உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

நற்றிணை தெளிவுரை


[(து–வி.) தலைவி நினக்குச் கிடைப்பாளல்லன்' எனத்தன்னை உரைத்துப் போக்கிய தோழியிடம் தன் நோயின் மிகுதியை உரைத்தாளாகத் தலைவன் கூறுகின்றான்.]

நயன் இன் மையின், பயன்இது என்னாது
பூம்பொறிப் பொலிந்த, அழல்உமிழ் அகன்பை
பாம்புயிர் அணங்கி யாங்கும் ஈங்குஇது
தகாஅது வாழியோ குறுமகள்! நகாஅது
உரைமதி; உடையும்என் உள்ளம்—சாரல் 5
கொடுவிற் கானவன் கோட்டுமா தொலைச்சிப்
பச்சூன் பெய்த பகழி போலச்
சேயரி பரந்த மாஇதழ் மழைக்கண்
உறாஅ நோக்கம் உற்றான்
பைதல் நெஞ்சம் உய்யு மாறே. 10

இளமை உடைய பெண்ணே! நீதான் நெடிதுகாலம் வாழ்வாயாக! 'நின்பால் எமக்கு விருப்பந்தருகின்ற நயப்பாடு யாதும் இல்லைமையினாலே, நின் முயற்சிக்குப் பயன் 'அகன்று போதலே' என்று கூறினையாயினும் பொருந்தும். அவ்வாறு கூறுதலையும் செய்யாதே, பொலிவுற்ற புள்ளிகள் பொருந்திய அழலைப்போலும் நஞ்சைக் கக்கும் அகன்ற படத்தையுடைய பாம்பானது உயிர்களைக் கடித்து வருத்தினாற்போல, என்னை நகையாடும் இதுதான் நின் செவ்விக்குத் தக்கதாகாது. மலைச்சாரலிடத்துக் கொடிய வில்லினனான சானவன் ஒருவன், கோட்டினையுடைய விலங்காகிய களிற்றைக் கொன்று, அதன் பச்சூனைக் கொண்ட பகழியை உருவி எடுத்தால் அது விளங்குமாறு போலச் செவ்வரி பரந்த கரிய இமைகளையுடைய தலைவியின் குளிர்ச்சிகொண்ட கண்களது பொருந்தாத நோக்கத்தாலே தாக்குதலுற்றது என் நெஞ்சம். அதுதான் அழியாது பிழைக்குமாறு, என்னை நகையாடிப் போக்க நினையாதே, நின் தலைவிபாற் சென்று, என் குறையினை எடுத்து உரைப்பாயாக. அங்கனம் நீ செய்யாயேல் என் வருத்தமுற்ற உள்ளம் உடைந்துபோக யானும் அழிந்தே போவேன்.

கருத்து : 'நீதான் என் குறையை முடித்து என் உயிரைக்காத்தல் வேண்டும்' என்பதாம்.

சொற்பொருள் : பூம்பொறி அழகான புள்ளிகள், அழல் – அழலைப்போலும் நஞ்சு, பை – படம்; நச்சுப்பை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/149&oldid=1678227" இலிருந்து மீள்விக்கப்பட்டது