உள்ளடக்கத்துக்குச் செல்

புல்லின் இதழ்கள்/நல்ல முடிவு

விக்கிமூலம் இலிருந்து

26. நல்ல முடிவு

திருச்சிக்குப் போகிற வழியெல்லாம் ஹரி காந்தாமணியைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான். அது அவனுக்கே ஆச்சரியமாகத் தோன்றியது. மானின் மிடுக்கும், மயிலின் ஒயிலும் கூடிய காந்தாமணியின் நளினம் அவன் கருத்தைக் கவர்ந்து, ரசிகத் தன்மையைத் தூண்டி விட்டது. வசந்தியிடமும், சுசீலாவிடமும்-ஏன், அவன் சந்தித்த மற்ற எந்தப் பெண்களிடமும் கண்டறியாத—ஏதோ ஒரு விதக் கவர்ச்சி அவனை அவளிடம் இழுத்தது.

காந்தாமணிக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுக்க, குருநாதர் அநுமதிக்கிறாரோ இல்லையோ என்கிற பெரும் கவலை அவன் மனத்தில் எழுந்தது. ஆனால், அதையும் மீறி எப்படியாவது காந்தாமணிக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுத்தே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டு விட்டதை அவன் எண்ணிப் பார்த்தான்.

பையில் பழத்தைப் போட்டு நிரம்பிக் கொடுத்தவர்கள்; அதில் இத்தனை பணத்தையும் போட்டிருப்பார்கள் என்று யார் எதிர்பார்த்திருப்பார்கள்? ஒரு வேளை, அந்தப் பணம் தவறுதலாகப் பழத்துடன் வந்து விட்டதோ? அப்படி இருந்தால, அது திருப்பிக் கொடுக்க வேண்டிய பணம் அல்லவா? தெரியாமல், இப்படிப் பக்கிரியின் முன் பையைத் தலை கீழாகக் கொட்டி, திருட்டுப் பயலின் வாயால், திருட்டுப் பட்டம் வேறு வாங்கிக் கட்டிக் கொள்ளும்படி ஏற்பட்டு விட்டதே என்று மனம் வருந்தினான்.

சங்கீதம் கற்றுக் கொள்வதற்கென்று ஒரு முறை தன் குருநாதருடைய வீடு தேடி வந்து, அவர்கள் அடைந்த ஏமாற்றத்தை - ஏன், ஒரு வகையில் அதை அவமானம் என்று கூடச் சொல்லலாம் - அவன் மறக்கவில்லை. ஆனால், இத்தனை செல்வமும், அந்தஸ்தும் இருந்தும், அவர்கள் அதைப் பெருந்தன்மையோடு மறந்து விட்டனர். இல்லா விட்டால், பாகவதருடைய சிஷ்யனான அவனைத் தேடிக் கொண்டு, மகளுக்காக அம்மா சத்திரத்துக்குத் தூது வர இசைவாளா?

‘சுசீலாவுக்கும், வசந்திக்கும் பாட்டுச் சொல்லிக் கொடுப்பது தவறு இல்லையானால்; காந்தாமணிக்குச் சொல்லிக் கொடுப்பது மட்டும் தவறாகி விடுமா? ஆனால், இத்தனைக்குப் பிறகு, அதை மீறுவது எப்படி? எனவே, காயத்திரியுடன் ஆலோசித்து, வேறு ஏற்பாடு செய்து விட்டு, காந்தாமணிக்கு ஒரு நல்ல நாளில் பாடம் ஆரம்பித்து விட வேண்டியதுதான்’ — என்று ஓடுகிற ரெயிலில், அவன் மனம் ஒரு முடிவுக்கு வந்தது.

திருச்சியிலிருந்து திரும்பிய ஹரி, நேராக சுவாமி மலையில் இறங்கினான். அப்போது எதேச்சையாகக் காயத்திரி மட்டுமே இருந்ததனால், ஹரிக்கு மிகவும் சௌகரியமாகப் போய் விட்டது. சுசீலா, அம்மாவுடன் டாக்டர் வீட்டுக்குச் சென்றிருந்தாள்.

ஹரி மூன்று நாள் கச்சேரி விஷயங்களையும் சொல்லி, காந்தாமணியைச் சந்தித்த விதத்தையும் விளக்கினான்.

