செம்மொழிப் புதையல்/008-020
நம் கட்புலனாம் இவ்வுலகின் தோற்றம், வடிவு முதலியவற்றை ஆராய்ந்தறிந்த பேரறிவாளர்கள் மிகப்பலர் எனினும், அவருட்சிறந்துநின்றார் கொண்டது உலகு ஒரு உருண்டை வடிவாயபொருள் என்பது. அது, வடிவில் உருண்டையெனினும், எண்ணரியபருமனும், ஒளிதெறிக்கும் இயல்பும் பொருந்தி, அளப்பரிய ஆகாயமென்னு மளக்கரில் மிதக்கும் பல்வேறு வகைப்பட்ட பொருள்கள் செறிந்த ஒரு திப்பியப் பொருளாகும். இன்னும் அதனைக் கூர்ந்து நோக்கின், அது, ஒரு நாரத்தம் பழத்தையொத்து, மேலுங்கீழுந்தட்டையாய், இருமருங்கினும் அச்சுக்கள் நிறுத்த அவை உட்சென்று நடுவில் கூடுமென நினைத்தற்கு ஏதுவாய், அவ்வச்சின் வழியாகவே சுற்றுகிறது எனக் கருதுவதற்கும் இடனாயிருக்கிறது.
இவ்வாறு, இது சுற்றுவதனால், இதன் எப்பாகம் ஞாயிற்றின் முன் வருகிறதோ, அப்பாகம், அஞ்ஞாயிற்றின் ஒளி பெற்றுப் பகற் காலத்தைப் பெறுகிறது அக்காலை, மற்றைப் பாகத்திலிருள் பரவ இராக்காலம் நிகழும். நிற்க, இது பெறும் ஒளிக்குக் காரணமாயது ஞாயிறு என்பதென்னையெனின், அது ஒரு ஒளிநிறைந்த அழற்பிழம்பு என்பர். அதனிடத்திலிருந்தே இவ்வுலகு தோன்றிற்றெனவும் கூறுவர். வேர்க்கடலை, மொச்சை முதலியவற்றைத் தீயிலிடுங்கால், அவை வெப்பத்தால் வெடிப்ப, அவற்றினின்றும் விதைகள் மிகுந்த விரைவுடன். வெளிக்கிளம்பலொப்ப, அஞ்ஞாயிறென்னும் அழற்பிழம்பின் கண் வெடித்து விரைந்தெழுந்த பொருள்களுள் ஒன்று இது எனவும் கூறுவர். இன்னணம் ஞாயிற்றினின்றும் வெளிப் போந்த பொருளாம் இப்பூமிக்கும் இஞ்ஞாயிற்றுக்கும் ஒரு கட்புலனாகாத் தொடர்புண்டு. அத்தொடர்பு ஒன்றையொன்று பற்றியே நிற்கும். விளங்கக்கூறின், ஞாயிறு பூமியைத் தன் மாட்டிழுத்தலும், அப்பூமி அதனை யிழுத்தலுமாய தொடர்பு. இதனை வடமொழியாளர் ஆகர்ஷண சக்தியென்பர். மேனாட்டார். Attraction of Gravitation (அட்ராக்ஷ னாவ் கிராவிடேஷன்) என்பர். அன்றியும், ஒர் யாண்டில் நிகழும் கார், கூதிர், முன்பனி, பின்பணி முதலாய பருவங்கள் தோன்றுதற்கும் அச்சுற்றே காரணமெனவும் கூறுவர்.
