உள்ளடக்கத்துக்குச் செல்

செம்மொழிப் புதையல்/007-020

விக்கிமூலம் இலிருந்து


7. பொருண்மொழி

யான் சிறிது நாட்களுக்குமுன் ஒரு ஆங்கில நூலைப் படித்து வருங்கால், இத்தலைப்பொருள்பற்றிய சொற்பொழி வொன்று அதன்கண் இருக்கக் கண்டேன். அதனையான் நுணுகிப் படித்து வருங்காலத்தில், சில நுண்பொருள்கள் அமைந் திருப்பதையுணர்ந்து அதன் உட்பொருளைத் தமிழில் எழுதின் பலர்க்கும் பயன்படுமென்றெண்ணினேனாகலின், இதுபோது எழுதுவேனாயினேன்.

பொருண்மொழி யென்பது பழமொழியைப் போல் நுண் பொருளை யகத்தே கொண்ட உயர்ந்தோர் கூறும் நன்மொழியாகும். இது நம் தமிழ் நூல்களில் “பொருளுரை” யென்றும் “பொருண்மொழிக் காஞ்சி” யென்றும் வழங்கப் பெறுகின்றது. [1] “பொய்யில் புலவன் பொருளுரை” யென்று சீத்தலைச் சாத்தனாராலும், “மூதுரை பொருந்திய” என்ற சூத்திரத்துள் “பொருண்மொழிக்காஞ்சி” யென்று ஐயனாரிதனாராலும் கூறப்படுதல் காண்க. பொருண்மொழிக் காஞ்சியாவது, “எரிந்திலங்கு சடைமுடி முனிவர், புரிந்து கண்ட பொருண்மொழிந்தன்று”[2] (பு-வெ-மாலை 271) என்பர். பொருண்மொழி யென்றதொடர் பொருளை மொழிதல் எனவிரியும் வேற்றுமைத் தொகையாகும். மொழி, முதனிலைத் தொழிற்பெயர். பொருளாவது முனிவர்கள் விரும்பிக் கண்டுதெளிந்த உண்மையென்பதாகும்.

இதன்கண் முனிவராவார் ‘சடைமுடியுடையராய் உயர்ந்த வொழுக்கமும்’ உலகினையும் அதற்கு முழுமுதலாகிய இறைவனையும் ஒப்பக்காணும் ஞானக் கண்ணுமுடையராய், மக்கட்கு வேண்டிய அறிவு நூல்களும் பிறவும் ஆக்கித்தரும் பேரருள் உடைய பெரியோராவர் என்பது அறிஞர் முடிபு. இவர்தம் அறிவும் ஆற்றலும் ஏனையர்க்குள்ளனபோல்வன அல்ல. சுருங்கச் சொல்லின், மக்களுட் கற்றோரினும் சிறந்த கல்வியறிவும், ஒழுகலாறும் உடையோர் என்பது மிகையாகாது. ஆகவே, முனிவர் பெருமக்கள் நம்மனோர்க்கு அறிவுகொளுத்து மாற்றால் உரைப்பனவே பொருண்மொழியென்பது அறிஞர் கொள்ளும் கொள்கையாயிற்று.