“அவர்களுக்குப் பணத்தைப் பற்றிக் கவலை இல்லை. எத்தனை ரூபாய் கேட்டாலும் கொடுப்பார்கள். நான் ஊரில் இருக்கும் போது மட்டும் போய்ப் பாடம் எடுத்தால் போதும். மிகவும் அடக்கமான மனிதர்கள். ஏதோ நம்முடைய அப்பா பாணியில், அவர்களுக்கு அப்படி ஓர் ஆர்வம். முதல் நாளே, அர்த்தமில்லாமல் பழத்தையும், பணத்தையும் பையில் கொட்டிக் கொடுத்து அனுப்புகிறார்கள். ஆனால், பாவி பக்கிரிதான் எங்கிருந்தோ எமன் மாதிரி வந்து, எனக்கே தெரியாமல் இருந்ததைத் தட்டிக் கொண்டு போய் விட்டான்” என்று காந்தாமணியைப் பற்றின விவரங்களைச் சொன்னான்.

உடனே காயத்திரி, “பக்கிரியை எதற்காக அநாவசியமாகத் திட்டுகிறாய்? அவன் தனக்காகவா கேட்கிறான்? அவன் இல்லா விட்டால், நீ அல்லவா ஒவ்வொரு தடவையும் ஊருக்குப் போக வேண்டியிருக்கும்?” என்று கூறினாள். ஹரி பதில் பேசவில்லை.

பிறகு ஹரிக்கு அவளே ஒரு யோசனை சொல்லிக் கொடுத்தாள். “காந்தாமணியின் பெயரை எடுத்தால், மறுபடியும் அப்பா மறுக்கலாம். ஆகவே யாரோ ஒரு தஞ்சாவூர் மிராசுதாருக்கு - பெயர் கல்யாணராமன் என்று வேண்டுமானாலும் சொல்லு - டியூஷன் சொல்லிக் கொடுக்கப் போகிறேன் என்று சொல்லு. அப்பாவின் வைத்தியச் செலவு போகிற போக்கைப் பார்த்தால் வீடு, நகைகள் எல்லாவற்றோடு, ஆளையும் சேர்த்து விழுங்கி விடும் போல் இருக்கிறது. சுந்தரியிடமிருந்து, எவ்வளவுதான் பற்றிக் கொள்கிறது? அளவு இல்லையா? அப்பாவுக்கு அதுவே பெரிய பாரமாக மனத்தை உறுத்துகிறது. ஆனால், இதில், நீ அவருக்கு அதுசரணையாகத் தொழிலும் செய்கிற யோக்கியதை அடைந்து விட்ட திருப்தியினால்தான், அவர் ஓரளவாவது மன நிம்மதியுடன் இருக்கிறார்” என்று கூறினாள்.

ஹரி காயத்திரியின் புகழ் மாலைக்கெல்லாம் கழுத்தை நீட்ட விரும்பாதவன் போல், வேகமாகப் பஞ்சாங்கத்தைப் புரட்டிச் சௌகரியமான ஒரு நாளைத் தேர்ந்தெடுத்தான். அன்று வருவதாகத் தஞ்சைக்கும் கடிதம் எழுதிப் போட்டான்.

சற்றைக்கெல்லாம், கையில் மருந்துடன் ஆஸ்பத்திரியிலிருந்து சுசீலா வந்தாள். ஹரியைப் பார்த்ததும், ஊருக்குப் போய் வந்த விவரங்களை விசாரித்தபடியே, தந்தையின் அறைக்குச் சென்று விட்டாள்.

“தஞ்சாவூர் விஷயத்தை மறந்து போய்க் கூடச் சுசீலாவிடம் மூச்சு விட்டு விடாதீர்கள்” என்று ஹரி காயத்திரிக்கு ஞாபகப் படுத்தினான்.

காயத்திரி சிரித்துக் கொண்டே, “சரிதான்; நான் உன்னை எச்சரிக்கை செய்ய வந்தால், நீ எனக்குச் சொல்லிக் கொடுக்கிறாயா? சுசீலாவுக்கு மட்டும் அல்ல; வசந்தி, அப்பா, அம்மா எல்லாருக்குமே, காந்தாமணி—கல்யாண ராமன்தான். இதை நன்றாக நீ, ஞாபகத்தில் வைத்துக் கொள்; உளறி விடாதே” என்று கூறினாள்.

