உள்ளடக்கத்துக்குச் செல்

செம்மொழிப் புதையல்/016-020

விக்கிமூலம் இலிருந்து

16. உரையனுபவம்

மது தமிழ் மொழிக்குப் பெருமை தருகின்ற நூல்களில் தொல்காப்பியம். திருக்குறள் என்ற இரண்டு நூல்களும் தலை சிறந்தனவாகும். அவற்றுள், தொல்காப்பியம் எழுத்தும் சொல்லும் பொருளுமாகிய மூவகை நெறியில் தமிழருடைய எழுத்தும் சொல்லும் உணர்வும், ஒழுக்கமும், வாழ்வும், பண்பாடும், பிறவும் உரைக்கின்றது. திருக்குறள் தமிழரிடை நிலவிய அறமும், பொருளும், இன்பமுமாகிய நினைவும் - சொல்லும் செயலுமாகிய கூறுகளைக் குறட்பாக்களால் உரைக்கின்றது. அதற்கு உரைகண்ட ஆசிரியர் பலர் அவர்களில் நுண்மாண் நுழைபுலச் செல்வராய். தமிழ் மரபோடு வடநூல் மரபும் நன்குணர்ந்த தமிழ்ச் சான்றோராய் விளங்கியவர் பரிமேலழகர். அவர் திருக்குறளுக்கு எழுதியுள்ள உரை தனிப்பெரும் நூலாகப் பயிலத் தக்க பண்பு அமைந்தது. தமிழில் மேன்மையான நூல்கள் எனச் சிலவற்றை நானூறு, ஐந்நூறு ஆண்டுகட்கு முன் ஒரு பெரியவர் ஆராய்ந்து தொகுத்துக் கூறினார். அவர் இன்னார் என்று திட்டவட்டமாகத் தெரியவில்லை. ஆயினும், அவர் உரைத்தது வெண்பா வடிவில் இருக்கிறது.

“வள்ளுவர் மெய் யன்பர்மொழி வாசகம் தொல்காப்பியமே
தெள்ளு பரிமேலழகர் செய்த உரை - ஒள்ளியசீர்த்
தொண்டர் புராணம் தொகுசித்தி ஓராறும் -
தண்டமிழின் மேலாம் தரம்.”

என்பது அவ்வெண்பா, இவ்வெண்பாவை நோக்குமின்; திருக்குறள், தொல்காப்பியம், தொண்டர் புராணம் எனப் பல நூற்களைத் தொகுத்த அந்தப் பெரியவர், அவற்றிற்கு ஒப்பாகப் பரிமேலழகர் உரையையும் நிறுத்தி உரைப்பது, பரிமேலழகர் உரைக்குப் பழங்காலப் புலவர் பெருமக்கள். எத்தகைய மதிப்பு வைத்திருந்தனர் என்று நமக்கு அறிவிக்கின்றது.

மேலும், பரிமேலழகர் சங்க இலக்கியங்களில் எட்டுத் தொகையுள் ஒன்றாகிய பரிபாடலுக்கு உரை எழுதியிருக்கிறார் என்றாலும் அது திருக்குறள் உரை போல வளமும், வனப்பும், திட்பமும், நுட்பமும் செறிந்தில்லை அதனால் அந்த உரை பரிமேலழகர் உரைதானோ? என்று ஐயுறுவாரும் உண்டு. நிலைமை இப்படி இருப்பதால் தான் பரிமேலழகர் உரை என்றால் யாவரும் திருக்குறள் உரை ஒன்றையே நினைக்கிறார்கள் - இந்த வெண்பாவில் “தெள்ளு பரிமேலழகர் செய்த உரை” என்பது திருக்குறளுக்கு அவர் எழுதிய உரையையே என்று பலரும் சொல்கிறார்கள். இத்தகைய சிறப்போடு விளங்குவதால் தான் பரிமேலழகர் உரையின் அழகு காண்பதில் அறிஞர்களுக்குப் பெரும் விருப்பம் உண்டாயிற்று.

அதனை நோக்குவோம்:“செவிக் குணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்” என்பது ஒரு திருக்குறள். செவிக் குணவாகிய நல்ல அறிவுடைக் கருத்துக்களைக் கேட்கும் வாய்ப்பில்லாத போது, வயிற்றுக்கு உணவு தரவேண்டும் என்பது இதன் பொருள். இதற்குப் பரிமேலழகர் செவிக் குணவாகிய கேள்வி யில்லாத பொழுது வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும் என்று உரை கூறுகின்றார்.