இப்பொருண்மொழி விழுமிய பொருளைத் தன்னகத்தே கொண்டு பெருகியும், சுருங்கியும் வருதல் நம் நூல்களிற் காணலாம். சுருங்கி வருதலே பெரும்பான்மையெனினும், சுருங்கியே வருதல் வேண்டுமென்ற வரையறையின்மையால் பெருகியும் வருதல் இயல்பாயிற்று. இவை எத்துணைச் சுருக்கமாயிருக்கின்றனவோ அத்துணையும் பொருட் பெருக்கமுடையவாதல் கண்கூடு. எடுத்துக்காட்டாக, திருக்குறள் ஒன்றே யமையும். சின்மென் மொழியால் விழுமியபொருளைத் தன்னகத்தே யுடைத்தாய் ஒவ்வொரு திருக்குறளும் அமைந்தி, ருத்தலும், தொட்டனைத் தூறும் மணற்கேணியைப் போலக் கற்றனைத்துறும் பொருளாழமுடைமை சிறத்தலும் கொண்டு பொருண்மொழியாதலில் எவ்வகையினும் முற்பட்டிருக்கின்றது. இத்திருக்குறளை ஒரு பெரியோர் “கடுகைத் துளைத்துஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்" என்றனர் என்ப. இவ்வியல்பே பொருண்மொழிக்கண் இருத்தல் வேண்டு மென்பது ஆங்கிலப் பெரியோர்களின் முடிபுமாகும். பொருண் மொழிக்கண் வரும் பொருள் தத்தம் மனத்தின்கண் முளைத்துத் தோன்றிய பழுத்த எண்ணங்களாகவும், பரந்த உலகில் நிலவும் பொருள்களைப் புலமையாற் கண்டு ஆராய்ந்து தெளிந்த முடிபுகளாகவும் இருத்தல் வேண்டுமென்பதும், அவை ஒரு சில சொற்களாலாகிய சொற்றொடர்களாயிருத்தல் வேண்டு மென்பதும், அவை யாராயும் தோறும் பயன்தருவனவாயிருத்தல் வேண்டுமென்பதும் பொருண்மொழியியல்புகளை யாராயும் ஆங்கிலப் புலவர்களின் கொள்கை. சுருங்கச் சொல்லின், பனையளவினவாய பொருளும் முடியும் ஒருங்கே திணிக்கப் பெற்றுத் தினை யளவிற்றாய சொற்றொடர்க்கண் விளங்குவது பொருண்மொழியின் உயிர்நிலையென்பர்.[3]

இங்ஙனம், சொற்சுருக்கமும் பொருட்பெருக்கமு முடைமையால், இதனைப் பொன்னேபோற் புலவர்களும் மற்றவர்களும் போற்றி ஒழுகுகின்றனர். பெருங்காப்பியத்துட் சிறந்து விளங்குஞ் சிந்தாமணிபாடிய திருத்தக்கதேவரும் திருக்குறளாய பொருண்மொழிக்கணிருந்து சில கொண்டு தம், நூலின்கண் வைத்திழைத்து அழகு செய்து கொள்வாராயினர். அவற்றுள், [4]“தொழுதகையுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் - அழுதகண்ணிரும் அனைத்து’ [5] “செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும், எஃகதனிற் கூரிய தில்’ என்பன அடங்கும்.

இவற்றுள், முதற்கண்ணதாய பொருண்மொழியை,

1.

“தொழுத தம்கையினுள்ளுந்துறு முடியகத்துஞ்சோர
அழுதகண்ணினுள்ளும் அணிகலத்தகத்தும் ஆய்ந்து பழுதுகண்ணரிந்துகொல்லும் படையுடனெடுங்கும் பற்றா(து) ஒழிகயார் கண்ணும்தேற்றம் தெளிகுற்றார் விளிகுற்றாரே.”

என்ற பாட்டிலும், இரண்டாவதனை.

2.

“செய்கபொருள்யாரும்செறுவாரைச்செறுகிற்கும்
எஃகுபிறிதில்லையிருந்தேயுயிருமுண்ணும் ஐயமிலையின்பமறனோடவையுமாக்கும் பொய்யில்பொருளேபொருள்மற்றல்லபிறபொருளே.”

என்றபாட்டிலும் அமைத்துக் கொண்டிருத்தலும் புலப்படும். விநாயக புராணம் பாடிய ஆசிரியரும் திருக்குறளின் பொருட்பாலே தம்புராணம் பாடுந்தொழிற்கு வாய்த்தபொருளும் கருவியுமாகக் கொண்டது, இப்பொருண்மொழி நூற்கட்கிடந்து


