதை மனத்தில் வைத்துக் கொண்டுதான், பயல் ஆரம்பத்திலேயே இப்படி தண்ணீர் காட்டுகிறான்: இன்னும் என்ன பல்லவியை, எத்தனை ராகங்களைச் சவுக்கத்தில் தயார் பண்ணி வைத்திருக்கிறானோ? இந்த ராஜப்பாவுக்கு என்ன, தொப்பியைத் தட்டிக் கொண்டு போய் விடுவான். பாட்டுக்கு ஈடு நான் அல்லவா கொடுத்தாக வேண்டும்? இரண்டுங்கெட்டான் இடத்தில் ஸ்வரத்தை நிறுத்தி விட்டுத் திரும்பிப் பார்க்கிறான். வாங்கி வாசிக்கா விட்டால், எனக்கல்லவா அவமானம்?’ என்ற கவலை அவரைப் பிடித்துக் கொண்டது. அவர் அதை மறைத்துக் கொண்ட வண்ணம், பாடுகிற ஹரியை மிகவும் ரசித்து, ‘பலே! சபாஷ்!’ என்று சமயம் வாய்த்த போதெல்லாம், அவனைக் குஷிப்படுத்தி, அவனுடைய அபிமானத்தைத் தம் பக்கம் திருப்ப முயன்றார்.
ஆனால் ஹரியோ, ஆரம்பத்தில் இரண்டு மணி நேரத்துக்கு அபூர்வ ராகமாகவும், புதிய புதிய கீர்த்தனைகளாகவுமே பாடிக் கொண்டிருந்தான். இந்தக் களேபரத்தில், பஞ்சு அண்ணாவுக்குப் பழக்கமான உருப்படிகளுக்குங்கூடத் தடுமாற்றம் கண்டு விடும் போலிருந்தது. உண்மையிலேயே, பஞ்சு அண்ணா அத்தனை வருஷ அநுபவத்தில், அன்று போல் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு தொழில் செய்ததில்லை. அவருடைய மேதா விலாசத்தை விழுங்குகிற மகா மேதையாக ஹரி கச்சேரி செய்து கொண்டிருந்தான்.
அவனுடைய சாரீரத்தையும், சாதக பலத்தையும் கண்டு எதிரே இருந்த பெரிய, பெரிய வித்துவான்களே பிரமித்தனர். அவன் ராகம் பாடுகிற பந்தாவையும், கச்சிதமாகக் கீர்த்தனைகளைப் பொறுக்குகிற அழகையும், கக்சேரியை நிர்வகித்துப் போகிற திறமையையும் கண்ட அனைவரும், ஹரியின் இடத்தில் பாகவதரே அமர்ந்திருப்பதாகத்தான் உணர்ந்தனர். அதே குரல், அதே பாணி, அதே சிரிப்பு!
ஹரி மெய்ம்மறந்து, கல்யாணி ராகத்தைப் பாடிக் கொண்டிருந்தான். அவன் பாடிக் கொண்டிருந்தான் என்பதை விட அந்த ராக தேவதையே அவன் முன்னால் வந்து நர்த்தனமாடிக் கொண்டிருந்தாள் என்றுதான் சொல்ல வேண்டும். லட்சுமியம்மாளுக்கு அப்படியே மெய் சிலிர்த்து விட்டது. ‘அப்பனே நீ போன ஜன்மத்தில் என்ன பூஜை செய்தாயோ, அல்லது எந்த மகானுடைய அவதாரமோ எனக்குப் புரியவில்லை. உன் குரலும், நீ பாடுகிற பாட்டும் யாராலும் சொல்லிக் கொடுத்து வருவன அல்ல, ஏதோ நாங்கள் செய்த பாக்கியம், தெய்வம் உன்னை எங்களிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. உன்னுடைய அருமை தெரியாமல் நாங்கள் ஏதாவது நடத்தியிருந்தாலும், ஹரி, எங்களை மன்னித்து விடு. இனி மேல் நீ, எங்கள் வீட்டுக்கு வந்து ஒரு துரும்பை எடுத்துப் போட நான் அநுமதிக்க மாட்டேன்’, என்று எண்ணிக் கொண்டாள். சுந்தரி இந்த உலகத்திலேயே இல்லை. தன் இரு கண்களையும் மூடிக் கொண்ட அவள், ஹரி செய்கிற நாதோபாசனையில் அப்படியே மூழ்கி விட்டாள்.
