உள்ளடக்கத்துக்குச் செல்

புல்லின் இதழ்கள்/பட்டணப் பிரவேசம்

விக்கிமூலம் இலிருந்து
36. பட்டணப் பிரவேசம்

பூ மலர்வது போல் மெல்ல மெல்லப் பொழுது விடிந்து கொண்டிருந்தது. ஓடும் காரிலிருந்த பாகவதரின் குடும்பத்தினர், அந்த அழகிய காட்சியைக் கண்டனர். குருநாதர் சொல்லிக் கொடுத்திருந்த உதய கால ஸ்தோத்திரத்தை ஹரி மனத்துக்குள் சொல்லிக் கொண்டிருந்தான்.

மாற்றங்கள் வானத்தில் மட்டும் நிகழ்ந்து கொண்டிருக்கவில்லை; மண்ணிலும் பளிச்சிட்டன. தாம்பரத்தைத் தாண்டியதிலிருந்தே, கிராமச் சூழ்நிலை மாறிக் கொண்டே வந்தது. குடிசைகளும், கூரை வீடுகளும் பின் தங்கிப் பங்களாக்கள் பூத்து நின்றன.

மியூசியம் ரோடிலுள்ள ரோஸ் கார்டன்ஸ் கேட் முன்னால் கார் நின்றது. கூர்க்கா இரும்புக் கேட்டைத் திறந்து விட்டான். வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணொருத்தி, காரின் நம்பரைப் பார்த்து விட்டு உள்ளே ஓடினாள். சற்றைக்கெல்லாம் டாக்டர் சேகரும், அவர் மனைவி சந்திராவும் வாசலுக்கு வந்து அவர்கள் எல்லாரையும் வரவேற்று, அன்புடன் உள்ளே அழைத்துச் சென்றனர்.

ஹரி பையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். அறிமுகக் கடிதம் பத்திரமாக இருந்தது. ஆனால், அதற்கு அவசியமே இல்லாதது போல் அவர்களுக்கு வரவேற்புக் கிடைத்தது.

டாக்டர் சேகர் பாகவதரைச் சௌகரியமான ஒரு கட்டிலில் படுக்க வைத்து, முதலில் அவருடைய நாடியைப் பரிசோதித்து விட்டுத் திருப்தி தெரிவித்தார். பிறகு சந்திரா, அங்கிருந்த லட்சுமியம்மாள், சுசீலா, காயத்திரி எல்லாரையும் மாடிக்கு அழைத்துச் சென்றாள்.

சேகர் ஹரியிடம், “முதலில் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு, காபி பலகாரம் சாப்பிட்ட பின், சாவகாசமாகப் பேசலாம். இரவெல்லாம் மிகுந்த சிரமப் பட்டுப் பிரயாணம் செய்திருப்பீர்கள்” என்று கூறினார்—

“அதெல்லாம் ஒரு சிரமமும் இல்லை. உங்களுக்குத்தான் எங்களால் சிரமம்” என்று சிரித்துக் கொண்டே கூறிய ஹரி, கையிலிருந்த கடிதத்தைக் கொடுத்தான்.

அதைப் பெற்றுக் கொண்ட சேகர், “கடிதம் இருக்கட்டும்; எனக்கு எல்லா விவரமும் அண்ணா பங்களூரிலிருந்து டிரங்கால் பண்ணி விட்டார்” என்று கூறி விட்டு, பக்கத்திலிருந்த தமது நர்ஸிங் ஹோமுக்கு ஆள் அனுப்பிப் பாகவதருக்கு, ‘பெட்’ ஏற்பாடு செய்தார்.

பெண்கள் பகுதி மிகவும் கலகலப்பாகவே இருந்தது. சில மணி நேரத்துக்குள்ளாகவே, சந்திராவை லட்சுமியம்மாள், சுசீலா, காயத்திரி-எல்லாருக்கும் மிகவும் பிடித்து விட்டது.

உள்ளே வந்த சேகர், சந்திராவை, ஹரிக்கு அறிமுகம் செய்து வைத்து, “இவளுக்கு சங்கீதம் என்றால் உயிர். ஒரு கச்சேரி விட மாட்டாள். அதுவும் என் அண்ணாவைப் போலவே, உங்கள் குருவின் பாட்டில் இவளுக்கு அசாத்தியப் பிரேமை” என்றார்.

உடனே ஹரி, “இவர்களுக்குப் பாடத் தெரியுமா?” என்று கேட்டான்.

“சுமார் இருபது வர்ணம், நூறு கீர்த்தனைகள் வரை பாடம் பண்ணியிருக்கிறாள்” என்றார் சேகர்.

“ஓ! அப்படியென்றால் கச்சேரி பண்ணலாமே!” என்றான் ஹரி ஆச்சரியத்துடன்.