1. சிந். 189/. 2. சிந், 497, அணிசெய்தலே யன்றித் தொழிற்கண்முட்டறுக்கும் துணைக் கருவியாதலும் வலியுறுத்தும். இவ்வாறு இவை பயன்படுதலோடு அமையாது இடையூறுகளால் கலங்கித் திகைப்பார்க்குக் கலக்கந்தீர்க்குமருந்துமாய் உண்மைப் பொருளறிதற்குதவி செய்தல் குறித்தே பேக்கன் என்னும் புலவர் பெருமகனார் இவை அணியாதலே யன்றித் தொழில்முட்டிறுத்தும், கலக்கத்திடைத் தெளிவுபிறப்பித்தும் நலம்செய்கின்றன என்னும் கருத்துறக் கூறினர். 3. இப்பேக்கன் என்பவரே பிறிதோரிடத்தில் இப்பொருண்மொழிகளை உப்புங் கழிகட்கு ஒப்புமை கூறி, கழியிடத்து உப்பினைப்பெற்று, வேண்டுமிடத்துக் கலந்து சுவையாக்கிக் கோடல்போல், இவற்றினிடத்து மெய்ப்பொருள் கண்டு வேண்டுமிடத்துத் துணைசெய்துகொள்ளலாமென்றார். ‘முந்தையிருந்து நட்டோர் கொடுப்பின், நஞ்சு முண்பர் நனிநா கரிகர்" என்பது நற்றிணைக்கண் வருவதோர் (355) பொருண்மொழியாகும். இதனை ஆசிரியர் திருவள்ளுவனார் “பெயக்கண்டும் நஞ்சுண்டமைவர் நயத்தக்க, நாகரிகம் வேண்டு பவர்" என்ற குறளின்கண் (50) பெய்து கொண்டனர். மேலும், “நீரின் றமையா வுலகம் போலத், தம்மின் றமையா நந்தயத்து” என்ற அதன் கனநீரின்றமையாது உலகம் என்பது ஒரு பொருண்மொழி (நற்.1) இதன்னயும் திருக்குறளில் “நீரின்றமையா துலகெனின் யார்யார்க்கும், வானின் றமையா தொழுக்கு என்னுங் குறளின்கட் (குறள்.20) பெய்து கொண்டனர். இந்நற்றிணைப் பாட்டில் “தாமரைத் தண்டா துரதி மீமிசைச் சாந்திற் றொடுத்த தீந்தேன் போலப் புரைய மன்ற புரையோர் கேண்மை" “எனவருவது ஒரு பொருண் மொழியாகும். இதன் பொருள் - தாமரைத்தாதினையும் சந்தனத்தாதினையும் ஊதி அச்சந்தனம்ரத்திற் செய்த வள்ளத்துள் வைத்தவிடத்து அவை இடத்து நிகழ்பொருளும் இடமுமாயியைந்து தம் பெருமைபுலப் படுத்தினாற்போல உயர்ந்தோர்


3. “These wise sayings, said Bacon, the auther of some of the wisest of them, are not only for ornament but for action and business, having a point or edge, whereby knots in business are pierced and discovered. And he applauds Cicero’s description of such sayings as salpits, that you may extract salt out of them and sprinkle it where you will” - John Morley. தம்மிடத்தே வைத்து கேண்மையும் பெருமை புலப்படுத்தி விளங்கும் என்பது. இதனை மணிவாசகப் பெருந் தகையார் தம் திருக் கோவையாரின்கண், “சீரிய லாவியும் யாக்கையு மென்னச் சிறந்தமையாற், காரியல் வாட்கண்ணி எண்ணக லார்கமலங் கலந்த, வேரியும் சந்தும் வியறந் தெனக் கற்பில் நிற்பரன்னே, காரியல் கண்டர்வண் டில்லை வணங்கு மெங்காதலரே, ‘ என்ற திருப்பாட்டில் (301) அமைத்துக் கொண்டனர். இவை போலும் பொருண்மொழியாட்சிகள் பலவாதலின் இம்மட்டில் நிறுத்துகின்றேன்.

இப்பொருண்மொழிகள் புலவர் பெருமக்கள் இயற்றும் நூல்களின் இடையிடையே கிடந்து உலகியலில் மக்கள் ஒருவரோடொருவர் கூடியும் பிரிந்தும் ஒருங்கியைந்தும், பிற நிகழ்ச்சிகளைக் கண்டும். உணரும் உண்மைகளை எடுத்துக்காட்டுகின்றன. வாழ்க்கைச்சாகாடு உகைக்கும் மகன் அவ்வாழ்க்கைக்குரிய மாண்புகளையுணர்ந்து வல்லனாயிருப்பின், அது ஊறின்றாகி ஆற்றை யினிது சென்று பயன்தருவதாகும்; அதனையறியானாயின், அவ்வாழ்க்கை துன்பநிலையமாய் மிகப்பல நோய்களைத் தலைத்தலைத்தருவதாய் முடியும். இவ்வியல்பு பற்றியே உலகியலறிவினை வளர்க்கும் பொருண் மொழிகள் மிக்க இன்றியமையாதனவாயமைந்திருக்கின்றன. வாழ்க்கை அரம்பும் அல்லலும் கரம்பும் செறிந்திருத்தலால், இன்னோரன்ன பொருண்மொழிகளைக் கிடந்தன கிடந்தாங்கே எடுத்துக்கோடல் வேண்டும். அவற்றின்கண் ஒராராய்ச்சியும் வேண்டாவாம். இந்நலம் குறித்தே, இவை நாமறியும் பலவுண்மைகளுள், ஒன்றை விலக்கியாதல், வேறொன்றைத் தழுவியாதல், ஒருண்மையின் ஒருபுடையைவிலக்கியாதல், மற்றொருபுடையை மிகைபடவிரித்துரைத்தாதல் செல்லாது எத்தகைய கட்டுப்பாட்டிற்கும், நிலைக்கும், ஒழுங்கிற்குந்தக அமைந்திருத்தல் வேண்டும் என்பர். ஆதலால், இவை மக்கள் வாழ்விற்கெனவமைந்த விதிகள் என்பது மிகையாகாது.

