புல்லின் இதழ்கள்/குருதட்சணை
பாகவதருக்கு வாழ்க்கையில் இரண்டு குறைகள் இருந்தன. பிள்ளை இல்லாதது ஒன்று; தமக்குப் பிற்காலத்தில் பெயர் சொல்லச் சிறந்த சிஷ்யன் ஒருவனாவது வேண்டுமே என்பது மற்றொன்று. இப்போது அவருக்கு அந்த இரண்டுமே கிடைத்து விட்டன. பணத்தையும், காசையும் சம்பாதித்து விடலாம். இந்த இரண்டு இன்பங்களையும் இறைவனாகக் கொடுக்காத வரையில் அநுபவிக்க முடியுமா?
‘அவற்றையே அடைந்த பிறகு, அற்ப நகையும், பண்டமுமா பெரியவை? கண் மூடித் திறப்பதற்குள் மகா வித்துவான் ஒருவர், கையில் இருந்த தோடாவைக் கழற்றிப் போட்டார்; ஊருக்கெல்லாம் அதிகாரி ஒருவர் பொன்னாலும், பூவாலும் மாலையைக் கழுத்தில் போட்டு வாயாலும் விண்ணுயரப் புகழ்ந்து விட்டுப் போகிறார். இதற்கு இணை உண்டா? இவையெல்லாம் சாதாரணமாக எல்லோருக்கும் கிடைக்கக் கூடிய பாக்கியங்களா?’
எல்லாரும் உள்ளே சென்றவுடன், ஹரி, கையில் இருந்த தோடாவையும், சங்கிலியையும் குருவின் முன் வைத்து, அவருடைய பாதங்களில் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தான்.
“யார் சந்தோஷப்பட்டால் என்ன? கக்சேரிக்கு உட்கார்ந்தது முதல்; நீங்கள் எதிரில் இருந்து கேட்கிற பாக்கியத்துக்கு நான் கொடுத்து வைக்கவில்லையே என்ற வேதனையுடன்தான் பாடினேன்” என்று ஹரி கூறியதும் பாகவதர் இடைமறித்து, “நான்தான் நீ வர்ணம் பாட ஆரம்பிப்பதற்கு முன்னாடியே, வண்டியில் வந்து விட்டேனே! நீ கல்யாணி பாடும் போதெல்லாம், நான் அழுது கொண்டேதான் கேட்டேன். பஞ்சு அண்ணாவையும், ராஜப்பாவையும் ஒத்திகைக்கு வராத கோபத்தை வைத்துக் கொண்டு, நீ விரட்டியதையும் ரசித்துக் கொண்டே இருந்தேன். ஆனால் நீ கல்யாணி பாடியதைக் கேட்டு, வீட்டுக்கு வந்ததும் நான் செய்ய எண்ணியதை எனக்கு முந்தி, முத்தையா பாகவதர் செய்து விட்டார். ஆனால் அதற்காக உன்னை விட்டு விடுவேன் என்று எண்ணாதே. எங்கே, உன் வலக் கையைக் காட்டு” என்று கூறியவர், மடியில் இருந்த ஒரு தங்கத் தோடாவை எடுத்து அவனது வலக்கரத்தில் இழுத்துப் பூட்டினார்.
அப்போது அங்கே வந்த சுந்தரி தன் கையில் இருந்த ஒரு வைர மோதிரத்தை எடுத்துப் பாகவதரிடம் கொடுத்தாள்.
பாகவதர் அதை ஆர்வத்துடன் பெற்றுக் கொண்டு, ஹரியைப் பார்த்து, “நீ எத்தனை தோடாக்களும், மெடல்களும், சங்கிலிகளும் வாங்கினாலும் சரி, சுந்தரியின் இந்த மோதிரத்துக்கு அவை ஈடாகா; சுந்தரியே உன்னைப் பாராட்டிப் பரிசளித்திருக்கிறாள் என்றால், அதற்கு இணையே இல்லை. இவள் அவ்வளவு பெரிய விதுஷி” என்றார். உடனே சுந்தரி, “மோதிரத்தை நான் ஹரிக்கென்று சொல்லியா கொடுத்தேன்? இத்தனை நேரம் பஜனை மடத்தில் நீங்கள் பண்ணின கச்சேரிக்காக ஹரிக்குப் பரிசா? அந்த மோதிரம் உங்களுக்குத்தான்” என்றாள்.
இதைக் கேட்டதும், பாகவதர் ‘கடகட’வென்று சிரித்தார். சிரித்து விட்டு, உடனே, “இப்போது இப்படிச் சிரிப்பது கூடக் குற்றமாகி விடும். பாவம்! லட்சுமி நெக்லெஸ் கெட்டுப் போன கவலையில் இருக்கிறாள்” என்று கூறி, “இன்று ஹரியின் கச்சேரியைக் கேட்டவர்கள் எல்லாரும் சொல்லுகிறதைத்தான் நீயும் சொல்லுகிறாய், அதற்காக—பாடுபட்டவனுக்குத்தானே பரிசு கொடுக்க வேண்டும்?” என்று பாகவதர் கூறினார்.