ஹரி கல்யாணி ரகாம் பாடி முடித்தவுடன், எதிரே இருந்த மகாவித்துவான் முத்தையா பாகவதர் சட்டென்று எழுந்து நின்றார். சபையோரை நோக்கி, “ரஸிகமணிகளே, இந்தக் குழந்தையின் பாட்டு, பெரிய மகாராஜாக்கள் முன்னிலையிலும், பிரபுக்கள் எதிரிலும் பாட வேண்டிய பாட்டு. வெறுங்கையுடன் வந்து தெரியாமல் உட்கார்ந்து விட்டேன். என்னிடம் இப்போது இருப்பது இவ்வளவுதான். ஆனால், இது இவன் பாடிய கல்யாணிக்குக் கோடியில் ஒன்று பெறாது. இருந்தாலும், இது என் ஆசீர்வாதம்” என்று கூறித் தம் கையில் போட்டிருந்த தங்கத் தோடாவைக் கழற்றி, ஹரியின் கையில் பூட்டினார். அப்போது சபையில் எழுந்த ஆரவாரம் அடங்கிப் பஞ்சு அண்ணா பிடில் வாசிக்கச் சிறிது நேரம் ஆயிற்று.
கல்யாணி ராகத்தைத் தமக்குக் கிடைத்த வரப் பிரசாதமாக எண்ணித் தமக்குத் தெரிந்த திறமையை எல்லாம் காட்டி, பஞ்சு அண்ணாவும் வெளுத்து வாங்கினார். ஆனால் என்னதான் தேனாக இருந்தாலும், அமுதத்துக்கு ஈடாகுமா? அதை பஞ்சு அண்ணாவும் பாரபட்சமில்லாமல் மனமார ஒப்புக் கொண்டார். நெரடான தாளத்தில் அமைந்த ஒரு கிருதியில் ஹரி விட்ட இடத்தில், ராஜப்பா தனி ஆவர்த்தனம் வாசித்துக் கொண்டிருந்தார்.
இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் பார்த்தபடித் தன்னை மறந்து கச்சேரியை ரசித்துக் கொண்டிருந்த பாகவதரின் நினைவுகள், அவரை இறந்த காலத்தை நோக்கி இழுத்துச் சென்று கொண்டிருந்தன.
“பாகவதர்”—என்கிற அடைமொழி இல்லாமல் - வெறும், சுவாமி மலை சுப்பராமனாக அவர் முன்னுக்கு வந்து கொண்டிருந்த நேரம். பூர்வஜென்ம வாசனையோ; விட்ட குறை - தொட்ட குறையோ - அல்லது கடுமையான உழைப்பும்; இயற்கையான ஞானமும்; அறிவும் திறமையுமோ ஏதோ ஒன்று—குருநாதர் முன்னிலையில், இளம் வயதில் அரங்கேறிய சுப்பராமன் மிகக் குறுகிய காலத்திற்குள், புகழேணியின் உச்சிக்குச் சென்று விட்டார்.
அந்த வயதில் சுப்பராமன் ராகங்களைக் கையாள்கிற பாணியையும்; அவரது அபாரமான ஸ்வர ஞானத்தையும் கண்டு பெரிய வித்வான்களே பிரமித்துப் பாராட்டினர்.
ஆயினும், அவருடைய இசையில் ‘தேசியம்’ கலப்பதாகச் சில பிராசீன வித்வான்கள் குறைபட்டுக் கொண்டனர். சுப்பராம பாகவதரோ—
‘ஒரு கச்சேரிக்கு சம்பிரதாய சுத்தம் எவ்வளவு முக்கியமோ’—அதே போல ஜனரஞ்சகமும் முக்கியம் என்றே எண்ணினார்.
