புல்லின் இதழ்கள்/மேகம் கலைந்தது
யாரைப் பற்றி எல்லாரும் பெரிதாகக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்களோ, அவர் இப்போது, மற்றவர்களைப் பற்றிப் பெரிதாகக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். ‘சுந்தரி அல்லது வசந்தியிடமிருந்து ஒரு கடிதங்கூட வரவில்லையே! அவர்களுக்குக் கோபம் இருப்பது இயற்கைதானே? தந்தையும், மகளுமாகச் சேர்ந்து; தாய்க்கும், மகளுக்குமே பெரும் தீங்கு இழைத்து விட்டோம். சுந்தரியின் வாழ்வை நான் பறித்தேன்; மகளின் வாழ்வை, சுசீலா பறித்துக் கொண்டாள்’ என்று பாகவதர் அடிக்கடி எண்ணிப் புலம்பினார்.
அவருடைய உடம்பு மிகவும் தேறி வருவதாகப் பார்க்கிறவர்களுக்கெல்லாம் தெரிந்தது; அவருக்கும் புரிந்தது. பங்களுரிலிருந்து, மூர்த்தியும் அடிக்கடி வந்து கவனித்துக் கொண்டார். வந்து போகும் போதெல்லாம், தம்பியிடம், “பாகவதரை இன்னும் சில மாதத்துக்குள் கச்சேரிக்கு அனுப்பி விட வேண்டும். எங்கே, பார்ப்போம் உன் திறமையை” என்று உற்சாகப்படுத்தி விட்டுத்தான் போவார்.
ஹரிக்குக் கச்சேரிகள் நிறைய நடந்து கொண்டிருந்தன. நகரத்திலேயும், ஹரியின் புகழ் வெகுவாகப் பரவியது. அவன் பாடாத பிரபல சபாக்கள் இல்லை; அவன் பாடிப் பிரபலமாகாத சபைகளும் இல்லை.
பாகவதர் தம் மூச்சுள்ள போதே சுசீலாவின் கல்யாணத்தைக் கண்டு களித்து விட விரும்பினார். லட்சுமியம்மாளுக்கும் இதே கவலைதான் இருந்தது. பட்டணத்துக்கு வந்ததிலிருந்தே சுசீலாவின் போக்கில் காணப்பட்ட மாறுதல்களைக் கண்டு, லட்சுமியம்மாளின் அடி வயிற்றில் புகைந்தது. கணவரிடம், விரைவிலேயே திருமணத்துக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கும்படி லட்சுமி கூறினாள். பாகவதர், அந்தப் பொறுப்பை சந்திராவிடம் ஒப்படைத்து விட்டார்.
கல்யாணம் செய்து கொடுக்கிற விஷயத்தில், தமக்குத் துளியும் கைராசி இல்லை என்று பாகவதர் எப்போதோ தெரிந்து கொண்டு விட்டார். காயத்திரியின் கல்யாணத்தில் வாங்கிய அடி; வசந்தியின் திருமணத்திலும் எதிரொலிக்கத் தவறவில்லை. அவர் வசந்தி திருமண விஷயமாகத் தலையிடாமல் இருந்திருந்தால், ஒரு வேளை எல்லாம் சுபமாக முடிந்திருக்குமோ என்னவோ? அதனால்தான், சுசீலா தன் இச்சைப்படி முடித்துக் கொண்டாள் போலும். தம் கைபடாமல், தம் கால் தூசி கூடப் படாமல், மணம் செய்து கொள்ளும் அவர்களுடைய வாழ்க்கையாவது இன்பமாக இருக்கட்டும் என்று மனமார வாழ்த்தினார்.
சேகரும், மூர்த்தியும், சந்திராவின் விருப்பப்படியே ரோஸ் கார்டன்ஸில் திருமணத்தை நடத்த வேண்டுமென்று ஆசைப்பட்டனர். லட்சுமியம்மாளுக்கு, ஏதாவது ஒரு கோயிலில் நடத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆயினும், சந்திராவின் கட்சிதான் ஜயித்தது,
ரோஸ் கார்டன்ஸ் தேவலோகம் போல் இரவும், பகலும் விழாக் கோலத்தில் ஜொலித்தது, விதம், விதமான இன்னிசை நிகழ்ச்சிகளும்; அன்புக் கலவையும் கொண்ட உபசரிப்பும், விருந்தும் வந்திருந்தோரை மயக்கின. வாயார, மனமார மணமக்களை வாழ்த்தினர்.
சங்கீத உலகில், ஹரிக்கு எத்தனை செல்வாக்கு உண்டு என்பதை பாகவதர் அன்றுதான் கண்டு கொண்டார். இசையினாலும், அன்பினாலும் ஹரி எத்தனை இதயங்களை வசப்படுத்தி வைத்திருக்கிறான் என்பதை, அன்று வந்திருந்த ஒவ்வொருவர் முகத்திலும் தவழும் மகிழ்ச்சியைக் கண்டே, பாகவதர் அறிந்து கொண்டாா.
கல்யாணம் நடந்த சிறப்பைப் பார்த்து, அதிசயிக்காதவர்களே இல்லை. டாக்டரும், சந்திராவும் ஆச்சரியப்பட்டனர். பாகவதருடைய கலை வாரிசுக்குக் கலையன்பர்கள் செலுத்திய அன்புப் பரிசுகள் மலை போல் குவிந்து நின்றன.