இக்கூறிய கொள்கையே பெரும்பாலார் கொண்ட தெனினும், இதற்கு முரணாயினாருமுளர். இதிற் சிறிது வழுவியாருமுளர் எனவுங் கொள்க. இவர்களுட் பண்டைய முனிவர்களும் ஒரு சாராராவர். இவர்க்குள், சிலர் இப்பூவுலகு ஒரு சமனானவெளி யென்றும், இதனைத் தாங்கும் பலதிண்ணிய தூண்கள் பல இதன்கீழே யுளவென்றுங் கூறுவர். சிலர் இதுவொரு பேரரவின் முடியிலிருக்கிறதென்றும், வேறுசிலர், ஒரு அடல்மிக்கயாமையாலிது சுமக்கப் பெறுகின்ற தெனவுங் கூறுவர். இவர்கள் கூறிய துண், அரா, யாமை முதலியன நின்று தாங்கற்கு உரிய இடம் என்னெனக் கடாயினார்க்கு விடையிறுத் தலாகாமையின், அவை கொள்ளற்பாலனவல்ல வென்க.
பிராமணர்கள், விண்ணுலகு மண்ணுலகைச் சார்ந்து மேனிற்கிறதெனவும், இவற்றினிடையில் நீரிடைத்தவழும் மீனினம் போல், ஞாயிறும் திங்களும் வானிடை மிதந்து கிழக்கு மேற்காகச் சென்று. தத்தமக்குரிய காலத்திறுதியில் உலகு விளிம்பை (Horizon) யடைந்து, முடிவில் தத்தம் முறைப்படித் தோன்றுமிடத்தையடையுமெனவும் கூறுவர்.
நிற்க, புராணிகர்கள், இப்பூமியொரு தட்டைச் சமவெளி யென்றும், இதனைச் சுற்றிப் பாற்கடலைத்தலைக்கொண்ட எழுவகைக் கடல்களும், அவற்றினிடையில், மேருமுதலாக எழுவகை மலைகளுமிருக்கின்றன வென்றுங் கூறலோடமையாது, சூரிய சந்திர கிரகணங்களாவன இராகுவென்னும் பேரரவு சிலகாலங்களிற்றோன்றி அவற்றுளொன்றை விழுங்குங் காலமே எனவுங் கூறுப.
அபுல்காசன்அலி யென்னும் பேரறிவாளரொருவர் தம் நாட்டு வல்லார் உரைகளைக் கற்றுத் தம் நுண்ணறிவிற்குத் தோன்றிய சிலவற்றைத் தாம் எழுதியுள்ள "பொன்னிலமும் மணிச்சுரங்கமும்" (Mourondge-ed-dharab, or The golden meadows, and the mines of precious stones) என்னும் உலக வரலாற்றுட் கூறுமாறு:-
"இப்பூவுலகு ஒரு தனிப்பெரும் பறவையாகும். இதன் தலையே மெக்கா, மெதினா என்னும் நகரங்கள். பாரசீகமும் இந்தியாவும் அதன் வலச்சிறகாகவும், காக் (Gog) என்ற நாடு இடச்சிறகாகவும், ஆப்பிரிக்கா அதன் வாலாகவும் அமைந்துள்ளன. இன்றையப்போது நாம் வாழும் இப்பூவுலகின் முன்பு, வேறொரு உலகிருந்தது. அதுதோன்றி ஏழாயிரம் ஆண்டுகளே இருந்தது. அதனை இப்பூப்பறவையின் குஞ்செனினும் பொருந்தும். தோன்றியிருந்த அது, இடையில் நிகழ்ந்த வெள்ளம், நிலநடுக்கம் முதலாய இடையூறுகளால் இன்னல்வாய்ப் பட்டிறந்தொழிய இது தோன்றிற்று. இங்ஙனம், பூவுலகம் தோன்றியழிதல் இயற்கையே. அவற்றிற்குரிய காலம் எழுபதினாயிரம் ஹஸரோவம் ஆகும். ஒரு ஹஸரோவமென்பது பன்னீராயிர மாண்டுகளாம்..."
இக்காலக் குறிப்பும், வரையறையும் இவர் தம்மோடிருந்த பிராமண நண்பர்களொடு கலந்து செய்ததாதல் இந்நூலாற் றெரிகிறது.