பலாச் சுளையில் தேனைத் தடவுவது போல- ‘யமன் கல்யாணி, ஹிந்தோளம், தேஷ், தர்பாரி கானடா, சிந்து பைரவி’ போன்ற குறிப்பிட்ட சில ராகங்களில் அவர் லேசாகத் தேசியம் கலந்து பாடும் போது; கேட்கிறவர்கள் சொக்கிப் போவார்கள். சாமானிய ரசிகர்களும் தம்மை மறந்த ஆனந்தத்தில் கரகோஷம் செய்வார்கள். அப்போதெல்லாம் அவர்—
‘எனக்கு இதுதான் முக்கியம். என்னுடைய பாட்டைக் கேட்டுப் பாமரரும் ரசிக்க வேண்டும். பொது இடங்களில் கச்சேரி செய்ய எனக்குக் கிடைத்த மேடையை—சாஸ்த்ரிய சங்கீதத்தில் எனக்குள்ள மேதா விலாசத்தைப் பிரகடனப் படுத்தக் கிடைத்த ஒரு வாய்ப்பாகக் கருதி - பயன்படுத்த நான் விரும்பவில்லை.
சங்கீதத்தைப் பற்றி அதிகம் தெரியாத-லட்சக் கணக்கானவர்களையும், என் இசை சென்று தொட வேண்டும். அவர்கள் உள்ளங்களை என் இசை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காகவே பாடுகிறேன்’- என்றே எண்ணினார்.
அதனாலேயே தன்னுடைய கச்சேரியில் ஒரு பகுதியைத் தமிழ் பாடல்களுக்காக ஒதுக்கினார். அருணாசலக் கவி ராயரின் ‘ராம நாடக’ கிருதிகளையும்; கோபால கிருஷ்ண பாரதியின் ‘நந்தனார்’ சரித்திரப் பாடல்களையும் அவர், மெய் மறந்து பொருள் செறிந்து பாடும் போது, கேட்பவர்கள் மெய் சிலிர்த்துப் போவார்கள்.
இன்று அந்தக் கலையில் ஹரி அப்படியே தன் வாரிசாகவே விளங்குவதைக் கண்ட போது, “முருகா இது நிச்சயமாக நான் கற்றுக் கொடுத்த வித்தை மட்டுமல்ல; மங்கி இருண்டிருக்கும் பெட்ரோமாக்ஸைப் பின் போட்டுப் பிரகாசமடையச் செய்வானே; அதைப் போல் - இவன் உள்ளத்தில் அக்கினிக் குழம்பாகக் கனன்று கொண்டிருந்த இசையைத்தான், சிறிது தூண்டி விட்டிருக்கிறேன்; அது ஜெகஜ்ஜோதியாக இன்று சுடர் விட்டுப் பிரகாசிக்கிறது.
ஆனால், இந்த ஒளி விளக்கை அடையாளம் கண்டு; தேடிக் கொணர்ந்து தூண்டி விட்டு; இசை உலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமை ஒன்றுதான் எனக்குரியது”—என்றெல்லாம் மனம் போனபடி பாகவதர் எண்ணிக் கொண்டிருந்தார்.
ஆம்!—ஹரியின் அன்றையப் பாட்டு, கற்றுக் கொடுத்தவரையே, பிரமிக்க வைத்துக் கொண்டிருந்தது.
விதம் விதமான மலர்களை நாடிச் சென்று; சுவையுள்ள தேனைத் திரட்டி உண்ணும் வண்டுகளைப் போல் எண்ணற்ற வித்வான்களின் இசைகளைக் கேட்டு; அவர்கள் ஒவ்வொருவரிடமும் உள்ள சிறப்பு அம்சங்களையெல்லாம் ஹரி தனதாக்கிக் கொண்டிருந்தான்.
அவன் மோஹனம் பாடிய போது மஹாராஜபுரமும்; தோடி பாடிய போது-ராஜரத்தினம் பிள்ளையும் கண் முன் வந்து நின்றார்கள்.
தன் பாட்டைத் தவிர, இப்படிப் பலதரப்பட்ட பிரபல வித்வான்களின் இசை நிகழ்ச்சிகளையெல்லாம் நிறையக் கேட்டு; ஞானத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டுமென்று உபதேசித்தவரும்; அதற்கான வாய்ப்புக்களை அளித்து அவனை உருவாக்கியவரும் பாகவதரேதான்.