அப்பொழுது அங்கு வந்த சுசீலாவைப் பார்த்தபடி, காயத்திரியிடம் ஹரி, “அக்கா, எனக்குத் தஞ்சாவூரில் கிடைத்திருக்கிற புது டியூஷனைப் பற்றிச் சுசீலாவுக்குச் சொல்ல வேண்டாமா?” என்று அவள் வயிற்றெரிச்சலைக் கிளப்பினான்.

“அதையெல்லாம் நான் சொல்லிக் கொள்கிறேன். அப்பா தூங்கி எழுவதற்குள், நீ சீக்கிரம் உன் குளியலை முடித்து விட்டு வா; சீக்கிரம்” என்று காயத்திரி அவனைத் துரிதப்படுத்திய போதே, வெளியிலிருந்து லட்சுமியம்மாள் “ஹரி எப்பொழுது ஊரிலிருந்து வந்தாய்? எல்லாம். சௌகரியமாக நடந்ததா?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தாள்.

உடனே ஹரியும், “எல்லாம் உங்கள் ஆசிர்வாதத்தினால் நன்றாகவே நடந்தது அம்மா. திருச்சியில், கச்சேரிக்கு வந்த அத்தனை பேரும், ஐயாவைப் பற்றியே என்னிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். ஐயாவின் உடம்பைப் பற்றிக் கேட்டு, அவர்கள் எல்லாரும் மாய்ந்து, போனார்கள்” என்று அவன் கூறிய போதே, லட்சுமியம்மாளின் கண்களில் நீர் பளபளத்தது.

“ஆமாம். திருச்சிப் பக்கமெல்லாம் இவருக்கு ரொம்பப் பேர். ‘பாகவதர், பாகவதர் என்று உயிரையே வைத்திருக்கிறார்கள்’ என்று என்னிடம் வந்து, எத்தனையோ தடவை சொல்லியிருக்கிறார்” என்று லட்சுமியம்மாள், குரல் தழுதழுக்கக் கூறினாள்.

இதற்குள், பாகவதர் விழித்துக் கொண்டு இருமுகிற சப்தம் கேட்கவே, எல்லாரும் அருகில் சென்றனர். புதிதாக வாங்கி வந்த மருந்தை, அவுன்ஸ் கிளாசில் ஊற்றிக் கொடுத்தாள் சுசீலா. “ஆரஞ்சு வேண்டுமானால், உரித்துத் தரட்டுமா?” என்று கேட்ட லட்சுமியம்மாளிடம், “ஒன்றும் வேண்டாம். ஊரிலிருந்து ஹரி எப்போது வந்தான்? என்னை எழுப்பக் கூடாதோ?” என்று குறைப் பட்டுக் கொண்டார் பாகவதர்.

அருகில் இருந்த ஹரியின் கையைப் பிடித்துக் கொண்ட வண்ணம், “கச்சேரி எல்லாம் நன்றாக நடந்ததா ஹரி? தெப்பத்தில் ரொம்பக் கூட்டமோ?” என்று பரிவுடன் விசாரித்தார்.

உடனே அருகில் இருந்த லட்சுமி, “கச்சேரி எல்லாம் ரொம்பப் பிரமாதமாகப் பண்ணி விட்டுத்தான் வந்திருக்கிறானாம். திருச்சியிலே கச்சேரிக்கு வந்த ஒவ்வொருத்தரும், உங்களைத்தான் விசாரித்தார்களாம். ‘குருவினுடைய பாணி அப்படியே சொட்டுகிறதே’ என்று புகழாதவர் இல்லையாம்” என்று கூறும் போதே, “அது ஒன்றுதான் நான் செய்திருக்கிற பாக்கியம்” என்றார் பாகவதர்.

கையில் இருந்த அவுன்ஸ் கிளாஸை வாங்கி வைத்த லட்சுமியம்மாள், “ஏன் பசி இல்லை என்கிறீர்கள்? ஹரி ஆசையோடு வாங்கி வந்திருக்கிறான். ஒரு பழம் உரித்துத் தருகிறேன்; தின்றால் என்ன?” என்றாள்.

“ஹரி வாங்கி வந்ததா? கொடு கொடு. இதை ஏன் நீ முதலிலேயே சொல்லவில்லை?” என்றார்.