இந்நூலாசிரியரைப் பற்றிய குறிப்புக்கள்:- இவரது தந்தை ஆல்கான்; அவர் தந்தை அலியென்பார்; அவர் தந்தை அப்துர் ரஹிமான்; அவர் தந்தை அப்துல்லா; அவர் தந்தை மசௌடல் அதெலி. இவரை யாவரும் மசௌடி யெனவே யழைப்பர். பிறகு இவரது அறிவைகுறித்து, இவர்க்குக் “குத்புதீன்" என்னும் பட்டமும் அக்காலத்தார் அளித்தனர். எனினும், இவர் அப்பட்டப் பெருமையையும் கருதாது லாஹேப் அர்ரசௌ (பரம்பொருளின் தூதனுடைய தோழன்) என்னு மொருதாழ்வான (அக்காலத்தார் கருத்து) பட்டத்தையே யேற்றனர்.
நூற்குறிப்பு:-
இது உலகின் தோற்ற முதல் இந்நூல் எழுதியகாலம் வரையிற் கூறும் வரலாறாகும். இவரது காலம் மோதிபில்லாவின் கிலாபத் காலம். அதாவது ஹிஜிரா 336. இதுகாறும் கூறிய கொள்கைகளும் இன்னோரன்னபிறவும் பூவுலகைப் பொருத்தமட்டில் மிகப்பல உண்டு. ஒவ்வொரு கொள்கைக்கும் அதனையாய்ந்தறிந்த பெரியோர்கள், அவ்வக் காலத்துக்கேற்பப் பலசில காரணங்களும், கரிகளும் காட்டியே நின்றனர்.
இனி, ஞாயிறு முதலிய வானுலகப் பொருள்களைப் பற்றி அவர்கள் நினைத்தவற்றைப் பார்ப்போம்.
ஞாயிற்றின் பிறப்பு முதலியவற்றைக் கூறவந்த பேரறிஞர்களும் பலரே. அவர்கள் ஒவ்வொருவரும் காட்டிய சான்றுகள், அவரொத்த அறிஞர்களை மயக்குந் தன்மையவாய் நிற்ப, அவரவர் தத்தம்மாலியன்றவளவு பிறப்புக் கூறினர். அங்ஙனங் கூறினார் தொகையைத்துக்கி நோக்குங்கால், அவர்கள் மூன்று வகையுளடங்குவர். ஒருவகையார் மிகப் பண்டைக் காலத்து அறிஞர்களாவார். அவர்கள், ஞாயிறு ஒரு அளத்தற்கரிய அழலாழி (Wheel of fire) யென்பர்; ஒரு சாரார், ஒரு பளிங்கொத்த வொளிதெறிக்கும் (Transparent) கண்ணாடி அல்லது உருண்டை வடிவிற்றாய பளிங்கு என்றனர்; மூன்றாம் பிரிவினர், கல்லும் இரும்பும் கலந்து, பேரழல்வாய்ப் பட்டுருகி, ஒளிகாலும் தன்மைவாய்ந்த ஒர் அரும்பெரும் பொருள் என்பர். இவருட் டலையாயவர், அனக்ஸாகொரஸ் (Amaxagorus) என்டார். அன்றியும், இவர் விண்மீன், திங்கள் முதலிய வானப் பொருள்களனைத்தும் மண்ணினின்றும் தெறித்தெழுந்த கற்களெனவும், அவை ஒவ்வொன்றிற்குமுள்ள வானிடைத் தொடர்பு (அல்லது தன்வயங்கோடல்) Attraction of gravity) வயப்பட்டு, விரைந்து சுற்றிச் செல்லும் இயல்புடைமையின் பயனாகத் தீக்கொண்டு ஒளியிடுகின்றனவென்றுங் கூறுவர்.