இதுகாறும் நாம்பொருள்மொழிகளாவன இவையென்றும், அவை பொதுவகையிற்படுமாறு இதுவென்றும், அவற்றின் பொதுவியல்பும் அறிந்தோம். இனி இவற்றால் நாம் பெறும் அறிவியல்பையும், இப்பொருண்மொழிகள் பயன்படு மாற்றையும் ஒருசிறிது காண்பாம்.

அறிவாவது "நல்லதன் நலனும் தீயதன் தீமையும் உள்ள வாறே யுணர்தல்" என்பது. இது மக்கள் தோன்றும்போதே உடன் தோன்றி அவரைத் தொழிற்படுத்துகின்றது. நாம் பெற்றதும் பெறுவதுமாகிய அறிவின் இயல்பினை ஆங்கிலப் பெருமக்கள் நால்வகைப்படுத்துத் தலைமை, கடைமை, இடைமை முதலிய ஏற்றத்தாழ்வுகள் கற்பிக்கின்றனர். ஒருவன் தன் இயற்கையறிவினால் பொருளியியல்புணர்ந்து பெறுவது தலையாய அறிவு என்றும், ஏனை மக்களின் ஒழுக்கநெறிகளில் நின்றும் அவரோடு பயின்றும் அவ்வாறே பொருள்களையுணர்ந்தும் பெறுவது அதனிற் குறைந்த சிறப்பினையுடைய அறிவாமென்றும், மூன்றாவது பல நூல்களைக் கற்று அவை காட்டும் நெறிக்கண் மனத்தைச் செலுத்திப் பொருள்களை யாராய்ந்து தெளிந்து பெறுவதாய அறிவு என்றும், இவற்றிற் கடையாய அறிவாவது நூல்களிடத்தும் ஆசிரியர்களிடத்தும் கற்றதுணையே பெறுவது என்றும் கூறுவர். [6]இப்பாகுபாட்டின் கட் பொருண்மொழிகள், மூன்றாம் பகுதிக்கண் அமைந்து, உண்மையொன்றின் ஒரு சார் இயல்பினை நமக்குணர்த்தி ஏனையவற்றை ஆராயுமாறு செய்யவல்லனவாகின்றன.

இம்மூன்றாம் பகுதிக்கட்படும் அறிவு உலகில் மக்களையும் பிறபொருள்களையும் கண்டும் பழகியும் உணர்ந்தும் பெறப் படுதலால், இதனை வாழ்க்கையறிவு என்றல் பொருந்துவதாம். இது ஒருவன் நல்வாழ்க்கைக்குத் துணைசெய்யும் அறிவுப் பொருள் நிறைந்த மொழியாம். ஒருவன் கற்பதும், கற்றாரோடு பழகுவதும் எல்லாம் உலகில் நல்வாழ்வு நடாத்தி நலம் பெறுதற்-


பொருட்டேயாம். ஆகவே, அவன் கற்கும் நூல்களுள் இப் பொருண்மொழிகள் இடம் பெறாவாயின், அவையும் அவற்றைப் படிக்குங்காற் கழிந்த பொழுதும் பயன்படாதொழிவனவேயாகும். ஆகவே, இப்பொருண்மொழி ஒவ்வொரு நூலிலும் அமைதல் இன்றியமையாதாம்.