உடனே சுந்தரி, “நானும் அதைத்தான் சொல்லுகிறேன். பாடுபட்டவர்களுக்குப் பலன் வேண்டாமா? அதைக் கொடுக்கா விட்டால், கற்றுக் கொண்டவனுக்குத்தான் வித்தை தக்குமா? அவனை இப்படிப் பாடும்படிச் செய்ய நீங்கள் பட்ட பாட்டுக்கு, ஹரியின் குரு தட்சணையாகத்தான் நான் உங்களுக்கு இந்த மோதிரத்தைத் தருகிறேன். இதை அங்கீகரித்து அணிந்து கொண்டு, அவனை ஆசீர்வதியுங்கள்” என்று கூறினாள்.
சுந்தரியின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும், பாகவதர் பிரமித்துப் போய் அவளைப் பார்த்தார். ஹரி மெய் சிலிர்த்துப் போனான். ‘எவ்வளவு பெரிய சம்பிரதாய ரீதியான விஷயத்தை, எப்படிப்பட்ட சமயத்தில் சுந்தரி நினைவில் வைத்துக் கொண்டு, அதை நிறைவேற்றுகிறாள்!’ என்று அவளுடைய அறிவின் விசாலத்தை அவர் வியந்தார்.
ஹரியோ, கண்ணிலிருந்து மாலை மாலையாகக் கண்ணீர் வழிந்தோடச் சுந்தரியைப் பார்த்துத் தன் இரு கைகளையும் கூப்பி, “அம்மா! நீங்கள் என்னிடம் கொண்டுள்ள கருணைக்கு வணக்கங்கள். ஆனால், நீங்கள் இப்போது கூறிய விஷயத்தை, நான் எப்பொழுதும் மறந்ததே இல்லை. ஆனால், பரம ஏழையான நான் பணத்துக்கு எங்கே போவேன்? வித்யா பூர்த்தி தினத்தில் குருவுக்குக் காணிக்கை செலுத்தக் கூட விதியற்ற நிலையில் இருக்கிறேனே என்ற கவலை என்னை உயிருடனேயே கொன்றது. ஆனால், என் மனக் குறையைத் தெய்வமே முன்னின்று தீர்ப்பதே போல், குருதட்சணை கொடுப்பதற்கென்றே இரு பரிசுகள் கிடைத்தன போலும்” என்றவன்—
முத்தையா பாகவதர் போட்ட தோடாவையும், கலெக்டர் கொடுத்த சங்கிலியையும் கழற்றித் தேங்காய் பழங்களின் மேல் வைத்துக் குருவின் கையில் கொடுத்து வணங்கினான்.
மன நிறைவோடு பெற்றுக் கொண்ட பாகவதர், “இப்போது உன் மனக்குறை நீங்கி விட்டதல்லவா?” என்று, அப்படியே ஹரியை மார்போடு அணைத்துக் கொண்ட வண்ணம் உள்ளே இருந்த லட்சுமியை அழைத்தார்.
மனைவியைப் பார்த்ததும், “இதோ பார்த்தாயா? ஹரி பெரிய பணக்காரன் ஆகி விட்டான். குருதட்சணை கொடுக்காமல் இருக்கக் கூடாதாம். இவற்றை எனக்குத் தன் ஆசாரிய தட்சணையாகக் கொடுத்திருக்கிறான். உள்ளே கொண்டு வை” என்று நீட்டினார் மனைவியிடம்.
லட்சுமி கணவரை விழித்துப் பார்த்து விட்டு, “என்ன? விளையாடுகிறீர்களா? பெண் நெக்லெஸைத் தொலைத்து விட்டாள் என்று தவிக்கிறேனே; ஏற்றுக் கொள்கிறாளா பார்க்கலாம் என்று என்னை ஆழம் பார்க்கிறீர்களா?” என்று இரைந்து கேட்டாள்.
பிறகு லக்ஷ்மியம்மாள் ஹரியின் பக்கம் திரும்பி, “ஏண்டாப்பா ஹரி, நீ என்ன கொடுப்பாய் என்று. எதிர்பார்த்தா, உனக்கு இவர் பாட்டுச் சொல்லிக் கொடுத்தார்? உன் மனசு இருக்கிறதே; அதை விட இந்தத் தோடாவும் சங்கிலியுமா உயர்ந்து விட்டன. இனி மேல், இந்த மாதிரியெல்லாம் பிரித்து வைத்து நடந்து கொள்ளாதே; எனக்குத் தாளாது. நானும் கலெக்டர் பெண்டாட்டி மாதிரி இருந்தால், கூட்டத்தில் அப்போதே நாலு வடம் சங்கிலியைக் கழற்றிக் கொடுத்து அனுப்பியிருப்பேன். இங்கே கிட்டே வா. கச்சேரி கேட்ட போது எனக்கு ஏற்பட்ட குறையை, இப்போது தீர்த்துக் கொள்கிறேன். உன் சந்தோஷத்துக்காக நீ கொடுத்த இந்த இரண்டையும் உங்கள் குரு ஏற்றுக் கொண்டு, என்னிடம் கொடுத்து விட்டார். இப்போது இவை இரண்டும் என்னுடையவை. நீ மேடையிலே உட்கார்ந்து பாடி, எங்களையெல்லாம் கண்ணீரால் கரைய வைத்தாயே, அதற்காக உனக்குத் தங்கத்தினால் அபிஷேகம் பண்ணினாலும் தகும். ஆனால், இப்போது கையில் இருப்பவை இவைதாம்” என்று கூறித் தோடாவை ஹரியின் கையில் போட்டு, செயினையும் கழுத்தில் போட்டாள்.