இவர் இத்தகைய ஆராய்ச்சி முடிவை உரோம (Rome) தேயத்துமக்களுக்கு வெளியிட்டகாலை, அவர்கள் இதனையேற்றற்கு மறுத்ததோடமையாது, இவரையும் தம் நாட்டினின்றுந் துரத்திவிட்டாராதலின் இதனை நாம் நன்கு ஆய்தல் வேண்டிற்றில்லை. அன்றியும், பண்டைக் காலத்து உரோம தேயத்து மக்கள் தமக்கு ஏற்காதகொள்கை, எண்ணம் முதலியவற்றை ஒருவர் வெளியிடுவரேல் அதனை மறுக்கும் வகையால் அவரை வெளிநாடுகளுக்குத் துரத்தி விடுதல் மரபெனவும் கொள்க.
நிற்க, வேறுசிலர், மண்ணினின்றும் அழற் பொருள்கள் பல மேலே கிளர்ந்து சென்று, நாளாவட்டத்தில் வானவெளியிற்றிரிந்து நிற்பத் தற்செயலாக அவை ஒன்று கூடி ஒரு பேரழற் பிழம்பாயின; அப்பிழம்பே இஞ்ஞாயிறு, அப்பொருட்களுட் சில (அவையும் எண்ணிறந்தனவே) ஒன்று கூடாது, தனித்தோ, தம்போன்ற சில கூடித் திரண்ட சிறு பிழம்புகளாகவோ விண்மீன்களெனத் திகழ்கின்றன; இவைகள், காலம் நீடித்த காலை, வேறு சில அழற்பொருள் தம்முழை வந்துசேர, ஒருங்கே ஒளிபெறுவதுமுண்டு என்று கூறுவர்.
சிலர், நம்கட்புலனாம் ஞாயிற்றின்முன் வேறோர் ஞாயிறு இருந்ததெனவும், அது ஒரு காலத்துத் தன் ஒளிமுழுதும் ஒழிந்துமறைய, ஒரு திங்கள்காறும் உலகம் ஒளியின்றியிருந்தது; அப்போழ்தே, இஞ்ஞாயிறு தோன்றிற்று எனவுங் கூறுவர். வேறுசிலர், ஞாயிறு என்பது ஒர்பெறலரும் சீருஞ்சிறப்பு மமைந்து, பேரழகுவாய்ந்த பேரகமெனவும், அங்கு மக்கள் சென்று வாழ்தலுங்கூடுமென்றும் கூறி, அப்பேரகத்தின் மீது ஒரு வகைத்தான ஒளி, வெப்பம், நீர் முதலியவும் வேறு பிறவும் கலந்த மேகபடலம் சூழவுளதென்றும், அப்படலத்தின் செயலே இப்பூவுலகுபெறும் ஞாயிற்றொளியெனவும் கூறுப இவருட்டலையாயவர் ஹெர்ஸ்கேல் என்பவர்.
இம்முறையே, அவரவர் கூறியுள்ளவற்றைத் தேடிக் கொண்டே செல்வது விரிவுகாணுமாதலால், இதனை யிம்மட்டினிறுத்தி, இனி, இந்நிலம், ஞாயிறு, திங்கள் விண்மீன் முதலியவை தத்தம்நிலையிற்றிரியாது கொட்புறும் தன்மையையும், விரைவையும் பற்றியெழுந்த பெரியோர்களின் பலவேறு வகைப்பட்ட மதங்களையும் கூறி முடிவில், நம் நாட்டின் வரலாற்றையும் நோக்குவோம்.
ஞாயிற்றின் இயற்கையைப் பற்றிப் பல வேறு வகைப்பட்ட ஆசிரியர்கள் கூறியவற்றையும், அவற்றோரன்ன பிறவற்றையும் நாம் ஆராய்ந்து கொண்டே செல்லின், இத்தலைப் பொருள் முற்றுப் பெறல் அரிதாமாகலின், அவ்வாராய்ச்சியை இம் மட்டினிறுத்தி, இக்கட்டுரைத் தொடக்கத்திற்கூறிய பூமியின் சுழற்சியைப் பற்றிச் சிறிது நோக்கிப்பின் அதன் வரலாற்றை யாராய்வோம்.