பஞ்சு அண்ணாவும், ராஜப்பாவும்தான் பாகவதரின் சார்பில் பம்பரமாகச் சுழன்று, ஆக வேண்டிய காரியங்களைக் கவனித்துக் கொண்டனர். ஆனாலும், ஆயிரம் வந்தென்ன ஆயிரம் போயென்ன; இத்தனை சிறப்பையும் நேரில் காணவும், கலந்து கொள்ளவும் சுந்தரியும், வசந்தியும் வராத குறை பாகவதரின் மனத்தை மட்டும் அல்ல; லட்சுமியின் உள்ளத்தையும் வாள் கொண்டு அறுப்பது போலவே இருந்தது. எத்தனைதான் வருத்தமும், மனஸ்தாபமும் இருந்தாலும், இப்படிக் காரியங்களைக் கை நழுவ விடலாமா? இப்படிப் பகைமை பாராட்டச் சுந்தரிக்குச் சுட்டுப் போட்டாலும் தெரியாதே!
திருநீர்மலையில் திருமணத்தை நடத்தினால், பாகவதர் கலந்து கொள்ள முடியாது; அதனாலேயே, திருமணம் ரோஸ் கார்டன்ஸிலேயே நடந்தது. முகூர்த்தம் ஆனதும், எல்லாரும் காரில் திருநீர்மலைக்குச் சென்றனர். பாகவதர் சற்று ஓய்வெடுக்கக் கண்களை மூடினார்.
எங்கோ ஒலிக்கும் ஆலய மணியின் ஓசை, பாகவதரின் செவிகளில் ஒலிப்பது போல் இருந்தது. “சுவாமி நாதா, இனி என்று நான், உன் தரிசனத்தைக் காணப் படியேறிச் சந்நிதி முன் வந்து, கை கூப்பி நிற்கப் போகிறேன்? என் கால்களை ஒடித்து, இப்படி இங்கே கொண்டு வந்து கிடத்தி விட்டாயே!’ என்று உள்ளத்தினுள்ளே அரற்றினார். அப்பொழுது, கணகணவென்று கபாடமணிகள் ஒலிக்கச் சந்நிதிக் கதவுகள் திறந்தன.
அங்கே—
நீறு பூத்த மேனியாய், பெற்ற தாய் தந்தையரை வெறுத்து வந்த குமரனாய், அந்தக் குமரனே குருநாதனாய், குருநாதனே மண்டபத்திலே வந்தமர்ந்த ஹரியாய், ஹரியே குன்று தோறாடும் குமரனாய்த் திருக்கல்யாணக் கோலத்தில் நின்றிருப்பது போல், பாகவதர் இன்பக் கனவொன்று கண்டு கொண்டிருந்தார்.
கனவென்றால் கலைய வேண்டிய ஒன்றுதானே?
“ஐயா, ஐயா!” என்று அன்பு ததும்பும் மெல்லிய குரலில் அழைக்கிற ஒலி கேட்டு, உணர்வு திரும்பி, விழி திறந்த பாகவதர், அப்போது—விழி கொள்ளாக் காட்சி ஒன்று கண்டார். ஹரியும், சுசீலாவும், கழுத்தில் மலர் மாலைகளுடன் அவர் காலடியில் விழுந்து வணங்கி எழுந்தனர்.
அப்படியே அவர்களை வாரித் தழுவிக் கொண்ட பாகவதர்; அவர்கள் கையிலிருந்த திருநீர்மலைத் திருமாலின் பிரசாதமான திருத்துழாயைப் பக்தியுடன் வாங்கிக் கொண்டு, அடுத்த வருஷம் ராமச்சந்திரனைப் போல், ஒரு பிள்ளையைப் பெற்று என் மடியில் கிடத்த வேண்டும் என்று சுசீலாவை ஆசிர்வதித்தார். கண்களில் ஆனந்த பாஷ்பம் துளும்ப, ஹரி சுசீலாவை நோக்கினான். நாணத்தால் அவள் இமைகள் தாழ்ந்தன.
பாகவதர் மனத்தில் இருந்த ஒரு பெருங்குறை நீங்கியது. உயிரோடு இருக்கும் போதே, சுசீலாவின் திருமணத்தை நடத்திப் பார்த்து விட வேண்டுமென்று விரும்பினார்; அவர் நடத்தாமலே பார்த்து விட்டார். எல்லாருமாகச் சேர்ந்து எவ்வளவு பிரமாதப் படுத்தி விட்டார்கள்! இப்பொழுதே எழுந்து, சுவாமிமலைக்குப் போய் விடலாம் போல் அவருக்கு தெம்பு வந்து விட்டது!
சேகரும், சந்திராவும் மருந்து கொடுக்கவில்லை. அமிர்தத்தைக் கொடுத்துத்தான், இப்படி ஓர் அற்புதத்தைச் செய்திருப்பது போல், பாகவதருக்குத் தோன்றியது. அப்போது, அவருக்கு இருந்த மகிழ்ச்சியில், உட்கார்ந்திருந்த இடத்திலிருந்தே ஒரு பாட்டை பாடி, நிரவல் செய்து பத்து ஆவர்த்தனம் ஸ்வரம் பாடித் தள்ள வேண்டும் போலிருந்தது. நர்ஸிங் ஹோம் என்பதனால், அந்த ஆவலை அடக்கிக் கொண்டார்.