“அது என்ன, பவித்திர விரலில் வைரம் டால் அடிக்கிறது? சுந்தரி கொடுத்ததா? எடுங்கள் இப்படி” என்று கணவரிடமிருந்து அதையும் வாங்கி, “சுந்தரி, உன் ராசிக் கையாலே இந்த மோதிரத்தையும் ஹரியின் விரலில் போட்டு விடேன்” என்றாள் லட்சுமியம்மாள் மிகவும் பரிவோடு.
எல்லாரும் லட்சுமியின் கம்பீரமான சொல்லுக்கு, மந்திர சக்தியால் கட்டுப் பட்டவர்கள் போல் செயல் புரிந்தனர்.
கையில் தோடாவும், கழுத்தில் சங்கிலியும், விரலில் மோதிரமும் அணிந்து கொண்டு நின்ற ஹரியைப் பார்த்து, “இடையில் ஒரு பீதாம்பரமும், தலையிலே மயிற்பீலி கிரீடமும் இருந்தால் ஹரி, சாட்சாத் கிருஷ்ணன்தான்” என்றார் பாகவதர்.
ஹரி சிரித்துக் கொண்டே, எல்லாவற்றையும் கழற்றி லட்சுமியம்மாளிடம் கொடுத்தபடி, “செட்டி மண்டபத்துக்குப் பக்கத்தில் இருப்பதாக யாரோ சொன்னார்கள். கச்சேரி முடிந்ததும், நேராக அங்கே ஓடி வந்தேன். உங்களைக் காணோம்” என்றான்.
“ஆமாம், நீங்கள் எல்லாரும் என்னைச் சீக்காளி ஆக்கி, வீட்டில் விட்டுப் போய் விட்டீர்கள். எனக்கு இங்கே இருப்புக் கொண்டால்தானே? ஆனால், வீட்டுச் சாவி என்னிடம் இருந்ததனால், கச்சேரி முடிந்து இங்கே வந்து காத்துக் கொண்டிருக்கப் போகிறீர்களே என்று; கலெக்டர் பேசி முடித்ததுமே, புறப்பட்டு வந்து விட்டேன். இங்கே வந்து தம்பூராவைப் பார்த்ததும், உன்னைப் போல் பாடிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது; பாடிக் கொண்டிருந்தேன். அதற்குள் நீங்களும் வந்து விட்டீர்கள்” என்று பாகவதர் கூறினார்.
மறுநாள் காலை சுமார் எட்டு மணிக்கு, டாக்டர் வந்தார். பாகவதரின் உடம்பைப் பரிசோதித்து, “உடல் நிலை தேறியிருக்கிறது. தலைக் காயங்கூட ஆறி விட்டது. நான் சொன்னபடியே, நல்ல ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்று கூறிய போது, பாகவதர் உள்பட அங்குள்ள அனைவரும் லேசாக மனத்திற்குள் சிரித்துக் கொண்டனர். தலைக்குத் தடவ ஒரு களிம்பையும், உள்ளுக்குச் சாப்பிடப் புதிய மருந்தையும் எழுதிக் கொடுத்து விட்டு டாக்டர் புறப்பட்டார். அதற்குள் ஹரியைப் பார்த்து, “நேற்றுப் பிரமாதமாகப் பாடினீர்களாமே? கலெக்டர் ரொம்பப் புகழ்ந்து பேசினாராமே? இதோ என் பாராட்டுக்கள்” என்று கூறிய வண்ணம், அவனது கையைப் பிடித்துக் குலுக்கி. மகிழ்ச்சியைத் தெரிவித்து விட்டுச் சென்றார்.
பிறகு சற்றைக்கெல்லாம் அங்கே வந்த காரியதரிசி, பாகவதரிடம் “சமாளிக்க முடியாத ஜனத் திரளில் நம் வீட்டிலிருந்து வந்தவர்களை, வண்டி வைத்து அனுப்ப முடியாமற் போய் விட்டது” என்று மிகவும் குறைப்பட்டுக் கொண்டார். பிறகு, ஹரி பிரமாதமாகப் பாடினதையும், அதை எல்லோருமே புகழ்வதையும் கூறினார். உடனே நெக்லெஸ் நினைவு வரவே, “ஏதோ திருஷ்டி பரிகாரம் மாதிரி, இப்படி ஓர் அசந்தர்ப்பம் நேர்ந்து விட்டது” என்று வருத்தம் தெரிவித்தார்.
“போனால் போகிறது. நம்முடைய பொருளானால், தானே கிடைக்கிறது” என்று பாகவதர் சமாதானம் கூறினார்.
டாக்டர் குறித்துக் கொடுத்துச் சென்ற மருந்துகளை வாங்கிக் கொண்டு ஹரி வீட்டை அடைந்த போது, காரியதரிசியின் குரல் கேட்டது. உள்ளே நுழைந்ததும், வேறு இரண்டு புதிய நபர்கள் பாகவதரின் அருகில் நாற்காலியில் உட்கார்ந்து பேசுவதைக் கண்டான்,
மருந்தும், கையுமாக உள்ளே வந்த ஹரியைக் கண்டதும், புதியவர்கள் எழுந்து, வணக்கம் தெரிவித்து விட்டு அமர்ந்தனர்.