மேல் நாட்டில் பழங்காலத்தில் லெய்டென் (Leyden) என்னும் பல்கலைக் கழகமொன்றில், பேராசிரியராய் வான்புடிங் காப்ட் (Wompuddingcoft) என்பாரொருவரிருந்தார், அவர் ஒரு பேராசிரியனுக்குள்ள அமைதிமுற்றும் நிரம்பப் பெற்றவரெனினும் தேர்தல் (Examination) காலங்கள் அறிந்து சோர்துயில் கொள்வார். அதனால், அவர் மாணவர்கள், கற்றற்றிறம் சிறிதும் களியாட்டயர்தல் பெரிதும் பயின்றுவிளங்கினர்.
ஒருநாள், இவர் மாணவர்க்கு நிலவுலகைப் பற்றிய ஓர் விரிவுரை நிகழ்த்துமமையத்து, வாளி (Tub or bucket) யொன்றிற்றண்ணிர் கொண்டு, ஏந்தியகையராய் அதனை நீட்டிய வண்ணம் நேரே பிடித்துச்சுற்றினர். சுற்றுங்கால் வாளியிலிருந்த நீர் கீழே வீழாது, அதனிடத்தேயே நின்றது. இதனை ஒர் காட்டாகக் கொண்டு, அவர் பின்வருமாறுதன் மாணவர்கட்குக் கூறுவாராயினர்.
"இவ்வாளியே பூமியாகவும், அதன் நீரே கடலாகவும் நீட்டிப் பிடித்த கையே பூமிக்கு ஞாயிற்றினுக்குமுள்ள தொடர்பாகவும், என் சென்னியே ஞாயிறாகவும் கொள்க. யான் வாளியைச் சுற்றுங்காலெழுந்த விரைவின் பயனாக, எங்ஙனம் அதன் கணிருந்த தண்ணீர் கீழே விழாது நின்றதோ அங்ஙனமே இப்பூவுலகு சுற்றும் நேர்மையால் அதன்கணுள்ள கடனீரும் இருந்த வண்ணமே நிற்கின்றது, என அறிக. யான் சுற்றும் நெறியினின்றும் உடனே நிறுத்தினாலும் அவ்வாளியே யாதர்னு மொன்றால் தடைபெற்றாலும் அதனிர் கைவழியே என் தலை மிசைவிழும். இது உண்மை. இங்ஙனமே, பூமியும் தன் விரைந்த சுழற்சியினின்றும் யாதானுமொன்றாற்றகையப் பெறின், கடனீரும், அதன் பயனாக ஞாயிற்றின் மீது விழும், விழினும் ஞாயிற்றின் வெம்மையும், ஒளியின் மிகுதியும் எவ்வாற்றானுங் குறைபடா வென்பதைச் சிறிதும் மறவற்க. என்னை: ஞாயிற்றின் வெம்மைக்கு இம்மண் சூழ்ந்த கடனிர் ஆற்றாதாகலின் என்க."இதனைக் கேட்ட மாணவர்களுளொருவன், தன் ஆசிரியருரைத்த பொருள் எத்துனையுறுதியுடைத்து, எனக்காண்டல் வேட்கை மீதுர்ந்து, வாளியைச் சுற்றி நின்ற. ஆசிரியரதுகையை இடைநின்று தடுத்தான். தடுக்கவே அவ்வாளி நீர் அவர் உடல் முழுதும் வீழ்ந்து நனைத்தது, வாளியும் கீழ்வீழ்ந்தழிவுற்றது. ஆசிரியர்க்கும் அடக்கலாகா வெகுளிபிறந்தது. முகங்குருதி பாய்ந்து செக்கர்ச்செவேரெனச் சிவந்தது. உடனே கண்கறுப்ப வீசை துடிப்ப, அவரது மடித்தவாயினின்றும், வெடித்த சொற்கள் பல வெளிவந்தன. கண்டார் மாணவர்கள். கண்டாரது கருத்தில் பேரச்சந்தோன்றி ஒரு புடைவருத்தினும், மறுபுடை, வாளி நீர் பாய்ந்தும், தங்கள் ஆசிரியர் முகம் தன்னொளி கெடாதிருந்தமை கண்டு, இன்னணமே கடனீர் விழினும், ஞாயிற்றின்றன்மை திரியா தென்பது முண்மையே எனமனந்தேறிச் சென்றனர்.