இனி இந்த உரையிற் கருத்தைப் புகுத்திப் பரிமேலழகர் அழகு செய்வதைக் காண்போம். திருவள்ளுவர் செவிக்குணவு என்பது எதனை? செவிக் குணவாவது கேள்வி என்று சொல்லுகிறார் திருவள்ளுவர். செவிக்குணவு இல்லாதபோது வயிற்றுக்குத்தரப்படும் என்றால், செவிக்குணவு இருக்கும்போது வயிற்றுக்கு உணவு தரப்படாது என்று தெரிகிறது. உணவு எனப்படுவதால் செவிக்குணவு போல வயிற்றுணவும் யாவருக்கும் வேண்டத்தக்கது; செவிக்குணவு தந்து கொண்டே வயிற்றுணவு கொண்டாலென் எனின், வயிற்றுணவினும் செவிக்குணவு சுவைமிகுந்தது ஆகையால், இரண்டையும் சமமாக்குளதற்குப் பரிமேலழகருக்கு விருப்பம் இல்லை. அவர் வயிற்றுணவை விடச் செவி உணவு சிறந்தது என்பாராய்ச் “சுவை மிகுதியும் பிற்பயத்தலுமுடையது கேள்வி, அது உள்ள பொழுது வயிற்றுணவு அறிஞர்களால் விரும்பப்படாது ஒழிகிறது என்று பரிமேலழகர் கண்டு, இதனால் தான் திருவள்ளுவர் செவிக்குணவு இல்லாத போது. வயிற்றுக்கு உணவு தரப்படும் என்றார் எனக் குறிக்கின்றார். இனி, செவிக்குணவு இல்லாத போது தரப்படும் வயிற்றுணவையும் “சிறிது ஈயப்படும் என்பது எவ்வாறு பொருந்தும் என்று ஒரு கேள்வியை மாணவன் பரிமேலழகரிடம் கேட்கிறான். அதற்கு விடை கூறும் பரிமேலழகர், வயிற்றுணவு மிகுமானால் இடையூறு உண்டாகும் என்று நினைக்கிறார். ஆகவே, அவர் வயிற்றுணவு பெரியதாய வழி - வயிற்றுணவு மிகுமானால் - அது நோயும், காமமும் விளைவித்தலின் திருவள்ளுவர் ‘சிறிது’ என்பதுதான் பொருத்தம் என்று பரிமேலழகர் கூறுகிறார். இது கேட்ட மாணவன். “சிறிது” என்பது ஏன்? சிறிதும் இல்லையானால் நோய் முதலியன குறையும் அல்லவா? என்று வினவுகிறான் அவனுக்குப் பரிமேலழகர் விளக்கம் தருகிறார். ‘அது தானும் பின்னிருந்து கேட்டற் பொருட்டு’ என்று சொல்லுகிறார். பின்னிருந்து கேட்டற் பொருட்டு என்பதாயின், அவ்வாறு கேட்பதற்குரிய வலிமையும், தெளிவும் தருவது வயிறு. அவ்வயிற்றிற்குத் தருகின்ற உணவை இழிந்தோர்க்குச் சொல்வது போல “ஈயப்படும்” என்று சொல்வது பொருத்தமா? என மாணவன் கேள்வி கேட்கிறான். இக் கேள்வியை நினைத்துப் பார்த்த பரிமேலழகர் அது பொருத்தம்தான் என்பாராய். “ஈதல் வயிற்றது இழிவு தோன்ற நின்றது” என்று கூறுகிறார். அது எவ்வாறு பொருந்தும் என்றால், உணவு மிகுமானால் வயிறு காமமும் நோயும் உண்டு பண்ணுவதால்தான் ‘ஈயப்படும்’ என்று சொல்லுதல் பொருந்தும் என்கிறார்.

இவ்வாறு ஒவ்வொரு குறட்பாவுக்கும் அழகொழுகத் தருக்க நெறியில் உரை எழுதும் பரிமேலழகர் கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தைச் சூழவுள்ள நாட்டில் வாழ்ந்தவர், அவர் காலத்தில் மூன்றாம் இராசராசனும், மூன்றாம் இராசேந்திரனும் சோழ நாட்டை ஆண்டனர். திக்கன் என்ற விசயகண்ட கோபாலன் காஞ்சிபுரப் பகுதியில் நாடு காவல் புரிந்தான். அந்நாளில் வாழ்ந்தவர் பரிமேலழகர், திரிபுவனச் சோழனான ஆனைமேலழகர் (கல். IV 852) நச்சினார்க்கினியர், வண்டுவரைப் பெருமாளான பரிமேலழகர் (கல். IV 854) முதலிய சான்றோரின் தூய தமிழ்ப் பெயர்கள் பின்னாளில் மறைந்து வீழ்ந்தன. அவ்வீழ்ச்சி நீர்வளமும், நிலவளமும் பொருந்திய ஊர்கள் சதுர்வேதி மங்கலங்களாக மாறி, பின்னர் அனைத்தும் மறைந்த வரலாற்றோடு ஒத்த தனி வரலாறு ஆகும்.

இப் பரிமேலழகர் திருக்குறட்கு எழுதியுள்ள உரை மிகவும் சிறந்ததெனத் தமிழறிஞர் அனைவரும் ஒரு முகமாகப் பாராட்டுகின்றார்கள். பரிமேலழகருக்கு முன்னும் பின்னும் தமிழ்ப் புலவர்கள் தோன்றித் திருக்குறட்கு உரை கண்டாரேனும், பொது வகையில் நோக்கினால் பரிமேலழகர் உரைத்த உரைக்கு ஒப்பாகவோ, உயர்வாகவோ உரை எழுதினோர் இல்லை என்று கூறுவது மரபு. இதனை வற்புறுத்துவது போல், “பாவெல்லாம் நல்லாவின் பாலாமோ, பாரிலுள்ள நூலெல்லாம் வள்ளுவர் செய் நூலாமோ நூலில், பரித்தவுரை எல்லாம் பரிமேலழகன், தெரித்தவுரையாமோ தெளி” என்றொரு பழம் பாட்டு நாட்டில் நிலவுகிறது. அன்றியும், பரிமேலழகர் உரையைத் தழுவியும், ஒற்றியும் எழுதின உரைகளை அறிஞர்கள் மேற்கொண்டதோடு வேறுபட்டும் மாறுபட்டும் செய்த உரைகளை ஏலாது ஒழிந்தமையே ஒரு சான்றாகும்.

