உள்ளடக்கத்துக்குச் செல்

புல்லின் இதழ்கள்/பிறவிக் கடன்

விக்கிமூலம் இலிருந்து

37. பிறவிக் கடன்

சைப்பவன் இசையை மறந்தாலும், கல்யாணக்காரர் கச்சேரியை மறந்தாலும், பக்கிரி தண்டலுக்கு வர மறக்கவில்லை.

மாயூரத்தில் ஹரி கச்சேரியை முடித்துக் கொண்டு, ரிடயரிங் ரூமில் தங்கியிருந்தான். அங்கிருந்து அவனுக்கு மதுரைக்குப் போயாக வேண்டும்.

ஹரிக்கு அன்று மன நிம்மதியே இல்லை. அத்தனை வருஷங்களில் அன்றுதான் ‘கல்யாணக் கச்சேரியே’ பண்ணி விட்டதாக எண்ணி வருந்தினான். கல்யாணக் கச்சேரி என்றாலும், அவன் அங்கும் உழைத்துத்தான் பாடுவான். எங்கோ ஒரு மூலையில் ரசிகன் ஒருவன் இருப்பான், அவனுக்காக என்று அநுபவித்துப் பாடத் தவற மாட்டான். ஆனால், அன்று எல்லாரும் ஹரியின் பாட்டைப் புகழ்ந்தாலும், அவனுடைய மனத்துக்குச் சமாதானமில்லை. காரணம், பட்டணத்திலிருந்து புறப்படும் போதே அவனுக்கு மன அமைதி இல்லை.

போனில் காந்தாமணியின் பெயரைக் கேட்டதும் அவன் மிகவும் குழம்பி விட்டான்.

—‘காந்தாமணி பட்டணத்திலா இருக்கிறாள்? அவள் டாக்டர் சேகருக்குத் தெரிந்தவளாகவுமா இருக்க வேண்டும்? என்றாவது ஒரு நாள் அவள் அந்த வீட்டில் வந்து நின்றால் என்ன ஆகும்? கடிதத்தைத் படித்து விட்ட கோபமே இன்னும் சுசீலாவுக்குத் தணியவில்லை. இப்போது நிலைமை முற்றும் மாறித் திருமண கட்டத்துக்கு முன்னேறி; பார்க்கிறவர்கள் எங்களைப் பரிகசிக்கிற அளவுக்கு வந்து விட்டது. அந்த அளவுக்கு, சுசீலா என்னிடம் அன்பும், நம்பிக்கையும் காட்ட ஆரம்பித்து விட்டாள். இந்தச் சமயத்திலா, காந்தாமணி வந்து சேர வேண்டும்? ஆனால், காந்தாமணியைப் பற்றி இப்படி நினைப்பது தவறல்லவா? பாவம்! அவள் எவ்வளவு நெருக்கடியான சமயங்களில் உதவினாள்? அவளைப் போல், அன்பும், வெள்ளையுள்ளமும் படைத்த பெண்ணைக் காண முடியுமா? என்னால் நேர்ந்த அதிர்ச்சியைத் தாங்க மாட்டாமல், வீடு, வாசல், பிறந்த மண் அனைத்தையுமே துறந்து விலகிப் போய் விட்டவளாயிற்றே!

‘கலைஞர்களில் நான் மாறுபட்டவன். தொட்டதற்கெல்லாம் குருவின் பெயரைச் சொல்லிக் கொண்டு, தனக்கென்று சொந்த விருப்பு, வெறுப்புகள் வைத்துக் கொள்ளாத ஒரு மரக்கட்டை என்று அறிந்து கொள்ள நேரிட்ட அவளுடைய அநுபவந்தான்; எத்தனை கொடுமையானது? ஆனால் என் வரையில் அதுவே புனிதமானது அல்லவா?’—

“தம்பி” என்ற பழக்கமான குரலைக் கேட்டுப் படுத்துக் கொண்டிருந்த ஹரி, தலை நிமிர்ந்தான். எதிரே பக்கிரி பவ்யமாக நின்று கொண்டிருந்தான்.

“உள்ளே வா, மாமா” என்று ஹரி அழைத்தான். பக்கிரி தயங்கித் தயங்கி உள்ளே வந்தான். “என்ன தம்பி, இந்த மாதிரி பண்ணிப்பிட்டே?” என்று அவன் ஆச்சரியத்துடன் கேட்டான்.

“எந்த மாதிரிப் பண்ணி விட்டேன்? கல்யாண வீட்டுக்காரர்களிடம் போய்ச் சாயங்காலம், நான் எங்கே என்று விசாரித்தாயாமே? இதெல்லாம் என்ன பழக்கம்.”