காரியதரிசி, அருகில் இருந்தவர்களை ஹரிக்கு அறிமுகம் செய்து வைத்து, “இவர்தாம் கரூரில் புதிதாகத் துவங்கியிருக்கும் ‘தும்புரு கான சபாவின்’ செயலாளர், நேற்று உங்களுடைய கச்சேரியைக் கேட்டுப் பரவசமாகி விட்டார். இவருக்கு உங்கள் பாட்டு மிகவும் பிடித்திருக்கிறது. அடுத்த மாதமே, அவர்கள் சபாவில் உங்களுடைய கச்சேரியை வைக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார். உங்களுக்கு எந்தத் தேதி சௌகரியப்படும்? என்ன ரேட் கொடுக்க வேண்டியிருக்கும்? என்றெல்லாம் கேட்டார். நேரிலேயே போய்ப் பேசிக் கொள்வோம் என்று அழைத்து வந்துவிட்டேன்” என்று கூறி, “இதோ, இவரும் என் நண்பர்தாம். வேலூரில் புரந்தரதாஸர் உற்சவம் ஒவ்வொரு வருஷமும் சிறப்பாக நடத்துகிறார்” என்று அறிமுகப்படுத்திய போது; “ஏன், நம் அண்ணாவுக்கே தெரியுமே. இரண்டு வருஷத்துக்கு முன்பு, அண்ணா கச்சேரி கூட பிரமாதமாக நடந்ததே. இந்த வருஷங்கூட, முதல் நாள் அண்ணாவின் கச்சேரியும், அடுத்த நாள் ஹரியின் கச்சேரியும் சேர்த்து ஏற்பாடு செய்யலாம் என்றுதான் வந்திருக்கிறேன்” என்றார் வேலூர் வாசு.
அதற்குப் பாகவதர், “நீங்கள் எல்லாரும் என்னிடம் வைத்திருக்கிற அன்புக்கும், அபிமானத்துக்கும் நான் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன். ஆனால் நான் இனி எழுந்து பாடுவது என்பது அவ்வளவு சீக்கிரத்தில் இல்லை. நேற்று ஹரியின் பாட்டைக் கேட்டதும், எனக்கும் ஆசை வந்து விட்டது. உட்கார்ந்து அரை மணிதான் பாடியிருப்பேன். அதற்குள் தலை சுற்றலும், மயக்கமும் வந்து விட்டன. மண்டை ஓட்டுக்குள் ஏதோ ரெயில் ஓடுகிற மாதிரி இரைச்சல். அதற்குப் பிறகு தோடியாவது, பாடியாவது? ஆதலால், ஹரியின் கச்சேரி நடக்கிற படி நடக்கட்டும். பிறகு தெய்வ சங்கல்பம் போல், போகப் போக பார்த்துக் கொள்ளலாம்” என்று கூறினார்.
எல்லாருக்கும் அதுவே சரியென்று பட்டது.
பிறகு காரியதரிசி, “அவர்கள், முன் பணம் கொண்டு வந்திருக்கிறார்கள். ஹரிக்கு என்ன கொடுக்க வேண்டுமென்று நீங்கள் கூறி விட்டால், அதைக் கொடுத்து விட்டுப் போவார்கள். சௌகரியமான தேதியையும் குறித்துக் கொண்டு விடலாம்” என்றார்.
இதைக் கேட்டதும், பாகவதர் சிரித்தார். “என்ன காரியதரிசி ஸார், எல்லாப் பொறுப்பையும் என் தலையில் போட்டால் எப்படி? இறக்கை முளைத்த பிறகு, அது, அது தானே பறந்து கொள்ள வேண்டியதுதான். சிஷ்யனைத் தயார் செய்து விட வேண்டியதுதான் குருவின் பொறுப்பே தவிர, அதன் பிறகு லௌகிக விஷயங்களில் நான் தலையிட மாட்டேன். அது அவ்வளவு உசிதமும் அல்ல. கச்சேரி செய்யப் போகிறவன் அவன். இனி மேல், அவனுடைய வாழ்க்கையைத் தன் யோக்கியதைக்குத் தகுந்த மாதிரி, அமைத்துக் கொள்ள வேண்டியது அவனே. ஹரியையே கேளுங்கள்” என்றார்.
ஹரியோ, தனக்கு ஒன்றும் தெரியாது என்றும்; குரு சொல்வது போல் செய்வதாகவும் சொல்லி விட்டான்.
“என்ன அண்ணா இது? நீங்கள் ஹரியை கேட்கச் சொல்கிறீர்கள். ஹரியோ, நீங்கள் போய்ப் பாடச் சொன்னால் பாடுகிறேன். கொடுக்கச் சொன்னதைக் கொடுங்கள்; வாங்கிக் கொள்கிறேன்’ என்கிறான். இப்படி இரண்டு பேருமே சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி? நானே உங்களை ஒன்று கேட்கிறேன்; கோபித்துக் கொள்ளாதீர்கள். பஜனை மடக் கச்சேரிக்கு உங்களை வந்து நான் கேட்டதும், நீங்கள் ஹரியைக் கேட்டுக் கொண்டா, எங்களுக்குச் சொன்னீர்கள்? இப்போதும் அப்படியே, நீங்கள்தாம் ஒரு முடிவு சொல்ல வேண்டும். நீங்கள் என்ன கொடுக்கச் சொல்கிறீர்களோ, அதைக் கொடுக்க என் நண்பர்கள் இருவரும் தயார். பளிச்சென்று சொல்லுங்கள் அண்ணா” என்று விஷயத்தை முடித்து விட்டார் செயலாளர்.