உடனே சேகர், “என்ன ஸார். நீங்கள் கூட இப்படிச் சந்திரா கட்சி பேசுகிறீர்கள்? பாட்டு வாத்தியார் சொல்லிக் கொடுத்த வர்ணத்தையும், கிருதியையும் மட்டும் மேடையில் போய், ஒப்புவித்து விட்டால் போதுமா? கற்பனையாக நாலு ஆவர்த்தனம் ஸ்வரமும், இரண்டு ராகமுங்கூடப் பாடத் தெரியா விட்டால், காசு கொடுக்கிறவர்கள் கேட்டு விட்டுப் போவார்களா?” என்றார்.

“பலே, பலே! விஷயம் தெரிந்துதான் வைத்திருக்கிறீர்கள். நீங்களும் பாடுவீர்களோ?” என்றான் ஹரி.

ஹரியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த சேகர், “எனக்கும் ஆசைதான். ஆனால், கடவுள் என்னவோ இந்த ஜென்மத்தில், எனக்கு அந்த பாக்கியத்தைக் கொடுக்காமல் இருந்து விட்டார்” என்று கூறும் போதே, சந்திரா குறுக்கிட்டு, “நம்பாதீர்கள் ஸார், பொய். வேண்டுமானால், சங்கீதத்தை இவர் முன்னால் கொண்டு வந்து போட்டுப் பாருங்கள். அப்படியே ராகம், ஸ்வரம், நிரவல், கோவை என்று அக்கு வேறு, ஆணி வேறாய்ப் பிரித்துப் பிரித்து. எவ்வளவு அழகாக ஆபரேஷன் செய்து, ஸ்ட்ரெச்சரில் அனுப்பி வைக்கிறார் பாருங்களேன்” என்றாள்.

இதைக் கேட்டதும், அங்கிருந்த அனைவருடன், கட்டிலில் இருந்த பாகவதரும் சேர்ந்து சிரித்தார்.

‘பட்டணத்தில், புருஷனும், மனைவியுந்தாம் எவ்வளவு தமாஷாய்ப் பழகுகிறார்கள்! இப்படியல்லவா, டாக்டர் தம்பதிகளைப் போல் இருக்க வேண்டும்?’ என்று சுசீலா மனத்தினுள் எண்ணிக் கொண்டாள்.

லட்சுமியம்மாள் ஸ்நானத்தை முடித்துக் கொண்டு வெளியே வருவதற்கும், நர்ஸிங் ஹோமிலிருந்து பாகவதரை அழைத்துப் போக வண்டி வருவதற்கும் சரியாக இருந்தது.

சேகர் பாகவதரிடம், “நான் இப்போது, என்னுடன் உங்களை நர்ஸிங் ஹோமுக்கு அழைத்துச் சென்று; அட்மிட் செய்து விடலாம் என்று இருக்கிறேன்; புறப்படலாமா?” என்றார்.

உடனே பாகவதர், ஒரு முறை சேகருடைய முகத்தையே உற்றுப் பார்த்து விட்டு, சுற்று முற்றும் பார்த்தார்.

பாகவதரின் கண்கள் எதையோ தேடி அலைவதைக் கண்ட சேகர், “என்ன வேண்டும் உங்களுக்கு?” என்று அன்புடன் கேட்டார். டாக்டருடைய பரிவு அவர் நெஞ்சைத் தொட்டது.

அருகில் யாரும் இல்லாதது கண்டு, பாகவதர் மிகவும் தயக்கத்துடன் கேட்டார்: “இங்கே பஞ்சாங்கம் இருக்கிறதா?”

‘இல்லை’ என்கிற பதிலைக் கூறச் சேகர் தயங்கிக் கொண்டிருந்த போதே, “இந்தாருங்கள் அப்பா” என்று காயத்திரி பெட்டியிலிருந்து, பஞ்சாங்கத்தை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள்.

மகிழ்ச்சியோடு அதைப் பெற்றுக் கொண்ட பாகவதர், வேகமாக மாதங்களைப் புரட்டினார். பிறகு ஒரு குறிப்பிட்ட பக்கத்தில் ஆழ்ந்து கவனத்தைச் செலுத்தி விட்டுச் சேகரைப் பார்த்து, “பன்னிரண்டு மணிக்கு மேல் புறப்படலாமா? இன்னும் அரை மணிதானே இருக்கிறது? அது வரை தியாஜ்யம் இருக்கிறது” என்று டாக்டரிடம் அனுமதி கேட்பது போல் கேட்டார்.

சேகரும் சிரித்துக்கொண்டே, “எப்படி உங்கள் சௌகரியமோ, அதுதான் முக்கியம். இனி மேல், இது உங்கள் வீடு. யாருக்கும் சங்கோஜமே கூடாது” என்று கூறி விட்டு, “நான் நர்ஸிங் ஹோம் போய், வண்டி அனுப்புகிறேன். நீங்கள் உங்கள் சௌகரியம் போல், புறப்பட்டு வாருங்கள்” என்று விடை பெற்றுச் சென்றார்.