திருவையாற்றில் ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை விழாவின் போது, கச்சேரிகள் நடக்கும் நான்கு நாட்களும் பாகவதருடனேயே ஹரி இருப்பான். திருவிசநல்லூர் ஐயாவாள் உத்ஸவத்திலும்; கும்பகோணம் சோலையப்பன் தெருவில் நடக்கும் ஸ்ரீ ராமநவமி உத்ஸவத்திலும்—சிறியது—பெரியது என்று பாராமல்; ஒரு வித்வான் பாடுவது விடாமல், ஹரி சென்று அவ்வளவு கச்சேரிகளையும் கேட்பான்.
அவைகளினால் ஏற்பட்ட அனுபவம்; கேள்வி ஞானம்-நீரிலிருந்து பாலைப் பிரித்து உண்ணும் அன்னப் பறவை போல, அவனுக்குப் பயன் பட்டிருக்கிறது.
ஒவ்வொரு ராகங்களிலும், கிருதிகளிலும், என்றோ, எங்கோ, யாரிடமோ கேட்ட நல்ல, நல்ல சிறப்பான அம்சங்கள்; ‘அபூர்வப் பிடிகள்’ இவற்றையெல்லாம் அவ்வப்போது திரட்டி, ஒன்று விடாமல் கிரஹித்துத் தனதாக்கிக் கொண்டு, ஹரி இன்று அதை ஜனங்களுக்குத் தன் குரலில், தன் பாணியில் வழங்கிய போது— மக்கள் மகிழ்ந்து போனார்கள். ரசிகர்கள், தங்கள் தங்கள் அபிமான வித்வான்களின் அபூர்வ இசையைக் கேட்பது போல், பூரித்துப் போயினர். ஆனால்—
ஹரி அதற்காக தான் கற்றுக் கொண்டதையும், கேட்டவற்றையும், கிளிப் பிள்ளை மாதிரி ஒப்புவிக்கவுமில்லை.
—தன் குருவின் பாணியிலிருந்து மாறுபட்டோ, அல்லது தனக்கென்று ஒரு ‘தனித் தன்மை’ இல்லாமலோ பாடுகிறான் என்று யாருமே சொல்ல முடியாத அளவிற்கு, ஹரி தன்னுடைய அரங்கேற்றக் கச்சேரியிலேயே—எவருடைய அனுமானத்திற்கும், அளவு கோலுக்கும் அப்பாற்பட்ட இசை மேதையாகத் தோன்றினான்.
அருகிலிருந்த பஞ்சு அண்ணா பூரித்துப் போனார். சிறிய ஆலம் விதையினுள்—கொம்பும், கிளையும், வேரும் விழுதுகளுமாய் அண்டம் பரப்பி நிற்கும் பெரிய ஆலமரம் கண்ணுக்குத் தெரியாமல் இருப்பது போல், இருந்த ஹரியை-அவர், உளமார, ‘நீ பல்லாண்டு பேரும் புகழுடனும் வாழ வேண்டும்’ என்று மனம் நிறைந்து வாழ்த்தினார்.
ராஜப்பா தனி ஆவர்த்தனத்தைப் பிரமாதமாக முடித்து விட்டுச் சோர்ந்து போய்; அப்ளாஸைப் பற்றி நினைக்கவே நேரமின்றிச் சோடா குடித்துக் கொண்டிருந்தார். கரகோஷம் காதைப் பிளந்தது.
வண்டியில் இருந்த பாகவதர், விக்கி விக்கி அழுது கொண்டிருந்தார். ஹரி கல்யாணி ராகம் பாடிய போது, அவரது விழிகளில் படர்ந்து வந்த கண்ணீர், அவன் பல்லவியை அநுபவித்துப் பாடிக் கொண்டிருந்த போது கரை கடந்து விட்டது. அதன் பொருள், அவரது உள்ளத்தில் பெரும் கிளர்ச்சியை மூட்டித் தம்மையும் மீறி, அவரை உணர்ச்சி வெள்ளத்திலாழ்த்தி விட்டது. மேலும், அந்தப் பல்லவியை அவர் அவனுக்குச் சொல்லிக் கொடுக்கவே இல்லை.