“கடைசியில் எல்லாருமாகச் சேர்ந்து, என் தலை மேலேயே பொறுப்பைப் போட்டு விட்டீர்கள். சரி, நான் ஒன்று சொல்லுகிறேன். ஹரியின் பாட்டை நாம் எல்லாரும் கேட்டோம். அவனை நீங்கள் இளம் வித்துவான்கள் செட்டில் சேர்க்கிறீர்களா, பெரிய வித்துவான்கள் லிஸ்ட்டில் சேர்க்கிறீர்களா? வயதையும், அநுபவத்தையும் பற்றி நான் கேட்கவில்லை. வித்தையைப் பற்றி; ஹரியின் திறமையைப் பற்றி மட்டும் பேசுகிறேன். என்ன நினைக்கிறீர்கள்” என்றார்.
பாகவதருடைய இந்தக் கேள்வி, அவர்கள் எல்லாரையுமே திக்கு முக்காட வைத்தது. “என்ன அண்ணா இது? உங்களுடைய சங்கீதப் பிடிகளை எல்லாம் போட்டு இப்படி எங்களை மடக்கினால், நாங்கள் என்ன பதில் பேசுவதென்றே தெரியவில்லை. ஹரியின் பாட்டைக் கேட்டு விட்டுத்தான் இந்த ஏற்பாடு பண்ணினோம். கேட்டவர்கள் அத்தனைப் பேருக்குமே ஹரியினுடைய பாட்டுக் கச்சேரி ரொம்பப் பிடித்திருக்கிறது. எல்லாருக்குமே நல்ல அபிப்பிராயந்தான். அடுத்த வாரம், ‘ரசிக ரஞ்சனி’ பத்திரிகையிலே கூட ஹரியின் பாட்டைப் பற்றி விமரிசனம் வந்தாலும் வரலாம். அந்தப் பத்திரிகையில் நம்ம சஞ்சீவிதான் சங்கீத விமரிசனம் எல்லாம் எழுதுகிறவர்.
அவரும் கச்சேரியைக் கேட்டு அசந்து போனார். என்னைக் கண்டதும், ‘பயல் வெளுத்து வாங்கி விட்டான். என் பெண் அம்புலு கல்யாணம் நிச்சயமானால், இந்தப் பையன் கச்சேரிதான். பெயரில் இளம் வித்துவானே தவிர, பாட்டு நன்றாக முற்றித் தெறித்தது’ என்றார். ‘இப்படியெல்லாம் சொன்னால் போதாது. அது உங்களுக்கும், எனக்குந்தான் தெரியும். ஊருக்குப் போனதும், மனத்தில் பட்டதை ஆணித்தரமாக அடித்து எழுதுங்கள்’ என்று சொன்னேன். இன்று காலை வண்டிக்குத்தான் புறப்பட்டுப் போனார். என்ன எழுதியிருக்கிறார் என்று, அடுத்த வாரம் பத்திரிகை வாங்கிப் பார்த்தால்தான் தெரியும்” என்றார் காரியதரிசி,
“அது சரி, விஷயம் நம்மிடம் பிரமாதமாக இருக்கலாம்; ஆனால், உலகத்துக்குத் தெரிய, அச்சும், பேப்பரும் அவர்களிடம் அல்லவா இருக்கின்றன? எப்படியோ ஹரியின் விஷயமாக நீங்கள் எவ்வளவு சிரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது, இப்போது நீங்கள் சொல்லித்தானே தெரிகிறது?” என்றார் பாகவதர்.
அதற்குள் அருகில் இருந்த கரூர்க்காரர், “நானே சொல்லி விடுகிறேன். எங்கள் சபா ஆரம்பித்து, இரண்டு வருஷம்தான் ஆகிறது. வெளியில் பிரபலமாகவில்லையே தவிர, உள்ளூரில் நிறைய ஆதரவும்; ஏராளமான உறுப்பினர்களும் இருக்கிறார்கள். நாங்கள் பெரிய வித்துவான்களுக்குக் கொடுக்கிற ‘ரேட்’டையே, ஹரிக்குக் கொடுக்கிறோம். சரிதானே? நான் அங்கே போய்த் தேதி குறிப்பிட்டு எழுதலாமா?” என்று கேட்டார் அதைப் போலவே வேலூர்க்காரரும்; முன்பு பாகவதருக்கு எப்படி நடந்து கொண்டோமோ, அதையே ஹரிக்கும் செய்வதாக ஒப்புக் கொண்டார்.
பிறகு காரியதரிசி, “ஹரி இவ்வளவு பிரமாதமாகப் பாடியது பற்றி, ஊரே புகழ்கிறது. ஆனால் திருஷ்டி பரிகாரம் போல், இப்படி ஓர் அசந்தர்ப்பம் நேர்ந்து விட்டது” என்று வருத்தம் தெரிவித்தார்.
உடனே பாகவதர், “போனால் போகட்டும்; நம்முடைய பொருளானால், தானே கிடைக்கிறது” என்று சமாதானம் கூறினார்.
“நெக்லெஸ் எங்கேயும் போய் விடாது. கலெக்டர் வந்து போன இடமாயிற்றே. நேற்றிரவே போலீஸ்காரர்கள் எவனோ ஒருவனைப் பிடித்து வைத்திருக்கிறார்கள். யாரோ சிங்கப்பூர் பக்கிரியாமே; கொள்ளிடக் கரையில், அவனிடந்தான் நகை இருக்கிறதாம். ஸ்டேஷனில் கட்டி வைத்து அடிக்கிற அடியில், நகையைக் கக்கி விட வேண்டாமா? எப்படியும் நகை கிடைத்து விடும். கவலை வேண்டாம்” என்று கூறிய போது, ஹரிக்கு அப்படியே பூமி தலை கீழாகச் சுழல்வது போலிருந்தது.