லட்சுமியம்மாள் சிரித்தபடியே, பழத்தை உரித்துக் கொடுத்துக் கொண்டே கூறினாள்: “இது மட்டுமல்ல; இனி மேல், உங்களுக்கு அடிக்கடி வெற்றிலை போடத் தஞ்சாவூர் வண்ணாத்திச் சீவலும், எங்களுக்கு முந்திரிப் பருப்பும் கிடைக்கும். ஹரிக்குத் தஞ்சாவூரில் ஒரு பெரிய மிராசுதார் வீட்டுப் பிள்ளை சிஷ்யனாகத் கிடைத்திருக்கிறானாம். பாடத்துக்குப் போகும் போதும், வரும் போதும் வாங்கி வரலாம் அல்லவா?” என்று கூறினாள்.

இதைக் கேட்டதும், பாகவருக்கு ஆனந்தம் தாங்கவில்லை. “அப்படியா, பலே பலே! விஷயத்தை இரண்டு பேருமாகக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அவிழ்த்து விடுகிறீர்கள். ஆமாம், மிராசுதாரருக்குத் தஞ்சாவூரேதானா, இல்லை. அங்கிருந்து பக்கத்துக் கிராமமா? உனக்கு எப்போதெல்லாம் வரச் சௌகரியப்படும் என்று சொல்லி விட்டாயா? இது என்ன ஆரம்பப் பாடமா, அல்லது ஏற்கனவே கொஞ்சம் பரிச்சயம் உண்டா?” என்று கேள்விகளை ஒன்றன் மேல் ஒன்றாகக் கேட்டார்.

ஹரிக்குக் குருவிடம் பொய் சொல்ல வேண்டியிருக்கிறதே என்ற வேதனை உள்ளூற இருந்தாலும், வேறு வழி இல்லையே என்ற உணர்வுடன், அத்தனை கேள்விகளுக்கும் தயங்காமல் பதிலளித்தான். ஆனால், காயத்திரி கூறியிருந்தது போல், காந்தாமணி கொடுத்த இருநூறு ரூபாயைப் பற்றி மட்டும் பிரஸ்தாபிக்கவே இல்லை.

எல்லாவற்றையும் கேட்ட பிறகு, பாகவதருக்கு நம்பிக்கை பலமாக விழுந்தது. “ஹரி எப்படியும் பிழைத்துக் கொள்வான். அதற்கு வேண்டிய உழைப்பும், சாமர்த்தியமும் அவனிடம் இருக்கின்றன. மனிதர்களிடம் எப்படிப் பக்குவமாக நடந்து கொண்டு, அவர்களைக் கவர வேண்டும் என்ற கலையும் அவனுக்குக் கை கூடியிருக்கிறது. மிராசுதாரர் என்ன, ஜமீன்தார் என்ன, பெரிய பெரிய மகாராஜாக்களே அவனைக் கூப்பிட்டு அனுப்பிக் கௌரவிக்கப் போகிறார்கள். எல்லாம் தெய்வ சங்கல்பம். ஏதோ ஹரி மலை மேல் விளக்குப் போல் பிரகாசித்தால், அதை ஏற்றி வைத்த பெருமை ஒன்றுதான் என்னுடையது” என்று கண்களை மூடிக் கொண்டு, பாகவதர் மனத்துக்குள்ளேயே மகிழ்ந்து கொண்டிருந்தார். அந்த மகிழ்ச்சியிலேயே உறங்கிப் போனார்.

ஊருக்கு வந்ததும், காந்தாமணிக்குப் புறப்பட்டு வருகிற தேதியைக் குறிப்பிட்டு எழுதிய கடிதத்திலேயே, வேறொரு முக்கியமான விஷயத்தையும் எழுதியிருந்தான் ஹரி. அது வேறொன்றும் அல்ல; “எந்த விதமான பதில் கடிதமும் நீ சுவாமி மலைக்கோ, எனக்கோ எழுத வேண்டாம்” என்பதுதான். அதன்படி, தன் கடிதத்துக்குப் பதில் வராது என்பது அவனுக்குத் தெரிந்திருந்தாலும், ‘போட்ட கடிதம் போய்ச் சேர்ந்திருக்குமா? என்ற புதுக் கவலை ஏற்பட்டது.

வீட்டை விட்டு வெளியே போக நேரும்போதெல்லாம், ‘நாம் இல்லாத போது, காந்தாமணியிடமிருந்து பதில் கடிதம் ஏதாவது, தவறுதலாக வந்து விடுமோ?’ என்று மனம் தவித்தது. ஆனால், ஹரியின் இந்தக் கவலைகள் யாவும் காந்தாமணியின் வீட்டுக்குள் நுழைந்ததுமே தீர்ந்து போயின.