சாமான்களையெல்லாம், ஓர் அறையில் ஒழுங்காக அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள் காயத்திரி. சுசீலா ரோஸ் கார்டன்ஸ் செடிகளையும், மலர்களையும் பார்த்து, மகிழ்ந்து கொண்டிருந்தாள். லட்சுமியம்மாள், சந்திராவிடம், “இங்கே கோயில் உண்டா?” என்று கேட்டாள்.

“இருக்கிறது; என்ன வேண்டும் அத்தை உங்களுக்கு?” என்று சந்திரா கேட்டாள்.

“சாயங்காலம், இவ்வளவு நல்ல மனிதர்களிடம் கடவுள் எங்களைக் கொண்டு வந்து சேர்த்ததற்காக, சுவாமிக்கு ஓர் அர்ச்சனை பண்ணி விட்டு வர வேண்டும். பிறகுதான் பாக்கி எல்லாம்” என்று லட்சுமியம்மாள் கூறியவுடன், “அத்தை—நல்ல அத்தை” என்று சிரித்தாள் சந்திரா.

பிற்பகல், பாகவதர் நர்ஸிங் ஹோமுக்குப் போனார். மாலை எல்லாரும் அங்கே போனார்கள்.

டாக்டரிடம், “உடம்பு எப்படி இருக்கிறது? எத்தனை நாள் இங்கே தங்கும்படியாக இருக்கும்?” என்று கேட்டாள் லட்சுமியம்மாள்.

“நன்றாகக் கேட்டீர்கள்? இத்தனை வருஷமாக வியாதியை வைத்துக் கொண்டிருந்து விட்டு, இப்போது இங்கு வந்தவுடன், நாள் கணக்குக் கேட்கிறீர்களே!” என்றார் டாக்டர் சிரித்துக் கொண்டே.

பிறகு சந்திரா, எல்லாருக்கும் நர்ஸிங் ஹோமைச் சுற்றிக் காண்பித்தாள். டாக்டருடைய பிரத்தியேக ஆலோசனை அறை, ஆபரேஷன் தியேட்டர், நோயாளிகளுக்காகப் படுக்கைகள், மாடியிலும் அதே போன்ற வசதியான விசேஷ அறைகள், மருந்துச் சாலை, ஸ்டோர் ரூம், குடியிருப்புகள் எல்லாம் அழகாகவும், சுத்தமாகவும் இருந்தன. நர்ஸுகள் எப்பொழுதும், சுறுசுறுப்புடன் குறுக்கும், நெடுக்கும் நடமாடிக் கொண்டிருந்தனர். சுவரெல்லாம் முகம் தெரியும் கண்ணாடி போல் இருந்தன. வெளியில், நோயாளிக்காக வந்து தங்கும் உதவியாளர்களுக்கான குடியிருப்புகள்; வழியெல்லாம் குரோட்டன்ஸும், விசிறி வாழைகளும் அழகாகத் தலையசைத்துக் கொண்டிருந்தன. மிகவும் விஸ்தாரமாகக் கட்டியிருந்த அந்த அழகிய நர்ஸிங் ஹோமை, ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டே வந்தவர்கள், அதன் வாயிலை அடைந்தனர். அங்கே—

“என்ன பார்க்கிறீர்கள்? எல்லாம் உங்களுடைய இடத்துக்குத்தான் வந்திருக்கிறீர்கள். என் மாமியாருக்கும் உங்கள் பெயர்தான். அம்மா நினைவாக, அவர் ‘லட்சுமி நர்ஸிங் ஹோம்’ என்று பெயர் வைத்தார்” என்று சந்திரா விளக்கினாள்.

மிகச் சீக்கிரத்தில், மிக நெருங்கிப் பழகத் தொடங்கிய சந்திராவை எல்லாருக்கும் பிடித்து விட்டது.

“அதோடு, நீங்கள் அசப்பில் பார்ந்தால், என் அத்தை போலவே இருக்கிறீர்கள். இதைத்தான், அவர் என்னிடம் புறப்படும் போது கூறினார்” என்றாள் சந்திரா.

“அப்படியானால், இனிமேல் அம்மா பாடு யோகந்தான்” என்று சுசீலா சிரித்தாள்.

அவளுடைய துணிச்சலைக் கண்டு ஹரி வியந்தான். லட்சுமியம்மாளுக்கு, இதை எல்லாம் கேட்கக் கேட்க மகிழ்ச்சியாகவும், மறு புறம் பெருமையாகவும் இருந்தது.