இந்நிகழ்ச்சியில், மாணவரது அறியாமைக் குறும்பு ஒரு புடைத் தோற்றமாயினும், நாம் நுணுகிநோக்கி அறியக்கிடப்பன பலவுள. அவை உயர்ந்தோர் தம் உண்மையறிவானாராய்ந்து காணும் அரியபொருள்களை, இயற்கை நங்கையும் உடன் கொள்ளாது. அவை தாமே முதிர்ந்து வருந்துணையும் வேறாய் நிற்பளென்பதும்: இன்னோரன்ன அரிய பொருள்கள் அறிவுடையோர் மனக்கண்ணிற்றோன்றி, அவரான் வெளியிடப் பெறுங்கால், அவற்றையேற்கும் ஆற்றலில்லாப் பிறமக்கள் - இயற்கை நங்கையின் இளஞ்சிறாராய இம்மக்கள் - ஏற்காதொழிவதன்றி, அவற்றையும், வெளியிடுவோரையும் மிகப்பல இடையூற்றுக்குள்ளாக்கித் துன்புறுத்துவரென்பதும்; இதனாலெய்தும் குறை அவ் அறிஞர்களதோ, மற்று, அவர்கள் கண்ட பொருள்களதோவென்பார்க்கு அது அவ்விரண்டிடத்து மன்றாய் இயற்கையின் பாற்றாமெனக் கோடல் வேண்டுமென்பதும்; இவ்வியற்கை நங்கைதான், அவை வெளி வருங்கால், மக்கள் அவற்றை யெளிதிலறிந்து ஏற்காவண்ணம் மயக்குவதோடு அமையாது, அவ் அறிஞர்களுக்கு இன்ன விழைக்குமாறு அவர்களைத் தூண்டுதலும் செய்வாளென்பதும், இங்குக்கூறிய இரண்டு குணங்களின் வயப்பட்ட இவடன் மாயையே மேலே நிகழ்ந்த நிகழ்ச்சிக்கும் காரணமாமென்பதும்; தம் உடற்கும் வாளிக்கும் இடை நின்ற கையே ஞாயிறு பூமி முதலியவற்றின் இடைநிற்கும் தொடர்பென்றும், இத்தொடர்பே உலகம்நின்று நிலவுவதற்கு இன்றியமையாப் பொருளென்று மவர் கூறியது உண்மையேயாம் என்பதும்; இதனை அவ்வாசிரியர் வெளியிடுதலுமியல்பே யென்பதும்; இடைநின்ற தொடர்பு தடைப்பட்டழியுங்காலத்துத் தன் மாட்டிழுக்கும் தன்மைத்தாய ஞாயிறு தன் தன்மை திரியாது நிற்குமென்பதும் இன்னோரன்ன பிறவுமாம்.