“என்ன தம்பி இது; இப்படி ஒரே முட்டாக் கோவிச்சுக்கறே? சுவாமிமலைக்கு முந்தாநா கிருத்திகைக்குப் போனேன்.”

“அதல்லாம் வேறே இப்போ ஆரம்பித்திருக்கிறாயா? தேர்த் திருவிழா வருஷத்துக்கு ஒரு தடவைதானே வருகிறது; இது மாதம் ஒரு கும்பல் சேருகிற நாளாயிற்றே என்றா?”

“என்ன தம்பி இது, பழைய பேச்சு?”

“நீ புதிதாகச் சொல்லு.”

“தெரு வழியாப் போற போது, உங்க ஐயா வூட்டிலே பெரிய பூட்டுத் தொங்கிக்கிட்டு இருந்திச்சு.”

“எங்கேயாவது சிங்கப்பூருக்கோ, சிலோனுக்கோ புறப்பட்டுப் போய் விட்டோம்; மூவாயிரம் ரூபாய் போயிற்றே என்று பயந்து விட்டாயாக்கும்?”

“என்ன தம்பி, இன்னக்கிப் பேச்செல்லாம் ஒரே எடக்காவே பேசறே! பட்டணம் போயிருக்கிறதாச் சொன்னாங்க. நான் புறப்பட்டு வந்திட்டேன்.”

“தெருவில் போகிற உன்னைக் கூப்பிட்டு, அவர்களாக நாங்கள் பட்டணம் போனதை, உன்னிடம் கூறினார்களாக்கும்?”

“இல்லே தம்பி, நான்தான் கேட்டேன்.”

“அதற்குத்தான் இவ்வளவும் கேட்டேன்.”

“தப்புன்னா மன்னிச்சுடு தம்பி.”

“தப்பும் இல்லே, மன்னிப்புமில்லே; சும்மா தமாஷுக்குச் சொன்னேன் மாமா, நானே உன்னைத் தேடி வர்ரதா இருந்தேன். நம்முடைய விஷயத்தை ஒரு வழியாக முடித்துக் கொண்டு விடுவோம். யாசகம் கேட்கிற மாதிரி, நீ என் பின்னாலேயே ஒவ்வொரு தடவையும் சுற்றிக் கொண்டு இருக்கவும் வேண்டாம்: கடன் வாங்கி விட்டவனைப் போல், என்னைப் பற்றி நீ எல்லாரிடமும் விசாரித்துக் கொண்டு இருக்கவும் வேண்டாம்; அதற்கு ஒரு வழி பண்ணி விட்டேன்.”

“சரி, தம்பி.”

ஹரி பெட்டியிலிருந்து நோட்டுக் கட்டை எடுத்து, பக்கிரியின் கையில் கொடுத்தான். அதில், தையல் பிரிக்கப் படாத புத்தம் புதிய பத்து ரூபாய் நோட்டுகளாக, பல கட்டுகள் இருந்தன.

“இதைச் சித்தியிடம் கொடு மாமா. முதலில் தங்கைகள் கல்யாணத்தை சிறப்பாக முடித்துக் கொள். மீதிப் பணத்தைக் கொண்டு குடும்பத்தை நன்றாகக் கூட இருந்து நடத்த வேண்டியது உன் பொறுப்பு, உன் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என்னால் முடிந்தது இவ்வளவுதான். நீ இனி மேல், என்னைத் தேடவோ, பணம் கேட்கவோ அலைய வேண்டாம்.”

பத்தாயிரம் ரூபாய் பணத்தையும் கையில் வாங்கிக் கொண்ட பக்கிரி பிரமித்து நின்றான்; அவன் கண்கள் கலங்கின.

“இவ்வளவும் எங்களுக்கா தம்பி?”

“அதுதான் எல்லா விவரமும் சொன்னேனே, மாமா.”

“இத்தனைப் பணத்தை ஒரு முட்டா எப்பத் தம்பி பார்த்திருக்கோம்?”

“பரவாயில்லை; பழைய தொழிலை மட்டும்…?”

“சத்தியமா; இன்னமே அந்த வழிக்கெல்லாம் போக மாட்டேன். தம்பி, இந்த ஏழைக் குடும்பத்திலே விளக்கேத்தி வைக்கணும்னு, தெய்வம் உன்னை ஒரு காரணமாத்தான் எங்களுக்குக் காட்டியிருக்கு: அந்த தெய்வத்தோட கருணைக்குப் பங்கம் வரும்படியா, மனசாலே கூட நடந்துக்க மாட்டோம் தம்பி”—என்று கரம் கூப்பிய போது; பக்கிரியின் தொண்டை கரகரத்தது; கண்களிலிருந்து, அவனையும் மீறிக் கண்ணீர் வழிந்தது.