அன்றே, ஹரி சுந்தரிக்குக் கடிதம் எழுதினான். இங்கு டாக்டர் வீட்டில் தங்களுக்கு ராஜ உபசாரம் நடப்பது பற்றியும், எப்படியும் ஆறு, ஏழு மாதங்களுக்குக் குறையாமல் இங்கேயே தங்கி இருக்க வேண்டுமென்று டாக்டர் அபிப்பிராயப்படுவதாகவும் எழுதியதோடு; வசந்திக்கு ஆசி கூறிக் கடிதத்தை முடித்திருந்தான்.

ரோஸ் கார்டன்ஸில், பல நாளாய்ப் பூட்டிக் கிடந்த அவுட் ஹவுஸ் சுத்தம் செய்யப்பட்டு, அவர்கள் இருப்பிடம் ஆயிற்று. ஹரிக்குத் தனியாக ஓர் அறை கிடைத்தது. அதில் தம்புராவையும், சாமான்களையும் வைத்துக் கொண்டான். டாக்டருக்கும், சந்திராவுக்கும் துளிக் கூட ஆட்சேபம் இல்லை என்று அறிந்து கொண்டவுடன், தன் அசுர சாதகத்தை ஆரம்பித்து விட்டான். சந்திராவும், சேகரும், ஒரு பெரிய வித்துவானைத் தங்கள் வீட்டோடு வைத்துக் கொண்டு விட்டது பற்றி மட்டற்ற மகிழ்ச்சியும், பெருமையும் அடைந்தனர்.

சிறுகச் சிறுகச் சந்திராவுக்கு சுசீலாவின் திருமண விஷயம் தெரிந்து விட்டது. அதன் பிறகு, அவள் சுசீலாவையும், ஹரியையும் சேர்ந்து காணும் போதெல்லாம் கேலி பண்ணத் தொடங்கினாள். ‘பங்களுர் அத்தான் வந்ததும், கல்யாணத்தை முடிக்க ஏற்பாடு செய்ய வேண்டியதுதான்’ என்று அடிக்கடிக் கூறிச் சுசீலாவை, ஹரியின் எதிரிலேயே வர முடியாமல் பண்ணி விட்டாள்.

ஒரு நாள், சந்திராவும், லட்சுமியும் வெளியே போயிருந்தனர். ஹரி தனியாக இருந்தான். சோபவில் உட்கார்ந்து, ஒரு புத்தகத்தை எடுத்தான். அது ஒரு நாவல். பாதி படித்தபடி, பிரித்து வைத்திருந்தது. புத்தகத்தின் சில பக்கங்களில், பென்சிலால் அங்கங்கே சிறு, சிறு கோடுகள் இழுக்கப்பட்டிருந்தன.

ஹரி ஒன்றைப் படித்தான்:

—‘மாந்தரின் மனம் கொடியைப் போன்றது. அன்பு கண்டவுடன், அது படரத் துவங்கி விடுகிறது.’—

ஹரிக்கு அந்த வரிகள் மிகவும் பிடித்திருந்தன. ஒரு முழுச் சாப்பாட்டிலுள்ள அத்தனை சத்தையும், ஒரு சிறு மாத்திரைக்குள் அடைத்துக் கொடுத்து விடுகிறார்களே அப்படி, அந்தப் புத்தகத்திலுள்ள சிறப்பான கருத்துக்கள் எல்லாம், அந்த இரு பக்கத்துச் சிறு, சிறு பென்சில் கோட்டுக்குள் அடக்கம் போலும் என்று ஆவலோடு மற்றொன்றைப் படித்தான்.

“இன்றையத் தவறுக்குக் காரணமாக இருக்கின்ற நேற்றைய நிகழ்ச்சிகள்; நாளைய மௌனம், மனச் சோர்வு, தோல்வி, அல்லது வெற்றி இவற்றுக்கு எச்சரிக்கை அல்லது வழி காட்டிகளே.”—

ஹரி இந்த வாக்கியத்தை மிகவும் ரசித்து, மீண்டும் ஒரு முறை படித்துக் கொண்டிருந்தான் டெலிபோன் மணி கணகணவென்று ஒலித்தது.

சட்டென்று ரிஸீவரைக் கையில் எடுத்து, “ஹலோ” என்றான்.

“டாக்டர் இருக்கிறாரா?”

டெலிபோன் மறு முனையிலிருந்து கேள்வி பிறந்தது. கேள்வியை எழுப்பியவள் ஒரு பெண். அவளுடைய குரல், ஹரியின் மூளையைச் சென்று தாக்கியது. எங்கோ கேட்டது போலப் பிரமை. ஹரி சட்டென்று சமாளித்துக் கொண்டு கேட்டான்: “டாக்டர் இல்லை. தாங்கள் யார் என்று சொல்லுவது”.

“காந்தாமணி என்று சொல்லுங்கள்.” அவள் போனை வைத்து விட்டாள்.

ஹரியின் கையில் இருந்த ரிஸீவர் நழுவியது.