நாம் வாழும் இக்காலமும், நம்மனப் பான்மையும் புதிய வுணர்ச்சியும் ஒழுக்கமும் கொண்ட முன்னேற்ற மென்னும் பொருளால் இழுக்கப்பெறுகின்றன. "ஒரு ஊரின்கண் ஒரு அரசன் இருந்தான் - என்று தொடங்கும் சுவடிகள் மறைகின்றன; இன்னயாண்டில் இத்திங்களில் இந்நாளில் இந்நிகழ்ச்சி" நடைபெற்றதென்னும் முறை எழுந்து நிலவுகின்றது. எப்பொருளைக் கேட்பினும், எப்பொருளைக் கற்பினும், அப்பொருளைக் கேட்டவாறோ, கற்றவாறோ உணர்த லின்றிப் பல்வகையினும் ஆராய்வதும், முடிபுகூறுதலுமே எங்கும் விளங்கித் தோன்றுகின்றன. இங்ஙனமே நம்பண்டை வரலாறும், அறிதல் வேண்டுமென்னும் அவா நாகரிகமும் எங்கும் எல்லோரு மனத்திலும் எழுந்துலவுதலைக் காண்கின்றோம். இவ்வுணர்ச்சி மிக்குஎழும் இக்காலத்தில், ‘பண்டை வரலாற்றாராய்ச்சியும், பொருளியல்புணர்ச்சியும்,அரசியல்கிளர்ச்சியும் விரவிச் செல்லும் இக்காலத்தில், மக்களியல்பையும் ஆராய்தல் வேண்டுமென்பது கூறாமலேயமையும். மக்களியல்பு பொருண்மொழிக்கண் அடங்கி பருத்தலால், அவ்வாராய்ச்சி பொருண்மொழியாராய்ச்சியேயாயிற்று. இவ்வாராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படும் பொருண் மொழிகளைக் கூறவல்லவர் ஒருவர் வேண்டுமன்றே. அவர்யார்? அவரே நம்புலவர் பெருமக்கள். அவரே, உலகில் நாம் வாழ்வினியல்பையுள்ளவாறேயுரைக்கும் ஆற்றல் படைத்தவராவர்; சில உண்மைகளையும் மெய்ம்மைகளையும் எடுத்துரைக்கும் சிலரினும், இவர்கள் போற்றற்குரியர். புலவர்களின் செயல் நிலைவனப்பும் தூய்மையும் நிறைந்தது. சரித்திரங் கூறுதல், ஒழுக்கநெறியமைத்தல், அரசியலாராய்தல், சொற்பொழிவு செய்தல் ஆகிய இவையாவும் ஒருவனது உலகியலறிவின் திட்பநுட்பத்துக்கேற்ப வமைந்தனவாம். ஒழுக்கநெறியும், சரித்திர் முறையும், அரசியல்வாதமும்,

அவர்தம் கல்வி, கடைப்பிடி முதலியவற்றிற்கேற்ப மக்களால் மதிக்கப்படுவனவாம். மற்று, எளியதாய உரை நூல் எழுதும் ஒருவன், ஒன்றிரண்டாய பொருண்மொழிகளைத் தன் நூலிடையே தொடுப்பனேல் அவன் முனிவரையொப்பக் கருதப்படுகின்றான். இதுவே அப்பொருள்கட்கும் இதற்குமுள்ள வேறுபாடு. .

“தீமை கண்டோர் திறத்தும் பெரியோர்
தாமறிந் துணர்க என்ப மாதோ.”

(நற். 116) என்றும்,


“நெடிய மொழிய கடிய ஆர்தலும்
செல்வ மன்றுதன் செய்வினைப் பயனே
சான்றோர் செல்வ மென்பது சேர்ந்தோர்
புன்க ணஞ்சும் பண்பின்
மென்கட் செல்வம் செல்வமென் பதுவே”

(நற். 210) என்றும்,



“தீயும் வலியும் விசும்பு பயந்தாங்கு
நோயும் இன்பமும் ஆகின்று மாதோ.”