கையில் இருந்த புதிய நோட்டுக்களையே பார்த்துக் கொண்டிருந்த பாகவதர், ஹரியின் பசுமையான எதிர் காலம் அதில் பளபளத்துக் கொண்டிருப்பதைக் கண்டார். வேலூர்க்காரரும், கருர்க்காரரும் ஹரியின் கச்சேரிக்காகக் கொடுத்து விட்டுப் போன முன் பணமே அது.
‘இதுதான் ஹரி கச்சேரிக்காக வாங்கும் முதல் அட்வான்ஸ். இனிமேல் இவை போன்ற வாய்ப்புக்கள் அவனுக்குத் தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அவன் க்ஷேமமாக இருக்க வேண்டும்’ என்றே பாகவதர் இறைவனைப் பிரார்த்தித்தார்.
ஆற்றங்கரை மண்டபத்தில் அநாதையாக இருந்தவனது குரலை எனக்குக் காட்டி; இறைவன் உலகில் எவ்வளவு பெரிய காரியத்தைச் சாதிக்கச் செய்து விட்டான்? விதையை நடுவதா பெரிது? அது நன்றாகத் தளிர்த்துச் செடியாகி, மரமாகிச் சேதமுறாமல் வளர்ந்து, பூவும், காயுமாகப் பூத்துக் குலுங்கினால் அல்லவா, மரம் நட்டவனின் மனம் பூரிக்கும்? அந்தப் பூரிப்பை எனக்குப் பூரணமாக ஆண்டவன் அளித்து விட்டான்’ என்று எண்ணி மகிழ்ந்தார் பாகவதர்.
“சுசீலாவின் நெக்லெஸ் கிடைத்து விடும்” என்று காரியதரிசி சொல்லிப் போனதும், லட்சுமியம்மாளும், மற்றவர்களும் நகையே திரும்பக் கிடைத்து விட்டாற் போலத்தான் மகிழ்ந்தனர். சுசீலாவுக்குப் போன உயிர் திரும்பி வந்தாற் போலிருந்தது. ஆனால், பாகவதரோ, நகை பறி போனவுடன், எப்படிப் பதறாமல் அமைதியாக இருந்தாரோ, அப்படியே நகை கிடைத்து விடும் என்ற செய்தியைக் கேட்டதும், அமைதியாகவே இருந்தார்.
லட்சுமியைக் கண்டதும், பாகவதர் கையில் இருந்த நோட்டுக்களையெல்லாம் கொடுத்து, “பத்திரமாக எடுத்து உள்ளே வை. வேலூரில் எனக்குக் கச்சேரிக்கு வந்திருக்கிறது. அட்வான்ஸ் பணங்கூட வாங்கியாகி விட்டது. எல்லாரும் தமாஷாகப் போய் விட்டு வருவோம். என்ன சொல்லுகிறாய்?” என்று மகிழ்ச்சியுடன் கேட்டார்.
“கையை நீட்டி அட்வான்ஸ் வாங்கியாகி விட்டது. கச்சேரி பண்ண முடியா விட்டாலும், ஏதாவது தமாஷாவாவது பண்ணி விட்டு வாருங்கள். வேலூரிலே உங்களுக்குத் தெரிந்த மனிதர்கள் யாராவது இல்லாமலா போய் விடுவார்கள், காப்பாற்றுவதற்கு? வீணாக எங்களுக்கு வேறு எதற்கு அநாவசியச் செலவு?” என்றாள் லட்சுமியம்மாள் சிரித்துக் கொண்டு.
உடனே பாகவதர் சுந்தரியின் பக்கம் திரும்பி, “சுந்தரி, பார்த்தாயா உன் அக்காவை? வாயில்லாப் பூச்சி, பரம சாது என்று சொல்லுவாயே. சிறிது நேரத்துக்குள் என்ன போடு போட்டு விட்டாள் பார்த்தாயா? இனி மேல் நான் எழுந்திருக்கவே மாட்டேன்; இப்படியே இங்கேயே விழுந்து கிடக்கப் போகிறேன் என்று இவளுக்கு நினைப்புப் போலிருக்கிறது. அப்படித்தானே?” என்றார்.
“அப்படி உங்களை யார் சொன்னார்கள்? இன்றே வேண்டுமானாலும், மேடையிலே போய் உட்கார்ந்து பாடி விட்டு வாருங்கள். எங்களையெல்லாம் வீணாகக் கூப்பிட வேண்டாம் என்றுதான் சொல்லுகிறேன். பாவம்! பாகவதரைப் பணத்துக்கு ஆசைப்பட்டு அனுப்பி விட்டார்கள் என்று நாளை எங்களை அல்லவா ஊர் உலகம் நொறுக்கும்?”
“சரி சரி, போதும், விடு. இப்பொழுது நான் கச்சேரிக்குப் போகிற நிலையில்தான் இருக்கிறேன்! அது இருக்கட்டும், இந்தப் பணத்தை வீட்டுச் செலவுக்கு எடுத்துக் கொண்டு விடாதே. இதெல்லாம் ஹரியின் பணம். அவனைக் கரூரிலும், வேலூரிலும் கச்சேரிக்குப் பேசி முன் பணம் கொடுத்துவிட்டுப் போகத்தான் காரியதரிசி இங்கே வந்திருந்தார். பயலுக்கு அதிர்ஷ்டம் ஆரம்பமாகி விட்டது; என்ன சொல்லுகிறாய்?”