பழந்தமிழ் நூல்கட்கு உரை காண்பது. படிப்பிப்போர், நூல்களைப் பிறர் படித்துப் பொருள் விளங்கிக் கொள்ளுமாறு செய்யும் செயல்வகையில் ஒன்று, அருஞ் சொற்களுக்கும், சொற்றொடர்களுக்கும் பொருள் உரைத்தலும், அவற்றிற்குப் பொழிப்புரைத்தலும் ஒரு வகை. அவற்றுன் முதல் வகையை அரும் பதவுரை என்றும், கண்ணழித்துரை என்றும், பதவுரை என்றும், பின்னதைப் பொழிப்புரை என்றும் கூறுவர். - உரைக்கப்பட்ட உரையின்கண் அடங்கிய கருத்துக்களை வினா - விடை வாயிலாக விளக்கி நூலாசிரியர் உள்ளக்கிடையை அறிவாராய்ச்சி நெறியில் தெளிய உரைத்தலும் ஒரு வகை. இன்றுள்ள, தொல்காப்பியம் முதலிய இலக்கணங்கட்கும் இலக்கியங்கட்கும் உரைகாரர் தோன்றி, உரையெழுதியது சுமார் ஆயிரம் ஆண்டுகட்கு உள்ளேதான் என்று கூற வேண்டும். அதற்கு முன்னே நிலவிய உரைகளைப் பற்றி ஒன்றும் அறிய முடியவில்லை. எனினும், இறையனார் களவியலுக்கு நக்கீரர் கண்ட உரை பழமை வாய்ந்தது. அதனையும் தொல்காப்பியம், திருக்குறள் முதலிய நூல் உரைகளையும் ஒப்பவைத்து நோக்கும் போது உரைகாரர் வழி வழியாக மேற்கொண்டிருந்த மரபு ஒன்று வெளிப்படுகிறது. எடுத்தோத்து, இலேசு, உத்தி என்ற மூன்று நெறிகளால் மேற்கொண்ட இலக்கண இலக்கியங்கட்கு உரை காண்பது அம்மரபு. அம்மரபு, பிற்கால நூல்களான நன்னூல். நேமிநாதம், யாப்பருங்கலம் முதலிய இலக்கண நூல் உரைகளில் மேற்கொள்ளப் பெற்றிருக்கிறதேயன்றி, இலக்கியங்கட்கு எழுதிய உரைகளில் தெளிவாகக் காணப்படுவதில்லை. பழைய உரை முறையே மறவாது கடைப்பிடித்த தொன்றே, பரிமேலழகர்க்குத் தனிச் சிறப்பையும் அவர் உரைக்கு அழகையும் தருகிறது.

எடுத்தோத்து, இலேசு, உத்தி என்ற மூன்றாலும் பொருள் காணும் மரபு. நூலாசிரியன் உள்ளக் கருத்தை ஆழ அகழ்ந்து கண்டு, அறிவு நெறியால் ஆராய்ந்து உரைக்கும் மாண்பும், அருமையும் அமைந்ததாகும். மேற்போக்காக நுனிப்புல் மேயும் விலங்கு நோக்கம் இந்நாளில் வேற்றுமொழிப் பயிற்சியால் மக்களிடையே பெரிதும் பரவி இருக்கிறது. அன்றியும், கல்வியின் நோக்கம், அறிவும், ஒழுக்கமும் பெறுவது என்பதைக் கைவிட்டு, ஏலாதன செய்தேனும் வயிறு வளர்ப்பது என்பது கொள்கையாக மாறியதனால், இவ்விழி நிலை உண்டாயிற்று. இக்கருத்துடை யாரே வழி வழியாக வாழ்வியல் தலைவர்களாக வந்தமையால், இந்நிலைமை மேன் மேலும் ஆதரவு பெற்று வளர்ந்து வருகிறது. நூலாசிரியர் கூறும் கருத்துகளை, “ஏன்? எப்படி?” என எழும் வினா விடைகளால் நுண்ணறிவு கொண்டு தூய்மை செய்து கொள்வது உயர்நிலை மாணவர் கல்வி முறையிலேயே கைவிடப்பட்டுள்ளது. அதனால், கல்வி பயில்வோரிடையே காரண, காரிய முறையில் ஆராய்ந்து உண்மை காணும் பயிற்சி தேய்ந்து போயிற்று. பரிமேலழகர் ஒருவரே, அதனை ஓரளவு விடாது கடைப்பிடித்து உண்மை உரை காண்பதில் பெரிதும் முயன்று வெற்றி பெற்றுள்ளார். எனினும், அவர் வேற்று மொழி மரபும், தமிழ் மரபும் வேறு வேறு இயல்பின என உணர்ந்தும், வாதனை வயத்தால் சில பல குறட்பாக்களில் குழறுபடை செய்து குற்றப்படுகிறார். ஆனாலும், அது பற்றி அவரது உரை மாண்பும் அழகும் குன்றுவதில்லை.

எடுத்தோத்து என்பது எடுத்து ஒதப்படும் பாட்டும் அதன் கருத்துமாகும். இதனை எடுத்துரை என்பது வழக்கம். பொறுப்பவர்க்குப் புகழுண்டாகும்: பொறாது ஒறுப்பவர்க்கு ஒரு நாளை இன்பமேயாம் என்ற கருத்தை,

செ-15

‘ஒறுத்தார்க் கொருநாளை யின்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.”