(நற். 294) என்றும்

வரும் பொருண்மொழிகளால், இவற்றை யாக்கிய பெரியோர்களும் நல்லிசைச் சான்றோர் வரிசையுள் இடம் பெறுவராயினர். இத்தகைய பொருண்மொழிகள் இலவாயின், இராமாயணமும் சிந்தாமணியும் பிறவும் நின்றுநிலவுதல் யாங்ஙனம் அமையும்?. மேனாட்டார் ப்ளுடார்க் (Plutarch) என்பவரை மிக மேம்படவுரைப்பது, கதை கூறுவதினும் மக்களையும் அவர்தம் பண்பினையும் வெளிப்படுத்துவதே சீரிய கருத்தாய்க் - கொண்டமையே யென்பர். இளங்கோவடிகள், ‘அரசியல் பிழைத்தோர்க் கறம் கூற்றாவது உம், உரைசால் பத்தினிக் குயர்ந்தோர் ஏத்தலும், ஊழ்வினை யுருத்துவந் தூட்டு மென்பது உம், சூழ்வினைச் சிலம்பு காரணமாகச் சிலப்பதி காரமென்னும் பெயரால், நாட்டுவதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்" (சிலப்பதிகம்) என்று தொடங்கினமையும் இக்கருத்தே பற்றியென்க.

பொருண்மொழி யிடையிடை விரவிய நூல்கள் சிலவே ஆங்கில நாட்டில் உள்ளனவென்றும், அவை எத்துணை மிகுதிப் படுகின்றனவோ அத்துணை ஒழுக்கமும் உயர்வும் மக்கட்குன் டாகுமென்றும், இவற்றில் முற்பட்டு விளங்குவன நம்நாட்டு மொழிகளே யென்றும் ஜான்மார்லி என்பவர் 1887ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ஆம் நாள் எடின்பர்க் என்ற நகரத்தில் செய்த சொற்பொழிவில் கூறியிருக்கின்றார். அவர் நாட்டில் ஒரு கிறித்தவ ஆசிரியர் சூதினால் தம்கைப்பொருளிழந்து, கடன் வாய்ப்பட்டு அது தீர்க்கும் ஆற்றலிலராய் அமெரிக்காவிற்கு ஒடிப் போய் மக்கட்கெனச் சிலபொருண்மொழி நிறைந்த நூலொன்றை “சிலசொல்லிற் பலபொருள்கள்” (Lacon or Many things in few words) என்ற பெயரிட்டு 1820-ஆம் ஆண்டில் வெளியிட்டார் என்றும், அந்நூற்கண் உள்ளன பொருளுரையாகாது பொய்யுரை (உள்ளிடில்லாத உரை, வெற்றுரை) யாக இருந்தமை கண்டு தாம் தீயிட்டெரித்துவிட்டதாகவும் அவர் கூறுகின்றார்.

பேரிலக்கியங்களும் சிற்றிலக்கியங்களும் பொருண்மொழி புணர்த்துக்கூறல் தமக்கு அணியாகக் கொண்டிருத்தல் வேண்டு மாயினும் அவை பெரும்பான்மையும் மக்கட்கு வேண்டும் பொதுவுண்மைகளையேயுண்ர்த்துகின்றன.

“இம்மை யுலகத் திசையொடும் விளங்கி
மறுமை யுலகமு மறுவின் றெய்துப
செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்

சிறுவர்ப் பயந்த செம்மலோர்"
(அகம்- 66) என்றும்,


“அறந்தலைப் பிரியா தொழுகலும் சிறந்த
கேளிர் கேடுபல ஆன்றலும் நாளும்
வருந்தா வுள்ளமோ டிருந்தோர்க் கில்லெனச்

செய்வினை புரிந்த நெஞ்சினர்.”
(அகம் - 173) என்றும்,

‘நெறியி னிங்கியோர் நீரல கூறினும்
அறியா மையென் றறியல் வேண்டும்”
(சிலப்-10) என்றும்

“நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமின் அதுதான்
எல்லாரு முவப்ப தன்றியும்
நல்லாற்றுப் படுஉ நெறியுமா ரதுவே”
(புறம் - 195) என்றும்,

“செல்வத்துப் பயனே யீதல்,
துய்ப்பே மெனினே தப்புந பலவே.”

என்றும் வருவனவற்றாலறிக.

