உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

நற்றிணை தெளிவுரை


அவனாடு மொழிமே' எனக் குறுந்தொகைக்கண் (51) வருவதும் காண்க. கண்ணீர் வடிதலையும் தோள்பணை நெகிழ்தலையும் கூறினாள், தன்னாலும் தேற்றவியலாத துயர மிகுதியைப் புலப்படுத்தற்கு. இதனால் இரவுக்குறி மறுத்து வரைவுவேட்டு வற்புறுத்தினள் ஆயிற்று.

உள்ளுறை : 'கானவன் கொணர்ந்த பன்றித் தசையைக் கிழங்கோடு சிறுகுடிக்குப் பகுத்துக் கொடுத்துக் கொடிச்சி மகிழுமாறு போலத், தலைவன் பெற்ற களவு மணத்தை, மணவிழவோடு ஊரினர் அறியும் பலரறி மணமாகச் செய்து களிப்புறக் கருதினள் தோழி' என்பதாம். 'தானும் புவிக்கு அஞ்சுமாயினும், அகலாதே நின்று தன் கன்றைக் காத்து நிற்கும் பிடியினைப் போலப், பழிக்குத் தான் அஞ்சினும் தலைவியைப் பழிசூழாதே நின்று காக்கும் கடப்பாட்டினள் தான்' என்று தோழி தன் அன்பினை உணர்த்தியதுமாம்.

இறைச்சி : 'புலியை அஞ்சிய பிடியானை, அதனையுணராத தன் இளங்கன்றைப் பேணி நிற்றலைப் போலப் பிரிவால் தலைவிக்கு வரும் துயரத்திற்கு அஞ்சிய தோழி, அதனை அறியாதே களவு உறவில் திளைக்கும் தலைவியைப் பேணிக் காத்து நிற்கின்றனள்' என்பதாம்.

இதனைக் கேட்கும் தலைவன், இரவுக்குறி வாயாது போம் என்றறிபவனாகத் தலைவியை விரைந்து மணந்து கொள்ளுவதற்கான முயற்சிகளிலே ஈடுபடுவான் என்பதாம்.

86. அறவர் வாழ்க!

பாடியவர் : நக்கீரர்.
திணை : பாலை.
துறை : குறித்த பருவத்தின் வினை முடித்து வந்தமை கேட்ட தோழி, தலைவிக்கு உரைத்தது.

[(து–வி) 'இளவேனிற் பருவத்தே வருவேன்' எனக்கூறிப் பிரிந்து சென்ற தலைவன், சொன்னபடியே வந்ததறிந்த தோழி, தலைவிபாற் சென்று இவ்வாறு அவனைப் போற்றுகின்றாள்.]

அறவர், வாழி தோழி! மறவர்
வேல்என விரிந்த கதுப்பின் தோல
பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும்
கடும்பனி அற்சிரம், நடுங்கக் காண்தகக்
கைவில் வினைவன் தையுபு சொரிந்த 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/171&oldid=1681592" இலிருந்து மீள்விக்கப்பட்டது