என்ற குறட்பா எடுத்துரைக்கின்றது அதனால். இது எடுத்தோத்து அல்லது எடுத்துரை ஆகும். இங்ஙனம் எடுத்தோதப்படும் உரையில் “ஒரு நாளை இன்பம்” என்பதும் “பொன்றுந் துணையும் புகழ்” என்பதும் விளக்கப்பட வேண்டுவன. அதனை விளக்கும் பரிமேலழகர், “ஒரு நாளை இன்பம்”, அந்நாள் ஒன்றினும் கருதியது முடித்தேம் எனத் தருக்கியிருக்கும் பொய்யின்பம்’ என்று கூறுகிறார். “பொன்றுந்துணையும் புகழ்” என்பதில் பொன்றுதல், இறத்தல்; பொறுத்தார்க்கு இறக்கும் துண்ையும் புகழ் என்பது கருத்தாய்ப் பொருள் குற்றமாகிறது; புகழ் நிற்குமிடம் உலகமே தவிர புகழைச் செய்பவரல்ல: அவர் இறந்து போனாலும் புகழ் இறந்து போவதில்லை. இதனை விளக்குதற்குப் பரிமேலழகர் ஒரு சூழ்ச்சி செய்கிறார். புகழுக்கு ஆதாரம் உலகம் என்று காட்டி, “ஆதாரமாகிய உலகம் பொன்றப் புகழும் பொன்றுமாகலின், ஏற்புடைய உலகம் என்னும் சொல் வருவித்துரைக்கப்பட்டது” என உரைத்து, “பொறுத்தார்க்கு உலகம் அழியும் வரைப் புகழ் நிற்கும்” எனக் குறட்பாவின் எடுத்துரையை விளக்கம் செய்கிறார். எடுத்துரை, விதியும் விலக்குமென இரண்டாகப் பிரிந்து, பொதுவும் சிறப்பும் என வகைப்பட்டு, எய்தாதது எய்துவிப்பது, எய்தியது விலக்குவது எய்தியதன் மேற் சிறப்பு விதி கூறுவது, எய்தியது விலக்கிப் பிறிது வகுப்பது. எய்தியது இகந்து படாமைக் காப்பது எனப் பல கூறுகளாகப் பிரிந்து செல்வது “விதியெல்லாம் எய்தாததனை எய்துவிப்பதும், ஒரு கால் எய்தி ஒருகால் எய்தாதா கற்பாலதனை அவ்வழியும் இகந்து படாமற் காத்து நியயமாக எய்துவிப்பதும், ஈரிடத்து எய்தற்பாலதனை ஒரு மருங்கு மறுப்பதும் என மூவகைப்படும்” என மாதவச் சிவஞான முனிவர் முதலாயினோர் கூறுவர்: அவற்றைக் கருத்திற் கொண்டுரைப்பது, (உரை காண்பது) உரைகாரர் மரபு: ஆயினும் அவற்றை விரித்துரைப்பதற்கு இங்கு இடம் இல்லை.

இலேசு என்பது எடுத்துரைக்கும் கூற்றில் வேண்டாத சொற்களைப் பெய்தலும், வேண்டுவதைத் தொகவைத்தலும். முறை பிறழ்ந்து உரைத்தலும் எனப் பலதிறமாக வரும். அவற்றால், பாட்டைப் பாடும் புலவற்கு உள்ளத்தில் ஒரு குறிப்பு உண்டு: அது ஆராய்ந்து காணத் தக்கது என்பது இலேசின் குறிக்கோள்.

“ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்”

என்ற குறட்பா நல்லொழுக்க முடையவர்க்குத் தீய சொற்களைச் சொல்வதென்பது ஆகாத தொன்று என உரைக்கின்றது. தீய சொற்களைச் சொல்வதைத் “தீய வாயாற் சொலல்” எனத் திருவள்ளுவர் கூறுகின்றார். “தீய சொலல்” என்றாலே தீய சொற்களை வாயினாற் சொல்லுதல் என்று பொருள்பட நிற்பதால். “வாய்” என்ற சொல் இலேசு. இந்த இலேசினால் திருவள்ளுவருடைய உள்ளக் குறிப்பு யாது? எனக் காணலுற்று “வாயாற் சொலல்” என்றால் ஏன்? எனக் கடாவிக் கொண்டு “வாய் என வேண்டாது கூறினார். நல்ல சொற்கள் பயின்றது எனத் தாம் வேண்டியதன் சிறப்பு முடித்தற்கு” என உரைக்கின்றார். இலேசினால் பொருள் கொள்ளப்படும் இம்முறை வட மொழியிலும் உண்டு என அறிவிக்க “இதனை வட நூலார் தாற்பரியம்” என்று கூறுவர் எனப் பரிமேலழகர் உரைக்கின்றார்.

உத்தி என்பது நூல் உரைக்கும் ஆசிரியன் கைக்கொள்ளும் அறிவு நெறி, அறிவுப் பெருக்கத்துக்கும் நுண்மைக்கும் ஏற்ப அது விரிந்து செல்லும் என்று இலக்கணப் புலவர் இயம்புவர். ஊழ் என்ற பகுதியில்,

“நல்லவை யெல்லாஅம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.”

என்ற குறட்பா வருகிறது. இதனைக் கிடந்தபடியே கொள்ளின் இக்குறட்பா செல்வம் பெற முயல்பவர்க்கு நல்லவை தீயவையாம். தீயவை நல்லவையாகும் என்று பொருள் பட்டுத் தெளிவில்லாமல் கெடுகிறது. இது எடுத்தோத்து, இலேசு என்ற இரண்டாலும் விளக்கம் பெறாமல் உத்தியை நாடி நிற்கிறது. “அதிகார முறை” என்ற உத்தியால் தீயூழ் வயப்பட்டார் செல்வம் செய்யுங்கால் நல்லவை யெல்லாம் தீமையாய் முடியும்: நல்லூழ் உற்ற போதில், தீயவை செயினும் நல்லவையாய்ச் செல்வம் எய்துவிக்கும் என உரை செய்யப்படுகிறது.