மக்கள் நாடோறும் இயற்றும் குற்றங்களையும் நலங்களையும் எடுத்துக்காட்டி அவற்றை நீக்குதலையும், போற்றுதலையும் செய்யும் பொருண்மொழிகள் நிறைந்த நூல்கள் வேண்டும். ஆங்கிலேயர்கள் மக்களின் ஒழுக்கங்களையும், அவர் செய்யும் பிழைகளையும் இன்னோரன்ன பிறவற்றையும் எடுத்துக்காட்டும் பொருண்மொழிகளைப் புணர்த்தற்கு கதை வடிவங்களையே கருவியாகக் கொண்டிருக்கின்றனர். இவை பெரும்பான்மையும் எளிய நடையில் வழுவில்லாத இனிய தீஞ்சொற்களாலாக்கப்பட்டுப் பேரிலக்கியங்கட்குள்ள அமைதி நிரம்பிமிளிர்கின்றன. நம் நாட்டில் அம்முறையைக் கையாடல் வேண்டிச் சிலர் புனைகதைகள் எழுதுகின்றனர். அவற்றுட் பெரும்பான்மையை மக்களின் ஒழுக்கக்கேடுணர்த்தும் பொருண் மொழி புணர்த்தலில் அமைந்தனவாயினும், அம்மொழிகட்குரிய சொற்சுருக்கமும் பொருட்பெருக்கமுமின்றி, வழுவெல்லாம் நிறைந்து உலவுகின்றன. "முருகன்" என்னும் கதை நூலொன்று இவ்வாண்டில் சென்னைப் பல்கலைக் கழக வகுப்பிற்குப் பாடமாக அமைந்துள்ளது. அதன்கண் மக்கள் வாழ்வு பெறுவதும், நடைப்பிறழ்ச்சியால் கேட்டிற்குள்ளாகி வருந்துதலும், உழவுத் தொழிற்கு வேண்டும் பொருண் மொழிகளும் நிறைந்திருக்கின்றன. மற்று, அதன் சொன்னடை மிகத் தாழ்ந்த நிலையில் உளது. நூலெழுதப்புகுவோர்.


“Plutarch’s aim was much less to tell a story than as he says ‘to decipher the man and his nature" - Studies in Literature P.66.

எம்மொழியில் எழுதவிரும்புகின்றனரோ அம்மொழியில் - இயன்றவாறு பிழையின்றி விளங்க எழுதுதல் வேண்டும். சொற்றொடர்களில் இலக்கண வழுக்கள் அமைந்திருத்தல் ஒருபுடை நிற்ப, "ஒருவள்” முதலிய இலக்கண வரம்புகடந்த சொற்கள் பல விரவியிருத்தல் கற்பார்க்குக் கேடுபயக்கும் தன்மையதாகின்றது. நிற்க, உரை நூல்களிற் காணப்பெறும் பொருண்மொழிகள் எண்ணிறந்தனவாகலால் ஒருசிலகூறி இக்கட்டுரையினை முடிக்கின்றேன்.

“ஏட்டுச் சுரைக்காய் கறிக்காகாது. புத்தகஞானமேயுடையவர்கள் விடயங்களை யாராயும்போது தமது சொந்த நிலையையிழந்து அப்புத்தக நிலையையே பெற்று ஆராய்வார்கள். ஒரு தேசத்தின் இயல்பினை அத் தேசத்திற்குச் சென்று திரும்பினோர் கூறக்கேட்ட அறிவு எவ்வாறு வலியுடையதாகுமோ அவ்வளவுவலியே புத்தகஞானமே யுடையோன் ஆராய்ச்சியிற்படும் பொருளுமாகும். புத்தகமே கற்றோன் காணும் பொருண்மை பல்லிழந்தோன் தன் வாயிலமைத்துக் கொள்ளும் போலிப் பல்லைப்போல் மனத்திற் பதிகிறது. தாமே தம்சொந்த அறிவினால் அறிந்ததோ இயல்பாகவேயமைந்த அவயவம் போல் மனத்தில் வலுப்பட்டு நிற்கிறது” - தி. செல்வக் கேசவராய முதலியார்.

“காமுகனாவானொருவன் ஒரு வனிதையிடத்து அன்புடை யன் என்பது அவள் ஒக்கலைக் கண்டுழி நிகழும் அன்பின் அளவு பற்றியே அறியப்படும்.” - சிவஞானயோகிகள்.

“மானமாவது தன்னிலைமையிற் றாழாமையும், தெய்வத்தாற் றாழ்வுவந்துழி உயிர்வாழாமையுமாம்."

"உயிர் நிலத்து வினைவித்திட்டார்க்கு விளைவும் அதுவே - பரிமேலழகர்"

சில ஆங்கிலப் பொருண்மொழிகள்:

1. நுண்ணறிவோர் இழைக்கும் தவறுகளும், அறிஞர் செய்யும் ஆரவாரமும், நல்லோர் பிழைக்கும் குற்றங்களும் ஆகிய இவையாவும் சேரநிகழ்வது கிளர்ச்சியே Follies committed by the sensible, extravagances uttered by the clever, crimes perpetrated by the good, that is what makes revolution.