தனி ஆவர்த்தனத்திற்குப் பிறகு, ஹரி பாடிய அஷ்டபதியிலும்; அருட்பாவிலும் அவன் ரசிகர்களை மெய் மறக்கச் செய்து விட்டான்.
“தாயாகித் தந்தையுமாய்த்
தாங்குகின்ற தெய்வம்
சேயாக எனை வளர்க்குந்
தெய்வ மகா தெய்வம்,”
என்னும் வள்ளலாரின் அருட்பா வரிகளை, ஹரி மனமுருகிப் பாடும் போது—அவன் உள்ளத்தில் குருநாதர்தான் குடி கொண்டிருந்தார்.
கேட்பவர்கள் மட்டுமின்றி பாடுகிற ஹரியே, கண் கலங்கி விட்டான். குரல் கம்மி வார்த்தைகள் தொண்டையில் இடறின.
பாகவதர் வண்டியிலிருந்து இறங்கி, அப்படியே ஓடிச் சென்று, ஹரியைக் கட்டிக் கொள்ள மாட்டோமா என்று தவித்தார்.
நாகசாமி பதறிப் போய், “எசமான், எசமான், உங்களுக்கு நல்ல உடம்பு இல்லை. அழாதீங்க. உங்களை நான் இங்கே அழைத்து வந்ததே தப்பு” என்று புலம்பினான்.
“நாகசாமி, நான் அழவில்லையடா; இது ஆனந்தக் கண்ணீர். எனக்கு ஒன்றும் வந்து விடாது. இந்தப் பாட்டைக் கேட்க, என்னை இங்கே கொண்டு வந்த உனக்கு நான் கோடிப் பொன் கொடுத்தாலும் ஈடாகாது. என்னை நீ இங்கே கொண்டு வராமல் இருந்தால்,: இந்த ஆனந்தத்தை நான் எந்த ஜன்மத்தில் அநுபவிக்க முடியும்?” என்று அவர் உணர்ச்சி வசப்பட்டுப் பேசும் போது, செஞ்சுருட்டியில் ஒரு கிருதியை ஹரி பாடிக் கொண்டிருந்தான்.
“புல்லாய்ப் பிறவி தரவேணும் கண்ணா,
புனிதமான பலகோடிப் பிறவி தந்தாலும்
பிருந்தாவன மதிலொரு—
புல்லாய்ப் பிறவி தரவேணும்”
இந்தப் பாட்டைப் பாடி முடிப்பதற்குள், ஹரி கண்ணனையும், ராதையையும், எண்ணற்ற கோபியரையும், அவன் ரசிகர்கள் முன் கொண்டு வந்து நிறுத்தி; சுவாமிமலையையே பிருந்தாவனமாக்கி விட்டான்.
தேவர்கள் பூமாரி பொழிவது போல், ரசிகர்கள் எழுப்பிய கரகோஷம் விண்ணை முட்டியது.
பாகவதர் வெகுவாகச் சோர்ந்து போனார். உடல் நிலைக் கோளாற்றினால்; அவரால் எந்த உணர்ச்சியையுமே அளவோடுதான் ஏற்றுக் கொள்ளவோ, அநுபவிக்கவோ முடிந்தது. நாகசாமியிடம் கூறியது போல் உண்மையிலேயே, அவர் இப்படி ஓர் உணர்ச்சியை அநுபவித்ததில்லை. எல்லாரும் தம்மைப் பிரமாதமாகப் பாடுவதாகப் புகழ்வதைத்தான் அவர் கேட்டிருக்கிறார். ஆனால், அப்படி அனைவரும் புகழும்படி தம் பாட்டு எப்படி இருக்கும் என்பதை அவர் அன்றுதான் முழுக்க, முழுக்க அநுபவித்தார்.
‘ஆயுளில் நல்ல சிஷ்யனை உருவாக்கி, அற்புதமான பரம்பரையை உண்டாக்கி விட்டோம்; இனி மேல், இந்த உயிர் போனாலும், இருந்தாலும் அக்கறை இல்லை’ என்று தமக்குள்ளேயே பேசிக் கொண்டார்.