இவ்வாறு எடுத்துரை. இலேசு, உத்தி என்ற நெறிகளில் உத்தி வகை, இலக்கணவமைதி காட்டல், தருக்க நெறியில் விளக்கம் கூறல், வினாக்கட்கு விடை வழங்கல், கருத்துரை தருதல் என வருவன பலவற்றையும் நினைவிற் கொண்டு திருக்குறட்குப் பொருள் விளக்கம் செய்கிறார் பரிமேலழகர்.

“செய்துஏமம் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று.”

என்பது குறட்பா. அதன்கண், ‘செய்து ஏமம் சாராச் சிறியவர்” என்ற தொடர் பரிமேலழகரது இலக்கண அறிவை ஈர்க்கின்றது. “ஏமம் சாரா” என்ற தொடர் சிறியவர் என்ற சொல்லோடு இயைவது பொருத்தமா? ‘புன்கேண்மை’ என்ற சொல்லோடு இயைவது பொருத்தமா? என்று ஒரு மயக்கம் உண்டாகிறது. அதை எண்ணிய பரிமேலழகர் “ஏமம் சாராச் சிறியவர்” என்று இயைப்பது உண்டு; அது கூடாது. “சிறியவர் என்பதனைக் கொள்ளின் செய்து என்பது நின்று வற்றும்” என உரைக்கின்றார். உரை எழுதும்போது இத்தகைய குற்றம்படக் காண்பது முறையாகாது. இதைக் கருத்திற் கொண்டு, “இதற்குப் பிறரெல்லாம் சொல்லிலக்கணத்தோடு மாறுகொள உரைத்தார்” என்பதொன்றே பரிமேலழகர் நன்கு எண்ணி எழுதுகிறார் என்பது விளங்கும்.(817)

“மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனால் வரும்.”

என்பது வேறொரு குறட்பா. இதன்கண் இரண்டு கருத்துக்கள் கூறப்படுகின்றன. ஒன்று வெகுளியை மறத்தல் வேண்டும் என்பது. மற்றொன்று அதனால் தீயவை பிறக்குமென்பது. இவ்விரண்டிற்கும் ஒரு தொடர்பு காட்டினாலன்றி, இரண்டும் ஒரு குறட்பாவில் கூறுதற்கு ஆகா. கூறப்பட வேண்டுமாயின் இரண்டிற்கும் ஒரு தொடர்பு இருத்தல் வேண்டும். தொடர்பில்லாத இரண்டு கருத்துக்கள் ஒரு குறட்பாவில் கூறப்படா என்பது உரை மரபு. ஆனால், இரண்டிற்கும் தொடர்பு காணும் போது வெகுளியை மறவாவிடத்து தீமை உண்டாகும் என இரண்டிற்கும் காரண காரியத் தொடர்பு கண்டு, மறத்தல் வெகுளியை அதனால் வரும் என்பதை ஏதுவாகவும் நிறுத்திப்பரிமேலழகர் பொருள் உரைக்கின்றார். அது அவரது உரைக்கு ஏற்றமும் அழகும் தருகிறது.

“கற்றதனால் ஆய பயன்என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.”

“செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினு மென்:”

எனச் சில குறட்பாக்களைத் திருவள்ளுவர் வினா வடிவில் தருகின்றார். உரைகாரன் அதற்கு விடை கூறவேண்டும். அது உரை மரபு. “பயன் என்கொல்” என்பதற்கு விடை கூறும் பரிமேலழகர் “பயன் இல்லை” என்று கூறல் வேண்டும். இங்ஙனம் கூறுபவர் “என் கொல்” என்பதைப் பற்றிக் கொண்டு. இதன்கண் “எவன்” எனும் வினாப் பெயர் “என்னென்றாய் ஈண்டு (பயன்) இன்மை குறித்து நின்றது” என்கின்றார்.

“செவியிற் சுவையுணர வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினு மென்.”

என்ற இக்குறளுக்கு உரை எழுதும் பரிமேலழகர் வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் பயன் இல்லை என்றல் வேண்டும்; ஆனால், அவர் அதனை, “செத்தால் இழப்பதும் வாழ்ந்தால் பெறுவதும் இன்மையில் இரண்டும் ஒக்கும்” என்கின்றார். இவ்வாறே.

“உறினட் டறினொரூஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்.”

என்ற திருக்குறள் உரையில் நட்பால் பயனும், பிரிவால் இழப்பது ஒன்றுமில்லை என்று சொல்ல வரும் பரிமேலழகர் “அவர் மாட்டு நொதுமற் றண்மையே அமையும்” என உரைக்கின்றார்.

இனித் திருவள்ளுவர் பெர்துவாக உரைக்கின்ற சில கருத்துக்களைத் தெளிவுபட விளக்குவதே உரைகாரர் கடன் என்ற உண்மையைக் கடைப்பிடித்துப் பரிமேலழகர் விளக்குகின்ற திறம் இனிது தோன்றுகிறது.

“யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.”