“ஆக வேண்டியதுதானே? காலையில் ஆற்றுக்குக் குளிக்கப் போய் விட்டு வருவதற்குள், என்னை வழி மறித்துக் கொண்டு ஹரியைப் புகழாதவர் இல்லை. எந்தக். கொள்ளிக் கண்ணாவது பட்டு வைக்காமல் இருக்க வேண்டுமே என்றுதான் கவலைப்பட்டேன். வந்ததும், உழக்கு நிறைய உப்பும், மிளகாயும், முச்சந்தி மண்ணுமாக ஹரி தலையைச் சுற்றிப் போட்டேன். துளியாவது கமற வேண்டுமே!” என்றாள் லட்சுமி.
“ஆமாம் ஆமாம். என் கண்ணே பட்டிருக்கும். அவன் நேற்றுப் பாட்டா பாடினான்? தேவகானமாக அல்லவா பொழிந்து தள்ளி விட்டான்?” என்று பாகவதர் கூறிக் கொண்டிருக்கும் போது, பஞ்சு அண்ணாவும், ராஜப்பாவும் வந்தனர். அவர்களைக் கண்டதும் பாகவதர் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றார். லட்சுமியும், சுந்தரியும் உள்ளே சென்றார்கள்.
“நேற்று உங்கள் சிஷ்யன் வெளுத்துக் கட்டி விட்டான்” என்று கூறிக் கொண்டே, பஞ்சு அண்ணா பாகவதரின் பக்கத்தில் அமர்ந்தார்.
“எல்லாம் உங்களைப் போன்ற பெரியவர்களுடைய ஆசீர்வாதந்தான்” என்றார் பாகவதர் அவர்களைப் பார்த்து.
“பெரியவர்களாவது, ஒண்ணாவது! இத்தனை வயதும், அநுபவமும் ஆகி என்ன பண்ணுகிறது? எங்கே, ஹரி இருக்கிறானா?” என்றார் பஞ்சு அண்ணா உள்ளே பார்த்தபடியே.
“இல்லை, வெளியே போயிருக்கிறான். நாம் தாராளமாகப் பேசிக் கொள்ளலாம்” என்றார் பாகவதர்.
“இதில் என்ன அண்ணா ஒளிவு, மறைவு? இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை. பொழுது விடிந்ததுமே, உங்களை வந்து பார்த்துச் சொன்னால்தான் சமாதானம் ஆகும் போலிருந்தது. நேரே வந்து விட்டேன்.”
“ஆமாம், ராஜப்பாவை எங்கே பிடித்தீர்கள்?”
“கும்பகோணத்திலிருந்து ஒரு காரியமாக வந்தேன். அவனும் இதே நோக்கத்தோடுதான் வந்து கொண்டிருந்தான். வழியிலே கலந்து கொண்டோம். அப்பா! இந்த மாதிரி; கச்சேரிக்கு உட்கார்ந்து, முழுசாக நான்கு மணி நேரம் தம் கட்டி வாசித்து எத்தனை நாளாயிற்று? அப்படியே அந்தக் காலத்தில் நீங்கள் பால்யத்திலே பாடுவீர்களே, அதுதான் எனக்கு நினைவு வந்தது. அழுது விட்டேன். இவ்வளவு சரக்கை வைத்துக் கொண்டு அன்று, இங்கே பூனைப் போலப் பாடி எப்படி ஹரி ஏமாற்றி விட்டான், பார்த்தீர்களா?” என்றார்.
‘எல்லாம் வண்டியிலே உட்கார்ந்து பார்த்துக் கொண்டுதானே இருந்தேன்? நான்கு தடவை உங்களைத் தேடி வீட்டுக்கு வந்தானே. ‘பையன் புதிதாயிற்றே! இரண்டு நாளைக்குச் சேர்ந்தாற் போல அவனுடன் வாசித்துத் தயார் செய்வோம்’ என்று உங்களுக்குத் தோன்றியதா? அலட்சியமாக நினைத்துக் கொண்டுதானே அன்று இங்கே நீர் அப்படிப் பிடில் வாசித்தீர்? ராஜப்பாவோ, தான் பெரிய மேதாவி மாதிரி தன் விவகாரத்தையெல்லாம் பூனை மாதிரி இருந்தவனிடம் காட்டினான். இன்னோர் அசடாக இருந்தால் பயந்து போய் விழிக்கும் ‘புலி வாலை அல்லவா போய்த் திருகி விட்டோம்?’ என்று—பாய்ந்த பிறகுதானே உங்களுக்குப் புரிந்தது?’ என்று எண்ணிக் கொண்டார் பாகவதர்.
அங்கு வந்த சுசீலா, “நேற்று நீங்கள் மிகவும் நன்றாக வாசித்தீர்கள் அண்ணா” என்று பஞ்சு அண்ணாவிடமும், “உங்களையுந்தான்” என்று ராஜப்பாவிடமும் கூறினாள்.