இக்கருத்து மெய்க்கருத்தேயென மேனாட்டுப் பெரும் புலவர்கள் அனைவரும் உடன்பட்டனர்; இன்றும் உடன்படுகின்றனர். அவர்கள் "நிலத்துக்கும் ஞாயிற்றினுக்குமுள்ள தொடர்பு ஒர் காலத்து அழியும்; அவ்வழிவால் நிலம்.தன்நிலை பெயர்ந்து ஞாயிற்றின் கட் பட்டழியும்.” என்பதையே இன்னும் எதிர்நோக்கி நிற்கின்றனர். மற்று, அவர்தம் நோக்கத்திற்கு மாறாக, இம்மண்ணுலகு தன் தொடர்பை இழத்தலின்றித்தன் நிலைமை மாறாமையும் பெற்று விளங்குகிறது. இவ்வியற்கைப் புலவர்களுடைய கொள்கைகள் முற்றுப் பெறுநாள் எந்நாளோ! இது காரணமாக எழுந்த கொள்கைகளும் புலவர்களும் விண் மீன் தொகையினும் பலரே. என் செய்வர் தாம் ஆய்ந்தறிந்த உண்மைப்படி உலகம் தன் தொடர்பு கெட்டாலன்றோ அவர்கள் மனம் அமைதிபெறும்! இன்றேல், இப்புலவர்களையும் இயற்கையையும் ஒன்றுவிக்கும் சந்தாம் தன்மையுடைய புலவர்களேனும் வரல் வேண்டும்; அவர்களும் வந்தாரிலர்!!
ஆகவே, தாம் கொண்ட உண்மைப்படி உலகம் நடை பெறாமைகண்ட அவர்கள் உலகநடைப்படித் தம் முண்மைகளைச் செலுத்தி நோக்கினர். அது கொண்டே மேற்போந்த பேராசிரியரும் "பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தொடர்பு கெடின், அவை அக்கேட்டிற்குக்காரணமாயவற்றைத் தொடராது, ஒன்றானொன்று அழிந்தொழியு மெனினும், இவ்வுலகம் ஞாயிற்றைச் சுற்றி வருதலென்பதுண்மை"யென ஆண்டுக்கூறாது கூறிப்பின்னரோரமயத்தி னன்கு விளக்கினர். அது முதற்கொண்டு, உலகம் பகலவனைச் சுற்றி வருகிற தென்பதும், அச்சுற்றுக்கும் ஞாயிற்றினுக்குமுள்ள தொடர்பும் நெறியும் சுற்றும் பொருளைச்சார்ந்தனவென்பதும் முடிந்த முடிவுகளாயின.உலகின் தோற்றம்
மேற்கூறியவாற்றான் மண், ஞாயிறு முதலிய உலகங்களின் பொதுவியல்புகண்ட அன்பர்கள் அவற்றின் தோற்றத்தைக்கான அவாவுவரன்றே! அவ்வவாவும் அறிவின்பாலதேயாம். ஆயினும், உலகின்றோற்றத்தைக் காண்டல் செல்லும் நாம் முதற்கண் நம் தோற்றத்தை யறிவோமாவென்பது வினா. அவ்வினாவிற்குப் போதிய விடையளிக்கவல்ல முடிபுகள் இதுகாறும் கிடைத்தில கிடைப்பதுமரிதே. அற்றேல், நம் நாட்டுப்பண்டைய முனிவர்களும், பெரியோர்களும் கண்டாய்ந்தவை என்னாயவோவெனின், அவை அவரவர்கள் கொண்டுசென்ற அறிவின்றிண் மைக்கேற்ப அமைந்துள்ளனவேயன்றி, எல்லாமக்களானும் கொள்ளப் பெறவில்லை. இன்னணமே பிறநாட்டார் கூறிய முடிபுகளும் அமைந்துள்ளன என்க. எனவே, இருதலையும் தூக்கி நோக்குங்கால் ஒரு வகை முடிவும் பெறுதல் அரிதாகின்றது. இத்தனையும் நோக்கியோ நம் நாவரையரும் "வந்தவா றெங்ஙனே? போமாறேதோ? மாயமாம் பெருவாழ்வு" எனத் திருவாய்மலர்ந்தது!
இங்ஙனம் நம் தோற்றமே மாயமெனின், நாம் நின்று நிலவும் உலகின் தோற்றமும் மாயமேயாம். ஆயினும், நம் நாட்டுப் பெரியோரது கொள்கையோடு பிறநாட்டுப் பெரியோர்களது கூற்றுக்களை நோக்கி மனத்தான் ஆராய்வோம்.