‘அரை மணி நேரத்துக்கு மேல் அவகாசம் இல்லை’ என்று கூறித் திறப்பு விழாவுக்கு வந்திருந்த கலெக்டரும், அவர் மனைவியும் ஹரி மங்களம் பாடி முடிக்கிற வரையில், உட்கார்ந்த இடத்தை விட்டு அசையவில்லை.
கச்சேரி முடிந்ததும், கலெக்டர் காரியதரிசியைக் கூப்பிட்டு, “நான் ஒரு இரண்டு வார்த்தை பேச வேண்டுமென்று ஆசைப் படுகிறேன்; பேசலாமா?” என்றதும், காரியதரிசிக்கு ஆனந்தமும், ஆச்சரியமும் தாங்கவில்லை. “பேசுங்கள். தாராளமாகப் பேசுங்கள்” என்று மேடைக்கு அழைத்துப் போனார்.
நல்ல சங்கீத ஞானமுள்ள அந்தக் கலெக்டர் உணர்ச்சி வசப்பட்டு, ஹரியைப் பாராட்டிப் பேசி, தம் மனைவி கொடுத்த தங்கச் சங்கிலியையும் பரிசாக ஹரிக்கு அணிவித்து விட்டுப் புறப்பட்டார். மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
கச்சேரி முடிந்ததும், மக்கள் முண்டியடித்துக் கொண்டு, ஹரியைப் பார்க்க மேடையைச் சுற்றிலும் கூடி விட்டனர். கலெக்டரை வழியனுப்பி விட்டு வந்த காரியதரிசி, ஹரியை மடத்திலேயே சாப்பிட வேண்டுமென்று வற்புறுத்தினார்.
ஆனால், ஹரி, “குருநாதரைப் பார்த்து வணங்கி விட்டுத்தான் சாப்பாட்டைப் பற்றிய விஷயமெல்லாம்” என்று பிடிவாதமாகச் சொல்லிப் புறப்பட்ட போது, கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர், “அதோ செட்டி மண்டபத்துக்குப் பக்கத்தில், மாட்டு வண்டியில்தான் பாகவதர் இருக்கிறார்” என்று கூறினார். இதைக் கேட்டதும், பிரமித்துப் போன ஹரி, மறு நிமிஷம் கையில் பிரசாதத்துடன், செட்டி மண்டபத்தை நோக்கி விரைந்தான். ஆனால், அங்கே பாகவதரோ, வண்டியோ இல்லை.
அத்தனை பெரிய கூட்டத்தில், கச்சேரி முடிந்ததும், ஹரி இருந்த இடத்தை லட்சுமியும், மற்றப் பெண்களும் எப்படி நெருங்க முடியும்?
“நாம் மெதுவாக வீட்டுக்குப் போய் விடலாம். ஹரி பின்னால் வரட்டும். வண்டிக்காகக் காத்திருந்தால் நேரமாகி விடும்” என்று லட்சுமியம்மாள் எல்லாரையும் அழைத்துக் கொண்டு, கூட்டத்தின் மத்தியிலிருந்து விடுபடுவதற்குள், சுசீலா, “ஐயோ, அம்மா!” என்று பெரிதாக அலறினாள். பக்கத்தில் இருந்தவர்கள், “என்ன, என்ன?” என்று பரபரப்புடன் கேட்டனர்.
“என் நெக்லஸை யாரோ அறுத்துக் கொண்டு போய் விட்டார்கள் அம்மா!” என்று சுசீலா குழந்தை போல் அழுது கொண்டே, தன் கழுத்தைத் தடவிக் காட்டினாள். தங்க நெக்லஸ் கண் மூடிக் கண் திறப்பதற்குள் பறி போய் விட்டது. இதற்குள் விஷயம் காட்டுத் தீ போல் பரவி, “திருடன், திருடன்!” என்ற குரலும். “அதோ ஓடுகிறான், பிடியுங்கள், பிடியுங்கள்!” என்ற கோஷமும், வட்டாரம் முழுவதும் பரவி விட்டன.