காந்தாமணியும், அவள் தாயும் ஹரியைக் கண்டதும் மிக்க அன்புடன் வரவேற்று உபசரித்தனர். கடிதம் கிடைத்ததையும், பதிலுக்கு நன்றி தெரிவிக்கக் கூட வழியில்லாமல், அதில் தங்களுக்குத் தடை உத்தரவு பிறப்பித்திருந்ததையும் சுட்டிக் காட்டிக் காந்தாமணி பெரிதாகக் குறைப்பட்டுக் கொண்டாள். ஆனால் அதற்கெல்லாம் ஹரி தக்க பதில் கூறி, அவர்களைச் சமாதானப் படுத்தினான்.

“குருநாதருக்குத் தெரியாமல் என் ஆயுளில் இது வரை நான் எந்தக் காரியத்தையும் செய்தவன் அல்ல. ஆனால், உங்களுடைய அன்பையும், காந்தாமணியின் இசை ஆர்வத்தையும் என்னால் ஒதுக்கித் தள்ள முடியாமல்தான்; நான் இந்தக் காரியத்துக்கு உடன் பட்டேன்’ என்று ஹரி கூறிய போதே காந்தாமணியின் தாய் குறுக்கிட்டு, ‘ஆமாம், ஆமாம்; எங்களுக்குக் கூட ஒரே கவலையாகத்தான் இருந்தது. ஊருக்குப் போய் யோசித்துச் சொல்லுகிறேன் என்று கூறி விட்டீர்களே; அங்கே போனால், பாகவதர் என்ன சொல்கிறாரோ என்ற பயந்தான். உங்களையும் தடுத்து விடாமல் இருக்க வேண்டுமே என்று நானும், காந்தாமணியும் அம்பாளை வேண்டிக் கொண்டே இருந்தோம்” என்று ஒரே மூச்சில் கூறி நிறுத்தினாள்.

“நீங்கள் கவலைப்பட்டதும் நியாயம்; அத்துடன் வேண்டிக் கொண்டதும் வீண் போகவில்லை. நான் என் குருவிடம் உண்மையைக் கூறி, ஒரு வேளை அவர் என்னைத் தடுத்து விட்டால், பிறகு என்னால், அவருடைய வார்த்தையை மீறிக் கொண்டு வர இயலாது. ஆகையால், காந்தாமணியைப் பெரிய மிராசுதார் வீட்டுப் பிள்ளையாக—கல்யாண ராமனாக்கி அவரிடம் அநுமதி கேட்டேன். உங்கள் பிரார்த்தனை பலன் தந்து விட்டது. வந்து விட்டேன்” என்று ஹரி கூறினான்.

“எனக்காக நீங்கள் இவ்வளவு சிரமம் எடுத்துக் கொண்டதற்கு நான் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன்” என்று காந்தாமணி நன்றி தெரிவித்தாள்.

ஹரி எதையோ நினைத்துக் கொண்டவன் போல், “ஆமாம், உங்களிடம் வந்ததுமே ஒன்று கேட்க வேண்டுமென்று இருந்தேன். அன்று பழங்களுடன், இரண்டு நூறு ரூபாய் நோட்டுகள் தவறுதலாக என் பைக்குள் வந்து விட்டன. இந்தாருங்கள்” என்று சட்டைப் பையிலிருந்து எடுக்கப் போன போதே, காந்தாமணியின் தாய் தடுத்துக் கூறினாள்.

“தவறுதலாக ஒன்றும் ஏற்பட்டு விடவில்லை. நானேதான் தட்டில் பழங்களுடன், அதை உங்களுக்காக வைத்திருந்தேன். நீங்கள் அதைத் திருப்பித் தரக் கூடாது; இது காந்தாமணியின் விருப்பம்” என்று கூறினாள். ஹரி மறுக்கவில்லை.

மாடியில் இருந்த பெரிய ஹாலில் விரிக்கப்பட்டிருந்த ரத்தினக் கம்பளத்தில், அழகான தம்பூரா ஒன்று படுத்துக் கிடந்தது. பக்கத்தில் இருந்த, ரவி வர்மா தீட்டிய பெரிய சரஸ்வதி படத்துக்கு அழகிய ரோஜாப் பூமாலை போட்டிருந்தது. எதிரே இருந்த தட்டில், உதிரி மலர்கள், வாசனைச் சந்தனம், குங்குமம், கர்ப்பூரம், ஊதுவத்தி, அவல், பொரி கடலை, நாட்டுச் சர்க்கரை, பழ வகைகள் எல்லாம் நிவேதனத்துக்குத் தயாராக இருந்தன.