2. மக்களின் மடமை நோக்கி மிக்க சினங்கொள்ளுதல் மடனெனப்பட்ட யாவையும் - ஒருங்கே யழைத்துக் கொள்ளும் செயல்களுள் மிக்கதொன்றாம்.

Excessive anger against human stupidity is itself one of the most provoking of all forms of stupidity.

3. இன்பமன்று அறிஞர் வேண்டுவது; துன்பத்தினீக்கமே. அவர் தேடிச்செல்வதும் அதனையேயாம்.

Not pleasure but freedom from pain. is what the sensible man goes after.

4. தனக்கு முன்னிருந்தோன் ஒருவற்கு ஒப்பாகக் கருதில், அவனின் இரட்டித்த ஆற்றலுடையனாதல் வேண்டும்.

To equal a predecessor one must have twice his worth.

5. செய்தற் கெளியதாயினும் ஒன்றைச் செய்தலுறுபவன், அதனை அரிதென்றும், அரியதாயின் எளிதென்றும் கருதிப்புகுதல் வேண்டும்.

What is easy ought to be entered upon as though it were difficult, and what. is difficult as though it were easy.

இதுகாறும் கூறியவாற்றால், பொருண்மொழியென்பது தமிழ் நூல்களில் பொருண்மொழிக்காஞ்சியென்னும் துறைப் பகுதியுள் அடங்குவதென்பதும், அது சொற்சுருக்கமும் பொருட்பெருக்கமும் பெற்று நூல்கட்கு அணியாதலேயன்றித் தொழில்முட்டறுக்கும் கருவியாமென்பதும், பொருண் மொழிகட்கு ஆங்கிலேயர்கூறும் இலக்கணம் இதுவென்பதும், ஒருவன் கற்றற்குரிய பொருள்களுள் இவற்றைக் கற்றல் அவன் வாழ்க்கைச் சாகாடுகைத்தற்கண் இன்றியமையாது வேண்டப்படுமென்பதனால், இவை மக்கள் வாழ்விற்கெனவமைந்த விதிகளாம் என்பதும், அறிவாவது இஃதென்பதும், அது நால்வகைப் பாகுபாடுபெறும் என்பதும், அப்பாகுபாட்டின்கண் பொருண்மொழியாலெய்தும் அறிவு மூன்றாம் பாகுபாட்டிலடங்குமென்பதும், இம்மொழிகள் மக்களின் மனப் பான்மையையுள்ளவாறு காட்டும் இயல்பின என்பதும், ஆராய்ச்சியே பொருளாகச் செல்லும் இக்காலத்தில் பொருண்மொழிகளைக் கற்று மக்களின் மனப்பண்பாராய்தலும் வேண்டுமென்பதும், மனப்பண்பு கண்டு உணர்ந்து கூறும் பொருண்மொழியாட்சியால் ஒருவன் நன்கு மதிக்கப்பெறுவன் என்பதும், நம்நாட்டு இலக்கியங்கள் மக்களின் பொதுவாய பண்பினை யுணர்த்துகின்றனவென்பதும், இக்கால உரை நூல்களிற் சில, மக்களின் சிறப்புப் பண்பினையுணர்த்தினும் வழுமலிந்துள்ளனவென்பதும், ஏனையுரை நூல்களிற் சில பொருண்மொழிகள் இவற்றையும் உணர்த்துகின்றனவென்பதும் பிறவும் கூறப்பட்டனவாம்.

  1. மணி.22-6/
  2. பு.வெ.மாலை'சூ.12.
  3. *"The essence of aphorism is the compression of a mass of thought and observation into a single saying.” - John Morley.
  4. + திருக்குறள் - 828.
  5. ++குறள் - 759.
  6. * “It has been said that our knowledge is this; that we know best, first, what we have divined by native instinct; second what we have learned by experience of men and things; third what we have learned not in books, but by books - that is, by the reflections that they suggest; fourth, last and least what we have learned in books or with masters. The virtue @f an aphorism comes under the third of these heads; it conveys a portion of a truth with such point as to set us thinking on what remains.’ - J. Morley.
"https://ta.wikisource.org/w/index.php?title=செம்மொழிப்_புதையல்/007-020&oldid=1625117" இலிருந்து மீள்விக்கப்பட்டது