என்ற குறளில் “யாம் மெய்யாக் கண்டவை” எனச் சிலவற்றைப் பொதுவகையாற் கூறுகின்றார் திருவள்ளுவர், அவை யாவை? எனக் கேட்கும் மாணவருக்கு விடை கூறுவது உரையாசிரியர் கடன். இக்கடமையை அறிந்தாற்றுகின்ற பரிமேலழகர், உரையின்கண் “மெய்யாக் கண்டவை, ஆகமங்கள் என உரைக்கின்றார்” அது எங்ஙனம் எனும் வினாவிற்கு விளக்கம் எய்தும் பொருட்டு, தங்கண் மயக்கமின்மையின் பொருள்களை உள்ளவாறு உணரவல்லாராய்க் காம வெகுளிகளின்மையின் அவற்றையுணர்ந்தவாறே உரைக்கவும் வல்லராய இறைவர் அருளான் உலகத்தார் உறுதி யெய்துதற் பொருட்டுக் கூறிய ஆகமங்கள் என்று தெரிவிக்கின்றார். ஆகமங்களை மெய்ந் நூல்கள் என விளக்கக் கருதும் பரிமேலழகர், ஆகமங்களை உரைத்த ஆசிரியர்களை, பொருள்களை உள்ளவாறு உணர வல்லவர் என்றும், உண்ர்ந்தவற்றை உரைக்க வல்லவர் என்றும் அவரே இறைவர் என்றும் தெரிவிக்கின்றார். ஆகமங்களை அவர் ஏன் எழுதினார் என்பதற்குக் காரணமும் காட்டுகின்றார். உலகத்து மக்கள் மேல் உண்டான அருள் உணர்வால், அவர்கள் உறுதி எய்தும் பொருட்டு இந்த ஆகமங்கள் எழுதப்பட்டன என விளக்கும் வகையில் “அருளான் உலகத்தார் உறுதி எய்துதற் பொருட்டு” என்கின்றார்.

இனி பொய்யாமை, கொல்லாமை ஆகிய இரண்டு அறங்களை வற்புறுத்துகின்ற திருவள்ளுவர்,

“ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.”

என உரைக்கின்றார். இக்குறளைக் கேட்கும் மாணவன் உள்ளத்தில், இரண்டறத்துள்ளும் யாது சிறந்தது என்ற ஐயம் எழுகிறது. திருவள்ளுவரே, முதன்மையைக் கொல்லாமைக்கு வைத்து அதற்குப்பின் பொய்யாமையை வைத்து உரைக்கின்றார் என்று சொல்வது ஒருவாற்றால் விடையாகும். அதன்கண், காரணம் காட்டப்படாமையால், காரண காரிய முறையில் வைத்து உரைப்பது உரைகாரர் கடமையாகிறது. அதனால், பரிமேலழகர் “பொய்யாமை பொய்யாமை யாற்றின்” எனவும், ! “யாமெய்யாக் கண்டவற்றுளில்லை” எனவும் கூறினாராகலின், இரண்டறத் துள்ளும் (கொல்லாமை, பொய்யாமை) யாது சிறந்ததென்று ஐயம் நிகழுமன்றே, அது நிகழாமைப் பொருட்டு ஈண்டு அதன் பின்சாரப் பொய்யாமை நன்றென்றார்; முற்கூறியதிற் பிற்கூறியது வலியுடைத்தாகலின், அதனைப் “பின்சார நன்றென்றது”. நன்மை பயக்கும் வழிப் பொய்யும் மெய்யாயும், தீமை பயக்கும் வழி மெய்யும் பொய்யாயும் இதனைப் பற்ற, அது திரிந்து வருதலான் என உணர்க’ என எழுதுகிறார். இதனை இந்நாளைய சீர்த்த இலக்கிய விமர்சகர்கள் (Advanced literary Critics) Logical interpretation with psychological Segeence என்று கூறுகின்றனர்.

இனி, “மெய்யுணர்தல்” என்ற பகுதியில் மெய்ப் பொருளுக்குச் செம்பொருள் என்ற பெயர் குறித்து,

“பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு”

எனத் திருவள்ளுவர் கூறுகின்றார். “செம்பொருள்” என்பதை விளக்க வந்த பரிமேலழகர் “தோற்றக் கேடுகள் இன்மையின் நித்தமாய், நோன்மையால் அதனை யொன்றும் கலத்தல் இன்மையின் தூய்தாய், தான் எல்லாவற்றிலும் கலந்து நிற்கிற முதற்பொருள் என்றார் என உரைக்கின்றார். இது ஒரு சமய சாத்திரம் படிக்கின்றோமோ என நம்மை மருட்டி இன்பம் செய்கிறது. இனி,

“வாய்மை யெனப்படுவது யாதெனின். யாதொன்றும்
தீமை யிலாத சொலல்”

என்ற குறட்பா உரையில், “எனப்படுவது” என்பதற்கு “என்று சிறப்பித்துச் சொல்லப்படுகிறது” எனப் பொருள் கூறுகின்றார் பரிமேலழகர். “எனப்படுவது” என்பதற்கு, “என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது” என்று பொருள் கூறுதல் பொருத்தமா? என்று வினா எழுப்பிய மாணவனுக்கு விடை கூறுகிறார் பரிமேலழகர். வழக்கில், ஊர் என்று சிறப்பித்துச் சொல்லப்படும் உறையூரை எடுத்துக்காட்டி, “ஊரெனப்படுவது உறையூர்” என்றாற் போல என உரைக்கின்றார். நூல் உரை காண்பவர் இலக்கணத்தையோ, வேறு நூற்களையோ காட்டாமல் வழக்கினை எடுத்துக் காட்டுவது முறையாகுமா? எனின்,

“வழக்கு எனப்படுவது உயர்ந்தோர் மேற்றே
நிகழ்ச்சி அவர்கட்டாக லான.”

என்று தொல்காப்பியம் வழக்கினைக் காட்டுவது நேரிது எனக் காரணத்தோடு கட்டுரைக்கின்றது. ஆகையால் “என்று சிறப்பித்துச சொல்லப்படுவது” என்று, வழங்குதல் பொருத்தமே என உய்த்துணர வைக்கின்றார் பரிமேலழகர்.