“ஆமாம் ஆமாம். எல்லாரும் சேர்ந்து கேலி செய்யுங்கள்” என்று கூறியபடி, ஏதோ அவர் பேச நினைப்பதற்குள் பாகவதர் குறுக்கிட்டு, “அது இருக்கட்டும்; முக்கியமான விஷயத்தை மறந்து விட்டேனே. ஹரிக்கு இந்த மாதம் வேலூரிலும், கரூரிலும் கச்சேரிக்கு முன் பணம் கொடுத்து விட்டுப் போயிருக்கிறார்கள். அவர்கள் கேட்டிருக்கும் இந்த நாலைந்து தேதியிலும், உங்களுக்கு எந்தத் தேதி சௌகரியம் என்று சொன்னால், ஹரி வந்ததும் பதில் எழுதிப் போடச் சொல்லுகிறேன்; என்ன சொல்லுகிறீர்கள்?” என்று கேட்டார்.
“சொல்லுவதற்கு என்ன அண்ணா இருக்கிறது? வீட்டுக்குப் போனதும் முதற் காரியமாக, டைரியைப் பார்த்து ராஜப்பாவையும் கலந்து கொண்டு, விஷயத்தைச் சொல்லி அனுப்புகிறேன்” என்று சொல்லிப் பஞ்சு அண்ணா எழுந்தார். ராஜப்பாவும் கூடவே புறப்பட்டார்.
அவர்கள் போன பிறகு, பாகவதரது மனம் மீண்டும் ஹரியைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருத்தது.
‘தாயினும் சாலப் பரிந்து’ பல்லவியை அவருக்கே தெரியாமல், அவன் எப்போது தயார் பண்ணினான்?—அதைக் கேட்க வேண்டுமென்று நேற்றிலிருந்து நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால், ஞாபகமே வரவில்லை. இப்போது கூட அவருக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. ‘ஒரு வேளை அடுத்தக் கச்சேரிக்கும், ஏதாவது புதுப் பல்லவி தயார் பண்ணுவதற்குத்தான், காவிரி மண்டபத்தைப் பார்க்கப் போய் விட்டானோ?’ என்று எண்ணினார்.
ஏனெனில், ஹரிக்கு ஆரம்பத்திலிருந்தே லய சம்பந்தமான விஷயங்களில் அதிக விருப்பம் உண்டு. மிகவும் நெரடான ஸ்வரக் கோவைகளைக் கூட, அநாயாசமாகப் பாடக் கூடிய திறமை அவனுக்கு இருந்தது. ஆனால், பாகவதருக்கு ஹரியை அந்த வழியிலேயே விட்டு விட விருப்பமில்லை. ஏனென்றால், சங்கீதம் சுகாநுபவத்துக்காக ஏற்பட்ட வித்தை. வண்ண மலரிலே மென்மையும், மணமும் பொருந்தியிருப்பதே போல் இசையிலே ராகம், பாவம், தாளம் ஆகிய எல்லாம் ஒன்றோடு ஒன்று இணைந்து பரிணமிக்க வேண்டும். அதைக் காயகன் மறந்து, விவகாரத்திலேயே ஈடுபடத் தொடங்கி விட்டால், மலர்களின் இதழ்களைப் பிய்த்துப் பறக்க விடுவதே போல் பிறகு, அவனுக்கு அதிலேதான் புத்தி போகும். சுகாநுபவத்தை அவனும் மறந்து விடுவான்; அதுவும், நாளடைவில் தானாகவே அவனை மறந்து விடும். ஆகவே, சிறந்த அறுசுவை உணவில் ஓர் அம்சமாக லயமும் சோபிக்க வேண்டுமே தவிர, தெவிட்டும் பதார்த்தத்தைப் போல், சங்கீதத்தின் இனிமையையும், சுகத்தையும் மிஞ்சுகிற எந்த விவகாரமும் கச்சேரியில் இருக்கக் கூடாது என்பது பாகவதருடைய கொள்கை. அதையேதான், அவர் தம் கச்சேரிகளில் கையாண்டார். பாகவதருடைய கச்சேரியின் சிறப்பே அதுதான். அதில், நானாவித ருசியும், ரசமும் இருக்கும். மகாவித்துவான்கள் சபாஷ் போடும் அம்சமும், இளம் தலைமுறையினர் புரிந்து கொண்டு பின் பற்ற வேண்டிய விஷயமும் இருக்கும்; பாமர மக்களின் மனத்தைக் கவரும் அம்சமும் இருக்கும். இப்படி ஜனரஞ்சகமான கச்சேரிதான் பாகவதருடைய சிறப்பு. கச்சேரியில் வந்து உட்கார்ந்து விட்டால், சற்றுக் கூட அலுப்புச் சலிப்புத் தோன்றாது.
நேரம் ஓடிக் கொண்டே இருந்தது. நாழிகை செல்லச் செல்லப் பாகவதருடைய மனம் ஹரியின் வருகையைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் வந்து விடுவதாகச் சொல்லி வெளியே போனவன், ஏன் இவ்வளவு நேரமாகியும் காணவில்லை? ‘எங்கே போயிருப்பான்? சுந்தரியும், வசந்தியும் ஊருக்குப் போகக் காத்திருக்கிறார்களே! ரெயிலேற்றி அனுப்பவாவது வருவானா? இம்மாதிரிச் சொல்லாமல் அவன் எங்கும் போனதில்லையே?’—
ஆனால், அவருடைய எண்ணத்துக்கும், ஊகங்களுக்கும் அப்பாற்பட்ட நிலையில், ஒரு தலை போகிற காரியத்தில் ஈடுபட்டிருந்தான் ஹரி. ஆம்! அது அவனுக்கு ஒரு சுய கௌரவப் பிரச்சனை.