ஹரி பூஜைக்கு வேண்டிய சாமான்களை ஒழுங்காக எடுத்து வைத்துக் கொண்டான். பாகவதர் சொல்லிக் கொடுத்தது போல, பூஜையை முறையாகச் செய்தான். பண்டிகை நாளைப் போல காந்தாமணியும், அவள் தாயும் அதிகாலையிலேயே குளித்துப் புத்தாடை உடுத்து, மிகுந்த பக்தியோடு காணப்பட்டனர். தனக்கும், சங்கீத வித்தைக்கும் அவர்கள் எவ்வளவு மதிப்பும், கௌரவமும் காட்டுகிறார்கள் என்பதை அவன் மனம் நன்கு உணர்ந்தது.

ஹரி தம்பூராவைக் கையிலெடுத்துப் பார்த்தான். அது பிரமாதமான தந்த வேலைப்பாடுகள் கொண்ட புத்தம் புதிய திருவனந்தபுரம் தம்பூரா. ஒரு முறை மீட்டினான். அது அவனுடன் மலையாளத்தில் கொஞ்சுவது போல் இருந்தது.

“பாகவதர் சாரே! ஞான் ஜெனிச்சப் பின்னீடு, வித்வான்மாராயிட்டு, நிங்கள் கையில் தன்னெயாணு ஆத்யமாயிட்டு வன்னிட்டுள்ளது; அது என்றே பாக்யம். நவ்லதாயிட்டு கல்யாணியில் ஒரு பாட்டுப் பாடணும்; என்றே செவி கொண்டு கேள்கட்டே.”

“ஓ! அங்ஙனே தன்னே ஆகட்டே” என்று சிரித்துக் கொண்டே தனக்குத் தெரிந்த அரைகுறை மலையாளத்தில் பேசிய படி ஹரி தம்பூராவைக் கீழே வைத்தான்.

அவன் அங்குள்ள எல்லாப் படங்களுக்கும், வாத்தியத்துக்கும் தீபாராதனை காட்டி விட்டுக் கர்ப்பூரத் தட்டைக் கீழே வைத்தான். அவசரமாகக் கண்ணில் ஒற்றிக் கொண்ட காந்தாமணியின் தாய், வேலையைக் கவனிக்க வேகமாகக் கீழே இறங்கிச் சென்றாள்.

ஹரி தம்பூராவை எடுத்துச் சுத்தமாகச் சுருதி சேர்த்துக் காந்தாமணியிடம் நீட்டினான். அதை அவள் எழுந்து நின்று தொழுது, இரு கரங்களாலும் வாங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்டாள். புதிய அவளுடைய நோட்டுப் புத்தகத்தைக் கையில் எடுத்து, ஓரத்தில் மஞ்சள் குங்குமம் தடவினான் ஹரி.

பிறகு, “உனக்கு எத்தனை வர்ணம் பாடம் ஆகியிருக்கிறது?” என்று கேட்டான்.

“பத்துப் பதினெட்டு வர்ணங்கள் வரைத் தெரியும். கீர்த்தனைகள் சுமார் முப்பது வரும்.”

“அடேயப்பா! இவ்வளவு பாடம் ஆகியிருக்கிறதா? என்னென்ன வர்ணங்கள் தெரியும்?”

காந்தாமணி பழைய பாட்டுப் புத்தகத்தை எடுத்து நீட்டினாள். அதில் வரிசைப்படி அட்டவணையில் இருந்த ராகங்களின் பெயர்களைப் பார்த்து விட்டுப் புதிய வர்ணம் ஒன்றின் பல்லவியை எழுதி, அவள் கையில் கொடுத்தான்.

அதை அவன், இரண்டு மூன்று முறை தம்பூராவை மீட்டிக் கொண்டே பாடிக் காண்பித்தான். காந்தாமணி மறு தடவை, ஹரி சொல்லிக் கொடுத்ததை, அப்படியே துளியும் அப்பழுக்கின்றிப் பளிச்சென்று பாடினாள்.