ஒரு தலைவரின் கீழ் பணிபுரிபவன் தன்னை அவர் ஐயுறத் தக்க வகையில் நடந்து கொள்ளக்கூடாது; ஐயம் பிறந்து விடுமானால், பிறகு தெளிவிக்க ஒருகாலும் ஆகாது என்ற கருத்துப்பட,

“போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது”

என்று திருவள்ளுவர் கூறுகிறார் “கடுத்தபின் (ஐயம் தோன்றிய பின்) தேற்றுதல் யார்க்கும் அரிது” என்பது எவ்வாறு பொருந்தும் என மாணவன் கேட்கின்றான். இங்ஙனம், ஐயம் தெளிவு பெற வேண்டுங்கால் உரைகாரர்கள் இலக்கணம், வழக்கு, ஏது, எடுத்துக்காட்டு என்ற நான்காலும் விளக்கம் செய்வர். இங்கே நான்கனுள் இதனை எடுத்துக்காட்ட்ால் விளக்கம் செய்கின்றார் பரிமேலழகர். “கடன் கொண்டான் தோன்றப் பொருள் தோன்றுமாறு போலக் கண்டுழி யெல்லாம் நினைக்கப்படுதலின் தேற்றுதல் யார்க்கும் அரிது” என எடுத்துக்காட்டினால் உரைக்கின்றார்.

பரிமேலழகரது உரையிற். காணப்படும் பல்வேறு அழகுகளில் அரிய சொல்முடிவு காட்டி இலக்கண அமைதி கூறுவது ஒன்று. “கவ்வையாற் கவ்விது காமம்” என்ற குறட்பா வில் “கவ்விது” என்பது சவ்வையென்னும் சொல் அடியாக வந்தது; ஆனால், அங்ஙனம் வருதற்குத் தமிழ் இலக்கணத்தில் இடமில்லை; செய்யுளினும் வழக்கு வலியுடைத்து என்பது பற்றி, “செவ்வையுடையதனைச் செவ்விது என்றாற் போலக் கவ்வையுடையதனைக் கவ்விது என்றார்” என்று பரிமேலழகர் உரைப்பது இலக்கணப் புலவர்க்கு வியப்பும் இன்பமும் தருகிறது. காரணம் என்ன எனின், செவ்வை உடையதனைச் செவ்விது என்றல் தொல்காப்பியர் மரபு. “எவ்வயிற் பெயரும் வெளிப்படத்தோன்றி அவ்வியல் நிலையல் செவ்விது என்ப,” என்பது தொல்காப்பியம். அதை நினைவிற் கொண்டு பரிமேலழகர், “செவ்விது” என்றாற் போல என உரைக்கின்றார். இவ்வாறே ஒரு குறட்பாவில் “புலப்பாயாக” என்பது “புலத்தி” என்று வராமல் “புலத்தை” எனவருகிறது. அவ்வாறு வருதற்குச் சொல்லியல் காண்கின்ற பரிமேலழகர், தமிழ் மரபு காணாது புதியதொரு சூழ்ச்சி செய்கின்றார். புலத்தை என்பதன் ஈற்றெழுத்தைப் பிரித்து விகுதி என்று பெயரிட்டு. அதற்கு மேற்கோளாகக் கலித்தொகைப் பாட்டில் ஒன்றைப் பற்றிக் கொண்டு “புலத்தை என்புழி ஐகாரம். கடம் பூண்டு ஒருகால் நீவந்தை, என்புழிப் போல முன்னிலை வினை விகுதி” என உரைக்கின்றார்; விகுதி யென்று நிறுத்தி இலக்கணம் காண்பது தொல்காப்பியர் காலத்திலோ வள்ளுவர் காலத்திலோ மரபன்று. பரிமேலழகரே மேற்கொண்டுரைப்பது புது மரபு; பல்லவர் காலத்திற்குப் பின் வந்த இலக்கணப் புல்வர் செயல் வகை.

வடமொழி முதலிய மொழிகளின் மரபும், தமிழ் மரபும் வேறு வேறு இயல்பின என உணர்ந்து ஆங்காங்கு அவ் வேற்றுமையை எடுத்துரைத்து மகிழ்விப்பதிலும் பரிமேலழகர் சிறப்புடையவர். தன் உயிரைக் காக்க வேண்டி வருமிடத்து, ஒருவன் மானம் கருதல் ஆகாது என்பது வடநூல் மரபு. “இன்றியமையாச் சிறப்பின ஆயினும் குன்ற வருப விடல்” என்று திருக்குறள், வடநூல் மரபுக்கு மாறுபட நிற்பது காண்கிறார் பரிமேலழகர். ஆதலால் “இறப்ப வருவழி இளிவந்தன செய்தாயினும் உய்க” என்ற வடநூல் முறைமையை மறுத்து, உடம்பினது நிலையின்மையையும், மானத்தினது நிலை உடைமையையும் தூக்கி, அவை செய்யற்க” என்பதாம் என உரைக்கின்றார். இவ்வாறே,

“ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.”

என்ற திருக்குறளில் தமிழ்மரபின் தனி இயல்பை விளக்குகின்றார்.

இனி அக்காலத்தில் ஏடும், எழுத்தாணியும் கொண்டு எழுதுவது மரபாகலின், திருக்குறள் உரையின்கண், சில இடங்களில் பரிமேலழகர் முன் எழுதியதை மறந்து தவறுதலும் செய்கின்றார்.


“நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்
வாள துணர்வார்ப் பெறின்.”