லட்சுமியம்மாளும், சுந்தரியும் என்ன செய்வதென்றே தெரியாமல் நின்றனர். வசந்தியின் மனமோ, சுசீலா படும் வேதனையைத் தாளாமல் தவித்தது. அதற்குள், காரியதரிசி இந்தச் சமாசாரத்தைக் கேட்டுப் பாகவதர் வீட்டுப் பெண்கள் இருந்த இடத்துக்கு ஓடி வந்தார்; கலவரப்பட்டிருந்த அவர்களுக்கு ஆறுதல் கூறினார். “நான் இப்பொழுதே போலீசுக்குத் தகவல் கொடுத்து, திருடனைக் கண்டு பிடிக்க வேண்டிய ஏற்பாடுகளைச் செய்கிறேன். நீங்கள் வண்டியில் போங்கள்” என்று கூறிய போதே, ஹரியும் அங்கே வந்து சேர்ந்தான்.
ஹரியைக் கண்டதும், காரியதரிசிக்குச் சற்றுத் தெம்பு வந்தது. “ஹரி, சுசீலாவின் நெக்லெஸை எவனோ அறுத்துக் கொண்டு ஓடி விட்டான். நான் போலீசில் புகார் கொடுத்து, ஆக வேண்டிய காரியங்களைக் கவனிக்கிறேன். நீங்கள் இவர்களைப் பத்திரமாக வீட்டுக்கு அழைத்துப் போங்கள்” என்றார்.
அதற்குள் லட்சுமியம்மாள், “நீங்கள் மேற்கொண்டு ஆக வேண்டியதைக் கவனியுங்கள். எனக்கு என்னவோ நம்பிக்கை இல்லை. கையை விட்டுப் போன பொருள், இனி மேல் கிடைக்கவா போகிறது?” என்று. வருத்தத்துடன் கூறியபடிப் புறப்பட்டாள்.
ஹரி எல்லாருடனும் வீட்டை அடைந்த போது, உள்ளேயிருந்து தம்பூராவின் இனிய நாதமும் ராக ஆலாபனையும் அவர்களை வரவேற்றன.
ஹரி, ஒரு கணம் தயங்கினான். குருநாதரின் குரல்தான். பாகவதர் கல்யாணி ராகத்தை ஆலாபனை செய்து கொண்டிருந்தார். ‘வண்டியில் வந்ததே தவறு. இந்த உடம்போடு இவர் ஏன் பாட வேண்டும்?’ என்று அவன் மனத்துக்குள் கவலை கொண்டான்.
சாதாரண சமயமாக இருந்தால், சுசீலாவே கேலி செய்திருப்பாள். ஆனால், அவளுடைய கேலியும், கிண்டலும் நெக்லெஸோடு பறி போய் விட்டன. பெட்டிப் பாம்பாக அடங்கி, ஒடுங்கித் தன் தாயின் நிழலில் மறைந்து கொண்டே, அப்பா முகத்தில் விழிக்க அஞ்சி வீட்டுக்குள் ஓடி விட்டாள்.
கச்சேரி முடிந்து எல்லாரும் வந்து விட்டதைக் கூடக் கவனிக்காமல், மெய் மறந்து பாடிக் கொண்டிருக்கும் பாகவதரிடம் லட்சுமியம்மாள் சற்றுக் கோபமாகவே கேட்டாள்: “கதவைத் திறந்து போட்டுக் கொண்டு, இப்படிக் கண்ணையும் மூடியபடி உட்கார்ந்து பாடுகிறீர்களே! போன இடத்தில்தான் பறி கொடுத்தாயிற்று. இங்கேயும், எவனாவது உள்ளே புகுந்து குடிக்கிற செம்பையும், கட்டிக் கொள்கிற துணியையும் கொள்ளையடித்துக் கொண்டு போகட்டும். அப்புறம் எல்லாருமாகச் சேர்ந்து, தெருவில் போய் நிற்கலாம்” என்று பட படவென்று பேசினாள்.
