உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

நற்றிணை தெளிவுரை


கூட்டுவிக்குமாறு அவளது தோழியை இரந்து வேண்டியும் நிற்கின்றான். அவ்வேளையில், அவனது தகுதிப்பாடுமேலெழ, அவன் அதனை அடக்குவானாகத் தன் நெஞ்சிற்கு இவ்வாறு கூறியவனாக அமைகின்றான்.]

மலையன் மாஊர்ந்து போகிப் புலையன்
பெருந்துடி கறங்கப் பிறபுலம் புக்கு,அவர்
அருங்குறும்பு எருக்கி, அயாஉயிர்த் தாஅங்கு
உய்ந்தன்று மன்னே நெஞ்சே! செவ்வேர்ச்
சினைதொறும் தூங்கும் பயம்கெழு பலவின் 5
சுளையுடை முன்றில், மனையோள் கங்குல்
ஒலிவெள் அருவி ஒலியின் துஞ்சும்
ஊறலஞ் சேரிச் சீறூர், வல்லோன்
வாள்அரம் பொருத கோள்நேர் எல்வளை
அகன்தொடி செறித்த முன்கை, ஒள்நுதல், 10
திதலை அல்குல் குறுமகள்
குவளை உண்கண் மகிழ்மட நோக்கே!

நெஞ்சமே! சிவந்த வேர்களாகிய உறுப்புக்கள்தோறும் தொங்கிக் கொண்டிருக்கும் பழங்களைக் கொண்டதாய்ப் பயனால் நிறைந்திருப்பது முன்றிற்கண் நிற்கும் வேர்ப்பலாமரம். அதன் பழத்தைத்தின்று எஞ்சிய சுளைகளை அவ்விடத்தேயே போட்டிருக்க, அம் முற்றம் வேர்ப்பலாச்சுளை யுடைய முற்றமாகவும் விளங்கும். இரவுப்போதிலே, அம் முற்றத்திடத்தே வீட்டுத் தலைவியானவள் ஒலித்தலைக் கொண்ட வெள்ளிய அருவியின் ஒலியைக் கேட்டு இன்புற்றபடியே உறங்கியிருப்பாள். இடையூறு ஏதுமற்ற அத்தகைய அழகிய சேரிகளையுடைய சிற்றூர் தலைவியது ஊராகும். அவ் விடத்தே, கைவினையில் வல்லோனாகிய ஒருவன், வாளரத்தால் அராவிச் செய்து தந்த அழகிய ஒளிகொண்ட வளைகளையும், அகன்ற தொடிகளையும் செறிவோடு அணிந்திருக்கும் முன்னங்கைகளை உடையவளாகவும், ஒளிபரக்கும் நெற்றியை உடையவளாகவும். தேமற் புள்ளிகளையுடைய அல்குல் தடத்தை உடையவளாகவும் தோன்றிய, இளமகளாகிய அவளை யானும் எண்டேன். குவளை மலர் மையுண்டு சிறந்தாற் போன்ற அவளது கண்கள், என்னைக் கண்டதும் மகிழ்ச்சியுற்றதனாலே செய்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/153&oldid=1679060" இலிருந்து மீள்விக்கப்பட்டது