என்பது திருக்குறள். இதற்குத் தாம் ஓர் உரை வகுத்துக் கொண்டு, பிறர் கூறும் உரையை மறுத்து ஒதுக்குகின்றார். பரிமேலழகர் இதற்குப் பிறர் கூறும் உரை, “நாள் என்பது ஒரு பொருள் போலத் தோன்றி உயிரை ஈர்வதொரு வாள்” என்பது. இதன்கண், “நாளென ஒன்று” என்பதற்கு “நாள் என்பது ஒன்று” எனப் பொருள் பிறரால் உரைக்கப்படுகிறது. இவ்விடத்து “என” என்ற சொல் “என்பது” எனப் பொருள்படுகிறது. (1) ‘என’ என்பது ஒர் இடைச்சொல்லேயன்றி பெயர்ச்சொல் அன்று என்பது பரிமேலழகர் கொள்கை. அது (என) “என்பது” எனப் பொருள்படக் கூடாது. (2) ஒன்று போல் காட்டி என்பதற்கு “ஒரு பொருள் போலத் தோன்றி” என்று பொருள் உரைக்கப் பட்டிருக்கிறது. அப்படிச் சொல்வதில் பொருள் சிறப்பு இல்லை என்பது பரிமேலழகர் கொள்கை. “வாளது” என்றவிடத்து “அது” என்பது குற்றியலுகரம் அன்று. ஆகவே, பரிமேலழகர் கருத்துப்படி “அது உணர்வார்” என புனராது முறைப்பட வர வேண்டுமாயின் “அஃதுணர் வார்ப் பெறின்” என வருதல் வேண்டும். அவ்வாறு இல்லாமையால் இதற்கு பிறர் கூறுவது பொருந்தாது என்ற கருத்துப்பட “என” என்பது பெயரன்றி. இடைச்சொல் ஆகலானும், “ஒன்று போற்காட்டி” என்பதற்கு ஒரு பொருட் சிறப்பின்மையாலும், “அது” என்பது குற்றியலுகரம் அன்மையாலும், அஃது உரையன்மை அறிக என்று பரிமேலழகர் மறுக்கின்றார்.

இனி பரிமேலழகர் கருத்தை ஆராய்வோம். “என” என்னும் சொல் இடைச்சொல்லேயன்றி பெயர்ச் சொல் அன்று எனப் பரிமேலழகர் கருதுவது தொல்காப்பியத்திற்கு முரண் ஆனது. ‘என’ என்னும் இடைச்சொல் பெயர்ப் பொருளிலும் வரும் என்ற கருத்துப்பட “வினையே குறிப்பே இசையே பண்பே, எண்ணே பெயரோடு அவ்வாறு கிளவியும் கண்ணிய நிலத்தே, என என் கிளவி” (தொல். இடை - 10) என்று தொல்காப்பியம் கூறுகிறது. அடுத்து “ஒன்றுபோல் காட்டி” என்பதற்கு ஒரு பொருள் போலக் காட்டி என்றதில் பொருள் சிறப்பில்லை என்கிறார். ஆனால், அவர் இல்லை என்பதற்குத் தக்க காரணம் கூறாமையால் அவர் உரை செல்லாதாகிறது. மூன்றாவதாக "வாளது” என்பதிலுள்ள "அது" என்னும் சொல் குற்றியலுகரமன்று எனக் காட்டி மறுப்பது, அவர் பிறிதொரு இடத்தில் உரைத்த உரையையே மறுக்கிறது. அதாவது "உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன், புண்ண துணர்வார்ப் பெறின்” என்ற குறட்பாவின் உரையில் "புண்ண துணர்வார்" எனப் புணர்ந்ததற்கு, "அஃது என்னல் வேண்டும் ஆய்தம் விகாரத்தால் தொக்கது” என உரைத்தார் பரிமேலழகர், அவரே, “நாளென ஒன்று போல் காட்டி" என்ற திருக்குறள் உரையில் ‘வாளது’ என்ற விடத்து, "அஃது என்னல் வேண்டும் ஆய்தம் விகாரத்தால் தொக்கது" என்று தானே கொள்ள வேண்டும். அவ்வாறு கொள்வது உரை முறைமையன்று.

இனி ஒரிடத்தில் எழுவாய் பயனிலையைத் தெளிய நோக்காமல் தடுமாறுகின்றார் பரிமேலழகர்.

"வித்தும் இடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.”

என்ற திருக்குறட்கு ‘'மிசைவான்" என்பது எழுவாயும் ‘'வேண்டுங் கொலோ" என்பது பயனிலையும் ஆகும். அதனைத் தெளியாமல் "இடல் வேண்டும்" என்பதை எழுவாயும் பயனிலையுமாகக் கொண்டு "மிசைவான் புலம் வித்தில்லாமலே வினையும்" எனப் பொய்யுரை புகலுகின்றார். இக்குறட்பாவை உண்மை நெறியில் நின்று நோக்குவோமாயின் விருந்தோம்பி மிக்சில் மிசைபவன் (தன் பால்) உள்ளது வித்தே ஆயினும் விருந்திற்கு இடுவதே தவிர, புலத்திற்கு இடவிரும்பான் என்பது நேரிய பொருளாம்.

இங்ஙனம் ஒரு சில தவறுகள் ஆங்காங்கே காணப்படினும் பழமையிற் புதுமையும், தருக்கத்தில் இலக்கணமும், விளக்கத்திற் சுருக்கமும். நூல் வழக்கொடு உலகியலும் புகுத்தி நுண்மையும் மாண்பும் அழகும் தெளிவும் பரிமேலழகர் உரைக்கென்றமைந்த சிறப்புக்கள் என்பது யாவரும் நினைவிற் கொள்ளத் தக்கது.

"https://ta.wikisource.org/w/index.php?title=செம்மொழிப்_புதையல்/016-020&oldid=1625139" இலிருந்து மீள்விக்கப்பட்டது