பாகவதர் சட்டென்று தம்பூராவை நிறுத்தி விட்டு, மனைவியின் முகத்தைப் பார்த்தார். மறு கணம் அவருடைய பிரகாசமான முகம் வாடிக் கறுத்தது. ஹரியின் பாட்டை எட்ட இருந்து கேட்ட தம்மை விட, அருகில் இருந்து கொண்டு; அங்கே அவனுக்குக் கிடைத்த எல்லாக் கௌரவங்களையும் கண்ட லட்சுமிதான் அதிக மகிழ்ச்சியடையக் கூடியவள். கச்சேரி முடிந்ததும், அவர்கள் எல்லாரும் ஒரே மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் வருவார்கள் என்று அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக, ஹரி உட்பட அத்தனை பேருடைய முகமும் சாம்பிக் கிடந்தன, ‘ஏதோ நடந்துள்ளது’ என்பதை அறிந்த அவர், “என்ன விஷயம்? எல்லாரும் ஏன் இப்படிப் பேய் அறைந்தாற் போல் இருக்கிறீர்கள்?” என்றார் பாகவதர்.
“எல்லாம் உங்கள் பெண் சுசீலாவைக் கேளுங்கள்: சொல்லுவாள். போட்டாப் போட்டியும், பொறாமையும் இருந்தால் இப்படித்தான் கை மேல் பலன் கிடைக்கும். குடுகுடுவென்று கொண்டு போய்க் கச்சேரியில் நெக்லெஸைத் தொலைத்திருக்கிறாள். நீங்களே விசாரியுங்கள்” என்று லட்சுமியம்மாள் கூறிய போதே, உள்ளே இருந்த சுசீலாவின் விம்மல் ஒலி பெரிதாகக் கேட்டது. அதைக் கேட்டதும் சுந்தரியின் மனம் வேதனைப்பட்டது.
“குழந்தையைக் கோபித்துக் கொண்டால், அவள் என்ன செய்வாள்? அவளாகவா தொலைத்தாள்? ஏதோ போதாத வேளை!” என்று சுந்தரி கூறிய போதே, லட்சுமியம்மாள், “கச்சேரி கேட்க வருகிறவளை; சதிர் ஆடப் போகிறவள் மாதிரி, பெட்டியில் இருக்கிறதை எல்லாம் எடுத்து வாரிப் போட்டுக் கொண்டு யார் வரச் சொன்னது? எவன் கண்ணைப் பறித்ததோ, அறுத்து எடுத்துக் கொண்டு போனான்! இனி மேல் கிடைத்த அன்றுதான் நிச்சயம்” என்றாள்.
“காரியதரிசி சொன்னதிலிருந்து எனக்கு என்னவோ எப்படியும் அது கிடைத்து விடும் என்றுதான் தோன்றுகிறது. போலீசில் புகார் கொடுத்துத் தேடச் சொன்னால், அகப்படாமல் எங்கே போய் விடும்?” என்று ஆறுதல் கூறினாள் சுந்தரி.
பாகவதருக்கு விஷயம் புரிந்து விட்டது. நெக்லெஸின் விலையை எண்ணி, அவருடைய மனமும், ஒரு கணம் சங்கடப்பட்டது. என்றாலும், ‘போனது போய் விட்டது. இனி மேல் அதற்காக அமர்க்களப்படுத்தி என்ன பிரயோசனம்? நம்முடைய பொருளானால் கிடைக்கட்டும்’ என்று சமாதானப்படுத்திக் கொண்டார். மேலும், அவருக்கு அப்போது இருந்த மன மகிழ்ச்சியில் ஹரியைத் தவிர, உலகில் எந்த பொருளுமே பொருட்டாகத் தோன்றவில்லை. தம் லட்சியத்தை எல்லாம் அள்ளிக் கொட்டி உருவாக்கிய ஹரி, அதைச் செவ்வனே நிறைவேற்றி விட்டான். இனி அவனது எதிர்காலம் ஒன்றுதான் அவருடைய லட்சியம். மற்றவை—ஒதுக்கி எறியப் பட வேண்டிய குப்பைகளாகவே அவருக்குத் தோன்றின.
வண்டியில் உட்கார்ந்து கச்சேரியைக் கேட்ட போது, அவருடைய மனத்தில் அத்தகைய எண்ணந்தான் நிலைத்திருந்தது.