அவன் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது. பிறகு அநுபல்லவியையும், சிட்டாஸ்வரத்தையும் சொல்லிக். கொடுத்தான். அதைப் பாடம் செய்யச் சொல்லி விட்டுக் காந்தாமணியைப் பழைய வர்ணம் ஒன்றைப் பாடச் சொன்னான்.

அவள் கணீரென்ற குரலில், கானடா வர்ணத்தை இரண்டு காலம் பாடி நிறுத்தினாள்.

“ஏதாவது ஒரு ராகம் பாடிக் கீர்த்தனை பாடு.”

காந்தாமணி உதட்டைப் பிதுக்கினாள்.

“ஏன்?”

“………”

“ராகம் பாட வராதா?”

“ஊஹூம்.”

“அதைச் சொல்வதற்கென்ன? கீர்த்தனை பாடு.”

இரண்டு நாள் கச்சேரியிலும் ஹ,ரி பாடிய ‘ஹரிஸ். மரணே மாடோ நிரந்தர’ என்னும் அதே கீர்த்தனையைக் காந்தாமணி மிகவும் அழகாகப் பாடினாள். அதைக் கேட்டு அவன் பிரமித்தே போனான். தன்னை விட மிகவும் அழகாகவும், இனிமையாகவும் அந்தப் பாட்டை அதிக மெருகுடன் அவள் பாடி விட்டதைக் கண்டு, அவனால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

அவன் அவளிடமிருந்து தம்பூராவைக் கையில் வாங்கிக் கொண்டான். “பிரமாதமாகப் பாடி விட்டாயே! எங்கே, அந்தச் சங்கதிகள் எனக்குப் பேசுகின்றனவா என்று பார்க்கிறேன்” என்று அந்தப் பாட்டை மீண்டும் புதிய கற்பனையில், அவள் பிடித்த பிடிகளையும் மீறி பாடிப் பார்த்தான்.

‘பெரிய சங்கீத வித்துவான்களிடம் பழகுவது மிகவும் கஷ்டம். அவர்களிடம் ஒவ்வொரு வார்த்தையையும், ஜாக்கிரதையாக எண்ணிப் பேச வேண்டும்; எதிராளியின் ஒவ்வொரு செய்கையையும், அவர்கள் உரைக்கல்லில் போட்டுப் பார்ப்பார்கள்’ என்று தாயார் கூறும் சொற்கள் அவள் நினைவுக்கு வந்தன. ‘நான் எதேச்சையாக அவர் பாடிய பாட்டைப் பாடியதை, அவர் தவறாக எடுத்துக் கொண்டு, என் மூக்கை அறுப்பது போல் மறுபடியும் பாடிக் காட்டி, என் தலையில் குட்டினாரோ!’ என்று எண்ணிக் கண் கலங்கினாள் காந்தாமணி. பூனை அவள் முகத்தையே பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தது.

“நான் ஏதாவது தவறுதலாக நடந்து கொண்டால், என்னை மன்னியுங்கள்” என்று அவள் அவனை நோக்கிக் கூறியதைக் கேட்டதுந்தான் அவனுக்கே அது புரிந்தது.

“உன் மனத்தை வருத்த வேண்டுமென்று, நான் அந்தப் பாட்டைப் பாடவில்லை. நீ பாடிக் கேட்டதும், ஏதோ ஓர் ஆர்வத்தில்; உன்னைப் போல் பாட வேண்டுமென்ற ஆசையில் அப்படிச் செய்து விட்டேன். வேறு ஒன்றும் வித்தியாசமாக எண்ணிக் கொன்ளாதே” என்று அவளுக்கு ஆறுதலாகவும், சமாதானம் செய்கிற தோரணையிலும் அவன் கூறினான்.

இதைக் கேட்டதும், காந்தாமணிக்கு வியப்பு இன்னும் அதிகமாகி விட்டது. “சரிதான், நன்றாக இருக்கிறது, நீங்கள் பேசுவது! உங்கள் மனத்துக்கு ஆயாசம் அளித்து விட்டேனோ என்று மன்னிப்புக் கேட்க, நான் அல்லவா துடித்துக் கொண்டிருக்கிறேன்?” என்று அவள் கூறியதும், இருவரும் சேர்ந்து கலகலவென்று சிரித்தனர்.

அந்த ஒலியைக் கேட்டுக் கீழே இருந்த காந்தாமணியின் தாய் வேகமாக மாடியை நோக்கி வந்தாள்.